மலேரியாவுக்கான மருந்து குயினைன் ஒரு தற்செயல் கண்டுபிடிப்பு தான்! (Post.15,325)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,325

Date uploaded in London –   31  December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

14-10-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

மலேரியாவுக்கான மருந்து குயினைன் ஒரு தற்செயல் கண்டுபிடிப்பு தான்! 

ச. நாகராஜன்

உலகையே ஒரு காலத்தில் பயமுறுத்திய மலேரியா வியாதிக்கு குயினைன் ஒரு அருமருந்தாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 

இதைப் பற்றி ஐரோப்பாவில் வழிவழியாக வழங்கி வரும் கதை இது: 

பெருவின் வைசிராயின் மனைவிக்குப் பெயர் கவுண்டஸ் சின்சோன் (Countes Chinchon). அவர் கடுமையான மலேரியா வியாதியால் பாதிக்கப்பட்டார். பயந்து நடுங்கிய அவருக்கு மலேரியா வியாதி குணமானது பெருவிலுள்ள ஒரு மரத்தின் அடிப்பட்டையின் சாறை மருந்தாகக் கொடுத்ததால் தான்!

இதனால் மனம் மிக மகிழ்ந்த அவர் 1638ம் ஆண்டில் அந்த மருந்தை ஐரோப்பாவிற்குத் தன்னுடன் கொண்டு சென்றார். அது தான் குயினைன்.

1742ம் ஆண்டு ஸ்பெயினைச் சேர்ந்த தாவர இயல் வல்லுநரான லினாஸ் (Linanaeus) அந்த மரத்திற்கு சின்சோனா(Chinchona) என்று பெயரிட்டார்.  இந்தப் பெயரை கவுண்டஸ் சின்சோன் – ஐ கௌரவிக்கும் விதமாகப் பெயரிட்டார். ஆனால் இதில் இரண்டு தவறுகள் ஏற்பட்டு விட்டன. முதல் தவறு அவர் தனது பெயரில் ஒரு ஸ்பெல்லிங் தவறைச் செய்தார் அதாவது ஒரு ‘h’ – ஐ விட்டு விட்டார். இரண்டாவது கவுண்டஸ் சின்சோனுக்கு மலேரியா வியாதியே இல்லை. அவர் ஸ்பெயினுக்கு மரப்பட்டைச் சாறைக் கொண்டுபோகவும் இல்லை. செல்லும் வழியிலேயே கொலம்பியாவில் கட்டஜினா என்ற இடத்தில் இறந்து விட்டார்.

உண்மை என்னவென்று பார்ப்போம்!

லினஸுக்கு நூறு வருடங்கள் முன்பாகவே ஜெஸுயிட் பாதிரியார்கள் அந்த மரத்திற்கு ஜெஸுயிட் அடிப்பட்டை என்ற பெயரை வழங்கி இருந்தனர்.

தென்னாப்பிரிக்காவில் உள்ள ஆண்டஸ் காடுகளில் வாழ்ந்து வந்த பூர்வீக இந்தியர்களில் ஒருவருக்கு மலேரியா ஜுரம் வந்து விட்டது. அவர் தற்செயலாக கொய்னா மரம் வளர்ந்திருந்த இடத்திற்கு அருகில் தாகத்தைத் தணிக்க தண்ணீர் அருந்தப் போனார். அந்தத் தண்ணீரோ கசப்பாய் கசந்தது. கொய்னா மரத்தில் ஊறியதால் தான் தண்ணீர் கசக்கிறது என்பதை உணர்ந்த அவர் அது விஷ மரம் ஆயிற்றே, ஆகவே விஷத் தண்ணீரை அருந்தியதால் தான் இறக்கப் போவது உறுதி என்று பயந்தார். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக மலேரியா வியாதியிலிருது குணமானார். அவர்கள் தங்கள் பாஷையில் இந்த மரத்தை கொய்னா-கொய்னா என்று அழைத்து வந்தனர். ஆகவே இந்த மருந்திற்கு கொய்னா மருந்து என்ற பெயர் புழக்கத்தில் வந்தது.

ஆக, மலேரியாவுக்கான மருந்து தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட் விதம் இது தான்!

1820ம் ஆண்டு இது பற்றிய ஆய்வு தொடங்கப்பட்டது. 1908ம் ஆண்டில் கூட லாபரட்டரி சோதனையில் இதற்கான ‘கெமிகல் ஃபார்முலா” கண்டுபிடிக்கப்படவில்லை. 1944ம் ஆண்டு தான் இதைப் பற்றிய முழு அறிவியல் தகவலும் உறுதி செய்யப்பட்டது. 

கொசுக்களின் தொல்லை உலகில் எல்லா இடத்திலும் இருந்ததால் மலேரியாவும் எல்லா இடங்களிலும் பரவி இருந்து உயிரக்ளை பலி வாங்கிக் கொண்டே இருந்தது. 

ஆகவே குயினைன் மரத்தின் முக்கியம் உலகெங்கும் உணரப்பட்டது.

 ஆனால் முதல் உலகப்போரின் போது ஜெர்மனிக்கு குயினைன் மருந்து கிடைக்கவில்லை. உடனடியாக மாற்று மருந்து ஆராய்ச்சியை ஜெர்மனி முடுக்கி விட்டது. எல்லா நாடுகளும் இந்த மரத்தை போட்டி போட்டுக் கொண்டு வளர்க்க ஆரம்பித்தன.

இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கப் படைகள் மலேரியாவைப் பரப்பும் கொசுக்கள் இருந்த இடத்தில் தங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் இத்தாலிய வீரர்களை சிறைப்பிடித்தனர். அவர்கள் கையிலிருந்த க்ளோரோக்யின் (Chloroquine) மாத்திரையை அமெரிக்கா கொண்டு சென்று ஆய்வுக்கு உட்படுத்தினர்.

அமெரிக்க ஆய்வில் க்ளோரோக்யின் அற்புதமான ஒரு மருந்து என்பது கண்டுபிடிக்கப்படவே அதை அவர்கள் உற்பத்தி செய்து பயன்படுத்த முடிவு செய்தனர்.

இப்படி உலகில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி தொடர் ஆய்வுகளைச் செய்ய வைத்து மலேரியா வியாதியை அநேகமாக எல்லா நாடுகளும் ஒழித்துக் கட்ட வழி வகுத்தது ஒரு தற்செயல் கண்டுபிடிப்பு தான். இதை ஆங்கிலத்தைல் செரிண்டிபிடி (Serendipity) என்று கூறுவர்.

பல தற்செயல் கண்டுபிடிப்புகள் உலக வரலாற்றையே மாற்றி உள்ளன.

அதில் முக்கியமாக அமைவது குயினைன் மருந்து தான்!

**

Leave a comment

Leave a comment