Post No. 15,375
Date uploaded in Sydney, Australia – 30 January 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 5
அருணகிரிநாதர் சொல்லும் அரிய தகவல்கள்.
சீனாவுக்கும், அரபு நாடுகளுக்கும், பங்களாதேஷுக்கும் போகாதே
மென்றோள் ஒன்றப் பொருள்தேடி … மென்மையான தோள்களைத்
தழுவுவதற்காகப் பொருள் தேட வேண்டி,
வங்காளஞ் சோனஞ் சீனம்போய் … வங்காள நாடு, சோனக நாடு*,
சீனா முதலிய தூரமான இடங்களுக்குப் போய்
வன்பே துன்பப் படலாமோ … வம்பிலே கொடிய துன்பத்தைப்
படலாமோ?
மைந்து ஆருந்தோள் மைந்தா அந்தா … வலிமை மிகுந்த
தோள்களைக் கொண்ட குமரனே, அழகனே,
வந்தே யிந்தப் பொழுதாள்வாய் … வந்து இந்த நொடியிலேயே
என்னை ஆண்டருள்வாயாக.
***
பழனி திருப்புகழில் சம்பந்தர், நக்கீரர், திருவள்ளுவர்
அகல்வினை உள்சார் சட் சமயிகளொடு வெட்கா தட்கிடும்
அறிவு இலி … பரந்த வினை வசத்துக்கு* உட்பட்ட ஆறு
சமயத்தவரோடும்** அஞ்சாது தடுத்து வாதம் செய்யும் அறிவு
இல்லாதவனும்,
வித்தாரத் தனம் அவிகார அகில் கமழ் கத்தூரித் தனி அணை
மிசை கைக் காசுக்கு அளவு … பரந்த மார்பை உடைய, அழகிய
அகில் மணமுள்ள, கஸ்தூரி இவை உள்ள ஒப்பற்ற படுக்கையில் தாம் கையில் பெற்ற பொருளின் அளவுக்குத் தக்கபடி
அருள்பவர் நட்பே கொட்பு உறும் ஒரு போதன் … அன்பு
காட்டும் வேசியருடைய நட்பிலே தடுமாறும் ஓர் அறிவை உடைய
(புழுப்போன்ற) நான்.
பகல் இரவில் போதில் பணி ப(ண்)ணி அற விட்டார் எட்டிய …
பகல், இரவு எப்போதும் பணி செய்து, (பற்றுக்களை) முழுதும் விட்டவர் அடையும்
பரம மயச் சோதிச் சிவ மயமா(ய்) நின் பழநி தனில் போய் …
பரம சொரூபமாயும், ஜோதி வடிவமாயும், சிவ மயமாயுமுள்ள உனது
பழனித் தலத்துக்குப் போய்,
உற்பவ வினை வி(ள்)ள கள் சேர் வெட்சி குரவு பயில்
நல்தாள் பற்றுவது ஒரு நாளே … பிறவி என்கின்ற வினை நீங்க,
தேன் துளிர்க்கின்ற வெட்சி, குரா என்னும் மலர்கள் நிரம்பி உள்ள
நல்ல திருவடிகளைப் பற்றும் நாள் எனக்குக் கிடைக்குமா?
புகலி வனப்பு ஏறப் புகல் மதுரை மன் வெப்பு ஆறத் திகழ்
பொடி கொ(ண்)டு புல் பாய் சுற்றிகள் கழு ஏற … சீகாழி என்னும்
தலத்துக்கு அழகும் பெருமையும் பெருகவும், சரணம் அடைந்த மதுரைக்கூன் பாண்டிய அரசனுடைய வெப்புநோய் தணியவும், விளங்கும் திருநீற்றால் கோரைப் புல்லாகிய பாய்களை உடுத்திய சமணர்களை வென்று, அவர்கள் கழுவில் ஏறவும்,
பொருத சமர்த்தா குத்திர துரக முகக் கோதைக்கு இடை
புலவரில் நக்கீரர்க்கு உதவிய வேளே … வாதம் செய்து வெற்றி
பெற்ற ஆற்றல் உடையவனே (திருஞான சம்பந்தனே), வஞ்சனை
உடைய, குதிரை முகம் கொண்ட பெண் பூதத்தின் வசத்தே நடுவில்
அகப்பட்ட புலவர்களில் ஒருவராகிய நக்கீரருக்கு*** உதவி புரிந்த
வேந்தனே,
இகல் படு நெட்டு ஊர் பொட்டு எழ இள நகை இட்டே
சுட்டு அருள் எழு புவி துய்த்தார் மைத்துனர் மதலாய் …
மாறுபட்ட பெரிய திரிபுரங்கள் தூளாகி விழ புன்னகை பூத்தே
சுட்டு எரித்து அருள் புரிந்தவரும், ஏழு உலகங்களையும் உண்ட
திருமாலின் மைத்துனருமாகிய சிவபெருமானின் குழந்தையே,
வென்று இடர் அற முப்பால் செப்பிய கவிதையின் மிக்க
ஆரத்தினை … வெற்றி கொண்டு துன்பம் நீங்கும்படி (அறம், பொருள்,
இன்பம் என்ற) முப்பால் கூறும் திருக்குறளினும் மேலாகிய தேவாரத்தை
எழுதி வனத்தே எற்றிய பெருமாளே. … (ஞான சம்பந்தராகத்
தோன்றி) ஏட்டிலே எழுதி வைகை ஆற்றில் எதிர் ஏற விட்ட பெருமாளே.
இதில் ஆறு சமயம் என்பன
சாங்கியம்
யோகம்
வைசேஷிகம்
நியாயம்
பூர்வமீமாம்சம்
வேதாந்தம்
அல்லது
காணாபத்தியம்
சைவம்
வைணவம்
சாக்தம்
கௌமாரம்
சௌரம் என்பன ஆகும்
மூன்று வினைகள் என்பன -ஆகாமியம், சஞ்சிதம், பிராரப்தம்
நக்கீரர் திருமுருகாற்றுப்படை:
குதிரை முகமுடைய ஒரு பெண் பூதம், சிவ பூஜையில் தவறியவர்களை ஒரு குகையில் அடைத்து, ஆயிரம் பேர் சேர்ந்ததும் கொன்று தின்னும். குகையில் சிக்கிய நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாட, முருகன் மகிழ்ந்து வேலால் குகையையும் பூதத்தையும் பிளந்து, நக்கீரரையும் மற்ற புலவர்களையும் விடுவித்தான்– முதலிய செய்திகளையும் அருணகிரி விளம்புகிறார்.
***
பழனி திருப்புகழில் பதினான்கு உலகங்களும் 96 தத்துவங்களும்
அதலம் விதலம் முதல் அந்தத் தலங்கள் என … அதலம் விதலம்
முதலான அந்தக் கீழ்* ஏழு உலகங்கள் எனவும்,
அவனி என அமரர் அண்டத்து அகண்டம் என … இப்பூமி
எனவும், தேவர்களின் அண்டங்களான மேல்* ஏழு உலகங்கள் எனவும்
கீழ் உலகங்கள் ஏழு:–அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், ரசாதலம், பாதாளம்.
மேல் உலகங்கள் ஏழு:- பூலோகம், புவலோகம், சுவலோகம், ஜனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்திய லோகம்.
***
அறையும் மறை என அரும் தத்துவங்கள் என … சிறப்பாக
ஓதுகின்ற வேதம் எனவும், அருமையாகச் சொல்லப்படும் (96) தத்துவப் பொருள்கள் எனவும்,
96 தத்துவங்கள் பின்வருமாறு:
36 பரதத்துவங்கள் (அகநிலை):
ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.
ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து – 25 (புறநிலை):
மண், தீ, நீர், காற்று, வெளி.
ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை):
வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.
***
அணு விஞ்ஞானம் Nuclear Science
அணுவில் அணு என நிறைந்திட்டு நின்றது ஒரு சம்ப்ரதாயம் … அணுவுக்குள் அணு எனவும், இங்ஙனம் எங்கும் நிறை பொருளாய் நின்றுள்ள ஒரு பேருண்மை,
முதல் விளக்கம்
“Anor aneeyaam mahatho maheeyaam” (अणोरणीयान् महतो महीयान्) is a profound Sanskrit phrase from the Vedic tradition, most famously found in the Katha Upanishad (1.2.20). It translates to: “Smaller than the smallest, greater than the greatest.”
கடோபநிஷத் , ச்வேதாச்வரோபநிஷத்தில் உள்ள வாக்கியம் “அணோர் அணீயாம் மஹதோ மஹீயாம் “
“அணுவுக்கும் சிறியதாய் பெரியதற்கும் பெரியதாய்”
இதை அவ்வையார், திருமூலர், இடைக்காடர் முதலியோர் செப்பியுள்ளனர்
திருவள்ளுவரின் திருக்குறளின் பெருமையை விளக்குகையில் திருவள்ளுவ மாலையில் இடைக்காடர் பாடலில் ,அவர் “கடுகை துளைத்து ஏழ் கடலைப் புகுத்தி குறுகத் தறித்த குறள்” என்கிறார். அவ்வையார் புகழ்ந்த பாடலில் அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தி குறுகத் தறித்த குறள் என்கிறார். ஆனால் திருமூலர் ஒரு பாடலில் வேறுவகையான விளக்குகிறார்
மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவியது கூறது ஆயிரமானால்
ஆவியின் கூறு நூறயிரத்தொன்றாமே”—திருமந்திரம் 1974
“Take one piece of cow’s hair and cut it into 100
Parts, then take one part of it and again cut it into
1000 parts, then take one part from that and again
cut it into another 10000 parts. The remaining 1 part
from those 10000 parts will resemble the size of the
Atom (Anu in Tamil)”.
சங்க இலக்கிய நூல்களான பரிபாடல் (3-53), புறநானூறு (பாடல் 2) ஆகியவற்றுக்கு உரை எழுதியோர் அணுச் செறிந்த உலகம் என்று பூமியை வருணித்துள்ளனர்.
இவர்களுக்கு எல்லாம் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கணாதர் வைசேஷிக சாஸ்திரத்தில் அணு விஞ்ஞானம் பற்றி விளக்கியுள்ளார்
2600 ஆண்டுகளுக்கு முன்னர் கணாதர் என்பவர் எழுதிய வைசேஷிக சூத்திரத்தில் कणाद वैशेषिकसूत्र அணு என்பதுதான் மிகச்சிறிய , பிரிக்க முடியாத பொருள் என்று கூறப்பட்டுள்ளது. விஞ்ஞானிகளும் இதே கருத்தைத்தான் 2000 ஆண்டுகளாகக் கூறி வந்தனர். அப்படிப் பிரித்தால் பிரம்மாண்டமான சக்தி கிடைக்கும் என்பதை இரண்டாவது உலக யுத்த (1939-1945) காலத்தில் கண்டறிந்தனர் . அமரிக்கா 1945-ம் ஆண்டு அப்பாவி புத்த மத , ஷிண்டோயிச மத மக்களின் மீது இரண்டு அணுகுண்டுகளை வீசி லட்சக்கணக்கான மக்களை ஒரு சில வினாடியில் கொன்று குவித்தது. இது ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகி என்ற இரண்டு நகரங்களில் நடந்ததை நாம் அறிவோம்.
எனது இரண்டாவது விளக்கம்
வேறு யாரும் சொல்லாத ஒரு விஷயத்தை அருணகிரிநாதர் சொல்கிறார் ; அது என்ன?
அணுவில் அணு (அணுவுக்குள் அணு)!
அணு பற்றிய அறிவியல் வளர்ந்தவுடன் அணுவுக்குள் என்ன இருக்கிறது என்று கண்டுபிடித்தனர் ; இது சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர்தான் நடந்தது . ஆனால் அருணகிரிநாதரோ 500 ஆண்டுகளுக்கு முன்னரே அணுவுக்குள் அணு இருப்பதாகப் பகர்ந்தார் . அது என்ன ?
அணுவின் அமைப்பு
புரோட்டான்கள், எலக்ட்ரான்கள் மற்றும் நியூட்ரான்களால் ஆனவை அணுக்கள்.
அணுவின் நடுவில் நேர்மின்னூட்டம் கொண்ட அணுக்கரு (புரோட்டான் + நியூட்ரான்) மற்றும் அதைச் சுற்றி வரும் எதிர்மின்னூட்டம் கொண்ட எலக்ட்ரான்கள் உள்ளன. அணுக்கருவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை அவ்வணு எந்த வேதித் தனிமத்தைச் சார்ந்த்து என்பதை முடிவு செய்கிறது. அதை வைத்துதான் நாம் தங்கம்,வெள்ளி இரும்பு, செப்பு என்ற மூலகங்களைப் பெறுகிறோம்.
ஞான திருஷ்டி மூலம் கண்டு அணுவில் அணு (அணுவுக்குள் அணு) என்று அருணகிரி சொல்லியிருக்கலாம் அல்லது அழிந்து போன இந்துமத அறிவியல் நூல்களில் இந்த உண்மையை கணாதரின் சீடர்கள் சொல்லியிருக்கலாம் . ஆகவே எலெக்ட்ரான்கள், புரோட்டான்கள் நியுட்ரான்கள் பற்றி முதலில் சொன்னவர் அருணகிரிநாதர் தான் !
—subham—
Tags- அருணகிரிநாதர், அணு விஞ்ஞானம், திருப்புகழில் சொல் அழகும், பொருள் வளமும்- Part 5, ‘அரிய தகவல்கள், அணோர் அணீயாம் மஹதோ மஹீயாம்