மைசூர் அரண்மனையில் நான் கண்ட வெள்ளிக் கதவு! (Post No.15,343)


Written by London Swaminathan

Post No. 15,343

Date uploaded in Sydney, Australia –  18 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

மைசூர் அரண்மனையில் நான் கண்ட வெள்ளிக் கதவு

கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூர் நகரில் அமைந்துள்ள அரண்மனை தசரா என்னும் விஜய தசமி பண்டிகை மூலம் உலகப் புகழ் பெற்றது; வருடத்தில் பல நாட்களுக்கு ஜகஜ்ஜோதியாக மின்சார விளக்கு அலங்காரத்துடன் ஜொலிக்கும் கட்டிடம் இது. வெள்ளைக்காரர்களுக்கு ‘ஜால்ரா அடித்த’ உடையார் வம்சத்தின் வசிப்பிடம் இது. வெள்ளைக்காரர்களுக்கு ‘ஜே’ போட்டதால் இந்த அரண்மனை தப்பித்தது; திப்பு சுல்தான், வீர பாண்டிய கட்டபொம்மன் போன்று வெள்ளைக்காரர்களை எதிர்த்து இருந்தால் இது எரிக்கப்பட்டு தரை மட்டமாக்கப்பட்டிருக்கும் .

இந்த அரண்மனைக்கு மூன்றாவது முறையாக ஜனவரி (4-1-2026)  நான்காம் தேதி செல்லும் வாய்ப்பு கிட்டியது . உள்ளே நுழைந்தவுடன் வலது புறத்தில் வராகசாமி கோவில் கோபுரம், இதன் புனிதத்துவத்தை அதிகரிக்கிறது .

உள்ளே நுழைய கட்டணம் ரூ 120.

இது மூன்று மாடி கருங்கல் கட்டிடம்; பொது மக்கள் சில பகுதிகளை மட்டுமே காண முடியும்.

காலணிகளை கழற்றி வைத்து விட்டுத்தான் உள்ளே செல்ல முடியும்; காசு வாங்காமலே அவர்களே இந்த காலணிகளைப் பாதுகாக்கும் சேவையை அளிக்கிறார்கள்; சென்ற முறை போலவே இந்த முறையும் மேல் மாடிக்குச் செல்ல அனுமதி இல்லை; அது ராஜ குடும்பத்தின் வசிப்பிடம். ஆனால் பிரம்மாண்டமான கட்டிடங்களுடனும், சுற்றிலும் பரந்த தோட்டங்களுடனும் அமைந்த அரண்மனை பார்ப்போரின் மனதைவிட்டு அகலாது ; நடக்கும் இடமெல்லாம் ரத்தினக் கம்பளம் விரித்தாற்போல வழ வழப்பான மொசைக் தரை . மிகப்பெரிய ஹால்/ மண்டபங்களில் வர்ண, வர்ண தூண்கள் . . இது ஆங்கிலேய மற்றும் இஸ்லாமிய கலைகளின் கல ப்புடன் சுமார் 200  ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது . ராஜஸ்தான், மஹாராஷ்டிர , டில்லி அரண்மனைகளைப்  போல பழமையோ வரலாறோ கிடையாது ; காரணம் முந்தைய அரண்மனை மரத்தால் ஆனதால் ஒரு விபத்தில் எரிந்து அழிந்துபோனது.

***

மனதை விட்டு அகலாத காட்சிகள்

ஒரு பெரிய வெள்ளிக் கதவு , இறந்து போன யானையின் முகத்துடன் தந்தங்களுடன் உள்ள சுவரில் பதித்த யானை , இவை தவிர யானைந் தந்தங்கள், மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சாமுண்டீஸ்வரி, காயத்ரி படங்கள், ராம லட்சுமண, பரத, சத்ருக்னரின் பெரிய கொலு பொம்மைகள், அதே போல சரஸ்வதி, லெட்சுமி தேவி பொம்மைகள் , வரிசையாக வைக்கப்பட்டுள்ள சிம்மாஸனங்கள், ராஜ தர்பார் மண்டபம், மல்யுத்த மைதானம் , சுவர் முழுதும் ராஜ வம்ச ஓவியங்கள், இளவரசனின் பூணுல் /உபநயனம் கல்யாண படம், ராஜ வம்சப் பெண்கள் புடவை அணிந்து மிகவும் சாதாரண குடும்பப் பெண்கள் போலக் காட்சி தரும் வரைபடங்கள்.– இவை போன்றவை நமக்கு வியப்பை உண்டாக்கும் .

திரைப்படங்களில் , டெலிவிஷன் தொடர்களில் நாம் காணும் படாடோப மஹாராணிகளைப் போல ஆடம்பரத்தைக் காணவில்லை!

உடையார் வம்ச மன்னர்கள்  சாமுண்டீஸ்வரி தேவியின் பக்தர்கள்; ஒரு காலத்தில், யானை மீது தங்க அம்பாரியில் அவர்கள் பவனி வந்தனர் ; இப்போதெல்லாம் அந்த இடத்தில் தசாரா பண்டிகையில் தேவிதான் வலம்  வருகிறாள்.

மஹாபாரத கால தங்க சிம்மாசனம் கூட இந்த அரண்மனையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது .

இவர்களுடைய செல்வ வளத்துக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். புகழ்பெற்ற பழைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் அம்மா சந்தியா . அவருடைய நகைகள் அப்படியே ஜெயலலிதாவாவுக்குக் கிடைத்தன ; கோர்ட்டில் அளவுக்கு அதிகமான நகைகள் இருப்பது பற்றிக் கேள்வி எழுந்தபோது அவை மைசூர் மஹாராஜா தனது தாயார் சந்தியாவுக்கு கொடுத்தவை என்று அவரே கூறினார் . இதைப் பார்க்கையில் ராஜ வம்சத்திட்டம் உள்ள நகைகளின் அளவினை நாமே யூகித்தறியலாம்.

***

, இளவரசர் உபநயனம், படங்கள் ,

 லண்டன் சுவாமிநாதன்

வெள்ளிக் கதவு, 

புல்லட் பாயிண்ட்டில் அரண்மனை புள்ளி விவரங்கள்

கட்டப்பட்ட ஆண்டு -1912

கட்டுவதற்கு ஆன காலம் – 15 ஆண்டு

அரண்மனைக்கு வடிவம் கொடுத்த கட்டிடக் கலை வல்லுநர்- ஆங்கிலேயர் ஹென்றி இர்வின் Henry Irwin

மொத்தமுள்ள வாசல்கள் -3

மிக உயர்ந்த கோபுரம்- 145 அடி

அரசின் குறிக்கோள் சம்ஸ்க்ருத மொழியில் எழுதப்பட்டுள்ளது: “न बिभॆति कदाचन” ( ந பிபேதி கதாசன = ஒருபோதும் பயப்பட வேண்டாம்).

அறைகளின் எண்ணிக்கை -175

***

யோகாவும் ராஜாவும்

மைசூர் மகாராஜாவின் வேண்டுகோளின்   பேரில் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல யோகா ஆசிரியர் கிருஷ்ணமாசார்யா , அரண்மனைக்குள் யோகா கற்பித்தார் . பி.கே எஸ் அய்யங்கார், பட்டாபி ஜோஷி அவரிடம் மாணவர்களாக இருந்தனர் . முன்காலத்தில் ஒரு மைசூர் மஹாராஜா 112  ஆசன படங்களுடன் ஒரு புஸ்தகத்தை எழுதி வெளியிட்டதே இதற்கு மூல காரணம். 

***

ஒலி-ஒளிக் காட்சி Sound and Light Show

வாரத்தில் சில நாட்கள் ஆங்கிலத்திலும், சில நாட்கள் கன்னடத்திலும் அரண்மனை பற்றிய  ஒலி-ஒளிக் காட்சி நடைபெறுகிறது ; அவைகளை அரண்மனை ‘வெப்சைட்’டிலிருந்து அறியலாம் ; வாசலில் ஒலிபெருக்கி மூலமும் இதை அறிகின்றனர் .

இருப்பிடம் – மைசூர் நகரின் நடுப்பகுதி; பெங்களூருரிலிருந்து இரண்டரை மணி நேரத்தில் மைசூருக்கு வரலாம் .

***

யானைத் தந்தம், 

மைசூர் நகரில் மேலும் நிறைய குட்டி அரண்மனைகள் உண்டு ;அவை எல்லாம் இப்போது அரசாங்கத்துறை கட்டிடங்களாக மாறிவிட்டன .

எங்களுக்கு கார் ஓட்டிவந்த டிரைவர் எந்த, எந்த இலாகா இப்போது எந்த,எந்த க் கட்டிடங்களில் இருக்கின்றன என்று காட்டிக்கொண்டே வந்தார்; போலீஸ் அதிகாரிகள் ஒய்வு பெறும் முன்னால் கடைசி இரண்டு மாதங்கள் தங்கி அனுபவிக்கும் பெரிய அரண்மனைக் கட்டிடத்தைப் பார்க்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தையும் சொன்னார்; ஒரு போலீஸ் அதிகாரிக்கு கார் ஓட்டியதால் அவருக்கு வாய்ப்பு கிடைத்ததாம்.

—subham—

Tags– மைசூர் அரண்மனை , மஹாராஜா, உடையார் வம்சம் , வெள்ளிக் கதவு, யானைத் தந்தம், இளவரசர் உபநயனம், படங்கள் , லண்டன் சுவாமிநாதன்

Leave a comment

Leave a comment