Post No. 15,398
Date uploaded in Sydney, Australia – 6 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part-12
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 12
ஆயி சுந்தரி, போக அந்தரி, ஆதி அம்பிகை!
ஆயி சுந்தரி நீலி பிங்கலை … அனைவருக்கும் தாய், அழகி, பச்சை
நிறமுடையவள், பொன்னிறமும் படைத்தவள்,
போக அந்தரி சூலி குண்டலி … உயிர்களுக்குப் போகத்தை ஊட்டும்
ஓளி வடிவினள், திரிசூலம் ஏந்தியவள், சுத்த மாயையாகிய சக்தி,
ஆதி அம்பிகை வேத தந்திரி இடமாகும் … ஆதி முதல்வி,
அம்பிகை, வேதத் தலைவி (ஆகிய பார்வதி) இடப்பாகத்தில் அமரும்,
ஆலம் உண்ட அரனார் இறைஞ்ச … ஆலகால விஷத்தை உண்ட
சிவபெருமான் வணங்கி வேண்ட,
ஓர் போதகம் தனையே உகந்து அருள் … ஒப்பற்ற ஞான
உபதேசத்தை மகிழ்ந்து அருளிய (பெருமாளே),
ஆவினன்குடி மீது இலங்கிய பெருமாளே. … திருவாவினன்குடி
என்னும் தலத்தில் விளங்குகின்ற பெருமாளே.
***
சுவாமிமலையில் அருணகிரிநாதர் போட்ட ஸலாம் !
அவாமருவு இ(ன்)னா … ஆசை ஏற்படுத்துகின்ற துன்பம்
விளைவதற்கு வசுதை … மண்ணாசையும்,
காணுமடவாரெனும் … விரும்பிப் பார்க்கின்ற இளம் மாதர்கள் என்ற பெண்ணாசையும் காரணமாம்.
அவார்கனலில் வாழ்வென்றுணராதே … அவர்களுடன் வாழ்க்கை நெருப்பின் மேல் வாழ்வு என்றுணராமல்
அராநுகர வாதையுறு தேரைகதி … பாம்பின் வாயில் அகப்பட்டு
துன்பமுறு தவளையின் கதி அடைந்த
நாடும் அறிவாகி … அந்நிலையிலும் இன்பத்தை நாடும்
அறிவுடையவனாகி
உளம் மால்கொண்டு அதனாலே … உள்ளத்தில் மயக்கம் கொண்டு அதன் காரணமாக
சிவாயவெனு நாமமொருகாலும் நினையாத … சிவாய என்ற
திருமந்திரத்தை ஒருபோதும் நினைக்காத
திமிர ஆகரனை … அஞ்ஞான இருளுக்கு இருப்பிடமாக உள்ள
அடியேனை,
வாவென்று அருள்வாயே … உன் திருவடியில் சேர்ந்து இன்புற வருக என்றழைத்து அருள்வாயாக.
திரோத மலமாறும் அடியார்கள் … உன்னை மறத்தல் என்ற குற்றம் இல்லாத மெய்யடியார்களாலும்,
அருமாதவர் தியானமுறு … அரிய பெரிய தவ முனிவர்களாலும்
தியானம் செய்யப்படும்
பாதந் தருவாயே … உன் திருவடிகளைத் தந்தருள்வாயாக.
உவா இனிய கானுவில் நிலாவும் … இளமை மிகுந்து, இனிய
கானகத்தில் ஒளிவீசித் திரியும்
மயில்வாகனம் … மயிலை வாகனமாகக் கொண்டு,
உலாசமுடன் ஏறுங் கழலோனே … அதன்மீது குதூகலத்துடன்
ஏறும் வீரக் கழலோனே,
உலா உதயபாநு சதகோடி உருவான … வானில் உலாவும் உதய
சூரியர்கள் நூறு கோடி கூடினாற்போல
ஒளிவாகும் அயில் வேல் அங்கையிலோனே … ஒளிபடைத்த
அழகிய கூர் வேல் திருக்கரத்துள்ளோனே,
துவாதச புயாசல … பன்னிரண்டு மலைபோன்ற புயங்களை
உடையவனே,
ஷடாநந வரா சிவசுதா … ஆறுமுகக் கடவுளே, சிறந்தவனே,
சிவனின் சேயே,
எயினர் மான் அன்புடையோனே … வேடர் குலத்து மான் போன்ற வள்ளியிடம் அன்புடையவனே,
சுராதிபதி மால் அயனு மாலொடு … தேவேந்திரனும், திருமாலும், பிரம்மனும் அன்போடு
சலாமிடு* … வணக்கம் செய்கின்ற
சுவாமிமலை வாழும் பெருமாளே. … சுவாமிமலையில் வாழ்கின்ற பெருமாளே.
* ‘சலாம்’ என்ற முகம்மதியர்களின் உருதுச் சொல்லை இங்கு
சுவாமிகள் பயன்படுத்துகிறார்.
முஸ்லிம்கள் சந்திக்கும்போது ‘அஸ்ஸலாமு அலைக்கும்‘ (உங்கள் மீது சாந்தி உண்டாவதாக) என்று சலாம், சொல்லிக்கொள்வார்கள்.
***
பஞ்ச பாதகம் – ஐந்து கொடிய பாவங்கள் எவை ?
உன் வாரிஜ பதங்கள் நாய் அடியேன் முடி புனைந்து போதக
வாசகம் வழங்கி ஆள்வதும் ஒரு நாளே … உனது தாமரை போன்ற
அடிகளை அடி நாயேனாகிய என் தலையில் சூட்டி, ஞானோபதேசம்
செய்து ஆண்டருளும் ஒரு நாளும் உண்டோ?
ஈன அதி பஞ்ச பாதக தானவர் ப்ரசண்ட சேனைகள் ஈடு
அழிய வென்று … இழிவான மிக்க ஐந்து* மகா பாவங்களையும் செய்த அசுரர்களின் கொடிய சேனைகள் வலிமை அழிய வெற்றி கொண்டு,
வானவர் குல சேனை ஏவல் கொளும் இந்த்ர லோக வசீகர
அலங்க்ருத ஆகர … தேவர்களுடைய சிறந்த சேனையை
ஆட்கொண்டு, இந்திர லோகத்தாரின் மனதைக் கவர்ந்த வசீகர சக்தி
வாய்ந்தவனே, அழகு அலங்காரத்துக்கு இருப்பிடமானவனே,
பஞ்ச மாபாதகம்
அக்னிதோ கரதஸ்சைவ சஸ்த்ரபாணி: தனாபஹ:
க்ஷேத்ரதாராபர்ஹதா ச பஞ்சைதே ஆததாயின:
அக்னிதா- மற்றவன் சொத்துக்கு தீ வைப்பவன்
கரத-மற்றவர்களுக்கு விஷம் வைப்பவன்
சஸ்த்ரபாணி- ஆயுதமில்லாதவனைக் கொல்பவன்
தனாபஹ:- மற்றவன் பணத்தைத் திருடுபவன்
க்ஷேத்ரதராபஹர்தா- மற்றவன் மனைவியை அபஹரிப்பவன்
மனுவும் (11-54) இது பற்றிக் கூறுகிறார்:-
பிரமஹத்யா சுராபானம் அஸ்தேயம் குர்வங்கனாகம:
மஹந்தி பாதகான்யாஹுஸ்த சம்சர்கி ச பஞ்சம:
பிரம்மஹத்ய- பிராமணனைக் கொல்லுதல்
சுராபானம்- மது பானம் அருந்தல்
ஸ்தேயம்- திருடல்
குர்வங்க நாகம:- குருவின் மனையிடம் தவறாக நடத்தல்
சம்சர்கி- மெற்கண்ட நாலு பேருடன் சஹவாசம்
***
ராவணன் மஹா பாவி !
கொடுநெடு நாவாய்செல் கடலடைத்து … பெரும் கப்பல்கள்
செல்லும் சமுத்திரத்தை அணைகட்டிக் கடந்து,
ஏறி நிலைமை யிலங்கைசாய … அக்கரை சென்று, நிலைத்திருந்த இலங்கையை வீழ்த்தி,
நாலாறு மணிமுடிப் பாவி தனை … பத்து மணிமுடிகளைத் தரித்த பாவியாகிய ராவணனை
அடு சீராமன் மருக … வதைத்த ஸ்ரீராமனின் மருகனே,
***
அருணகிரி அத்வைதப் பிரியர் ! மலரும் மணமும் உவமை!!
இருவினை புனைந்து … அடியேன் அரும் பெரும் செயலாகிய சிவ யோகத்தை மேற்கொண்டு,
ஞான விழிமுனை திறந்து … அறிவுக் கண்ணாகும் நெற்றியிலுள்ள சுழிமுனை திறக்கப் பெற்று,
நோயினிருவினை யிடைந்து போக … பிறவிப் பிணிக்குக் காரணமான நல்வினை, தீவினை இரண்டும் பிரிந்து ஓடிப்போகவும்,
மலமூட விருளற விளங்கி … ஆணவ மலமாகிய இருள் தேய்ந்து அதனால் மெய்ஞ்ஞான ஒளி வீசவும்,
ஆறு முகமொடு கலந்து … உன் ஆறு திருமுகங்களின்
அருட்பெருக்கில் கலப்புற்று,
இரண்டு பேரும் பேதமிலையென … பரமாத்மாவாகிய நீயும் ஜீவாத்மாவாகிய நானும் இரண்டறக் கலந்து ஒன்றாகி,
அழகான பரிமள சுகந்த வீத மயமென மகிழ்ந்து … அழகிய வாசமிக்க மலரும் அதன் நறுமணமும் போல ஒன்றி பேரின்பமுற்று,
தேவர் பணிய விண் மடந்தை பாத மலர்தூவ … தேவர்கள் வணங்கவும், தேவலோக மங்கையர் திருவடிகளில் மலர் தூவவும்,
பரிவுகொடு அநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாட … மிக்க அன்போடு எண்ணிலாத பல்கோடி முநிவர்கள் புகழ்ந்து பாடவும்,
பருமயிலுடன் குலாவி வரவேணும் … பெரிய மயில் வாகனத்தில் ஏறி உல்லாசமுடன் நீ வரவேண்டும்.
***
ஆனந்தக் கண்ணீர் அருவி போல் பெருக வேண்டும்!
என்சித் தமுமனம் உருகிநல் சுருதியின் முறையோடே … என் சித்தமும், மனமும் உருகி சிறந்த வேதங்களில் சொல்லப்பட்ட முறைப்படி
சந்தித்து அரஹர சிவசிவ சரணென … உன்னைச் சந்தித்து, ஹரஹர, சிவசிவ, சரணம் என்று நான்
கும்பிட் டிணையடி யவையென தலைமிசை தங்க … கும்பிட்டு, உன் இணை அடிகள் என் தலைமிசை பொருந்த,
புளகித மெழஇரு விழிபுனல் குதிபாய … என் உடல் புளகாங்கிதம் அடைய, என் இரு கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் அருவி போல் குதித்துப் பாய,
சம்பைக் கொடியிடை விபுதையின் அழகுமுன் … மின்னற் கொடி போன்ற இடையுடைய தேவதையாம் தேவயானையின் அழகு முன்னே விளங்க,
அந்தத் திருநடமிடு சரண் அழகுற … திரு நடனம் இடும் உன் திருவடிகள் அழகுடன் பொலிய,
சந்தச் சபைதனில் எனதுளம் உருகவும் வருவாயே … இந்த அழகான சபையில் எனது உள்ளம் உருகுமாறு வந்தருள்வாயாக.
***
சிவ பெருமான் = அருணகிரி சொரூபன்
எங்கணும் திகழ் அருண கிரி சொருபன் … அங்கிங்கு எனாதபடி
எங்கும் விளங்கி, ஒளி வீசும் சிவந்த மலை உருவம் கொண்டவரும்,
ஆதி அந்தம் அங்கு அறியாத … முதலும் முடிவும் அந்த அருண
கிரியில் மாலும் பிரமனும் அறிய முடியாத
சிவய நம நம சிவய காரணன் … சிவாயநம என்னும் ஐந்தெழுத்தின் மூல காரணப் பொருளானவரும்,
சுரந்த அமுதம் அதை அருளி எமை ஆளும் எந்தைதன் …
(அந்த மந்திரத்தைச் சொன்னால்) ஊறும் ஞான அமுதத்தைத் தந்தருளி நம்மை ஆண்டவருமான எந்தை சிவபெருமானது
திரு உருவின் மகிழ் எனது தாய் பயந்திடும் புதல்வோனே …
திரு உருவின் இடது பாகத்தில் இருந்து மகிழும் என் தாயாகிய உமா தேவி அருளிய மகனே,
சுவாமிமலை திருப்புகழ் பாடல்கள் ; நன்றி திரு கோபால சுந்தரம் @ கெளமாரம்.காம்,
–subham—
Tags– அருணகிரிநாதர் , அரிய செய்திகள் – Part 12, சலாம், அத்வைதம், பஞ்ச பாதகம்,