திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 2

Written by London Swaminathan

Post No. 15,365

Date uploaded in Sydney, Australia –  27 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள்

(திருப்பரங்குன்றம், திருச்செந்தூர்ப் பாடல்கள்)

நான்கு வகைக் கவி பாடிய ஞான சம்பந்தர் = முருகப் பெருமான்

மிகு பாவின் செந்தமிழ் சொல் நாலு கவிதைக்கார … மிகுந்த

பாடல் வகைகளில் செந்தமிழைக் கொண்டு (சம்பந்தராக வந்துதேவாரமாகப் புனைந்த) நாற்* கவியாளனே,

தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:

ஆசு – எதுகை மோனையுடன் கூடியது,

மதுரம் – இனிமை வாய்ந்தது,

சித்திரம் – கற்பனையும் அழகும் மிக்கது,

வித்தாரம் – வர்ணனை மிக்கது.

***

மக்கள் பற்றி அருணகிரிநாதருக்கு வியப்பு!

காம க்ரோத உலோபப் பூதவிகாரத்தே … காமத்தாலும்,

கோபத்தாலும், ஈதற் குணமே இல்லாததாலும், ஐம்பூதங்களின்

சேஷ்டைகளாலும்

அழிகின்ற மாயா காயத்தே … அழிகின்ற மாயையான இந்த

உடல் மீதும்,

பசு பாசத்தே … இந்த ஜீவாத்மா இச்சைப் படுகின்ற உலகப்

பற்றுக்களின் மீதும்

சிலர் காமுற்றேயும் அதென்கொலோதான் … சிலர் ஆசைகொண்டு

இருக்கின்ற அந்த நிலை ஏன்தானோ? தெரியவில்லை!!

***

ஹோமம் செய்தால் சிவலோகம் கிட்டும் !

ஓமத்தீ வழுவார்கட்கு ஊர்சிவ லோகத்தே … வேள்வித்தீயை

தவறாமல் வளர்ப்பவர்களுக்கு இருப்பிடத்தை சிவலோகத்திலே

தரு மங்கைபாலா … தருகின்ற உமாதேவியின் குமாரனே,

யோகத்து ஆறு உபதேசத் தேசிக … யோகவழிகளை உபதேசிக்கும்

குருமூர்த்தியே,

ஊமைத் தேவர்கள் தம்பிரானே. … உன் முன்னே வாயில்லா

ஊமைகளாகிவிடும் தேவர்களின் தனிப் பெரும் தலைவனே.

***

மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தது உண்மையே !

புகல் அரியதாம் த்ரி சங்கத் தமிழ் பனுவல் ஆய்ந்து கொஞ்சிப்

புவி அதனில் வாழ்ந்து … சொல்லுதற்கு அரிய முச்சங்கத்து தமிழ்

நூல்களை நன்கு ஆராய்ந்தும், இனிமையாகப் பேசியும், பூமியில்

வாழ்ந்தும்,

வஞ்சித்து உழல் மூடர் புநிதம் இலி மாந்தர் தங்கள் புகழ்

பகர்தல் நீங்கி நின் பொன் புளக மலர் பூண்டு

வந்தித்திடுவேனோ … பலரை வஞ்சித்துத் திரிகின்ற மூடர்களும்,

பரிசுத்தம் இல்லாதவர்களுமான மக்களிடம் (போய் அவர்களைப்)

புகழ்ந்து பேசுதலை விடுத்து, உனது அழகிய இன்பம் தரும் திருவடி

மலர்களை மனத்தில் கொண்டு துதிக்க மாட்டேனோ?

***

கும்பமுனி கும்பிடும் தம்பிரானே. … அகத்திய முனிவர் தொழும் தம்பிரானே.

***

மனிதர்களைப்பாடும் புலவர்கள் மீது கண்டனம்

சிறு தமிழ்த்தென்றலினுடனே … மெல்லிய இனியதமிழ்த் தென்றல் காற்றினுடன் வந்து

நின்றெரிக்கும்பிறை யெனப்புண்படும் … சந்திரன் நின்று

கொளுத்துகிறான் என்று மனம் புண்படுகின்றேன்,

எனப்புன்கவி சிலபாடி … என்றெல்லாம் புன்மையான கவிதைகள் சிலவற்றை மனிதர்கள் மீது பாடி

இருக்குஞ்சிலர் … சில புலவர்கள் வீணே இருக்கின்றனர்.

திருச்செந்திலை உரைத்துய்ந்திட அறியாரே … திருச்செந்தூரில்

எழுந்தருளிய உன்னைப் பற்றிப் பாடி கடைத்தேற அறிய மாட்டார்களோ?

***

செல்வந்தர்களைப் புகழ வேண்டாம்

நூல் அநந்த கோடி தேடி மால்மிகுந்து … பல கோடி நூல்களைத் தேடிப் படித்து மயக்கத்தை அடைந்து,

பாருளோரை நூறு செஞ்சொல் கூறி … உலகில் உள்ள

செல்வந்தரை நூறு செவ்வையான சொற்களால் பாடி,

மாறி விளைதீமை … புத்தி மாறி, அதனால் தீமை விளைந்து,

நோய்கலந்த வாழ்வுறாமல் … பலவிதமான பிணிகளுடன் கலந்த துன்ப வாழ்வை அடையாமல்,

நீகலந்து … நீ எனது அறிவில் கலந்து

உள் ஆகு ஞான நூல் அ டங்க … உள்ளத்தில் பொருந்தும் ஞான சாஸ்திரங்கள் முழுவதும்

ஓத வாழ்வு தருவாயே … ஓதி உணரக் கூடிய வாழ்வைத்

தந்தருள்வாயாக.

***

கண்டவர்களைப் பார்த்து  நீயே இந்திரன், நீ தான் குபேரன் என்று பாடும் நிலை வேண்டாம்

நிதிக்குப் பிங்கலன் … செல்வத்துக்கு குபேரன் என்றும்,

பதத்துக்கு இந்திரன் … நற்பதவிக்கு தேவேந்திரன் என்றும்,

நிறத்திற் கந்தனென்று … பொன் போன்ற நிறத்துக்கு

கந்தப்பெருமான் என்றும்

இனைவொரை … கொடுப்பதற்கு வருந்தும் செல்வந்தரிடம் சென்று,

நிலத்திற் றன்பெரும் பசிக்கு … இந்த உலகத்தில் தன் பெரும் பசியைப் போக்குதற்கு

தஞ்சமென்றரற்றி … நீயே புகலிடம் என்று கூறி முறையிட்டு,

துன்பநெஞ்சினில் … துயரம் மிகுந்த மனதில்

நாளும் புதுச்சொற் சங்கமொன் றிசைத்து … தினமும் புதுப்புதுச் சொற்களின் கூட்டத்தால் ஒரு கவிதை பாடி,

சங்கடம் புகட்டிக் கொண்டு உடம்பழிமாயும் … சங்கடத்தில் சிக்கி உடம்பு அழிந்து மாய்கின்ற

புலத்திற் சஞ்சலங் குலைத்திட்டு … புலன்களால் வரும்

துன்பங்களைத் தொலைத்து,

உன்பதம் புணர்க்கைக்கு … உன் திருவடியைச் சேர்வதற்கு உரிய

அன்புதந்தருள்வாயே … அன்பினை வழங்கி அருள்வாயாக.

***

அனுமார் , நாரதர் பற்றி

பண்டப் பாரிய மாருதி தோள்மிசை கொண்டுற்று அமராடி …

முன்பு, அந்தப் பெரிய அநுமானின் தோளிலே வீற்றிருந்து போர் செய்து,

பாவியி ராவணனார்தலை சிந்தி … பாவியாம் ராவணனுடைய

தலைகள் சிதறவும்,

சீரிய வீடணர் வாழ்வுற … உத்தமனாம் விபீஷணன் வாழ்வுறவும்

செய்து,

மன்றற் பாவையர் தோள்புணர் மாதுலர் சிந்தைக்கு

இனியோனே … மணந்த பாவையாம் சீதையின் தோளைத் தழுவிய

மாமனாம் (ராமனின்) திருமாலின் சிந்தைக்கு இனியவனே,

சீலமு லாவிய நாரதர் வந்துற்று … நல்ல குணங்கள் நிறைந்த

நாரத முநிவர் உன்னிடம் வந்து,

ஈதவள் வாழ்புன மாமென முந்தி … இதுதான் அவ்வள்ளி வாழும்

தினைப்புனமாகும் என்று குறிப்பிட்டுக் காட்ட, உடனே நீ முடுகிச் சென்று,

***

ஆறே எழுத்து போதும் (சரவணபவ)

உலப்பு இல் ஆறு எ(ன்)னு(ம்) அக்கரமும் கமழ் கடப்பம்

தாரும் முக ப்ரபையும் தினம் உளத்தின் பார்வை இடத்தில்

நினைந்திட அருள்வாயே … அழிவில்லாத (சரவணபவ என்னும்)

ஆறு எழுத்துக்களையும், வாசம் மிகுந்த கடப்ப மாலையையும்,

திருமுகங்களின் ஒளியையும் நாள்தோறும் நான் என் மனக்

கண்ணில் நினைக்கும்படி அருள் புரிவாயாக.

***

சிவ பெருமானுக்கும் துளசி உண்டு !

திங்கள் ஆர் கொன்றை மத்தம் துழாய் துன்று பொன் செம்

சடா பஞ்சரத்து உறு தோகை சிந்தையே … நிலவு, ஆத்தி,

கொன்றை, ஊமத்தம் மலர், துளசி (இவைகள்) நெருங்கிய, அழகிய, சிவந்த (சிவ பெருமானின்) சடையாகிய கூட்டிலிருக்கும் கங்கையாகிய நங்கையின் சிந்தைக்கு உகந்தவனே,

–subham—

Tags- அருணகிரி நாதர் சொல் அழகு, பொருள் வளம், Part 2, அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள், துளசி, நாரதர், புலவர்கள் மீது கண்டனம் , நான்கு வகை கவிதைகள், அனுமார்

Leave a comment

Leave a comment