Post No. 15,320
Date uploaded in London – 29 December 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து, லதா யோகேஷ் வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் மாதம் 28- ம் தேதி , 2025-ம் ஆண்டு.
***
முதலில் வங்கதேசம் பற்றிய செய்திகள்

London Hindus Demo.
ஹிந்துக்கள் மீது தாக்குதல்; வங்கதேச வன்முறை குறித்து ஐநா கவலை
வங்கதேசத்தில் நிலவி வரும் வன்முறையில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து ஐநா கவலை தெரிவித்துள்ளது. வன்முறை குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில், பார்லிமென்ட் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து வன்முறைகள் அரங்கேறி வருகின்றன. ‘இன்குலாப் மஞ்ச்’ என்ற மாணவர் அமைப்பின் செய்தித் தொடர்பாளரான ஷெரீப் ஓஸ்மான் ஹாதி என்பவர், அடையாளம் தெரியாத நபரால் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, வங்கதேசம் முழுதும் போராட்டங்கள் வெடித்தன. பின்னர் ஹிந்து இளைஞரான தீபு சந்திர தாஸ் என்பவரை அடித்துக் கொன்றதுடன், அவரது உடலை மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு தீயிட்டு கொளுத்தினர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரண்டாவது இந்து ஒருவரை முஸ்லீம் கும்பல் அடித்துக்கொன்றது. இந்த தாக்குதல்களைக் கண்டித்து இந்திய அறிக்கை வெளியிட்டுள்ளது
டில்லியில் விஸ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்
வங்க தேச இந்துக்கள் மீது முஸ்லீம்கள் நடத்தும் தாக்குதல்களைக் கண்டித்து டில்லியில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தது
டில்லியில் உள்ள அந்நாட்டு தூதரகம் முன்பு ஹிந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின.
விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகள் போராட்டம் நடத்தினர். வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்தும், இதற்குகாரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், இந்த போராட்டம் நடந்தது
திபு சந்திர தாஸ் புகைப்படத்தையும், வங்கதேச அரசை விமர்சித்து பதாகைகளையும் அவர்கள் ஏந்தி வந்தனர். போராட்டக்காரர்களை போலீசார், தடுப்புகளை அமைத்து தடுத்தனர்.
***
திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் 50 கிலோ தங்கம் மாயம்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முக்கிய கோயில்களில் திருப்பதி கோவிந்தராஜர் கோயிலும் ஒன்றாகும்.
முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின்போது இந்த கோயிலின் விமான கோபுரத்துக்கு 100 கிலோ தங்க தகடுகள் பதிக்கப்பட்டன. தற்போது கோயிலில் மராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் விமான கோபுரத்தில் 50 கிலோ தங்கம் மாயமாகி இருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2022-23-ம் ஆண்டில் கோவிந்தராஜர் கோயில் விமான கோபுரத்தில் தங்க தகடுகள் பதிக்கும் பணி நடைபெற்றது. இதற்காக திருப்பதி தேவஸ்தானம் 100 கிலோ தங்கத்தை வழங்கியது. 9 அடுக்கு தங்க தகடுகளை பதிக்க ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. ஆனால், தற்போதைய பரிசோதனையில் 2 அடுக்கு தங்க தகடுகள் மட்டுமே பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் தங்க தகடுகளை பொருத்தியபோது விமான கோபுரத்தில் இருந்த சுமார் 30 சிலைகள் உடைக்கப்பட்டு உள்ளன. அப்போதைய அறங்காவலர் குழுத் தலைவரும் ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பாவுமான ஒய்.வி சுப்பா ரெட்டி, நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் இந்த விவகாரத்தை வெளியே வரவிடாமல் தடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
தற்போது தங்கம் மாயமான விவகாரம் குறித்து திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. தங்க தகடுகள் பொருத்திய தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர்களிடம் முழுமையாக விசாரணை நடத்தப்பட உள்ளது.
ஏற்கனவே ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் கலந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் பரகாமணியில் ரூ.100 கோடி கொள்ளை அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
****
கம்போடியாவில் விஷ்ணு சிலை இடிப்புக்கு இந்தியா கண்டனம்
உலகளவில் உணர்வுகளை புண்படுத்துகிறது என கம்போடியாவில் விஷ்ணு சிலை இடிக்கப்பட்டதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கம்போடியாவுடன் எல்லை பிரச்னை நீடித்து வரும் நிலையில் தாய்லாந்து ராணுவ வீரர்கள் கம்போடிய பகுதியில் இருந்த விஷ்ணு சிலையை இடித்து அகற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
29 அடி உயரமான இந்த விஷ்ணு சிலையை தாய்லாந்து ராணுவத்தினர் இடித்து அகற்றிய சம்பவம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
தற்போது நடைபெற்று வரும் தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியில், சமீபத்தில் கட்டப்பட்ட ஒரு ஹிந்து மத தெய்வச் சிலை இடிக்கப்பட்டது குறித்த செய்திகளை நாங்கள் கவனித்தோம். இந்த கோவிலில் உள்ள ஹிந்து சிலை நாகரிகப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, இப்பகுதி முழுவதும் உள்ள மக்களால் ஆழ்ந்த பக்தியுடன் போற்றி வணங்கப்படுகிறது.

இதுபோன்ற அவமரியாதையான செயல்கள் உலகம் முழுவதும் உள்ள பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்துகின்றன எனவும் கூறியுள்ளார்.
எல்லைப் பகுதியில் இருந்த விஷ்ணு சிலை அகற்றப்பட்டது, பாதுகாப்புக்காக தான் எனவும், மத நம்பிக்கைக்கு எதிராக இல்லை,” எனவும் தாய்லாந்து தெரிவித்துள்ளது.
****
அயோத்தி ராமர் கோவிலுக்கு ரூ.30 கோடி தங்க சிலை காணிக்கை
கர்நாடகாவை சேர்ந்த பக்தர் ஒருவர், அயோத்தி ராமர் கோவிலுக்கு, 30 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்திலான ராமர் சிலையை, காணிக்கையாக அனுப்பியுள்ளார்.
இது குறித்து, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் நிர்வாக குழு உறுப்பினர் அனில் மிஸ்ரா கூறியதாவது:
கர்நாடகாவை சேர்ந்த பக்தர் ஒருவர், அயோத்தி ராமர் கோவிலுக்கு அழகான ராமர் சிலையை, ‘பார்சல்’ வாயிலாக அனுப்பியுள்ளார்.
தங்கத்தால் தயாரிக்கப்பட்ட சிலையில், வைரங்கள், ரத்தினங்கள் உட்பட, அபூர்வமான கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. 10 அடி உயரம், 8 அடி அகலத்தில் ராமர் சிலை உள்ளது. இதை காணிக்கையாக செலுத்திய பக்தரை பற்றிய தகவல் தெரியவில்லை. இதன் மதிப்பு 30 கோடி ரூபாய் வரை இருக்கலாம். வரும் நாட்களில் சிலை தொடர்பான, முழுமையான தகவல்களை தெரிவிப்போம்.
தமிழகத்தின் தஞ்சாவூரின் சிலை தொழில்நுட்ப நிபுணர்கள், ராமர் சிலை தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். நுணுக்கமான கலை வடிவத்தை கொடுத்துள்ளனர். இந்த சிலையில் என்னென்ன உலோகங்கள் உள்ளன என்பதை, வல்லுநர்கள் ஆய்வு செய்கின்றனர்.
வரும், டிச., 29 முதல், அடுத்தாண்டு ஜன., 2ம் தேதி வரை அயோத்தியில் பால ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்ட இரண்டாம் ஆண்டு விழா நடக்கவுள்ளது. இந்த நாளில், காணிக்கையாக வந்துள்ள தங்க ராமர் சிலையை பிரதிஷ்டை செய்ய, ஏற்பாடு நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
***
திருப்பரரங்குன்றம் தீபத்தூண் போராட்டம் –
இந்து முன்னணி எச்சரிக்கை
‘திருப்பரங்குன்றம் மலையில் தீபத்துாணில் தீபம் ஏற்ற மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது புரட்சியாக வெடிக்கும்’ என்று ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் எச்சரித்தார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்றக்கோரி, மதுரையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பூர்ணசந்திரன் வீட்டிற்கு ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்n சென்றார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். முஸ்லீம்களின் கந்துாரி விழாவுக்கு அரசு அனுமதி வழங்கியது ஏற்புடையதல்ல. இரண்டுமதத்தினருக்கும், மலை மீது செல்ல அனுமதி அளிக்க வேண்டும். இல்லையென்றால் இருவருக்கும் அனுமதி மறுக்க வேண்டும்.அதனைவிட்டு விட்டு, ஒருவருக்கு மட்டும் அனுமதி வழங்குவது சரியானதல்ல என்றார் காடேஸ்வரா சுப்ரமணியம் .
***
சட்டப் போராட்டம் தொடரும்


”திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்றும் வரை சட்டப்போராட்டம் தொடரும்,” என, திருப்பரங்குன்றத்தில் ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார். திருப்பரங்குன்றம் முருகன் வீடு. குடைவரைக் கோயிலாக உள்ளது. ஒட்டுமொத்த மலையும் சிவனின் அம்சம். மலை மேல் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. அங்கு 15 தீர்த்தங்கள் உள்ளன. தற்போது ஒரு தீர்த்தத்தை ஆக்கிரமித்து, பிறை போட்டு வேலி அமைத்துள்ளனர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் தல விருட்சம் கல்லத்தி மரம். இது கோயிலுக்குள்ளும், மலை மீதும் உள்ளது. அந்த தலவிருட்சத்தில் முஸ்லிம்கள் சந்தனக்கூடு கொடி ஏற்றி இருக்கின்றனர். இதுகுறித்து ஏற்கனவே புகார் அளித்துள்ளோம்.
சந்தனக்கூடு விழா நடத்தும் பேச்சு வார்த்தையில் ஹிந்து அமைப்பினர், பொதுமக்களை அழைக்கவில்லை. இது சட்ட விரோதம். திருப்பரங்குன்றம் மலையில் முஸ்லிம்கள் தொடர்ந்து ஆக்கிரமித்து வருகின்றனர். மலையில் உள்ள சமணர் படுகையில் பச்சை பெயின்ட் அடித்தனர். புகார் கொடுத்ததும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்தனர். ஆனால் மேற்கொண்டு நடவடிக்கை இல்லை. சமணர் குகைகள், சுனைகள், தலவிருட்ச மரம் ஆக்கிரமிக்கப்படுகிறது. அதற்கு தமிழக அரசும், கோயில் நிர்வாகமும் துணை போகின்றன. இது நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படும்என்று அர்ஜுன் சம்பத் கூறினார்
****
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருட்டு; திண்டுக்கல் ரியல் எஸ்டேட் பிரமுகரிடம் விசாரணை
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருடப்பட்ட வழக்கில் நடந்த பணபரிவர்த்தனை தொடர்பாக திண்டுக்கல் ரியல் எஸ்டேட் பிரமுகர் எம்.எஸ்.மணி என்ற சுப்பிரமணியனிடம் சிறப்பு புலனாய்வுக்குழு போலீசார் விசாரணை நடத்தினர்.
சபரிமலை ஐயப்பன் கோயில் துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்கநகை கவசங்கள் செப்பனிடப்பட்டபோது 4.54 கிலோ தங்கம் மாயமானது.
இந்த நகைகள் முறைகேடு தொடர்பாக 9 அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேவசம் போர்டு நிர்வாக முன்னாள் அதிகாரி சிவகுமார் கைது செய்யப்பட்டார். 400 கிராம் தங்கத்தை திருடி கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்ட தங்கநகை வியாபாரி கோவர்தனிடம் கொடுத்ததாக அவர் வாக்குமூலம் அளித்தார்.
சிறப்பு புலனாய்வு போலீசார் தங்க வியாபாரி கோவர்தன், ஸ்மார்ட் கிரியேஷன் நிறுவன தலைமை செயல் அதிகாரி பங்கஜ் பண்டாரி ஆகியோரை கைதுசெய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணை தொடர்ச்சியாக பணப்பரிவர்த்தனை நடந்ததில் திண்டுக்கல் ரவுண்ட் ரோடு ராம்நகர் ரியல் எஸ்டேட், நிதி நிறுவனம் நடத்தும் எம்.எஸ்.மணி என்ற சுப்பிரமணியனுக்கும் பங்கு இருப்பது தெரியவந்தது.
எஸ்.ஐ.டி., டி.எஸ்.பி., சுரேஷ் பாபு தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் திண்டுக்கல் ராம்நகரில் சுப்பிரமணியன் அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரித்தனர். பணபரிவர்த்தனை தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் வழங்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்னர் சுப்பிரமணியன் அளித்த விளக்கத்தில் , தனக்கும் இந்தப் பிரச்சனைக்கும் தொடர்பில்லை என்றும் அவர்கள் விசாரணைக்கு வரும்படி சம்மன் தரவில்லை என்றும் கூறியுள்ளார்
****
டிசம்பர் 30 –ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி ; ஜனவரி 3 –ஆம் தேதி ஆருத்ரா தரிசனம்
பெருமாள் கோவில்களிலும், சிவன் கோவில்களிலும் இரண்டு பெரிய விழாக்கள் நடக்கவிருப்பதால் உற்சவம் துவங்கியுள்ளது.
டிசம்பர் 30 -ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியும் ஜனவரி 3 -ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகின்றன . இதனால் திருப்பதி வெங்கடாசலபதி கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்களில் பக்கதர்களின் சொர்க்க வாசல் தரிசனத்துக்குப் பெரிய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன
அதே போல சிதம்பரம், மதுரை, தஞ்சசை, திருவாரூர் தலங்களில் உள்ள சிவன் கோவில்களில் பக்தர்களின் தரிசனத்துக்கு ஆலய அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.
திருச்சியில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பை ஒட்டி திருச்சி மாவட்டத்துக்கு டிச.30 ல் உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவித்தார் . உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜன.24ம் தேதியை பணி நாளாகவும் அறிவித்தார்.
****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்; லண்டன் மாநகரிலிருந்து லதா யோகேஷ் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நான்காம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் 12 மணிக்கும், இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .
***
நேயர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
வணக்கம்.
—SUBHAM—-
Tags- Gnanamayam, Broadcast, News, 28 12 2025,