.jpg)
கிருஷ்ண அவதாரம்
.jpg)
Post No. 15,324
Date uploaded in London – 30 December 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
.jpg)
மத்ஸ்ய – மீன் –அவதாரம்
English version of Avatar was posted yesterday; following is the Tamil version
அவதாரம்
இந்தச் சொல்லுக்குப் பொருள் கீழே இறங்குதல் ; இறைவன் பூமிக்கு வந்து துஷ்டர்களை அழித்து நல்லோரைக் காப்பதற்கு இப்படி வருவார்; குறிப்பாக விஷ்ணுவைப் பொருத்தமட்டில் இந்தச் சொல் பயன்படுத்தப்படும்; பாகவதத்தில் இருபதுக்கும் மேலான அவதாரங்கள் பேசப்பட்டாலும் தச அவதாரம் = தசாவதாரம் என்ற பத்து அவதாரங்கள் முக்கியமாகப் போற்றப்படுகின்றன ; சங்க இலக்கியமான கலித்தொகை, பரிபாடல் முதலிய நூல்களில் பெரும்பாலான அவதாரங்கள் பாடப்படுவதால் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இமயம் முதல் குமரி வரை இந்துக்கள் இவைகளைப் போற்றி வணங்கித் துதிபாடியது தெரிகிறது .
சங்க இலக்கிய நூலான அகநானூற்றில், யமுனை நதிக்கரையில் கிருஷ்ண பரமாத்மா கோபிகைகளுடன் விளையாடியது பற்றிக்கூட புலவர் பாடியுள்ளார்; வால்மீகி பாடாத ராமாயணக் கதைகள், சங்க இலக்கியத்திலும் ஆழ்வார் பாடல்களிலும் காணக்கிடக்கின்றன
ஜெயதேவர் என்ற ஒரிஸ்ஸா மாநில மகான் கீதா கோவிந்தம் நூலில் ஒரு அஷ்டபதியில் பலராம அவதாரத்தை நீக்கிவிட்டு புத்தர் பெயரைச் சேர்த்தார் ஆனால் அதற்க்கு முந்திய திவ்யப் பிரபந்தப்பாடல்களில் புத்தரைக் காண முடியாது இன்று வரை எந்த இந்துவும் புத்தரை இந்துக்கோவிலில் வணங்குவதும் இல்லை ; சிலை வைத்ததும் இல்லை.
***
.jpg)
வராக அவதாரம்
.jpg)
நரசிம்ம அவதாரம்
.jpg)
பரசுராம அவதாரம்
.jpg)
கருடவாகனத்தில் விஷ்ணு ; வரதராஜப் பெருமாள்
முதல் அவதாரம் மத்ஸ்ய/ மீன் அவதாரம்
இது பூமியை வெள்ளம் மூழ்கடித்த கதை; உலகின் எல்லா கலாச்சாரங்களில் இந்த பிரளயம் பற்றிய கதையைக் காணலாம் ; மனு என்பவர் சந்தியாவந்தனம் செய்ய தண்ணீரெடுத்தபோது ஆதில் ஒரு மீன் குஞ்சைக் கண்டார்; நாளடைவில் அது பெரிதாக வளரவே கடலில் விட்டார். அப்போது அந்த மீன் பிரளயம் வரப்போவதைச் சொல்லி ஒரு கப்பலுடன் வருமாறு உத்தரவிட்டது; அது விஷ்ணுவின் முதல் அவதாரம். பிரளயம் வந்தபோது பிரம்மாண்டமான மீனின் கொம்பில் கப்பலை மாட்டினார் மனு; அது பாதுகாப்பான இடத்துக்கு அனைவரையும் கூட்டிச் சென்றது. பின்னர் பிரளயம் வற்றியது.
.jpg)
இரண்டாவது கூர்ம/ ஆமை அவதாரம்
தேவர்களும் அசுரர்களும் சாவா மருந்தான அமிர்தத்தை எடுக்க கடலினைக் கடைந்தபோது , விஷ்ணு , ஆமை வடிவில் தோன்றி மந்தர மலையை தனது முதுகில் தாங்கிக் கொண்டார்; வாசுகி என்னும் பாம்பினை மலையில் சுற்றி கடலினைக் கடைந்தபோது அமிர்தம் உளப்பட 14 பொருள்கள் வந்தன ; பாம்பின் வாயிலிருந்து வெளியேறிய விஷத்தை சிவபெருமான் அருந்தவே அதை பார்வதி, கழுத்துகுக் கீழே போகாமல் தடுத்தார்; இதனால் சிவனுக்கு நீல கண்டன் என்று பெயர் ; அதுவும் கூட சங்கத் தமிழ் இலக்கியத்தில் இருக்கிறது.
***
மூன்றாவது வராக அவதாரம்; அது பற்றி முன்னரே கண்டோம்
நாலாவது நரசிம்மாவதாரம்
மனித உடலும் சிங்க முகமும் உடைய நரசிம்மாவதாரம் ஹிரண்யகசிபு என்ற அசுரனை வதைக்க உருவானது; அவருடைய மகன் பிரஹலாதன் என்ற சிறுவன் விஷ்ணுவை அனுதினமும் வணங்கவே கோபம் கொண்ட ஹிரண்யகசிபு, உன்னுடைய விஷ்ணு சர்வ வியாபி என்றால் இந்த தூணில் இருக்கிறானா? காட்டு பார்ப் போம்! என்று சவால் விட்டான் ; தூணினை உதைக்கவே விஷ்ணு மனித சிங்க உருவில் தோன்றி ஹிரண்ய கசிபுவைக் கிழித்தெறிந்தார்.
அவர் உக்ர நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மர் என்ற வடிவங்களில் அகோபிலம், சிங்கப்பெருமாள் கோவில், ஹம்பி, மகாபலிபுரம் , மதுரைக்கு அருகிலுள்ள நரசிம்மம் முதலிய இடங்களில் காட்சி தருகிறார்.
***
வாமனர், த்ரிவிக்ரமர் உலகளந்த பெருமாள்
ஹிரண்ய கசிபு வம்சத்தில் வந்த அசுரர் குல மன்னன் பெயர் மகா பலி; தர்ம நெறிப்படி ஆட்சி செய்தாலும் இந்திரனையே பதவி இழக்க வைத்தார்; இதனால் உஷாரான தேவர்கள்,விஷ்ணுவை வேண்டவே அவர் பூமிக்கு வந்து குள்ள பிராமண பிரம்மச்சாரி வேஷம் போட்டார். அப்போது யாகம் நடத்திய மஹாபலி, யார் என்ன கேட்டாலும் தருவதாக அறிவித்தான். வாமன என்ற பெயரில் வந்த பிரம்மச்சாரி மூன்றடி மட்டுமே கேட்டார்.
தந்தேன் என்றான் அசுரர் மன்னன். ஆனால் குள்ள வாமன வடிவமோ நீண்டு நெடிது வளர்ந்து முதல் அடியில் உலகத்தையும் இரண்டாவது அடியில் பிரபஞ்சத்தையும் அளந்ததுவிட்டு மூன்றாவது அடியை எங்கே வைப்பது? என்று கேட்டபோது மகாபலி தலையைக் காட்டினான்; அதில் விஷ்ணு காலினை வைத்து அழுத்தி அவனைப் பாதாள உலகத்துக்கு அனுப்பினார்; ஆனால் அவன் தரும நெறிப்படி ஆட்சி செய்து மக்களின் நன்மதிப்பினைப் பெற்றதால் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையின்போது, மக்களைச் சந்திக்க அனுமதி கொடுத்தார் இபோதும் ஓணம் பண்டிகை மிகப்பெரிய ளவில் கேரளத்தில் நடத்தப்படுகிறது சங்கத் தமிழ் இலக்கியத்திலும் தேவாரம் திவ்யபிரபந்தத்திலும் ஓணம் பண்டிகை சிறப்பிடம் பெறுகிறது ; வாமனன் வளர்ந்த உருவத்தை த்ரிவிக்ரமன் என்றும் ஓங்கி உலகளந்த பெருமாள் என்றும் கோவில்களில் காணலாம்.
ரிக் வேதத்திலேயே மூன்று அடி அளந்த கதை வருகிறது எமுஷா என்ற பெயரில் வராக அவதாரமும் உள்ளது; ஏனைய அவதாரங்கள் சதபத பிராமண நூலில் உள்ளது
***
பரசுராம அவதாரம்
அவதாரங்களில் மூன்று ராமன்கள் உண்டு ; தசரத ராமன், கிருஷ்ணனின் சகோதரன் பலராமன், க்ஷத்ரியர்கள் எதிரியான பிராமண பரசுராமன் ; ஜமதக்கினி மஹரிஷியின் மகனான பரசுராமன் க்ஷத்ரியர்களைப் பழிவாங்குவதற்காக அவர்களது 21 தலை முறையினைஅழித்தார் என்று புராணங்கள் விளம்பும்; ஆயினும் ராமன் என்னும் க்ஷத்ரியரிடம் தோற்று, தனது பலம் அனைத்தையும் அவரிடம் விட்டுச் சென்றார் .
***
கல்கி அவதாரம்
இன்னும் ஒரு அவதாரம் — கல்கி என்ற வடிவத்தில் — இனிமேல் வரப்போகிறது; விஷ்ணு பகவான் வெள்ளை குதிரை மீது ஏறி கத்தியுடன் வலம் வந்து தர்ம விரோதிகளான மிலேச்சர்கள் அனைவரையும் அழித்து பூமியில் தர்மத்தை நிலை நாட்டுவார்; . அவர் எப்போது வருவார் என்பது காலப்போக்கில் தெரியும்
ராமரும் சீதையும்
.jpg)
கஜேந்திர மோட்சம்
ராமர், கிருஷ்ணர் அவதாரங்கள்
அவதாரங்களில் இமயம் முதல் குமரி வரை அல்லது இலங்கை வரை அல்லது இந்தோனேஷியா- கம்போடியா வரை சித்திரங்களிலும் சிற்பங்களிலும் இலக்கியங்களிலும் இடம்பெற்ற இரண்டு அவதாரங்கள் ராமரும் கிருஷ்ணரும் தான் ;அவர்கள் கதைகளைப் படியாதவர்கள்/ அறியாதவர்கள் மக்கட்பதர்களே ; தேவாரம் திருவாசகம், திவ்யப்பிரபந்தம் அருணகிரி நாதரின் திருப் புகழ் முதலிய நூல்களில் அவர்களுடைய குறிப்புகள் வருகின்றன. பகவத் கீதை என்னும் நூல் மூலம் மஹா பாரதக் கதை உலகிலுள்ள எல்லா மொழிகளுக்கும் போய்விட்டது ஆகையால் இங்கு விளக்கத் தேவை இல்லை.
-subham—
Tags- அவதாரங்கள், கல்கி, படங்கள், சிற்பங்கள் பரசுராமன், சங்க இலக்கியம் , கதைகள், 37 Hinduism through 500 Pictures in Tamil and English-37; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-37