மேலை நாடுகளின் புரட்டு வாதங்கள்! – 2 (Post No.15,296)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,296

Date uploaded in London –   22 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

முந்தைய கட்டுரையின் தொடர்ச்சி… 

மேலை நாடுகளின் புரட்டு வாதங்கள்! – 2 

ச. நாகராஜன்

இங்கிலாந்தின் தேசீயக் கொடி செயிண்ட் ஜார்ஜின் சிலுவையை அடிப்படையாகக் கொண்டதாகும். கிறிஸ்தவத்திற்காக உயிரைத் துறந்த ஒரு ராணுவ செயிண்ட் இவர். சிலுவைப் போர்களுக்கு  ஊக்கமூட்டும் நபராகத் திகழ்ந்தவர் இவர். சின்ன ஒரு கற்பனை செய்து பார்ப்போம் – இந்தியாவின் தேசீயக் கொடியில் ஓம் என்ற எழுத்தைச் சேர்த்தால் என்ன ஆகும்? ஐநாவிலிருந்து உலகில் உள்ள அனைத்து “முற்போக்கு நாடுகளூம்” களத்தில் இறங்கி நம்மைத் திட்டும்.

பாரம்பரியமான பிரபுக்களின் குடும்பத்தில் பிறந்து மூன்றாம் உலக நாடுகளில் காலனி ஆதிக்கத்தை ஏற்படுத்தியவர்களை இன்றும் வணங்கும் இங்கிலாந்து இன்றும் கூட ராஜாக்களின் அரசியல் அமைப்பைத் தான் கொண்டிருக்கிறது! ராணி தான் நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்.  அவரே சர்ச்சுக்கும் தலைவி! அதாவது சர்ச் தான் அந்த நாட்டின் முக்கிய முதுகெலும்பு!

இந்தியாவில் ஒரு அரச வம்சமும் இப்போது அரசினால் அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால் இங்கிலாந்தில் 12 அரச பரம்பரைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவை தாம் உலகின் முக்கால் பாகத்தை அடிமைப்படுத்தி வைத்திருந்தது. ஆனால் பிபிசி ஒலிபரப்பின் படி இந்தியா ஒரு எதேச்சாதிகார நாடு; இங்கிலாந்தோ ஜனநாயக நாடு!

தேசீய கீதங்களை எடுத்துக் கொள்வோம். இங்கிலாந்தின் தேசீய கீதத்தில் ராணி 11 தடவை குறிப்பிடப்படுகிறார். அவர்கள் படையெடுத்து அடிமையாக்க முயலும் நாடுகளை வெற்றி கொள்ள இறைவனின் அருள் கோரப்படுகிறது. அமெரிக்க தேசீய கீதம் அடிமைத்தனத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதை இன்னும் நீக்கியபாடில்லை. அதை இயற்றியவர் அடிமைகளை வைத்திருந்த ஒரு எஜமானர் தான்.  ஆனால் இந்திய தேசீய கீதமோ ஒரு மதத்தையும் ஒரு கடவுளையும் குறிப்பிடவில்லை; எவருக்கும் எதிரான கருத்து அதில் இல்லை.

அமெரிக்கா, ஐரோப்பாவிற்கு அடுத்தபடியாக ஜெர்மனி 2006ம் ஆண்டு கிறிஸ்தவத்தைக் கொண்ட ஒரு அரசியல் அமைப்பை உருவாக்கியது. இத்தாலி, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகள் சர்ச்சுகளுடன் ஒரு விசேஷ தொடர்பைக் கொண்டவையாகும். பிரான்ஸின் அரசியல் சட்டத்திலோ சர்ச்சையும் அரசையும் வேறுபடுத்தும் பகுதிகள் பல இடங்களில் இல்லை.

வட ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளிலும் அரசாங்கமே சர்ச்சுகளை நடத்துகின்றன; நிர்வகிக்கின்றன!

அராபிய நாடுகள் வெளிப்படையாகவே இஸ்லாமிய நாடுகள் தாம்!

ஐரோப்பாவோ கிறிஸ்தவத்தை மதசார்பின்மை என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு கடைப்பிடிக்கிறது. உலகளாவிய விதத்தில் ஒரு நல்ல பெயரை இது கொடுக்கும் அல்லவா! காகசீய கிறிஸ்தவ உணர்வைக் கொண்டுள்ள இதன் ஆழ்ந்த உணர்வை உக்ரேனியத்துடனான நட்பில் பார்க்க முடியும்.

 காலனிகளை அடிமைப்படுத்தும் இந்த கிறிஸ்தவ நாடுகள்

மூன்றாம் உலகநாடுகளை தங்கள் மதம், அடையாளம், பண்பாடு ஆகியவற்றை உதறக் கோருவது ஒரு இரட்டை வேடம் அல்லவா? உலகில் சமத்துவத்தைக் கோரும் இதன் வெளிவேஷம் வெளிப்படையாகத் தெரிகிறது.

இதை சுயமதிப்புள்ள எந்த நாடும் பொறுத்துக் கொண்டு அவற்றுடன் சேர முடியாதல்லவா!

–    முற்றும்

**

ஆதாரம், நன்றி கொல்கத்தாவிலிருந்து வெளி வரும் வார இதழ்

TRUTH -VOLUME 90 – ISSUE NUMBER 13

(8-7-2022)

Leave a comment

Leave a comment