பரமஹம்ஸ யோகானந்தா (Post No.15,319)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,319

Date uploaded in London –   29 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

25-12-25 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பாகிய ஞானமயம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற உரை!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களே

நாகராஜன் வணக்கம், நமஸ்காரம்.

உலகெங்கும் க்ரியா யோகா என்ற புதிய எளிய யோகப் பயிற்சியை பரவச் செய்து லட்சக்கணக்கானோரை யோகத்தின் பால் ஈரத்த பெரிய மகான் பரமஹம்ஸ யோகானந்தா ஆவார். இருபதாம் நூற்றாண்டின் முதல் சூப்பர் ஸ்டார் குரு என்று இவர் போற்றப்பட்டார்.

முகுந்த லால் கோஷ் என்ற இயற்பெயர் கொண்ட இவர் 1893ம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி உத்தரபிரதேசத்தில் கோரக்பூரில் காயஸ்த குடும்பம் ஒன்றில் பிறந்தார். ஞான்பிரபாதேவி அம்மையாருக்கும் பாகபதி சரண் கோஷுக்கும் எட்டுக் குழந்தைகளில் நான்காவதாக இவர் பிறந்தார். இவரது தந்தையார் சரண் கோஷ் ரயில்வேயில்  வேலை பார்த்ததால் குடும்பம் அடிக்கடி இடம் பெயர்ந்து புதிய இடங்களில் குடியேற வேண்டியிருந்தது. அவர் ரயில்வேயில் வேலை பார்த்ததால் இலவச பாஸை மகனுக்குத் தந்தார். முகுந்தலால் கோஷ் வெவ்வேறு இடங்களுக்குச் என்று பல மகான்களைச் சந்தித்தார். யாத்திரை தலங்களுக்குச் சென்று இறைவனின் மகிமையை உணர்ந்தார். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் வாரணாசிக்குச் சென்ற இவருக்கு ஆன்மீகத்தில் பெரும் ஈடுபாடு ஏற்பட்டது. 17வது வயதில் இவர் தனது குரு ஶ்ரீ யுக்தேஸ்வர் கிரி என்ற மகானைச் சந்தித்தார். 1915ம் ஆண்டு யுக்தேஸ்வரின் ஆசியுடன் இவர் தனது பெயரை யோகானந்தா என்று மாற்றிக் கொண்டார்.

1920ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் போஸ்டன் நகருக்கு வந்த இவர் படிப்படியாக அமெரிக்க  மக்களை தன் பால் ஈர்த்தார். ஆயிரக்கணக்கானோர் இவரது உரைகளைக் கேட்க ஆவலுடன் வந்தனர். அதே ஆண்டின் இறுதியில் SRF – SELF REALISATION FELLLOWSHIP  என்ற நிறுவனத்தைத் தொடங்கிய இவர் 1952 முடிய 32 ஆண்டுகள் அமெரிக்காவிலேயே தங்கி இருந்து யோகாவைக் கற்பித்தார்.  இடையில் 1935, 1936 ஆகிய இரு ஆண்டுகளில் மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெளிநாடுகளுக்குச் சென்று உரையாற்றினார்.

1927ல் அமெரிக்க ஜனாதிபதி கால்வின் கூலிட்ஜ் இவரை வெள்ளை மாளிகைக்கு சிறப்பு விருந்தினராக அழைத்தார்.

இவர் பல பிரபலங்களுக்கு க்ரியா யோகாவை உபதேசித்துள்ளார். மகாத்மா காந்திஜி, ஆனந்தமயி மா, கிரி பாலா, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர் சி.வி,ராமன் உள்ளிட்ட பலருக்கு இவர் க்ரியாயோகத்தைக் கற்பித்துள்ளார்.  மேலை நாடுகளில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு இவர் க்ரியா யோகத்தைக் கற்பித்துள்ளார். 175 ஆண்டுகளில் இவரது சீடர்கள் உள்ளனர்.

க்ரியா யோகத்தில் பிராணாயாமத்தின் பலன்கள் உணரச் செய்யப்படுகிறது. மனிதனின் ஆற்றல்களை அதிகரிக்கவும் வலிமைப்படுத்தவும் பயிற்சிகள் தரப்படுகின்றன. இறைவன் அன்பு மயம் என்பது போதிக்கப்படுகிறது.

தனது வாழ்வில் ஏராளமான அற்புதங்களைப் பார்த்திருப்பதாக யோகானந்தா குறிப்பிடுகிறார். யோகிகள் அந்தரத்தில் மிதப்பது, அவர்கள் தங்கள் இதயத் துடிப்பை நிறுத்துவது உள்ளிட்ட பல அற்புதங்களை அவர் தனது சுயசரிதையில் விளக்குகிறார்.

தனது பணியை முடித்து விட்ட நிலையில் அவர் பூவுலகை நீக்கத் திருவுள்ளம் கொண்டார். அதை தனது சீடர்களிடம் கூடத் தெரிவித்து விட்டார். தயா மாதா என்ற தனது சிஷ்யையிடம், “இந்த பூவுலகை நான் விட்டுப் போக இன்னும் சில மணி நேரம் தான் இருக்கிறது என்பதை நீ அறிவாயா?” என்று கேட்டார்.

லாஸ் ஏஞ்சல்ஸில் 1952ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி அப்போது அங்கு இந்திய தூதராக வந்த பினய் ரஞ்சன் தாஸுக்கும் அவரது மனைவிக்கும் பில்ட்மோர் ஹோட்டலில் ஒரு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற பரமஹம்ஸர் இந்தியாவின் பெருமையைப் பேசி மை இந்தியா என்ற தனது கவிதையையும் வாசித்தார். உரை முடியும் போது அவர் உடல் கீழே விழுந்தது. அவர் உயிரைத் துறந்தார்.

மாரடைப்பால் அவர் உயிர் துறந்ததாக மருத்துவர்கள் கருத்துத் தெரிவித்தனர். ஆனால் பக்தர்களோ அவர் மஹா சமாதி நிலையைத் தானே அடைந்ததாகக் கூறினர்.

அவரது உடலின் அங்கங்கள் சிறிதும் சிதைவு படவில்லை என்பதை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். மார்ச் 7ம் தேதியன்று எப்படி இருந்ததோ அதே போலவே அவரது உடல் அங்கங்கள் சிதைவுபடாமல் மார்ச் 27ம் தேதி  வெங்கலப் பேழையின் மூடி மூடும் போதும் அப்படியே இருந்தது என்று ஹாரி டி. ரோ தனது அறிக்கையில் தெரிவித்தார். இது டைம் பத்திரிகையில் 1952 ஆகஸ்ட் 4ம் தேதி வெளி வந்தது. ரோ என்பவர் கலிபோர்னியாவில் க்ளண்டேலில் ஃபாரஸ்ட் லான் மெமோரியல் பார்க்கின் டைரக்டர் ஆவார். க்ரியா யோகத்தின் பயனாக இது அமைந்தது எனலாம்.

இவரது சுயசரிதையை இவர் Audobiography of a Yogi  என்ற நூலில் அழகுற விவரித்துள்ளார். 531 பக்கங்களைக் கொண்ட இந்த நூல் 49 அத்தியாயங்களைக் கொண்டது. பல வியப்பூட்டும் சுவையான விஷயங்களை இதில் படிக்கலாம். 45 மொழிகளில் இது மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.  பிலில் ஜலெக்ஸி மற்று ஹார்பர் காலின்ஸ் பதிப்பகத்தால் இது இருபதாம் நூற்றாண்டில் வெளியான நூறு முக்கிய புத்தகங்களில் ஒன்று என்று கணிக்கப்பட்டுள்ளது. பிரபல ஆப்பிள் நிறுவனத்தை நிறுவிய ஸ்டீவ் ஜாப்ஸ் இவர் பால் ஈர்க்கப்பட்டதோடு ஆட்டோ பயாகிராபி ஆஃப் தி யோகி புத்தகத்தைன் 500 பிரதிகளை ஆர்டர் செய்து வாங்கி முக்கியமானவர்களுக்கு வழங்கினார்.

எல்விஸ் ப்ரீஸ்லியும் இந்த புத்தகத்தால் ஈர்க்கப்பட்டார். சுமார் நாற்பது லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்கப்பட்ட இந்த நூல் இன்றும் தொடர்ந்து அதிக அளவில் விற்பனை ஆகிக் கொண்டே இருக்கிறது.

1977ம் ஆண்டு இவர் மறைந்த 25ம் ஆண்டின் நினைவாக இந்திய அரசு இவரை கௌரவிக்கும் வகையில் ஒரு தபால்தலையை வெளியிட்டது. மீண்டும் 2017ம் ஆண்டில் யோகாதா சத் சங்கத்தின் நூறாவது ஆண்டு விழாவையொட்டி இன்னொரு தபால்தலையை வெளியிட்டது,

பரமஹம்ஸ யோகானந்தரின் அருமையான பொன்மொழிகள் கூட மிக எளிமையானவையே. அதில் ஆழ்ந்த ரகசியங்களை அவர் குறிப்பிடுகிறார்.

அவற்றில் சில இதோ:

எவ்வளவு எளிமையாக இருக்கமுடியுமோ அவ்வளவு எளிமையாக இருங்கள்; எப்படிப்பட்ட சிக்கலற்ற சந்தோஷமான வாழ்க்கை உங்களுக்கு அமைகிறது என்பதைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

ஒவ்வொரு’ நாளைப் பொழுதும்’ இன்றைய தினத்தினாலேயே நிர்ணயிக்கப்படுகிறது.

தீயனவற்றில் உங்கள் எண்ணங்களை இருக்க நீங்கள் அனுமதித்தால் நீங்கள் மிகவும் மோசமானவராக ஆவீர்கள். நல்லனவற்றில் உங்கள் எண்ணங்களை இருக்க அனுமதித்தால் நீங்கள் அழகின் தரத்தை உங்கள் வசமாக்கிக் கொள்வீர்கள்.

உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாக இருப்பதற்கான ரகசியம் இது தான் – கடந்த காலத்தைப் பற்றி வருந்திப் புலம்பாதே. எதிர்காலத்தைப் பற்றியும் கவலைப்படாதே. தொந்தரவுகளைப் பற்றியும் கவலைப்படாதே! நிகழ்காலத்தில் ஒவ்வொரு கணத்திலும் புத்திசாலித்தனமாகவும் உண்மையுடனும் வாழ்வாயாக.

பரமஹம்ஸ யோகானந்தரைப் போற்றி வணங்குவோமாக!

நன்றி. வணக்கம்!

–Subham—

tags- Paramahamsa Yogananda

Leave a comment

Leave a comment