London Swaminathan standing with a bag , Somnathpur
Post No. 15,341
Date uploaded in Sydney, Australia – 17 January 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சோமநாத்பூரில் நான் கண்ட அற்புத சிற்பற்பங்கள் (Post No.15,341)
Lodon Swaminathan in Somnathpur
1
சோம்நாத்பூர் எங்கே உள்ளது ?
கர்நாடக மாநிலத்தில் மைசூர் நகரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் சோம்நாத்பூர் இருக்கிறது. அதைப்பார்த்துவிட்டுத் திரும்புவதற்கு அரை நாள் போதும் .
2
அங்கே பார்ப்பதற்கு என்ன இருக்கிறது ?
ஹொய்சாளர் கட்டிடக் கலையை ஒரே இடத்தில் கண்டுகளிக்க முடியும் . ஹலபேடு , பேலூர் போன்ற இடங்களில் பரந்த வெளியில் காணும் சிற்பங்களை இங்கே ஒரே கட்டிடத்தில் காண முடியும். ஏனெனில் அவைகளை ஒப்பிடும்போது சின்னது.
இது சென்ன கேசவர் கோவில் ஆகும்; ஆயினும் இப்போது வழிபாடு இல்லை ; தெய்வங்களுடைய சந்நிதிகள் வழி பாடில்லாமல் உள்ளன கோவில் என்பதால் காலணிகளை வெளியே வைத்துவிட்டு உள்ளேசெல்ல வேண்டும்.
நட்சத்திர வடிவ மேடையில் அமைக்கப்பட்டுள்ள கோவிலை வலம் வருவதற்கு பாதை உள்ளது; அதில் நடந்து சென்று வெளிப்புறச் சுவரில் உள்ள இந்து தெய்வங்களைக் காணலாம் .
கேசவர், ஜனார்த்தனர், வேணுகோபாலர் என்ற மூன்று சந்நிதிகள் உள்ளன; கோவிலின் வடக்கு, தெற்கு, மேற்குப் பகுதிகளில் இராமாயண, மஹாபாரத பாகவத புராணக் கதைகளை சித்தரித்துள்ளனர் . கோவில் கிழக்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது
ராமாயண, மஹாபாரதக் காட்சிகளை சிற்பங்களாக வடித்துள்ளார்கள்; அங்கு என்ன இருக்கிறது என்பதைப் படிக்காமல் போனால் எல்லா சிற்பங்களும் ஒன்று போலவே தெரியும் .ஆகையால் படித்துவிட்டுப் போவது நல்லது. அல்லது அங்குள்ள கைடுகளுக்குக் காசு கொடுத்து அமர்த்திக்கொள்ள வேண்டும்.
3
நான் ஏன் சென்றேன் ?
ஏறமுடியாத சிரவணபெலகொலா மலை, பேலூர், ஹளபேடு போன்ற இடங்களை பார்த்துவிட்ட எனக்கு மைசூருக்கு மிக அருகிலுள்ள சோம்நாத்பூரினைக் காணாதது ஒரு குறையாக இருந்தது .நான் பார்த்த மதுரை மீனாட்சி கோவிலையே நூறு முறைக்கும் மேலாகப் பார்த்த எனக்கு இனிமேல் ஒவ்வொரு தடவை ஒரு ஊருக்குப் போகும்போதும் புது இடங்களைக் காண வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது ; அவ்வாறே சங்கல்பம் செய்துகொண்டேன் . இந்த முறை கர்நாடக மாநிலத்துக்குச் சென்றபோது மேலுக்கோட்டை , ஸ்ரீரங்கப்பட்டணம் (3-1-2026), சோம்நாத்பூர் (4-1-2026) என்ற இடங்களை முதல் முறையாகக் கண்டேன்; ஏற்கனவே பார்த்த மைசூர் அரண்மனையையும் சாமுண்டீஸ்வரி கோவிலையும் மீண்டும் மூன்றாவது முறையாகப் பார்த்தேன்.
4
கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்ன?
எந்த இடத்துக்குப் போகும் முன்னர் திறக்கும் நேரம், மூடும் நேரத்தை அறிய வேண்டும் . சோம்நாத்பூர் சிற்பக் களஞ்சியம், தொல் பொருட் துறைக் கட்டுப்பாட்டில் இருப்பதால் காலை பத்து மணிக்குத் திறந்து மாலை ஐந்து மணிக்குப் பூட்டி விடுவார்கள்.
5
கட்டணம் எவ்வளவு ?
உள்ளே நுழைவதற்கு கட்டணம் இருபது ரூபாய் தான் . ஆனால் Google Pay கூகுள் பே மூலம் கொடுக்க வேண்டும் என்பதால் கொஞ்சம் கஷ்டப்பட்டோம். வெளிநாட்டுப் போன்களில் அந்த வசதி இல்லை. பின்னர் பிறரிடம் பணத்தைக் கொடுத்து கூகுள் பே செய்தொம் ; இரண்டு மணி நேரத்தில் முடிந்தவரை சுற்றிப்பார்த்து போட்டோ எடுத்துத் திரும்பினோம்.
6
வரலாறு என்ன ?
ஹொய்சாள மன்னர் மூன்றாவது நரசிம்மன் பிராமணர்களுக்கு கொடுத்த நிலத்தில் அமைக்கப்பட்ட விஷ்ணு கோவில் இது ; சுமார் 750 ஆண்டுகள் பழமையானது.
கோவிலுக்கு வெளியே மிக உயரமான கருட ஸ்தம்பம் இருக்கிறது அதன் உச்சியில் கருடன் உருவம் இப்போது இல்லை .
மாலிக்காபூர், முகமது பின் துக்ளக் போன்ற மத வெறி பிடித்த முஸ்லீம்கள் இதைச் சுற்றியுள்ள பல கோவில்களை இடித்துத் தள்ளிவிட்டனர். இது தப்பிப் பிழைத்தது அதிசயமே.
மூன்றாவது நரசிம்மரின் படைத்தளபதி சோமநாத தண்டநாயக அமைத்த அக்ரரஹாரம் (பிராமணர் குடியிருப்பு) இது.
முக்கியக் கோவிலுக்கு வெளியே தூண்களுள்ள பிரகாரங்கள் உள்ளன. அதில் இந்து மத, சமண மத சந்நிதிகளில் பல தெய்வங்களைக் காணலாம்.
பேலூர் , ஹளபேடு ஆகிய கோவில்களுடன் இதையும் யுனெசுகோ உலக பாரம்பர்ய தலங்களில் ஒன்றாக அறிவித்ததுள்ளது.
7
சுவர்களில் காண வேண்டிய சிற்பங்கள்:
ராமாயண காட்சிகளில் சில:
தசரதர் செய்த புத்ர காமேஷ்டி யாகம், குழந்தைகள் பிறந்து தொட்டிலில் ஆட்டியது, , தாடகை வதம், சீதை திருமணம், விராடன், சூர்ப்பனகை , மாய பொன் மான் சம்பவங்கள், ஹனுமான், ஜடாயு சுக்ரீவன் உருவங்கள் .
***
பாகவத புராண காட்சிகளில் சில:
பாற்கடலில் பள்ளிகொண்ட விஷ்ணு, கிருஷ்ண ஜனனம், யமுனை நதியைக் கடத்தல், கிருஷ்ணரின் பால்ய லீலைகள்
கோவர்த்தன மலையைத் தூக்கிப்பிடித்தது, பூ தனை, கம்சன் போன்றோரை வதம் செய்தது
**
மஹாபாரதக் காட்சிகள்
திருதராஷ்டிரன் சபை, பாண்டவர் வனவாசம், பீமன்- ஹிடும்பி திருமணம், கடோத்காஜன் பிறப்பு,
அர்ஜுனன் அம்பு விட்டு மீனை அடித்தல்; திரெளபதி திருமணம் , சூதாட்டம், போர்க்களக் காட்சிகள், பாண்டவர் வெற்றி.
**
பொது சிற்பங்கள்
தாண்டவமாடும் கணேசர்,
நடனம் ஆடும் சரஸ்வதி
கிருஷ்ணரின் பல வடிவங்கள்
தசாவதாரங்கள்
லட்சுமி நடனம் ஆடுதல்
பிரம்மா
ஹரிஹரன் (சிவன் +விஷ்ணு)
துர்கா
மஹிஷாசுரமர்த்தனி i
நடனம் ஆடும் விஷ்ணு
8
தூண்களும் கூரையும்
கோவிலுக்குள் உள்ள குடை வடிவக் கூரைகள் அற்புத வேலைப்பாடுகள் உடையவை . அவைகளை அண்ணாந்து பார்த்து ரசிக்க வேண்டும்.
தூண்கள் ‘லேத்’ என்னும் கடைசல் எந்திரக் கருவிகள் மூலம் கடைந் தெடுக்கப்பட்டவை.
ஒவ்வொரு சிலை மீதுள்ள நகைகளையும் கவனிக்க வேண்டும்; யானை மீது கூட அலங்காரம் இருக்கிறது சிலைகளின் கைகளில் உள்ள பொருட்களும் அவை யாருடையவை என்பதைக் காட்டும்
9
கன்னட கல்வெட்டு
அருமையான அற்புதக் கல்வெட்டு!
பழைய கன்னட மொழியில் 2 மன்னர் செய்த தானங்கள் மற்றும் பணிகளைக் கூறும் கல்வெட்டு கோயிலுக்குள் நுழைந்தவுடன் தென்படும்; ஆங்கிலத்திலும் விளக்கம் உள்ளது.
கல்வெட்டுப் பலகையின் உயரம் சுமார் மூன்று மீட்டர் ; இதில் நான்கு செய்திகள் உள்ளன மூன்றாவது நரசிம்மர் கால தானங்கள் இரண்டும் மூன்றாவது வல்லாள மன்னனின் தானங்கள் இரண்டும் உள்ளன கல்வெட்டின் மேல்புறத்தில் கோவிலின் மூன்று தெய்வங்களும் செதுக்கப்பட்டுள்ளன. முதல் கல்வெட்டில் 91 வரிகள் பழைய கன்னட லிபியில் செதுக்கப்பட்டுள்ளன. அதிலுள்ள மொழி கன்னடமும் சம்ஸ்கிருதமும் ஆகும் .கோவிலிலுள்ள தெய்வங்களின் வழிபாட்டிற்காக மூன்றாவது நரசிம்ம மன்னன் 3000 பொற்காசுகள் அளித்தையும் சோமைய தண்ட நாயக்கன்பேரில் அக்ரஹாரம் அமைக்கப்பட்டதையும் இது தெரிவிக்கிறது. அவனுடைய உறவினர்கள் மல்லிதேவ, சிக்க கேடய தண்ட நாயகர்கள் கோவிலின் பராமரிப்புக்கு நிதி உதவிய செய்தியும் உளது. கல்வெட்டின் காலம் பொது ஆண்டு 1268 CE மற்றும் 1276 CE.
அடுத்த கல்வெட்டில் 42 வரிகள் அதன் காலம் 1281 . ஆசார்யர்கள், வைஷ்ண வர்கள் நம்பிகள் ஆகியோருக்கு மூன்றாவது நரசிம்ம மன்னன் கொடுத்த நிலங்கள் , கிராமங்கள் ஆகியவற்றில் கிடைக்கும் பலன்களை , வருவாய்களை கோவிலுக்குச் செலவழித்தது போக மீதியுள்ளவற்றை அவர்கள் அனுபவிக்கலாம் என்ற செய்தி உள்ளது.
கன்னட மொழியிலுள்ள மூன்றாவது கல்வெட்டு மன்னன் மூன்றாவது வல்லாளன் செய்த தானம் பற்றியது அதிலுள்ள வரிகள் 52 ; அதன் காலம் 1300 CE . சோமநாதபுர மக்கள் அங்குள்ள வைஷ்ணவ , சைவ கோவில்களில் எவ்வித வழிப்பாட்டினைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அரச கட்டளை இது .ஒவ்வொரு கோவிலுக்கும் ஒதுக்கப்பட்ட நிலபுலன்கள், செலவழிக்க வேண்டிய நிதி முதலிய விவரங்களை இது தெரிவிக்கிறது.
கன்னட மொழியிலுள்ள நாலாவது கல்வெட்டு மன்னன் மூன்றாவது வல்லாளன் செய்த தானம் பற்றியது அதிலுள்ள வரிகள் 34 ; அதன் காலம் 1326 CE. இந்தக் கல்வெட்டு ஆறு தட்டின மஹாஜனங்களுக்கும் வைஷ்ணவ மஹாஜனங்களுக்கும் இடையேயுள்ள உடன்பாட்டினைக் கூறுகிறது; கால்வாய் மற்றும் குளத்தினைப் பராமரிக்க வைஷ்ணவ மஹாஜனங்கள் ஆண்டுக்கு ஆறு பொற்காசுகளை அளிக்க வேண்டும் என்பது உடன்படிக்கை.
இரண்டு மன்னர்களின் நான்கு செய்திகளை இப்படி ஒரே கல்வெட்டில் காண்பது ஒரு அதிசயமே . ஒவ்வொன்றும் வெவ்வேறு தேதி உடையவை என்பதும் குறிப்பிட்ட தக்கது.
–subham—
Tanks–சோமநாதபுரம், கர்நாடகம், ஹொய்சாளர் கலை, நரசிம்ம மன்னன், வல்லாள மன்னன், கல்வெட்டுச் செய்திகள் , கன்னட கல்வெட்டு சென்ன கேசவர் கோவில் , ப டங்கள், சோம்நாத்பூர், London Swaminathan