ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் 21  12 2025 (Post.15,297)

Written by London Swaminathan

Post No. 15,297

Date uploaded in London –  22 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்துவைஷ்ணவி ஆனந்த்தும் லதா யோகேஷும்  வாசித்து வழங்கும் செய்தி மடல்.

அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் மாதம் 21- ம் தேதி , 2025-ம் ஆண்டு.

***

முதலில் திருப்பரங்குன்றம் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்ததற்கு எதிராக அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது.

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகிய இரு நீதிபதிகள் அமர்வில் இன்று 5 வது நாளாக நடந்தது.

மனுதாரர்கள் ராம ரவிக்குமார், பரமசிவம், அரசு பாண்டி, கார்த்திகேயன் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.ஸ்ரீராம், வள்ளியப்பன், வழக்கறிஞர்கள் அருண்சுவாமிநாதன், நிரஞ்சன் எஸ்.குமார், சுப்பையா ஆஜராகினர்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த பிறகு நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

****

திருப்பரங்குன்ற வழக்கு நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவது மன்னிக்க முடியாத செயல்: அவமதிப்பு வழக்கில் தலைமை செயலருக்கு நீதிபதி கண்டிப்பு

”சட்டம் – ஒழுங்கு நிலைமையை காரணமாக கூறி, நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவது ஏற்புடையதல்ல. அது முற்றிலும் மன்னிக்க முடியாத செயலாகும். அது, சட்டம் – ஒழுங்கு சீர்குலைய வழிவகுக்கும். அரசியலமைப்பு இயந்திரத்தை முடக்க இட்டுச் செல்லும்,” என, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கூறினார்.

மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிக்குமார் தாக்கல் செய்த மனுவை, விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடங்களை தவிர, தீபத்துாணிலும் டிச., 3ல் கார்த்திகை தீபத்தை சுப்பிரமணியசுவாமி கோவில் நிர்வாகம் ஏற்ற வேண்டும்.’இந்த ஆண்டு முதல் தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்வது போலீசாரின் கடமை’ என, உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை நிறைவேற்றாததால், ‘கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், கோவில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என, ராம ரவிக்குமார் மனு தாக்கல் செய்தார்

இந்த அவமதிப்பு வழக்கை கடந்த 9 ம் தேதி மீண்டும் விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் ‘தலைமை செயலர், சட்டம் – ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ஆகியோர் ஆஜராகும்படி உத்தரவிட்டு இருந்தார்.

இதன்படி தலைமைச் செயலாளர் முருகானந்தம், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் முறையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் ஆஜராகினர். மதுரை போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன் நேரில் ஆஜரானார்.

***

ஐகோர்ட் கிளையில் வக்பு வாரியம் வாதம்

மதுரை, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தர்காவுக்கு சொந்தமான இடத்தில்தான் தூண் உள்ளது என்று  ஐகோர்ட்டில் வக்பு வாரியம் வாதம் முன் வைத்தது.

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை மதுரை ஐகோர்ட்டில்  நடந்தது.

மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையின்போது, வக்பு வாரியம் தரப்பில் வாதிடுகையில் கூறப்பட்டதாவது:-

திருப்பரங்குன்றம் தூணில் தீபமேற்றுவது தொடர்ச்சியான பழக்கவழக்கமாக இருந்தது இல்லை.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண்தான் என்றும் அங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்றும் இதற்கு முன் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. சமீப காலமாகத்தான் தீபத்தூண் என்ற வார்த்தை உபயோகிக்கப்படுகிறது. மலை உச்சியில் தர்கா இருப்பதால்தான் அது சிக்கந்தர் மலை என அழைக்கப்படுகிறது. மலை உச்சியில் தர்கா, காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. குதிரைச்சுனை அருகே பாதைகள் பிரிகின்றன. மலை உச்சியில் உள்ள தர்கா, அதை சுற்றியுள்ள அடக்கஸ்தலங்கள் நெல்லித்தோப்பு தர்காவுக்கு சொந்தமானது.

மலை உச்சியில் தர்கா அமைந்துள்ள ஒரே பாறையில் தர்கா குதிரைச்சுனையையொட்டி தூண் உள்ளது. நெல்லித்தோப்பு, பாதைகள், படிக்கட்டுகள் தர்கா நிலங்கள் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 1920ஆம் ஆண்டு உரிமையியல் கோர்ட்டு வழங்கிய உரிமையை தர்காவிற்கு உறுதி செய்ய வேண்டும். இந்த பிரச்னை முழுவதும் உரிமையியல் கோர்ட்டு மூலம் தீர்க்கப்பட வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

******

இன்று  சர்வதேச தியான தினம்: 100 நாடுகளில் ஒருங்கிணைந்த நிகழ்ச்சி

சர்வதேச தியான தினத்தை முன்னிட்டு, இன்று டிசம்பர்  21ம் தேதி, 100 நாடுகளில் 33 மணி நேரம் ஒருங்கிணைந்த தியான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.நம் நாட்டின் கோரிக்கையை ஏற்று, 2014ம் ஆண்டு முதல் ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா., சபை அறிவித்தது. இதைத் தொடர்ந்து, டிச., 21ம் தேதி, சர்வதேச தியான தினமாக அனுசரிக்கக் கோரி, இந்தியா, இலங்கை, நேபாளம், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் ஐ.நா., பொது சபையில் தீர்மானத்தை தாக்கல் செய்தன.

இதை ஏகமனதாக ஏற்ற ஐ.நா., சபை டிசம்பர் 21 ஆம் தேதி ஆண்டுதோறும் உலக தியான நாளாக அனுசரிக்கப்படும் என்று, கடந்த ஆண்டு அறிவித்தது. இதையொட்டி, 100 நாடுகளில் மொத்தம் 33 மணி நேரம் ஒருங்கிணைந்த தியான நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

உலகின் வெவ்வேறு பிரதேச நேரங்களின்படி, இந்த நிகழ்ச்சி, 33 மணி நேரமாக நடைபெறும். நியூசிலாந்து நேரப்படி காலை 8:00 மணிக்கு துவங்கி, அமெரிக்காவின் ஹவாய் தீவில் மாலை 5:00 மணிக்கு நிறைவடையும். ஒவ்வொரு நாட்டிலும், தலா, 20 நிமிடங்களுக்கு தியான நிகழ்ச்சி நடக்கும்.

***

திருப்பதி கோயிலுக்கு ரூ.1.20 கோடி மதிப்பிலான பிளேடுகளை நன்கொடையாக வழங்கிய பக்தர்!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள வெர்டிஸ் குளோபல் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குனர் ஸ்ரீதர் போடுபள்ளி ஒரு கோடியே இருபது லட்சம் ரூபாய் மதிப்புள்ள சில்வர் மேக்ஸ் அரை பிளேடுகளை திருமலை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.

இந்தப் பிளேடுகள் ஏழுமலையானுக்கு தலைமுடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு மொட்டையடிக்க ஒரு ஆண்டிற்கு போதுமானதாகும். பிளேடுகள் திருமலையில் உள்ள அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர். நாயுடுவிடம் வழங்கப்பட்டது.அப்போது பேசிய தொழிலதிபர் ஸ்ரீதர் போடுபள்ளி, நுகர்வோரின் தேவைகளை மனதில் கொண்டு அரை பிளேடுகளை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நிறுவனம் தங்கள் நிறுவனம் என்று கூறினார்.

கல்யாணகட்டாவில் பக்தர்களின் தலைமுடியை சேகரிக்க இந்த அரை பிளேடுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்

****

சபரிமலை தங்கம் மாயமான விவகாரத்தில் சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தொடர்பு? 


கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் மாயமான விவகாரத்தில், சர்வதேச தொல்லியல் பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள எம்.எல்.ஏ.,வுமான ரமேஷ் சென்னிதலா, இதுகுறித்து விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதிகாரிகள் அவரிடமும் சாட்சியத்தைப் பதிவு செய்துள்ளனர்.



கடிதத் தில் கூறப்பட்டுள்ளதாவது:

சபரிமலை அய்யப்பன் கோவில் தங்கம் மாயமானது, வெறும் திருட்டு சம்பவம் அல்ல.முக்கிய ஹிந்து கோவில்களில் இருந்து விலைமதிப்பற்ற பழங்காலப் பொருட்கள், சிலைகள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்து கடத்துவதற்கான பெரிய சதித்திட்டத்தை இது உள்ளடக்கியுள்ளது.இந்த விவகாரத்தில், இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் முக்கிய குற்றவாளிகள் அல்ல. திரைக்கு பின்னால் மிகப்பெரிய சதி கும்பல் உள்ளது.

இதில், சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளது. அந்த கும்பலின் நடமாட்டம் அறிந்த நபர் ஒருவர், இது தொடர்பான தகவல்களை என்னிடம் கூறினார். அவர் கூறியது அனைத்தும் உறுதி செய்யப்பட்ட தகவல்கள்-; நம்பகமானவையும் கூட.


இந்த விவகாரத்தில், திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு தொடர்பிருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. தங்கம் மாயமான விவகாரத்தில், 500 கோடி ரூபாய் கைமாறி உள்ளது. கேரள தொழிலதிபர்கள் உட்பட பலருக்கு இந்த விவகாரத்தில் தொடர்பிருப்பதும் உறுதியாகியுள்ளது.


தங்கக்கவசம் கொள்ளையடிக்கப்பட்டதில், சர்வதேச தொல்லியல் பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பிருப்பது குறித்த விபரங்களை அளிக்க தயாராக உள்ளேன். தேவைப்பட்டால், நீதிமன்றத்தில் சாட்சி சொல்லவும் தயாராக இருக்கிறேன். எனவே, இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, திரைமறைவில் உள்ள சர்வதேச குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கடிதத் தில் கூறியுள்ளார்

****

சென்னை விமான நிலையம் அருகே ஹஜ் விடுதி அமைப்பதற்கு இந்து முன்னணி கண்டனம்

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பிற்பட்ட சமூக மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட அரசின் இடத்தை இஸ்லாமியர்களுக்கு வாரித்தருவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்; .இஸ்லாமிய குழுக்களால் நிர்வாகிக்கப்படும் ஹஜ் விடுதிகளில் தேச விரோத சதிகள் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முக்கியமான இடத்தில் ஹஜ் விடுதி அமைப்பது, ஒட்டுமொத்த பாதுகாப்பையும் சீர்குலைத்து விடும் அபாயம் உள்ளதை உளவுத்துறை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹஜ் விடுதியால் தேசத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

***

வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம்

வேலூர் ஸ்ரீபுரத்​திற்குக் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருகைத் தந்தார்.  திருப்பதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீபுரத்திற்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் காந்தி ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர், தங்​கக்​கோயி​லில் உள்ள ஸ்ரீநாராயணி அம்​மனை, குடியரசு தலைவர் தரிசனம் செய்தார்.

தொடர்ந்து, ஆயிரத்து 800 கிலோ எடைக் கொண்ட வெள்ளி விநாயகர், சொர்​ணலட்​சுமி, பெரு​மாள் ஆகிய கோயில்களில் குடியரசு தலைவர் வழிபாடு நடத்தினார்.

இதனை அடுத்து, மகாலட்சுமி மற்றும் வைபவ லட்சுமிக்குப் பூஜை செய்த திரௌபதி முர்மு, சக்தி அம்மாவிடம் ஆசி பெற்றார்.

****

பெரிய சிவ லிங்கம் பீகாருக்கு புறப்பாடு

120 அடி உயரம்.. 200 டன் எடை.. ஒரே கிரானைட்கல்லில் உருவான சிவலிங்கம்..இரண்டாயிரம் கிலோமீட்டர் பயணத்தைக் துவக்கியுள்ளது

ஒரே கிரானைட் பாறையில் செதுக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட மிக உயரமான சிவலிங்கம் தற்போது தமிழ்நாட்டிலிருந்து பீகாருக்கு சென்று கொண்டிருக்கிறது. 33 அடி உயரமும் 210 டன் எடையும் கொண்ட இந்த சிவலிங்கம், மகாபலிபுரத்தில் திறமையான கைவினைஞர்களின் பல வருட உழைப்புக்குப் பிறகு உருவாக்கப்பட்டது.

இந்த பிரமாண்டமான சிவலிங்கத்தை பல மாநிலங்களை கடந்து பாதுகாப்பாக எடுத்துச் செல்ல 96 சக்கரங்கள் கொண்ட சிறப்பு ஹைட்ராலிக் டிரெய்லர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மிகப்பெரிய சிவலிங்கம், பீஹார் மாநிலத்தின் கிழக்கு சாம்பரானில் விரைவில் திறக்கப்பட உள்ள விராட் ராமாயண் (Virat Ramayan Temple) கோவிலில் நிறுவப்படும், இந்த புதிய கோயில் திறக்கப்பட்டவுடன் இந்த சிவலிங்கம் அதன் முக்கிய வழிபாடாக இருக்கும். திட்டமிடப்பட்டுள்ள பாதை, போக்குவரத்து மற்றும் வானிலையைப் பொறுத்து சிவலிங்கத்தை எடுத்து செல்லும் பயணம் சுமார் 20 முதல் 25 நாட்கள் வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்; லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்தும் லதா யோகேஷும் வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு  டிசம்பர் 28 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் 12 மணிக்கும், இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் . வணக்கம்.

—SUBHAM—-

Tags- Gnanamayam, Broadcast, News, 21 12  2025, Vaishnavi

Leave a comment

Leave a comment