இதய வியாதிகளைப் போக்கும் பாமுக்கலே வெந்நீர் ஊற்றுக்கள்! (Post.15,315)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,315

Date uploaded in London –   28 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

14-10-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

இதய வியாதிகளைப் போக்கும் பாமுக்கலே வெந்நீர் ஊற்றுக்கள்!           (PAMUKKALE SPRINGS)

ச.நாகராஜன் 

இதய வியாதிகளைப் போக்கும் வெந்நீர் ஊற்றுக்களைக் கொண்ட ஒரு அதிசய இடம் இருக்கிறது தெரியுமா?

ஏராளமானோர் அங்கு சென்று பயனடைந்து வருகிறார்கள்! 

தென்மேற்கு துருக்கியில் உள்ள பாமுக்கலே வெண்மையான மலைச் சிகரங்களும் வெந்நீர் ஊற்றுக்களும்  அருகில் இருக்கும் டெனிஸ்லீ (DENIZLI)  நகரின் அழகிய காட்சிகளும் உலக மக்களை ஈர்க்கிறது.

பாமுக்கலே என்ற துருக்கி வார்த்தைக்கு “பஞ்சுக் கோட்டை” என்று பொருள்!

 300 அடி உயரம் உள்ள மலையிலிருந்து ஆவியுடன் கூடி வரும் நீர் 2000 வருடங்களாக ஒரு வெந்நீர் ஊற்றாகப் பயன்படுவதோடு உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களும் இதய வியாதி உள்ளவர்களுக்கும் ஒரு சிறந்த சிகிச்சை தலமாகவும் ஆகி விட்டது. 

இந்த சிகிச்சைக்காக ஏராளமானோர் வர ஆரம்பித்ததால் ஹைராபோலிஸ் (Hierapolis)  என்ற ஒரு பெரும் நகரமே உருவாகி விட்டது.

கி.மு. 190ம் ஆண்டு இரண்டாம் யூமெனஸ் என்ற மன்னனால் இந்த நகரம் நிர்மாணிக்கப்பட்டது. இதன் அபூர்வ சக்தியால் இது புனித நகரம் என்று அழைக்கப்படலாயிற்று. யூமெனஸ் கிரேக்க அரசை விரிவுபடுத்தி ஆசியாமைனர் முழுவதையும் ஆள ஆரம்பித்தான்.

 மூன்றாம் அட்டாலஸ் என்ற மன்னன் ஆளும் சமயத்தில் ரோமானியர்கள் இந்த பரந்த சாம்ராஜ்யத்தின் மீது பேராசையுடன் பார்வையைச் செலுத்தினர்.

பெரும் பேரழிவைத் தவிர்க்கவும் தனது சொந்த பொக்கிஷத்தைக் காக்கவும் அவன் விருப்பத்துடன் இந்த இடத்தை ரோமானியர்களுக்கு விட்டுக் கொடுத்தான். கி.மு 135ல் அவன் இறந்தான். 

ஆனால் துரதிர்ஷ்டவசமாம கி.பி. 17ம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு பெரும் பூகம்பத்தால் இந்த நகரம் முற்றிலுமாக அழிந்தது.

அடுத்த இருநூறு ஆண்டுகளில் ரோமானியர்கள் தங்கள் விருப்பப்படி இந்த இடத்தை புனர் நிர்மாணம் செய்ய ஆரம்பித்தனர்.

ஆங்காங்கே குளியலறைகள், அபல்லோவுக்கான ஒரு ஆலயம்,, தூண்களுடன் கூடிய ஒரு பெரிய சாலை உள்ளிட்டவற்றை அவர்கள் அமைத்தனர்.

அதுமட்டுமின்றி 15000 பேர் உட்கார்ந்து பார்க்கும் வண்ணம் வசதியாக உள்ள ஒரு அரங்கமும் கட்டப்பட்டது.

அழகிய தங்கு விடுதிகள் அனைவரையும் வா வா என்று அழைத்தன. மூன்று ரோமானிய மன்னர்கள் இங்கு வந்து தங்கினர்.

பாதாள லோகத்தின் ரோமானியக் கடவுளான ப்ளூடோவுக்கும் 10 அடி சதுரத்தில் ஒரு புனித இடம் அர்ப்பணிக்கப்பட்டது. 

அந்த பத்து அடி சதுரத்திற்குள் வெப்பமுடன் நீரூற்று பீச்சி அடித்து உள்ளே ஆவியுடன் வரும் போது துர்நாற்றம் ஏற்பட்டதால் இதை கெட்ட பிசாசுகளின் இடம் என்று அனைவரும் சொல்ல ஆரம்பித்தனர்.

ரோமின் வரலாற்றை எழுதிய வரலாற்று ஆசிரியர் ஸ்டீபோ (கி.மு 60 – கிபி..21) இங்கு வந்து ஆவி பறக்க வரும் துர்நாற்றம் அடிக்கும் நீரைப் பார்த்து அது விஷமுள்ளது என்று தீர்மானித்து சில சிட்டுக்குருவிப் பறவைகளை அங்கு தூக்கிப் போட்டார். அவை மறுகணமே இறந்தன.

ஆனால் இங்குள்ள குறி சொல்லும் குருமார்கள் மட்டும் இந்த விஷப்புகையால் பாதிக்கப்படவில்லை என்பது ஒரு அதிசயமாக இருந்தது.

பாமுக்கலே பஞ்சுக் கோட்டை அதன் பெயருக்குத் தக்கபடி பஞ்சினால் ஆக்கப்பட்ட பெரும் கோட்டையாகவே இன்றளவும் காட்சி அளிக்கிறது.

அடுத்து இங்கு உற்பத்தியாகும் பஞ்சாடைகளைச் சுத்தம் செய்ய இதன் நீர் பெரிதும் உதவுகிறது. பஞ்சு ஆடைகளில் பல வித வண்ணங்கள் பூசவும் இந்த நீர் பயன்படுகிறது.

பெயர் தெரியாத ஒரு கவிஞர் டைடான் என்னும் ராட்சஸ உருவம் உடையவர்கள் இங்கு பஞ்சுப் பொதிகளை போட்டு உலர்த்துவதாகக் கவிதை இயற்றியுள்ளார். 

இங்குள்ள நீரானது கால்சியம் கார்பனேட்., சல்பேட்,, சோடியம் குளோரைட், இரும்பு,, மக்னீஷியம் கார்பொனேட். மக்னீஷியா உள்ளிட்ட பல தாதுக்களால் வளம் பெறுகிறது என்பது நிபுணர்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இங்கு வெந்நீர் ஊற்றில் குளித்த மறுகணமே தசைகள் ஓய்வாக தளர்ந்து இருப்பதை அனைவரும் உணர்கின்றனர்.

இந்த நீரை அருந்துவதால் குடல் சுத்தமாவதோடு, ஜீரண சக்தியும் அதிகமாகிறது.

காலம் காலமாக அனுபவ மொழிகளால் இதன் புகழ் பெருகப் பெருக

இங்கு வரும் பயணிகளின் கூட்டமும் அதிகரிக்கிறது. 

இயற்கை அளித்துள்ள வரபிரசாதம் வியாதிகளைப் போக்கும் பாமுக்கலே வெந்நீர் ஊற்றுக்கள்!!

** 

Leave a comment

Leave a comment