விண்வெளியில் புத்தருக்கு ஒரு விஹாரம்! (Post No.15,370)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,370

Date uploaded in London – 28 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

26-11-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

விண்வெளியில் புத்தருக்கு ஒரு விஹாரம்!

ச. நாகராஜன்

விண்வெளியை மனிதன் ராக்கெட் மூலம் அளக்க ஆரம்பித்ததன் விளைவாக புதுப்புது விசித்திரங்கள் உருவாக ஆரம்பித்தன. 

பல்வேறு பொருள்கள் விண்ணில் அனுப்பப்பட ஆரம்பித்தன. 

இவை பற்றிய பல செய்திகள் நம்மை பிரமிக்க வைக்கிறது. 

2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜப்பானில் பல புத்தமத குருமார்கள் ஒன்று கூடினர்.

விண்வெளியில் ஒரு புத்த விஹாரத்தை ஏற்படுத்துவது என்பது தான் அவர்கள் எடுத்த முடிவு.

கைரோஸ் என்ற ராக்கெட்டை அவர்கள் விண்ணில் ஏவினர். பூமிக்கு மேலே விண்வெளியில்  110 கிலோமீட்டர் தூரத்தில் டாய்நிசி நையோராய் (பிரபஞ்சத்தில் புத்தர் என்று அர்த்தம்) நிர்மாணிக்கப்பட முயற்சி எடுக்கப்பட்டது. புத்த மண்டலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது வெற்றி பெறவில்லை.

இந்த புத்தருக்கான கோவில் அமேஸானில் வீட்டு டெலிவரிக்கு உபயோகப்படும் சிறிய பெட்டி அளவே தான் இருந்தது. அந்தப் பெட்டி தங்க முலாம் பூசப்பட்ட தகடினால் மூடப்பட்டிருந்தது. 

ஜப்பானியர்களில் ஏராளமானோர் ஜப்பானுக்கு வெளியே இப்போது வசிக்கின்றனர். அவர்கள் இறந்து வானில் போகும் போது அவர்கள் புத்தரைப் பார்க்கும் படி இருக்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டது. 

பல்வேறு நாடுகளில் வசிக்கும் மனிதர்கள் எதையேனும் விண்வெளியில் அனுப்ப வேண்டும், அப்படி அனுப்புவதில் முதலாவதாகத் தாங்கள் திகழ வேண்டும் என்று நினைக்கின்றனர். 

மனிதர்கள், செல்லப் பிராணிகள் ஆகியோரின் அஸ்திகள், ஏன் டைனோசரின் அஸ்தி கூட அனுப்பப்பட்டு விட்டது. சின்னச் சின்ன துண்டுகள் தாம் இவை.

இண்டிகா நூடில் ஃபாபியானோ என்ற ஒரு நாயின் அஸ்தி ஜனவரி 2024ல் விண்ணுக்கு அனுப்பப்பட முயற்சி எடுக்கப்பட்டு தோல்வி அடைந்தது.

பீயின் ஏஐ என்ற ஒரு நிறுவனம் எமி ஜிடோ என்ற ஒரு புத்த குருவின் டிஜிடல் போட்டோவை ஒரு டிஸ்க்கில் வைத்து டிசம்பர் மாதம் (2025ல்) அனுப்பத் தீர்மானித்துள்ளது.

பன்னாட்டு விண்வெளி நிலையத்தில்  ரஷியருக்கு உரிய பகுதியில் பல மத சம்பந்தமான படிமவியல் பொருள்கள் உள்ளன.

சரி, யாருமே படிக்க முடியாத இடத்தில் இப்படி மத சம்பந்தமான ஆவணங்கள் ஏன் அனுப்பப்படுகின்றன?

இந்தச் செய்திகள் தொலைதூரத்தில் உள்ள இன்னொரு பிறவியிலாவது படிக்கப்படும் என்ற ஒரு நம்பிக்கை தான்!

பல்வேறு சின்னச் சின்னப் பொருள்களின் விவரத்தைச் சொன்னால் மலைப்புத் தான் வரும்; கூடவே சிரிப்பும் வரும்.

இலான் மஸ்க் தனது செர்ரி-சிவப்பு டெஸ்லா ரோட்ஸ்டர் ஸ்போர்ட்ஸ் காரை 2018ல் விண்வெளியில் அனுப்பினார். அது இப்போது 2480 லட்சம் கிலோமீட்டர்கள் பயணப்பட்டு விட்டது. 

மனிதனுக்கே உரித்தான பழைய நினைவுகள், மத நம்பிக்கைகள், படைப்பாற்றல் ஆர்வம் உள்ளிட்ட பல காரணங்களே இந்த முயற்சிக்கான அடிப்படை என்று விண்வெளி ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

என்றேனும் ஒரு நாள் யாரேனும் ஒருவர் இதைப் பார்க்காமலா இருக்கப் போகிறார்கள்?

**

Leave a comment

Leave a comment