Post No. 15,318
Date uploaded in London – – 29 December 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
28-12-2025 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பாகிய ஞானமயம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற உரை!
ஆலயம் அறிவோம்
வழங்குவது சித்ரா நாகராஜன்
ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.
அன்றாயர் குலக்கொடியோடு
அணிமா மலர் மங்கையொடு அன்பளவி
அவுணர்க்கு என்தானும் இரக்கம் இலாதவனுக்கு
உறையும் இடமாவது
இரும்பொழில் சூழ் நன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை
தடந்திகழ் கோவல் நகர்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம்
மாமலையாவது நீர்மலையே
– திருமங்கையாழ்வார் திருவடி போற்றி
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது சென்னை நகரில் பல்லாவரத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள திருநீர்மலை திவ்ய தலமாகும். இது 108 வைணவ திவ்ய தலங்களுள் ஒன்றாகும்.
மூலவர் : நீர் வண்ணன், நீல முகில்வண்ணன் – கிழக்கு நோக்கி நின்று அருள் பாலிக்கும் திருக்கோலம்
தாயார் : அணிமாமலர் மங்கை, தனிக்கோவில் நாச்சியார்
மலைமேல் உள்ள கோவில்கள்
மூலவர் : சாந்த நரசிம்மன். அமர்ந்த திருக்கோலத்தில் பிராட்டியை இதயத்தில் ஏற்றுள்ளார்.
ரங்கநாதம் சயன திருக்கோலம்
திரிவிக்ரமன் – நடந்த மற்றும் நின்ற திருக்கோலம்
தீர்த்தம்: மணிகர்ணிகா தடாகம், ஷீர புஷ்கரணி, காருண்ய புஷ்கரணி, ஸித்த புஷ்கரணி, ஸ்வர்ண புஷ்கரணி
தல விருட்சம் : வெப்பால மரம்
விமானம் : தோயகிரி விமானம்
இங்கு அலங்கார நுழைவாயில் உள்ளது. நல்ல அகலமான சீரான 200 படிகள் உள்ளன. மலை மீது ஏறிச் செல்கையில், பாதி தூரத்தில் வலப்பக்கம் பிரியும் இடத்தில் சிறிய ஆஞ்சநேயர் சந்நிதி ஒன்றும் உள்ளது.
இங்கு கோவில் முகப்பில் மூன்று நிலை கோபுரத்தின் முன் நான்கு தூண் கொண்ட மண்டபம் உள்ளது.
கர்பக்ருஹத்தில் ரங்கநாதர் தெற்கு நோக்கிப் பள்ளி கொண்டுள்ளார்;
ஸ்வயம்பு மூர்த்தி என்பதால் இங்கு மூலவருக்கு அபிஷேகம் இல்லை. கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று மட்டும் தைலக்காப்பு உண்டு.
இத்தலம் பற்றிய ஏராளமான புராண வரலாறுகள் உண்டு.
வாணாசுரன் என்னும் அரக்கன் ஒருவன் இருந்தான். அவன் ஒரு சிவபக்தன். அவனுக்கு ஆயிரம் கைகள் உண்டு. தன் மகள் பொருட்டு அவன் அநிருத்தனைச் சிறை வைத்திருந்தான். அநிருத்தனை மீட்பதற்காக வந்த கண்ணனோடு வாணாசுரன் யுத்தம் செய்ய ஆரம்பித்தான். அவனுக்கு உதவ வந்த அரக்கர்கள் அனைவரையும் வீழ்த்திய கண்ணபிரான் இறுதியில் தனது சக்ராயுதத்தால் அவனது கரங்களை அறுத்து வீழ்த்தினார். இந்த நிலையில் தனது பக்தனான வாணாசுரனுக்காக சிவபிரான் இரங்கி கண்ணனிடம் உயிர்ப்பிச்சை அளிக்குமாறு கூறினார். அதனால் கண்ணன் வாணாசுரனின் நான்கு கரங்களை வெட்டாமல் விட்டார். வெட்கமடைந்த அசுரன் கண்ணனிடம் அவனது நீர்மைத் தன்மையே பெரிது என்று கூறி நீர்மலை எம்பெருமானைச் சுட்டிக் காட்டி தொழுதான். நான்கு வேதங்களும் எம்பிரானைத் தொழுவது போல தனது நான்கு கரங்களாலும் திருநீர்மலையினைத் தொழுது நின்றான். நீரினை அரணாகக் கொண்ட நீர்மலையானே தனக்கு அரணாக நின்று காப்பவன் என்று கூறி வழிபட்டான்.
இந்த வரலாற்றைப் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் தனது நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில்
“இரங்குமுயிர் அனைத்தும் இன்னருளால் காப்பான்
அரங்கன் ஒருவனுமேயாதல் – கரங்களால்
போர்மலை வான் வந்த புகழ் வாணன் காட்டினான்
நீர்மலை வாழெந்தை எதிர் நின்று” என்று குறிப்பிடுகிறார்.
இத்தலத்தில் நின்று, இருந்த, கிடந்த, நடந்த என்று நான்கு திருக்கோலங்களிலும் பெருமான் காட்சி தருகிறார்.
தானாகத் தோன்றிய தலமான இதை காண்டவனம் என்றும் இது அமைந்துள்ள மலையினை தோயாத்ரி என்றும் புராணம் கூறுகிறது.
இங்கு வால்மீகி முனிவர் வந்து பெருமானை வழிபட்டிருக்கிறார்.
ராமனின் பேரழகைக் காட்ட வேண்டுமென்று வால்மீகி வேண்டியதால் தாமரை மலர் பீடத்தில் ஹஸ்த முத்திரை பொருந்திய அபயகரத்துடன், திருமார்பை சாளக்கிராம மாலை அலங்கரிக்க, நீர்வண்ண ரூபத்தில் பெருமான் இங்கு காட்சி அளிக்கிறார்.
திருமங்கை ஆழ்வாரைப் பற்றிய வரலாறு ஒன்றும் உண்டு. இங்கு தரிசனத்திற்காக அவர் வந்த போது அடாது மழை பெய்ய ஆரம்பித்தது. மலையைச் சுற்றி நீர் அரண் போலச் சூழ்ந்து கொண்டது. ஆகவே அவர் பெருமாளைத் தரிசிக்க முடியாமல் காத்திருந்தார். ஆறு மாத காலம் அருகில் இருந்த மந்திர கிரி என்ற ஊரில் காத்திருந்த அவர் நீர் வற்றியவுடன் மலை மீதுள்ள பெருமாளைத் தரிசித்தார்.
திருமங்கை ஆழ்வார் வந்த போது நீர் சூழ்ந்து நின்ற காரணத்தால் இந்தத் தலம் திருநீர்மலை என்ற பெயரைப் பெற்றது. அதற்கு முன்பு காண்டபவனப் பெருமாள் என்றும் காண்டபவன நாதன் என்றும் பெருமாள் அழைக்கப்பட்டார்.
இந்தத் தலம் ஸ்வயம் வ்யக்த தலம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது தானாகவே தோன்றிய தலம் என்று பொருள். முக்தி அளிக்கும் தலங்கள் எட்டில் இதுவும் ஒன்று. ஶ்ரீரங்கம், ஶ்ரீ முஷ்ணம், திருப்பதி, சாளக்கிராமம், நைமிசாரண்யம், புஷ்கரம், நாராயணபுரம் ஆகியவை ஏனைய ஏழு தலங்களாகும்
இத்தலத்தில் ஒரு நாள் செய்யும் புண்யகாரியம் மற்ற தலங்களில் நூறு ஆண்டுகள் செய்வதற்கு சமம் என்றும் தோயாத்ரி மலையை தரிசித்த மாத்திரத்திலேயே பாவங்கள் போய்விடும் என்றும் பிரம்மாண்ட புராணம் கூறுகிறது. ஆயுள் விருத்தியை அருளும் தலமாகவும் திருமணப் ப்ராப்தி தலமாகவும் இது விளங்குகிறது.
இத்தலமானது திருமங்கை ஆழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும். திருமங்கையாழ்வார், ‘மாமலை’ என்று திருநீர்மலையைக் கூறிப் புகழ்கிறார்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் நீலமுகில் வண்ணனும் அணிமாமலர் மங்கையும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
நன்றி! வணக்கம்!!
**