WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,352
Date uploaded in London – 22 January 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சுபாஷிதச் செல்வம்
மூன்று உலகங்களிலும் அதிர்ஷ்டசாலி யார்?
ச. நாகராஜன்
தர்மம் எது என்று விளக்கும் சுபாஷிதங்களும் அதன் பயனைத் தெரிவிக்கும் சுபாஷிதங்களும் சம்ஸ்கிருதத்தில் ஏராளம் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
மூன்று உலகங்களிலும் அதிர்ஷ்டசாலி யார்?
மௌனே மௌனீ குணினி குணவான்பண்டிதே பண்டிதோஸௌ,
தீனே தீன: சுகினி சுகவான்போகினி ப்ராப்தபோக: |
மூர்கே மூர்கோ யுவதிஷு யுவா வாக்மிஷு ப்ரௌடவாக்மி,
தன்ய: கோபி த்ரிபுவனஜயீ யோவதூதே(அ) வதூத: ||
மூன்று உலகங்களிலும் அதிர்ஷ்டசாலி இவரே _
யார் ஒருவர் மௌனமாக இருக்குமிடத்தில் மௌனமாக இருக்கிறாரோ,
குணவான்களான நல்லவர்கள் இருக்குமிடத்தில் நல்லவராக இருக்கிறாரோ,
நன்கு படித்த பண்டிதர்களிடையே பண்டிதராக இருக்கிறாரோ,
தீனர்களிடையே தயையைக் காட்டுகிறாரோ,
சுகம் அனுபவிக்கும் தருணங்களில் சுகத்தை அனுபவிக்கிறாரோ,
மூர்க்கர்களிடத்தில் மூர்க்கனாக இருக்கிறாரோ,
இளமையுடன் இருப்பவரிடத்தில் இளமையாக இருக்கிறாரோ,
நல்ல பேச்சாளர்களிடையே பேச்சாளராகத் திகழ்கிறாரோ,
சந்யாசிகளிடம் சந்யாசியாகத் திகழ்கிறாரோ
அவரே மூன்று உலகங்களிலும் அதிர்ஷ்டசாலி!
தர்மத்தின் சாரம்!
ஸ்ரூயதாம் தர்மசர்வஸ்வம் ஸ்ருத்வா சாப்யவதார்யதாம் |
ஆத்மன: ப்ரதிகூலானி பரேஷாம் ந சமாசரேத் ||
தர்மத்தின் சாரத்தை என்னிடம் கேள்; கேட்டபின் அதை சரியாகப் புரிந்து கொள்!
ஒரு காரியமானது தனக்கு ப்ரதிகூலமாக இருப்பதாக எண்ணும் (கஷ்டத்தைத் தருவதாக எண்ணும்) ஒருவன் அதே காரியத்தை மற்றவர்களுக்குச் செய்யக் கூடாது.
இதுவே தர்மத்தின் சாரம்!
மேலோர்களால் அதிக மதிப்புடையதாக கருதப்படுவது எது?
ந காமான்ன ச சம்ரப்பான்ன த்வேஷாத்தர்மமுத்சுஜேத் |
தர்ம ஏவ பரோ லோகே இஹ வாப்யாஸ்ரய: சதாம் ||
காமத்தாலோ அல்லது மூர்க்கத்தனமான முயற்சியாலோ அல்லது வெறுப்பாலோ ஒருவன் தர்மத்தை மறுக்கக் கூடாது. இந்த உலகில் மேலோர்களால் தர்மமே அதிக மதிப்பை உடையதாகக் கருதப்படுகிறது.
தர்மம் எட்டு விதம்!
யக்ஞாத்யயனநதானானி தப: சத்யம் க்ஷமா தயா |
அலோப இதி மார்கோயம் தர்மஸ்யாஷ்டவித: ஸ்ம்ருத: ||
தர்மம் எட்டு வழிகளில் இருப்பதாக விளக்கப்படுகிறது.
யக்ஞம் செய்தல், கற்றல், தானம் வழங்கல், தவம், சத்யம் கடைப்பிடித்தல், பொறுமை, தயை, பற்றில்லாமை ஆகிய இந்த எட்டுமே தர்மத்தின் லக்ஷணங்களாகும்.
தர்மத்திலிருந்தே அனைத்தும் வருகிறது!
தர்மாத்தர்த: ப்ரபவதி தர்மாத்ப்ரபவதே சுகம் |
தர்மேண லபதே சர்வம் தர்மசாரமிதம் ஜகத் ||
தர்மத்திலிருந்தே செல்வம் வருகிறது. தர்மத்திலிருந்தே புண்யம் கிடைக்கிறது. அனைத்துமே தர்மத்திலிருந்தே கிடைக்கப் பெறுகிறது. உண்மையில் இந்த உலகமே தர்மத்தின் சாரம் தான்!
**