திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் – Part 11(Post.15,396)

Written by London Swaminathan

Post No. 15,396

Date uploaded in Sydney, Australia –  5 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

கோபிகள்- கிருஷ்ணன் ; அருணகிரி நாதரும் சங்கப்புலவரும்

2000  ஆண்டுகளுக்கு முன்னரே கண்ணன் கதைகள் அனைத்தும்  தமிழ் நாட்டில் மிகவும் பிரசித்தம்!

கஞ்சன் விடும் சகடாசுரன் பட வென்று குருந்தினில் ஏறி

மங்கையர் கண்கள் சிவந்திடவே கலந்த அரு முறையாலே

கண்டு மகிழ்ந்து அழகாய் இருந்து இசை கொண்டு … கம்சன்

ஏவிய சகடாசுரன் மாளும்படி அவனை வென்று, குருந்த மரத்தில் ஏறி கோபிகள் கண்கள் சிவக்க அவர்களுடன் ஊடாடி அரிய வகைகளாலே (அவர்களைப்) பார்த்தும் மகிழ்ந்தும் அழகாய் உடன்இருந்தும் இசை பாடி,

விளங்கிய நாளில் அன்பொடு கண் குளிரும் திருமால்

மகிழ்ந்து அருள் மருகோனே … (கண்ணனாக) விளங்கிய

நாட்களில் அன்புடன் கண் குளிர்ந்த திருமால் மகிழ்ந்தருளும்

மருகனே,– பழனி திருப்புகழ்

***

இதோ சங்கப் புலவர் பாடல்

அகநானுற்றில் தொழுனை நதி

அகநானூறு (59) பாடலில் யமுனை நதியைத் தொழுனை நதி  என்று காண்கிறோம் ; பிற்கால நூல்களும் அவ்வாறே குறிப்பிடுகின்றன. கங்கை நதியைக் குறிப்பிடும் சங்க நூல்கள் கங்கை என்றே பாடுகின்றன. யமுனை மட்டும் தொழுனை ஆனது எப்படி என்பது முதல் மர்மம்; முதல் புதிர்.

கண்ணனிடம் கோபியர் பெண்கள் எங்களது ஆடைகளைக் கொடுத்து விடப்பா ! என்று கெஞ்சிக்கூத்தாடி தொழுததால் இப்படிப் பெயர் வைத்திருக்கலாம் அல்லது கண்ணனைத் தொழுத,  பிருந்தாவனம் அமைந்த இடம் என்பதால் இப்படிப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். தமிழில் பழமையான நூலான தொல்காப்பியத்திலேயே எல்லா இந்துக் கடவுளரையும் காண்கிறோம் .புறநானூற்றில் நக்கீரரே எல்லோருடைய வாகனங்கள் கொடிகளையும் குறிப்பிட்டுப் பாடுகிறார். ஆக இந்து மதம் கொடிகட்டிப் பறந்ததும்— இந்து மதம் மட்டுமே பின்பற்றப்பட்டதும் —சங்க இலக்கியத்தில் உறுதியாகிறது.

அகநானூறு பாடல் 59.  பாடியவர் – மதுரை மருதனிளநாகனார்

தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்ப்

பெருந்தகை இழந்த கண்ணினை, பெரிதும்

ருந்தினை, வாழியர் நீயே! வடாஅது

வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை

அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர்

மரம் செல மிதித்த மாஅல் போலப்

புன் தலை மடப் பிடி உணீஇயர் அம் குழை

நெடு நிலை யாஅம் ஒற்றி நனை கவுள்

படி ஞிமிறு கடியும் களிறே, தோழி!

சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்

சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து

அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை

……….

குளிர்ந்த குளத்தில் நிறைந்த வண்டுகள் மொய்க்கும் இரட்டை மலர்கள் போன்ற பெரிய அழகினை இழந்த கண்களை யுடையவளாய்ப் பெரிதும் வருந்துகின்றாய் வாழ்வாயாக நீயே; வடக்குத் திசையில் உள்ள வளமிக்க நீருள்ள யமுனை ஆற்றின் நீண்ட மணலையுடைய அகன்ற துறையில் ஆயர் பெண்கள் குளிர்ந்த தழைகளை உடுத்திக்கொள்ள மரம் வளையும்பட மிதித்துத் தந்த கண்ணன் போல புல்லிய தலையையுடைய இளைய பெண்யானை உண்பதற்காக, அழகிய குழைகளை

உயர்ந்து நிற்கும் யா மரத்தினை வளைத்துத் தந்து, (தன்) நனைந்த கன்னத்தில் படியும் வண்டுகளை ஓட்டும் ஆண்யானை – தோழி சூரபதுமனை அவன் சுற்றத்தோடு தொலைத்த ஒளிவிடும் இலையுள்ள நீண்ட வேலின் சினம் மிகு முருகனது குளிர்ந்த திருப்பரங்குன்றத்து அந்துவன் பாடிய சந்தன மரங்கள் மிக்க உயர்ந்த மலையில் உள்ள……………………………

****

திருப்புகழில் ரசவாத வித்தை : இரும்பைத் தங்கம் ஆக்கலாம்

வரதா … வேண்டுபவருக்கு வேண்டும் வரங்களை அளிப்பவனும்,

மணிநீயென … கேட்பவருக்கு கேட்டதைக் கொடுக்கும் சிந்தாமணியும் நீதான் என்று

ஓரில் … ஆராய்ந்து பார்த்தால்

வருகா தெது … கைகூடாதது எது உண்டு?

எதுதான் அதில் வாரா(து) … எந்தக் காரியம்தான் அவ்வாறு

துதித்தால் நிறைவேறாது?

இரதாதிகளால் … பாதரசம் போன்றவைகளை வைத்துச் செய்யும்

ரசவாத வித்தை மூலம்

நவலோகம் இடவே கரியாம் … ஒன்பது லோகங்களை* இட்ட

கூட்டுறவால் இறுதியில் கரியாகும்.

இதில் ஏது … இதனால் வேறு பயன் ஏது?

சரதா … சத்திய சொரூபனே,

மறையோது அயன்மாலும் … வேதம் ஓதும் பிரமனும் திருமாலும்

சகலாகமநூல் அறியாத … எல்லா வேத ஆகம நூல்களும் அறியாத

பரதே வதையாள் தருசேயே … பரதேவதையாகிய பார்வதி தந்தருளிய குழந்தாய்,

பழனா புரிவாழ் பெருமாளே. … பழனிப்பதியில் வாழ்கின்ற

பெருமாளே.

***

பொன், இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி, பித்தளை, தகரம்,

துத்தநாகம், வெண்கலம் ஆகிய ஒன்பது. பாதரசம் என்னும் மூலகத்தைப் பயன்படுத்திஉலோகங்களை மாற்றும் மர்மத்தை  இந்துக்கள் அறிந்து இருந்தனர்  ஒரு உலோகத்தினை இன்னும் ஒரு உலோகமாக மாற்றலாம்  என்பது யோகிகள் கண்ட உண்மை. பலரும் இதைப்  பாடியுள்ளனர்.

***

தாயுமானவர் பாடல்

கந்துக மதக்கரியை வசமா நடத்தலாங்

      கரடிவெம் புலிவாயையுங்

   கட்டலாம் ஒருசிங்கம் முதுகின்மேற் கொள்ளலாங்

      கட்செவி எடுத்தாட்டலாம்

வெந்தழலின் இரதம்வைத் தைந்துலோ கத்தையும்

வேதித்து விற்றுண்ணலாம்

   வேறொருவர் காணாமல் உலகத் துலாவலாம்

      விண்ணவரை ஏவல்கொளலாஞ்

சந்ததமும் இளமையோ டிருக்கலாம் மற்றொரு

      சரீரத்தி னும்புகுதலாஞ்

   சலமேல் நடக்கலாங் கனல்மே லிருக்கலாந்

      தன்னிகரில் சித்திபெறலாம்

சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற

திறமரிது சத்தாகிஎன்

   சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே

      தேசோ மயானந்தமே.

யோகிகள் செய்த அத்தனை அற்புதங்களையும் பட்டியலியிட்ட தாயுமானவர், உலோகங்களை ரசாயன முறையில் விலை உயர்ந்த உலோகங்களாக மாற்றி அவைகளை விற்று வாழ்க்கை நடத்த முடியும்; ஆனால் மனதை அடக்கி இறைவனை மட்டுமே நாடுவதுதான் கடினமானது என்கிறார்.

***

மாதங்கி யார் ?

பனக மணி மா மதங்கி குமரி வெகு நீலி சண்டி … பாம்பை

ஆபரணமாகப் பூண்ட சிறந்த மாதங்கியும்*, இளமையானவளும்,

மிகுந்த நீல நிறத்தவளும், வேகமுடைய துர்க்கையும்,

பரம கலியாணி தந்த பெருவாழ்வே … நித்திய மங்களமுடையவளும் ஆன உமாதேவி பெற்றருளிய பெருஞ் செல்வமே,

பகை அசுரர் மாள வென்று அமரர் சிறை மீள வென்று …

பகைத்த அசுரர்கள் மாயுமாறு வெற்றி பெற்று, தேவர்கள் சிறையினின்று மீளுமாறு அருள் புரிந்து,

பழநிமலை மீதில் நின்ற பெருமாளே. … பழநிமலை மீது

நின்றருளிய பெருமாளே.

* மதங்க முநிவரது பெருந் தவத்தை மெச்சி அம்பிகை அவரது மகளாகப் பிறந்து ‘மாதங்கி’ எனப் பெயர் பெற்றாள்.

பரம கல்யாணி அம்பாள் யார் ?

அருள்மிகு பரம கல்யாணி அம்பாள் நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சிக்கு அருகில் உள்ள சிவசைலம் சிவசைலநாதர் திருக்கோவிலின் இறைவியார் ஆவார். கடனையாற்றின் கரையில் அமைந்துள்ள இக்கோவிலில், பரம கல்யாணி அம்பாள் அன்னை பார்வதியின் அம்சமாக வழிபடப்படுகிறார். சிவசைலநாத சுவாமிக்கும் பரம கல்யாணி அம்பாளுக்கும் நடைபெறும் திருக்கல்யாணம் மிகவும் சிறப்பானது.

கோவில் பெயர்: சிவசைல நாதர் திருக்கோவில் (சிவசயிலம்).

இறைவி: அருள்மிகு ஶ்ரீ பரம கல்யாணி அம்பாள்.

இறைவர்: சிவசைலநாத சுவாமி.

சிறப்பு: தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற தாமிரபரணி ஆற்றங்கரை கோவில்.

பரம கல்யாணி அம்மன் என்ற பெயர், சிவசைலத்தில் சிவசைலநாதரின் துணையாக வீற்றிருக்கும், மிகவும் போற்றப்படும் அம்மனைக் குறிக்கிறது.

***

காசியை விடப் புகழ் மிக்கது பழனி

மதுர இன் சொலி மாது உமை நாரணி கவுரி அம்பிகை

யாமளை பார்வதி மவுன சுந்தரி காரணி யோகினி

சிறுவோனே … இனிமை வாய்ந்த சொல்லை உடைய உமாதேவி,

நாராயணி, கெளரி, அம்பிகை, சியாமள நிறத்தினள், பார்வதி,

மோன நிலையில் உள்ள அழகி, ஜகத்காரணி, யோகினி

ஆகிய பல நாமஙளைக் கொண்ட தேவியின் சிறுவனே,

பதம் இசைந்து எழு லோகமுமே வலம் நொடியில்

வந்திடு மா மயில் மீது ஒரு பவனி வந்த க்ருபாகர

சேவக விறல் வீரா … ஏற்ற சமயத்தில் ஏழு உலகங்களையும்

ஒரு நொடிப்பொழுதில் வலம் வந்த சிறந்த மயிலின் மேல்

ஒப்பற்ற திருவுலா வந்த கிருபாகரனே, வலிமையாளனே,

வெற்றி வீரனே,

பருதியின் ப்ரபை கோடியதாம் எனும் வடிவு கொண்டு

அருள் … சூரியனின் ஒளி கோடிக்கணக்கானதாம் என்னும்

பிரகாசமான திருவுருவத்தைக் கொண்டு அருள்பவனே,

காசியின் மீறிய பழனி அம் கிரி மீதினில் மேவிய

பெருமாளே. … (வாரணாசி என்னும்) காசித் தலத்திலும் சிறந்த

பழனி என்னும் அழகிய மலைமீது வீற்றிருக்கும் பெருமாளே.

சூரியன் என்பது நடுத்தர நட்சத்திரங்களில் ஒன்று . அதை விடப் பல்லாயிரம் மடங்கு சக்தி வாய்ந்த திருவாதிரை போன்ற நட்சத்திரங்களும் உண்டு என்பதை இந்துக்கள் அறிவார்கள்;  பகவத் கீதையில் விஸ்வ ருப தரிசனத்தை திவி சூர்ய சஹஸ்ரஸ்ய என்று சஞ்சயன் வருணித்தான். 

விநாயகர் பற்றிய துதியில் 

வக்ரதுண்ட மஹாகாய

சூர்யகோடி சமப்ரப

நிர்விக்னம் குருமேதேவ

சர்வ கார்யஷு சர்வதா

கோடி சூர்யன் ஒளிக்குச் சமமானவன் என்று வருகிறது .

वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ ।

निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा ॥

vakratuṇḍa mahākāya sūryakoṭi samaprabha

nirvighnaṃ kuru me deva sarvakāryeṣu sarvadā

 அருணகிரிநாதரும் இதைப்படியுள்ளார்

பருதியின் ப்ரபை கோடியதாம் எனும் வடிவு கொண்டு

அருள்……………………

To be continued…………………………

Tags- தொழுனை நதி , அகநானூறு- 59 பாடல், சூர்ய கோடி , ரசவாதம், தாயுமானவர், அருணகிரிநாதர், அரிய செய்திகள் – Part 11, கோபிகள்- கிருஷ்ணன்

Leave a comment

Leave a comment