நக்கீரர் கதை: அருணகிரிநாதர் சொல்லும் அரிய தகவல்கள் (Post.15,371)

Written by London Swaminathan

Post No. 15,371

Date uploaded in Sydney, Australia –  29 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும்பொருள் வளமும்- Part 4

நக்கீரர் குகையில் அடைபட்ட கதை

மலை முகம் சுமந்த புலவர் செம் சொல் கொண்டு வழி திறந்த

செம் கை வடிவேலா … மலைக் குகையில் அடைக்கப்பட்டிருந்த

புலவராகிய நக்கீரரின் சிறந்த பாடலை (திருமுருகாற்றுப்படையைக்)

கேட்டு, அந்தக் குகையின் வாயிலைத் திறந்து விட்ட செவ்விய

கைகளை உடைய வடிவேலனே

***

பாண்டிய மன்னன் தனது சந்தேகத்தைத் தீர்த்துவைப்பவருக்கு ஆயிரம் பொற்காசுகள் தருவதாக அறிவித்தார்; தருமி என்ற ஏழைப் பிராமணனுக்கு , அவருடைய வறுமையை  தீர்ப்பதற்காகக் கவிதையெழுதிக் கொடுத்து புலவரை மன்னரிடம் அனுப்பினார் சிவபெருமான் .

அதில் பிழை இருப்பதாக நக்கீரர்  சொன்னவுடன் சிவனே நேரில்  வந்து வாதிட்டார் ;அப்போதும் அடங்காத நக்கீரரின் கொட்டத்தை அடக்க சிவ பெருமான் நெற்றிக்  கண்ணைத் திறந்தார் ; நக்கீரர் மனம் திருந்தினார். இந்த திரு விளையாடல் புராணக்கதை அப்பர் பாடிய தேவாரத்தில் இருப்பதால் சங்க காலத்தில் நடந்தது உண்மை என்பது தெரிகிறது. இதே போல ஒரு கதை பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படைத் தோன்றியதற்குக் காரணமாக உரைகாரர்களால் சொல்லப்படுகிறது.

அந்தக் கதை பின்வருமாறு

நக்கீரர் சிவனுக்கு அபராதம் செய்ததால் சிவ பூதகணங்கள் அவரைச் சிறையில் அடைத்தது; திருப்பரங்குன்றம் என்னும் தலத்திலுள்ள  அந்த குகை ஒரு பூதத்துக்குச் சொந்தமானது. குகையில் உள்ள மற்ற 999 புலவர்களுடன், தினமும் ஒருவரை உணவாக உட்கொள்ளும் பூதத்திற்காகக் காத்திருந்த நக்கீரர், முருகப்பெருமானை வேண்டித் திருமுருகாற்றுப்படை பாடினார். அவரின் பக்தியை மெச்சிய மகிழ்ந்த முருகன், பூதத்தை அழித்து, குகையைத் திறந்து, அவரைக் காப்பாற்றினார்.

இந்தக் கதையில் மேலும் சில தகவல்கள் உள்ளன

அந்த பூதம் ஆயிரம் பேர் சேர்ந்தவுடன் தினசரி ஒருவரை உண்ணத் திட்டமிட்டிருந்தது.  1000-மாவது ஆளாக  நக்கீரர் வந்து சேர்ந்தார் தன் உயிருக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை உணர்ந்த நக்கீரர், முருகப் பெருமானை சரணடைந்து, திருமுருகாற்றுப்படை பாடினார்.

அந்தப்  பாடலினைக்கேட்டு மகிழ்ந்த முருகன், பூதத்தை அழித்து, குகையைப்  பிளந்து நக்கீரர் உட்பட அனைவரையும் விடுவித்தார்.

சிவ பூசையில் தவறு செய்பவர்களை உண்ணுகின்ற ஒரு பெண்பூதத்தின் பெயர்  கற்கிமுகி. நக்கீரர் ஒரு குளக்கரையில் சிவபூசை செய்துகொண்டிருந்தார். அப்பூதம் அங்கு வந்து சேர்ந்தது. ஓர் இலையை உதிர்த்தது. அந்த இலை பாதி நீரிலும் பாதி நிலத்திலுமாக வீழ்ந்தது. நீரில் வீழ்ந்த பாதி மீனாகவும், நிலத்தில் வீழுந்த பாதி பறவையாகவும் மாறியது. பறவை நிலத்துக்கும் மீன் நீருக்குமாக இழுத்துப் போர் புரிந்தன; இந்த அதிசயத்தைக் கண்ட நக்கீரர் பூசையில் மனம் பதியாது அதனையே நோக்கி நின்றார். பூசையில் வழுவிய அவரை எடுத்துக்கொண்டு போய் பூதம் குகையில் அடைத்துவிட்டது என்பது பின்னணிக் கதை.

***

ருத்திர சன்மன் கதை

வாய்ப்புற்றத் தமிழ் மார்க்கத் திட்பொருள் … வாய்ப்புள்ள தமிழின் அகத்துறையின் உறுதியான பொருளை

வாய்க்குச் சித்திர முருகோனே … உண்மை இதுவே என

(ருத்திரசன்மனாக வந்து)* அழகுறத் தெளிவாக்கிய முருகப் பெருமானே,

***

திருவிளையாடல் புராணத்தில் சங்கப்புலவர் சண்டை தீர்த்த

உருத்திரசன்மன் கதை

மதுரையில் இருந்த கடைச் சங்க புலவரிடையே போட்டியும் பொறாமையும் வளர்ந்தது ; ஒவ்வொருவரும் தனது கவிதையே சிறந்தது என்று வாதாடினார்கள்; அவர்களில் நல்ல உள்ளம் படைத்தோர் மதுரை ஆலவாய் அண்ணலாகிய சொக்க நாதப்  பெருமானிடம் முறையிட்டனர் . சிவபெருமான் மனித வடிவில் தோன்றி அறிவுரை வழங்கினார் :

“மதுரைநகரில் தனபதி என்ற வணிகன் இருக்கிறான், அவன் மனைவி குணசாலினி என்பவள்; அவர்களுக்குப் பிள்ளை இல்லாமல் தவம் செய்து ஒரு மகனைப் பெற்றிருக்கிறார்கள் உருத்திரசன்மன் என்பது அவன் பெயர்; ஐந்து வயதும் நிரம்பாத சிறுவன்; அவன் பிறவி ஊமை, பேச மாட்டான். அவனை அழைத்துச் செல்லுங்கள் அவன் உம்பாடலைக் கேட்டு முடிவு கூறுலான்” என்று சொல்லி அனுப்பினார்.

ஊமை எப்படி பாடலைக் கேட்பான், பதில் சொல்லுவான் என்ற ஐயங்கள் எழுந்தன, எனினும் இறைவன் சொன்னபடியே ஊமைப்பியை பிள்ளையை சங்கத்துக்கு அழைத்துச் சென்று அவரவர் தம் கவிதைகளைப் படித்தனர்.

உப்புச் சப்பு அற்றக் கவிதைகளைக் கேட்கும் போது அவன் எந்த வித உணர்ச்சியையும்  காட்டவில்லை; சொற் சுவை , பொருட் சுவை  அணி நயம், இசை உடைய கவிதைகளைக் கிடக்கும்போது மட்டும் புளகித்துக் கண்களில் நீர் அரும்ப முகமலர்ந்து அவற்றைப் பாராட்டினான். அவன் முன் பாடிய புலவர்களுள் கபிலர், பரணர், நக்கீரர், தலை சிறந்தவர். இம் மூவரே தலைமைக்கு உரியவர் ஆயினர்.

***

யோக முறைகளைக் கூறும் திருச்செந்தூர் திருப்புகழ்

அண்டர் தேடஅரிதாய … தேவர்களும் தேடித் தெரிந்துகொள்வதற்கு

அரிய பொருளாகிய,

ஞேயங்களாய்நின்ற … மெய்யுணர்வினால் ஆராய்ந்து

அறியப்படுகின்றவையாக விளங்கும்

மூலபர யோக மேல்கொண் டிடாநின்ற அது உளதாகி …

முதன்மையான அனுபவ யோகத்திலே முனைந்து நின்று,

அதனிடத்திலேயே அசைவற்று இருப்பதாகி,

நாளும் அதி வேக கால்கொண்டு … நாள்தோறும் வெகு வேகமாக

எழும் பிராணவாயுவைக் கொண்டு,

தீமண்ட வாசியன லூடு போயொன்றி … மூலக்கனல்* மண்டி

எழுந்திருக்க, பிராணவாயுவானது அந்த அக்கினியில் சென்று பொருந்த,

வானின்கண் நாமமதி மீதி லூறுங்கலாஇன்ப அமுதூறல்

நாடி … ஆகாயத்தில் புகழ்பெற்ற சந்திரனிலிருந்து பொழியும்

அமிர்தகலை என்னும் இனிய அமுதப் பொழிவை நாடி,

அதன் மீது போய் நின்ற ஆநந்த மேலைவெளி யேறி …

அச்சந்திர மண்டலத்தில் சென்று, நிலைத்த ஆநந்தப் பெருவெளியில்

மீது ஏறி அமர்ந்து,

நீயின்றி நானின்றி நாடி … நீ நான் என்ற பிரிவற்ற அத்வைத

முக்தியை உணர்ந்து,

இனும் வேறு தானின்றி வாழ்கின்ற தொருநாளே … இன்னும்

பிற பொருள்களும் தோன்றாத மனம் நீங்கிய சுக வாழ்வில்

வாழ்கின்ற ஒருநாள் எனக்கு உண்டாகுமோ?

***

அவ்வையார் பாடிய விநாயகர் அகவலிலும் இது உள்ளது :-

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி

ஆறா தாரத் தங்குச நிலையும்!

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே,

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்,

கடையிற் சுழுமுனைக் கபாலமுங் காட்டி,

மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்,

குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்து மூண்டெழு கனலைக்

காலால் எழுப்புங் கருத்தறி வித்தே…………

***

தமிழ்= முருகன்

செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ்தெரி … செம்மை பொருந்திய சொற்களை ஆளும் புலவர்களின் கூட்டம் புகல்கின்ற தமிழைச் சூடிக்கொண்டு

செந்திற் பதிநகருறைவோனே … திருச்செந்தூர் நகரில்

வீற்றிருப்பவனே,

***

நம்முடைய துயரங்களை அகற்றுபவன் முருகன்

அறிவால் அறிந்து … அறிவு கொண்டு உன்னை அறிந்து,

உன்னிருதாள் இறைஞ்சும் … உனது இரு தாள்களையும் வணங்கும்

அடியார் இடைஞ்சல் களைவோனே … அடியார்களின் துயரைக் களைபவனே,

அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து … அழகிய செம்பொன் மயில்மீது அமர்ந்து

அலைவா யுகந்த பெருமாளே. … திருச்செந்தூரில் மகிழ்ந்தமரும்பெருமாளே.

Thanks to கெளமாரம்.காம்

TO BE CONTINUED……………………..

–SUBHAM—

TAGS- திருப்புகழ், நக்கீரர் கதை , அருணகிரிநாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 4, அரிய தகவல்கள்

Leave a comment

Leave a comment