Hinduism through 500 Pictures in Tamil and English-34; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-34 (Post.15,298)

Written by London Swaminathan

Post No. 15,298

Date uploaded in London –  22 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ENGLISH VERSION POSTED YESTERDAY WITH MORE PICTURES.

லிங்கோத்பவர்

லிங்கம் என்றால் அடையாளம், குறி என்று பொருள்; இறைவன் உருவமற்றவன் என்பதைக் காண இந்த உருவத்தை ஆன்றோர்கள் பயன்படுத்தினர் ; அதற்குள் இருப்பது என்ன என்று அறியாதோர் கேட்டால் அப்போது அதற்குள் உருவமுள்ள மூர்த்தியாக சிவன் வெளிப்படுவார்

ஆக உள்ளானும் அவன்! இல்லானும் அவன்! – என்பதைக் காட்டுவதே லிங்கமும் லிங்கோத்பவரும்  ஆவர் . கோவில்களில் சிவன் சந்நிதி பிரகாரத்தில், ஒரு மாட த்தில் லிங்கோத்பவரைக் காணலாம் .

என்ன கதை?

பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் இடையே ஒரு வாக்குவாதம் ஏற்பட்டது ;நீ பெரியவனா, நான் பெரியவனா என்று மோதினர்; நடுவர் சிவபெருமானிடம் கேட்டு விடுவோம் என்று பட்டி மண்டப மேடையை கைலாயத்துக்கு நகர்த்தினார்கள் ; அவர் சொன்னார்;  இருவருக்கும் ஒரு டெஸ்ட்’ வைக்கிறேன். என்னுடைய முடியை ஒருவர் தேடுங்கள், கால் அடியை ஒருவர் தேடுங்கள். யார் முதலாக வந்து கண்டதை  ரிப்போர்ட் செய்கிறீர்களாளோ அவரே பெரியவர் என்றார். உடனே பிரம்மா அன்னவாஹனத்தில் பறந்தார் ; ஏற்கனவே வராஹ அவதாரம் எடுத்துப் பழக்கப்பட்ட விஷ்ணு வராஹமாக மாறி பூமியைத் தோண்டினார். அப்போது சிவன் இருந்ததோ ஜோதி வடிவத்தில்; ஆண்டுகள் பல உருண்டோடின. .எவரும் கோல்’ போட முடியவில்லை ஆட்டம் டிராவில் முடியுமோ என்று பக்தர்கள் அ ஞ்சினர் . அந்த நேரத்தில் வானத்திலிருந்து ஒரு தாழம் பூ கீழே விழுந்து கொண்டிருந்தது; ஏ பூவே எங்கிருந்து வருகிறாய்? என்று கேட்டார் பிரம்மா. நான் சிவன் முடியிலிருந்து நீண்ட காலத்துக்கு முன் விழத் துவங்கினேன் என்றது பூ;  எனக்கு ஒரு சின்ன உதவி செய்; சிவனிடம் அழைத்துச் செல்கிறேன்; நான் சிவன் முடியைத் தரிசித்ததாகச் சொல் என்று மன்றாடினார் ;தாழம்பூவும், இரக்கப்பட்டு  அப்படியே செய்தது.  இருவரும் திருட்டு முழி முழித்தவுடன் சிவனுக்கு உண்மை தெரிந்துவிட்டது. பிரம்மாவுக்கு தண்டனை கொடுத்தார் அவருக்கிருந்த ஐந்து தலைகளில் பொய் சொன்ன வாயுடைய தலையைக் கிள்ளி எறிந்தார் இனி உனக்கு பூலோகத்தில் பூஜை, அர்ச்சனை இல்லை போ என்றார்; தாழம் பூவையும் சபித்தார் எந்த பூஜையிலும் உனக்கு இடமில்லை போ என்றார்

(உண்மையில் இந்தக் கதையின் உட்கருத்து: நீயா நானா என்ற வாதத்துக்கு முடிவே இல்லை அது விதண்டாவாதம் என்பதும் பொய்ச் சாட்சி சொன்னால் தண்டனை உண்டு என்பதும் கதையின் கருத்து ; அதை விளக்குவதற்கு ஆன்றோர்கள் எட்டுக்கட்டிய கதை இது என்பதே என் அபிப்ராயம்).

அத்தோடு லிங்கம் என்பது ஆதி அந்தமற்ற உருவமில்லாத கடவுள் என்பதை விளக்கவும் அதையே பாமர மக்கள் உருவத்துடனும் வணங்கலாம் என்பதை விளக்கவும் எழுந்த கதை இது;

லிங்கோத்பவர் சில இடங்களில் மனித முகம் உடைய அன்னத்தையும் பன்றியையும் காட்டுகிறது. பெரும்பாலான இடங்களில் சிவ பெருமானின் பாதி உருவம் மட்டும் லிங்கத்துக்குள் காட்டப்பட்டு இருக்கிறது.

***

ஏகபாத மூர்த்தி

ஒற்றைக்காலில் சிவபெருமான் நிற்கும் வடிவம் இது ; ஏக பாதம் என்றால் ஒரே கால்

ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன், பிரம்மா, விஷ்ணு என்ற ஐந்து மூர்த்திகள் ஒடுங்கி ஒரே உருவத்தோடு காட்சியளிப்பதை இம்மூர்த்தி விளக்குகிறது. ஏகபாதமூர்த்தி நான்கு கரங்களுடன், முக்கண் உடையவராய் ஒரு காலில் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். அவர் இடுப்பின் வலப்பக்கம் பிரம்மாவும்,இடப்பக்கம் விஷ்ணுவும் தோன்றுகின்றனர்.  இவரது பின் வலக்கரம் சூலத்தையும் பின் இடக்கரம் மழுவையும் ஏந்தியுள்ளன. இவரது முன் வலக்கரம் அபயகரமாகவும் முன் இடக்கரம் வரதகரமாகவும் அமைந்திருக்கும். மணிகளாலான மாலையை அணிந்து, புலித்தோல் உடுத்து, கங்கையும் பிறையும் ஜடாமகுடமும் தரித்து இருப்பார் .

உலகம் அழியும் காலத்தில் உலகில் உள்ள அனைத்து உயிர்களும்,  சக்தியும் இந்த ஏகபாத மூர்த்தியிடம் ஐக்கியமாகிவிடுவார்கள். சிற்பசாஸ்திரத்தில் ஏகபாத மூர்த்தி பதினாறு கரங்களுடையவராகக் காட்டப்படுகிறார். அவரது இடக்கரங்களில் முறையே கட்வாங்கம், பாணம், சக்கரம், டமருகம், முத்கரம், வரதம், அட்சமாலை, சூலம் ஆகியனவும், வலக்கரங்களில் முறையே தனுசு, கண்ட்டம் (மணி), கபாலம், கெளமுதி (பிறை), தர்ஜனி (கண்ணாடி), கதை, பரசு, சத்தியாயுதம் ஆகியனவும் அமைந்துள்ளன ஒவ்வொரு சிவன் கோவிலிலும் பிரகார மாடத்தில் உள்ள இம்மூர்த்தி சில மாறுதல்களுடன் காணப்படுகிறார்.

***

ஊர்த்வ தாண்டவர்

சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் நடனப் போட்டி நடக்கும் போது சுவாமி தமது காது குண்டலம் கீழே விழ அதை தனது வலது கால் விரல்களால் எடுத்து காதில் மாட்டுமாறு காலை மேலே தூக்கி நடனம் ஆடிநார். அதுவரை சிவனுக்குச் சரிசமம் ஆகிய தேவி, அம்பாள் காலைத்  தூக்கி ஆட முடியாமல் வெட்க்கித் தலை குனிந்தார்  சுவாமி ஆடலில் வெற்றி பெற்றார்.

***

காலாந்தக அல்லது கால சம்ஹார மூர்த்தி

யமனின் வேறு  பெயர்கள்- காலன், அந்தகன்

காலன் என்னும் யமனைக் காலால் உதைத்துத் தள்ளிய சிவனின் வடிவம் காலாந்தக அல்லது கால சம்ஹார மூர்த்தியாகும் . திருக்கடையூரில் இந்த வடிவத்தைக் காணலாம்.

மிருகண்டு மகரிஷிக்கு மார்க்கண்டேயன் எனும் மகனிருந்தான். அவனுக்கு 16  வயதுதான் முழு ஆயுள் என்று பிறப்பதற்கு முன்னரே ரிஷிக்குத் தெரியும்; அதன்படி, 16 வயது முடியும்போது,  எமதர்மன் அவன் உயிரை எடுக்க முற்பட்டார். மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைக்  காட்டி அனைத்துக் கொண்டிருந்த போது , எமதர்மன் பாசக்கயிற்றை வீசினார். பாசக் கயிறு சிவலிங்கத்தின் மீதும் வீழுந்தது. தன் மீதே பாசக் கயிற்றை வீசிய எமனைத் தன் காலால் உதைத்தார். அவன் கீழே விழுந்தான்.

–SUBHAM—

TAGS-Hinduism through 500 Pictures in Tamil and English-34; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-34,லிங்கோத்பவர், கால சம்ஹார மூர்த்தி, ஏகபாத மூர்த்தி

Leave a comment

Leave a comment