ராவணன் ஒரு முட்டாள்! திருப்புகழில் அரிய செய்திகள்- Part 6

Written by London Swaminathan

Post No. 15,378

Date uploaded in Sydney, Australia –  31 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 6

இவை அனைத்தும் பழனி மலை முருகன் பற்றிய பாடல்களில் உள்ளவை!

பூளைப்பூ,வாலி ,வீணைநாதன் (நாரதர்)

வால மா மதி மத்தம் எருக்கு அறுகு ஆறு பூளை தரித்த …

முற்றாத இளம் பிறை, ஊமத்த மலர், எருக்கு, அறுகு, கங்கை ஆறு, பூளைப்பூ ஆகியவற்றை அணிந்துள்ள

சடைத் திரு ஆல வாயன் அளித்தருள் அற்புத முருகோனே …

சடையைக் கொண்ட மதுரை சொக்கேசர் ஈன்றருளிய அற்புதமான முருகோனே,

மாய மான் ஒடு அரக்கரை வெற்றி கொள் வாலி மார்பு

தொளைத்திட வில் கொடு வாளி ஏவிய மல் புயன் அச்சுதன்

மருகோனே … மாய மானாக வந்த மாரீசனையும், அரக்கர்களையும்

வெற்றி கொண்டவரும், வாலியின் மார்பைத் தொளைக்கும் வண்ணம்

வில்லை ஏந்தி அம்பை எய்தவரும், மற்போருக்குப் பொருந்திய புயத்தை உடையவருமான (ராமனாகிய) திருமாலின் மருகனே,

நாலு வேத(ம்) நவிற்று முறைப் பயில் வீணை நாதன்

உரைத்த வனத்திடை … நான்கு வேதங்களையும் சொல்லப்பட்ட

முறைப்படி பயின்று நவில்கின்ற, வீணை ஏந்திய நாரதர் குறிப்பிட்டு உரைத்த (வள்ளி மலைக்) காட்டினிடையே

நாடி ஓடி குறத்தி தனைக் கொடு வருவோனே … தேடி ஓடிச்

சென்று குறத்தியாகிய வள்ளியைக் கொண்டு வந்தவனே,

நாளிகேரம் வருக்கை பழுத்து உதிர் சோலை சூழ் பழநி

பதியில் … தென்னையும் பலாவும் பழுத்து உதிர்க்கும் சோலைகள் சூழ்ந்த பழனி என்னும் ஊரில்

திரு ஞான பூரண சத்தி தரித்து அருள் பெருமாளே. … சிறந்த

ஞான பூரண சக்தியாகிய வேலாயுதத்தைத் தரித்தருளும் பெருமாளே.

***

சலம் அறுகு பூளை தும்பை … கங்கை நீர், அறுகம்புல்,

பூளைச்செடியின் பூ, தும்பைப் பூ

அணிசேயே … இவைகளை அணியும் சிவபெருமானின் குமாரனே,

பூளைச் செடியின் பூ (Aerva lanata)  சிறியது, வெள்ளையாக, தேங்காய் பூ போன்ற அமைப்பைக் கொண்டது, எனவே இது தேங்காய்ப்பூக் கீரை என்றும் அழைக்கப்படுகிறது. இது பொங்கல் திருவிழாவின் போது காப்புக் கட்டவும், தோரணம் கட்டவும் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகைச் செடியாகும். இதன் பூக்கள், இலைகள் மருத்துவ குணம் கொண்டவை, இலைகள் ரசம் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றன.

பூளைப்பூவின் வேறு பெயர்கள்: பொங்கப்பூ, சிறுபீளை, பீளைசாறி, கற்பேதி, பாஷாணபேதி, கண்பீளை.

***

ராவணன் ஒரு முட்டாள் !

ஏதத்து இலங்கையினில் ஆதிக்கம் உண்டது ஒரு முட்டாள்

அரக்கர் தலை இற்றே விழக் கணைகளே தொட்ட கொண்டல்

உருவு ஆகி … குற்றம் பொருந்திய இலங்கையில் தலைமை கொண்ட முட்டாளாகிய ராவணனுடைய தலை அறுந்து கீழே விழ அம்புகளை ஏவியவரும், மேக நிறத்தை உடையவரும்,

சுமந்து அதிகம் மட்டு ஆர் மலர்க் கமலம் உற்றா சனத்

திருவை மார்பில் புணர்ந்த ரகுராமற்கும் அன்புடைய

மருமகன் ஆகி … மிகுந்த வாசனையை உடைய தாமரை மலர்

மணம் கொண்ட, ஜனகன் மகளாகிய சீதையை மார்பில் அணைத்த ரகுராமனுக்கு அன்புடைய மருகனாகி,

இராவணன் ஒரு கிரிமினல் !

(சங்கப்புலவர்களும் சம்பந்தரும் வசை பாடியதை ஒப்பிடுவோம்)

“கடுந்தெறல் இராமனுடன் புணர் சீதையை

வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,

நிலம் சேர்மதர் அணி கண்ட குரங்கின்

செம்முகப் பெருங்கிளை இழைப் பொலிந்தா அங்கு

அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே….”

—புறநாநூறு 378  ஊன்பொதி பசுங்குடையார்

Purananuru , Sangam Literature, verse 378

***

அரனுறை தருகயிலையை நிலைகுலைவது  செய்த தசமுகனது

கரமிருபது நெரி  தரவினி றுவிய கழலடியுடையவன்

–திருவீழிமிழலை , சம்பந்தர் தேவாரம், முதல் திருமுறை

***

மலையான் மகளஞ்சவ்  வரை எடுத்தவ் வலியரக்கன்

றலை தோளவை நெரியச் சரணுகிர் வைத்தவன்

–திருவேணுபுரம்

***

இசைகயிலை யையெழுதரு வகையிருபது  கரமவை நிறுவிய

நிசிசரன் முடியுடை தரவொரு விரல் பணி கொலுமவ னுறை பதி

இவ்வாறு ஒவ்வொரு பதிகத்திலும் இராவணன் கதறியதும், சிவ பிரான் அருளியதும் சம்பந்தர் தேவாரத்தில் காணக்கிடக்கிறது . ராவணன் ஒரு கிரிமினல் CRIMINAL என்பதால் அவனை நிசி சரன் NIGHT WALKER  (ராத்திரியில் ஆட்டம்போடும் கள்ளன் ) என்றும் திட்டுகிறார் திரு ஞான சம்பந்தர்.

–திருச் சிவபுரம்

***

திரி நயனி, திரி புவனி !

நிருமலிய திரி நயனி வாள் வீச வரு குமரி … மாசு

இல்லாதவளும், மூன்று கண்களை உடையவளும், ஒளி வீச

எழுந்தருளும் குமரி,

கவுரி பயிரவி அரவ பூணாரி திரி புவனி … கெளரி, காளி,

பாம்பை அணி கலனாகப் பூண்டுள்ளவள், மூன்று உலகங்களுக்கும் தலைவி,

நிபுட மலை அரசன் அருள் வாழ்வான புரண உமை

அருள்பாலா … நெருக்கமாக உள்ள இமய மலை அரசன் வளர்த்தருளிய மகளான, எங்கும் நிறைந்தவளும் ஆகிய உமா தேவி பெற்ற மகனே,

***

காசுக்காக கற்பகமே என்று பாடும் கவிகள் !

பெருகி ஒரு காசே கொடாதவரை ஐந்து தருவை நிகரே

ஆகவே எதிர் புகழ்ந்து பெரிய தமிழே பாடி … தாராள மனத்துடன்

ஒரு காசு கூட கொடுக்காத லோபிகளை ஐந்து கற்பகத் தருக்களையும்*  நிகர்ப்பீர்கள் என்று எதிரிலே புகழ்ந்து, (அவர் மீது) பெரிய தமிழ்ப் பாக்களையே பாடி,

நாள் தொறும் இரந்து நிலை காணாப் பிணியின் அகமே

ஆன பாழ் உடலை நம்பி … தினமும் (இங்ஙனம் பிச்சை எடுக்கும் காண முடியாத நோய்க்கு உள்ளாகும் பாழான இந்த உடலை நம்பி,

உயிரை அவமாய் நாடியே பவ(ம்) நிரம்பு பிறவி தனிலே

போக மீளவும் உழன்று திரிவேனோ … உயிரைப் பயனிலதாக

நினைத்து, பாவ வினைகள் நிரம்பியுள்ள பிறவியில் சேரவே மீண்டும் அலைந்து திரிவேனோ?

ஐந்து தேவ தருக்கள்:

சந்தானம், அரிச்சந்தனம், மந்தாரம், பாரிஜாதம், கற்பகம்.

***

மன்மதனுக்கு மைத்துனன் முருகன் !

அரி புத்திர சித்தஜனுக்கு அருமைக்கு உரியத் திரு மைத்துன

வேளே … திருமாலின் மகனான மன்மதனுக்கு அருமையான அழகிய மைத்துனனாகிய* தலைவனே,

மன்மதன் திருமாலின் மகன். வள்ளி திருமாலின் மகள்.

எனவே வள்ளிக் கணவன் முருகன் மன்மதனுக்கு மைத்துனன் ஆகிறான்.

***

தயிர்த் திருடனும் தனுஷ்கோடியும்

தயிரச் சோரன் எனும் அவ் உரை வசைக் கோவ

வனிதையர்கள் தரத்து ஆடல் புரியும் அரி மருகோனே …

தயிரைத் திருடுபவன் என்ற அந்த மொழி நிந்தையைப் புகல்கின்ற கோபிகளுடன் திருவிளையாடல் புரிந்த கண்ணபிரானின் மருகனே,

தமிழ்க் காழி மருத வன மறைக்காடு திரு மருகல்

தனுக்கோடி வரு குழகர் தரு வாழ்வே … (சம்பந்தரின் திருநெறித்தமிழ் எனப்படும் செந்தமிழ்த் தேவாரத்துக்குப் பிறப்பிடமாகிய) சீகாழி,திருவிடை மருதூர், வேதாரண்யம், திருமருகல், தநுஷ்கோடி ஆகிய தலங்களில் வீற்றிருக்கும் சிவபெருமான தந்த குமரனே,

****

மனிதர்கள் பற்றி பாரதியாரும், அருணகிரியாரும் போட்ட கணக்கு!

ஒருவரை யொருவர் தேறி யறிகிலர் மதவி சாரர்

     ஒருகுண வழியு றாத …… பொறியாளர்

உடலது சதமெ னாடி களவுபொய் கொலைக ளாடி

     உறநம னரகில் வீழ்வ …… ரதுபோய்பின்

வருமொரு வடிவ மேவி யிருவினை கடலு ளாடி

     மறைவரி னனைய கோல …… மதுவாக

மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு

     வடிவுற அருளி பாத …… மருள்வாயே

ஒருவரை யொருவர் தேறி யறிகிலர் … ஒருவர் சொல்வதை மற்றவர் இன்னதென்று தெரிந்து அறியமாட்டாதவர்களாகிய

மத விசாரர் ஒருகுண வழியு றாத பொறியாளர் … மத

ஆராய்ச்சியாளர்களும், ஒரு கொள்கை வழியில் நிலைக்காத மனத்தை உடையவர்களுமான மக்கள்

உடலது சதமெ னாடி களவுபொய் கொலைக ளாடி … இந்த

உடல் நீடித்து இருக்கும் என்று எண்ணி, களவும், பொய்யும், கொலையும் செய்து கொண்டே வந்து,

உற நமன் நரகில் வீழ்வர் … இறுதியாக அனைவரும் யமனுடைய

நரகத்தில் சென்று வீழ்வர்.

அதுபோய்பின் வருமொரு வடிவ மேவி … அந்த நிலை

முடிந்தபின்பு கிடைக்கும் வேறு ஓர் உருவத்தை மறு பிறவியில் அடைந்து,

இருவினை கடலுள் ஆடி மறைவர் … நல்வினை, தீவினை என்ற

இருவினைக் கடலில் உளைந்து மறைவர்.

இனனைய கோலம் அதுவாக … இத்தகைய மனிதர்களின் கோலம்

அவ்வாறாக, மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு … (யான் அவ்வாறு அலையாமல்) பொருந்திய பரமஞானமாகிய சிவகதியைப் பெறுவதற்காக திருநீற்றைத் தந்து,

வடிவுற அருளி பாதம் அருள்வாயே … நல்ல நிலையை நான்

அடைய எனக்கு அருளி, உன் திருவடிகளைத் தந்தருள்வாயாக.

***

பாரதியாரும் காளி தேவியிடம் சொல்கிறார் !

வேடிக்கை மனிதன் போல்  வீழ்வே னென்று நினைத் தாயோ?-

தேடிச் சோறுநிதந் தின்று –

பல சின்னஞ் சிறுகதைகள் பேசி –

மனம் வாடித் துன்பமிக உழன்று –

பிறர் வாடப் பலசெயல்கள் செய்து –

நரை கூடிக் கிழப்பருவ மெய்தி –

கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் –

பல வேடிக்கை மனிதரைப் போலே –

நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?– பாரதியார் பாடல் 

—subham—

Tags-   பழனி ,திருப்புகழில், அரிய செய்திகள், பாரதியார் , அருணகிரிநாதர் , வேடிக்கை மனிதர் , பூளைப்பூ , முட்டாள் இராவணன்,  சொல் அழகும், பொருள் வளமும்- Part 6

Leave a comment

Leave a comment