Post No. 15,364
Date uploaded in London – 26 January 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சுபாஷிதச் செல்வம்
இல்லறத்தான் சிறப்பு!
ச. நாகராஜன்
வீடு என்பதன் இலக்கணம்!
யத்ர நாஸ்தி ததிமந்தநகோஷோ யத்ர நோ லகுலகூனி சிசூனி |
யத்ர நாஸ்தி குருகௌரவபூஜா தானி கிம் பத் க்ருஹாணி
வனானி ||
எங்கே தயிரை மத்தால் கடையும் ஓசை எழவில்லையோ,
எங்கே சின்னக் குழந்தைகள் இல்லையோ,
எங்கே குருவைக் கௌரவித்து பூஜை நடைபெறவில்லையோ,
அது வீடா அல்லது காடா?!
வளம் ஓங்கும் குடும்பம் எது?
சந்துஷ்டோ பார்யயா: பர்த்தா பர்த்ரா பார்யா ததைவ ச |
யஸ்மின்னேவ குலே நித்யம் கல்யாணாம் தத்ர வை த்ருவம் ||
எங்கே மனைவியால் கணவன் சந்தோஷமடைகிறானோ, கணவனால் மனைவி சந்தோஷமடைகிறாளோ, அப்படிப்பட்ட குடும்பத்தில் நிச்சயமாக வளமே ஓங்கும்.
இல்லறத்தான் சிறப்பு!
யஸ்மாத்ரயோப்யாஸ்ரமிணோ தானேநான்னேன சாந்வஹம் |
க்ருஹஸ்தேனைவ தார்யந்தே தஸ்மாஜ்யேஷ்டாஸ்ரமீ க்ருஹி ||
(பிரமசர்யம், வானப்ரஸ்தம், சந்யாசம் ஆகிய) மூன்று நிலைகளில் உள்ளவர்கள் தானங்களாலும், உணவினாலும், மற்றவற்றினாலும் வழக்கமாக இல்லறத்தில் இருப்பவர்களால் ஆதரிக்கப்படுவதால் மற்றவர்களை விட அவர்களே உயர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
சீலமுடைய மனைவி!
சீலபாரவதீ காந்தா புஷ்பபாரவதீ லதா |
அர்தபாரவதீ வாணீ பஜதே காமபி ஸ்ரியம் ||
அன்பிற்குரியவள் (மனைவியானவள்) ஒழுக்கமுடையவளாகவும் புஷ்பம் நிரம்பிய அழகிய கொடி போலவும், பேசுகின்ற வார்த்தைகள் அர்த்தம் நிரம்பியதாகவும் இருப்பின் அவை, வளம் பெற வழி வகுப்பவையாகும்.
ஒழுக்கமான வாழ்க்கையே உயர்வைத் தரும்!
சீலம் ரக்ஷது மேதாவீ ப்ராப்துமிச்சு: சுகத்ரயம் |
ப்ரஷம்ஸா வித்தலாபம் ச ப்ரேத்ய வர்கே ச மோதனம் ||
சுகத்தைத் தரும் மூன்று ஆதாரங்களான புகழ், செல்வம், இறப்பிற்குப் பின் சொர்க்க வாசம் ஆகிய மூன்றையும் விரும்பும் மேதாவியான ஒருவன் சீலமான வாழ்க்கையை நடத்துவான்.
சுத்தமான மூன்று!
சுசி: பூமிகதம் தோயம் சுசிர்நாரீ பதிவ்ரதா |
சுசி: க்ஷேமகரோ ராஜா சந்துஷ்டோ ப்ராஹ்மண: சுசி: ||
பூமியிலிருந்து எடுக்கப்பட்ட நீர், பதிவ்ரதையான பெண்மணி, க்ஷேமத்தை நல்கும் அரசாட்சி செய்யும் ராஜா, திருப்தியுள்ள ஒரு பிராம்மணன் ஆகியோர் மிகவும் சுத்தமானவர்கள்.
தொடர்பினால் ஏற்படும் உயர்வும் தாழ்வும்!
சந்தப்தாயஸி சம்ஸ்திதஸ்ய பயஸோ நாமாபி ந ஜாயதே
முக்தாகாரதயா ததேவ நலிநீபத்ரஸ்திதம் ராஜதே |
ஸ்வாத்யாம் சாகரஷுக்திமத்யபதிதம் தஜ்ஜாயதே மௌக்திகம்
ப்ராயேணாத்யமமத்யமோத்தமகுண: சம்சர்கதோ ஜாயதே ||
சம்சர்கம் (தொடர்பு)
சூடுபடுத்தப்பட்ட ஒரு இரும்பின் மீது விழுந்த நீர் காணப்படுவதே இல்லை. ஆனால் ஒரு தாமரை மலரின் மீது விழும் நீர் பிரகாசிக்கிறது. அதே நீர்த்துளி ஸ்வாதி நட்சத்திர தினத்தன்று கடலின் அடியில் உள்ள நத்தைக்குள் விழுந்தால் அது முத்தாக மாறுகிறது.
இது தான் அதமர்கள், மத்யமர்கள், உயர்ந்தோர் ஆகியோருடனான தொடர்பில் விளையும் விளைவுகளாகும்.
**