விண்வெளி ஆதிக்கத்தில் சீனா முந்துகிறதா? (Post No.15,312)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,312

Date uploaded in London –   27 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

9-10-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

விண்வெளி ஆதிக்கத்தில் சீனா முந்துகிறதா?

ச. நாகராஜன்

இன்றைய விண்வெளி ஆதிக்கப் போட்டியில் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தைப் பிடித்திருக்கும் சீனா அமெரிக்காவை முந்தி முதலிடத்தைப் பிடிக்க விழைகிறது!

இரண்டு பிரம்மாண்டமான சாடலைட்டுகளின் தொகுதியை விண்ணிலே அமைத்து  வணிகத்தில் முன்னணியில் வந்து உலகத்தின் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி முதல் சக்தியாக ஆக சீனா திட்டம் போடுகிறது!

இது மட்டுமல்ல, அமெரிக்க ராணுவத்திற்குப் போட்டியாக ராணுவத்திற்கான சாடலைட்டுகளையும் விண்ணில் ஏவி ராணுவத்திலும் முதலிடத்தை அடையப் பார்க்கிறது சீனா.

இப்போது சீன ஒரு புது விண்வெளிக் கொள்கையை வெளியிட்டிருக்கிறது. இதன்படி பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் பல வணிக மேம்பாட்டிற்கான விண்கலங்கள் செலுத்தப்படும்

2025 ஜனவரியில் டீப் சீக் (DEEP SEEk) என்ற செயற்கை நுண்ணறிவினால் உலகையே பிரமிக்க வைத்தது சீனா.

‘சீனா டெய்லி’ என்ற சீனப் பத்திரிகை மிகுந்த கர்வத்துடன் இந்த டீப் சீக்கினால் அமெரிக்க கர்வத்தை ஒரேயடியாக நொறுக்கி விட்டோம் என்று பெருமை பேசிக் கட்டுரைகளை வெளியிடுகிறது.

ஒரு பேரிடர் நிகழும் போது இப்போது முதலில் உதவிக்கு வருவது சாடலைட் தான்.

2025ல் ஜனவரி 7ம் தேதி திபெத்தில் ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட்டது. அதன் மாக்னிட்யூட் அளவு 7.1.

400 பேர்கள் இறந்தனர். பூகம்பம் நிகழ்ந்த சில நொடிகளிலேயே சீன அரசு உடனடியாக நிவாரண நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தது. எட்டு சாடலைட்டுகள் பூகம்பம் நிகழ்ந்த இடத்தை ஆய்வு செய்தன. உலகின் இதர பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்ட கிராமங்களுக்கு உடனடியாக சாலைகள் போடப்பட்டு தகவல் தொடர்பும் போக்குவரத்தும் சீரமைக்கப்பட்டது.

1970ல் தனது முதல் சாடலைட்டை விண்ணில் ஏவியது சீனா. பிறகு 40 வருடங்களில் வருடத்திற்கு மூன்று என்ற எண்ணிக்கையில் 131 சாடலைட்டுகளை விண்ணில் ஏவியது. ஆனால் 2021ம் ஆண்டிலிருந்து வருடத்திற்கு சுமார் 100 சாடலைட்டுகளை அது விண்ணில் ஏவி சாதனை படைத்திருக்கிறது. ஆக ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீன சாடலைட்டுகள் இப்போது விண்ணில் சுற்றுகின்றன!

விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்புவதில் தீவிரம் காட்டுகிறது சீனா. சந்திரனின் மறுபக்கத்திலிருந்து மாதிரிகளை பூமிக்குக் கொண்டு வந்த ஒரே நாடு சீனா தான். இப்போது சந்திரனைத் தவிர செவ்வாய் மீதும் தன் பார்வையைச் செலுத்தி இருக்கிறது சீனா.

ஏராளமான சீன கம்பெனிகள் சாடலைட்டுகளைத் தயார் செய்வதில் மும்முரம் காட்டுகின்றன.

2030ல் சீனா சந்திரனுக்கு விண்வெளி வீரரை அனுப்பும் என்று 2023ம் ஆண்டு சீன அரசு அறிவித்தது. சோதனை ஓட்டங்கள் 2027ல் நிகழும் என எதிர்பார்க்கபப்டுகிறது.

பூமியில் உள்ள எல்லா இடங்களிலும் என்ன நடக்கிறது என்று வேவு பார்ப்பதில் சீனா இப்போது அமெரிக்காவிற்கு இணையாக முன்னணி வகிக்கிறது. இதற்கான சீன சாடலைட்டுகள் ஏராளம் விண்ணில் செயல்படுகின்றன!

சாடலைட் தொழில்நுட்பம் மட்டுமல்ல, எலக்ட்ரிக் கார்களைத் தயார் செய்வதிலும் சீனா தீவிரம் காட்டுகிறது. பசுமைப் புரட்சி, செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் போன்றவற்றிலும் அது தன் தீவிரத்தைக் காட்டுவதால் அமெரிக்கா இப்போது கவலைப்பட ஆரம்பித்திருக்கிறது.

பிற நாடுகளுடன் நல்லிணக்கமாக இருந்து அவர்களின் நல்லெண்ணத்தைப் பெறுவதும் சீனாவின் புது உத்தியாகும்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அவ்வப்பொழுது வெளியிடும் அதிரடிக் கொள்கைகளினால் ரஷியா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன் எப்போதும் இல்லாத அளவில் இணக்கமாக இருப்பதும் குறிப்பிடத்தகுந்த விஷயமாகும்.

சீனாவின் நல்ல மாற்றமானது அது எதிர்பார்க்கும் வெற்றிகளைத் தருமா?

காலம் தான் பதில் சொல்லும்!

**

Leave a comment

Leave a comment