அளவிட முடியாதவை எவை? அருணகிரி தரும் பட்டியல்! – Part 18 (Post No.15,416)

Written by London Swaminathan

Post No. 15,416

Date uploaded in Sydney, Australia –  12 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 18

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 18

அளவிட முடியாதவை எவைஅருணகிரி தரும் பட்டியல்!

சி(ன்)னத் திலத் தினை சிறுமணல் அளவுடல் … சிறிய எள்ளு,

தினை, சிறு மணல் ஆகியவற்றின் அளவுள்ள உடலினை

செறித்த(து) எத்தனை … எடுத்து மறைந்த ஜன்மங்கள் எத்தனை?

சிலைகட லினிலுயிர் செனித்த தெத்தனை திரள்கய

லெனபல … அலை வீசும் கடலுக்கடியில் பெருத்த சுறா மீனிலிருந்து

சிறிய கடல் ஜந்து வரை எடுத்த பிறவிகள் எத்தனை?

அதுபோதா … அவையெல்லாம் போதாவென்று

செமித்த தெத்தனை மலைசுனை யுலகிடை … மலைகளிலும்

சுனைகளிலும் ஜனித்த பிறவிகள் எத்தனை?

செழித்த தெத்தனை சிறுதன மயல்கொடு செடத்தில் …

பலவிதமான உடம்புகளின் புகுந்து வளர்ந்து கீழ்மைக்குரிய பெண்களின் மார்பிலே மையல் கொண்டு அலைந்தமை எத்தனை?

எத்தனை நமனுயிர் பறிகொள்வது அளவேதோ … யமன் பல பல

பிறவிகளிலும் பறித்துக் கொண்ட உயிர்கள் எத்தனை?

மனத்தி லெத்தனை நினைகவ டுகள் … மனத்திலேதான் எத்தனை

வஞ்சகமான எண்ணங்கள்?

குடி கெடுத்த தெத்தனை … வேண்டுமென்றே கெடுத்த மற்றவர்களின்

குடிகள்தாம் எத்தனை?

மிருகம தெனவுயிர் வதைத்த தெத்தனை … கொடிய மிருகம்போல்

மற்ற உயிர்களை வதைத்தது எத்தனை?

அளவிலை … இவை யாவற்றையும் எண்ணினால் அளவிட முடியாது.

விதிகரம் ஒழியாமல் வகுத்த தெத்தனை … விதி வகுத்த

வழியினின்று மாறாமல் நடைபெற்ற நிகழ்ச்சிகள் எத்தனை?

மசகனை முருடனை … கொசுவைப் போன்ற அற்பனகிய என்னை,

முரட்டுக்குணம் உடைய என்னை,

மடைக்குலத்தனை மதியழி விரகனை … மூடர்கள் குலத்தனான

என்னை, அறிவற்ற காமாதூரனான என்னை,

மலர்ப்ப தத்தினி லுருகவு மினியருள் புரிவாயே … உன்

மலரடிகளில் என் நெஞ்சை வைத்து உருகுதற்கு இனியாகிலும் நீ அருள் புரிவாயாக.

மாணிக்கவாசகர் தரும் பட்டியல்

“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்”

பொருள்:

புல், செடி, புழு, மரம், பலவகையான மிருகங்கள், பறவைகள், பாம்புகள், கல், மனிதர்கள், பேய்கள், கணங்கள், வலிமையான அசுரர்கள், முனிவர்கள், தேவர்கள் என இந்த அசையும் (சங்கமம்) மற்றும் அசையா (தாவரம்) உலகில் உள்ள எல்லாப் பிறப்புகளிலும் நான் பிறந்து, அதனால் மிகவும் இளைத்து (வருந்தி, களைப்படைந்து) போயிருக்கிறேன்.

***

ராவணனை அழித்தவள் சூர்ப்பனகை

மூக்கறை … மூக்கு அறுபட்டவளும்,

மட்டை … அறிவில்லாதவளும்,

மகாபல … பெரும் வலிமையுள்ளவளும்,

காரணி … ராவணாதியர்களின் வதைக்கு காரணமாக

இருந்தவளும்,

சூர்ப்பநகைப் படு மூளி … சூர்ப்பநகையென்ற பெயருடன்,

மூளியான கொடியவளும்,

உதாசனி … அவமதிக்கத் தக்கவளும்,

மூர்க்க குலத்தி … மூர்க்க குணமுள்ள அசுர குலத்தில்

பிறந்தவளும்,

விபீஷணர் சோதரி … விபீஷணருக்கு சகோதரியும்,

முழுமோடி … முழு மாயக்காரியும் ஆகிய சூர்ப்பநகை,

மூத்த அரக்கன் இராவணனோடு … அண்ணனும்

அரக்கனுமான ராவணனிடம் சென்று

இயல்பேற்றிவிட … சீதையின் அழகின் தன்மையை அவன் மனத்தில் புகுத்திவிட,

கமலாலய சீதையை … தாமரைக் கோவிலில் வாழும் லக்ஷ்மியாகிய சீதாதேவியை

மோட்டன் வளைத்து … மூர்க்கனாகிய அந்த ராவணன் மாயமாகக்

கவர்ந்து

ஒரு தேர்மிசையே கொடு முகிலேபோய் … ஒற்றைத் தேரிலே

வைத்து மேகமண்டலம் சென்று,

மாக்கன சித்திர கோபுர நீள்படை வீட்டில் … பிரசித்தி பெற்ற,

அழகிய கோபுரங்கள் நிறைந்த, நீண்ட சேனைகள் உள்ள இலங்கையில்

இருத்திய நாள் … (அசோகவனத்தில்) சிறை வைத்தபோது,

அவன் வேரற … அந்த ராவணனின் வம்சமே வேரோடு

அற்றுப்போகும்படி,

மார்க்க முடித்த … அதற்குரிய வழியை நிறைவேற்றிய

விலாளிகள் நாயகன் மருகோனே … வில்லாதி வீரர்களின்

தலைவனாம் ராமனின் மருமகனே,

வாச்சிய மத்தள பேரிகை போல் … வாத்தியங்களான மத்தளம்,

பேரிகை இவற்றின் ஓசை போல

மறை வாழ்த்த … வேதியரின் வேத கோஷங்கள் வாழ்த்தவும்,

மலர்க்கழு நீர்தரு … செங்கழுநீர் மலரை நாள்தோறும் தருகின்ற

நீள்சுனை வாய்த்த … நீண்ட சுனை வாய்க்கப் பெற்ற

திருத்தணி மாமலை மேவிய பெருமாளே. … திருத்தணிகை

என்னும் பெருமலையில் மேவிய பெருமாளே.

***

துதித்தால் பக்கத்தில் வருவான்எதிர்த்ததால் தூரத்தில் போவான்

தவத்தினோர்க்கு உதவும் இளையோனே … தவசீலர்களுக்கு

உதவும் இளையவனே,

எத்திடார்க்கு அரிய முத்த … உன்னை வணங்காதவர்களுக்கு

அரியவனாகி, பாசங்களிலிருந்து நீங்கியவனே,

பாத்தமிழ்கொடு எத்தினார்க்கு எளிய பெருமாளே. … தமிழ்ப்

பாக்களால் உன்னைத் துதிப்போர்க்கு எளிமையாய் இருக்கும்

பெருமாளே.

***

சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற

மாயன் மணி வாள் ஒளி வெண் தரளங்கள்

வேய் விண்டு உதிர் வேங்கட மா மலை மேய

ஆயன் அடி அல்லது மற்று அறியேனே.

– திருமங்கை ஆழ்வார்.

பொருள்:  (பக்தியற்றவர்களுக்கு) எட்டாதவனும்,  (பக்தர்களுக்குக்) கையாளாயிருப்பவனும், என் நெஞ்சினுள்ளே வந்து நின்ற ஆச்சரியபூதனும், மூங்கில்களானவை பிளவுபட்டு பிரகாசமுள்ள வெளுத்த முத்துக்களையும் ஒளியுள்ள ரத்னங்களையும் உதிர்க்குமிடமான திருமலையில் எழுந்தருளியிருப்பவனுமான ஸ்ரீக்ருஷ்ணனுடைய திருவடிகளையொழிய வேறொன்றையும் அறியமாட்டேன்.

***

சேயன் அணியன்- திருமூலர் திருமந்திரம்

மாயனும் ஆகி மலரோன் இறையுமாய்க்

காயநன் னாட்டுக் கருமுதல் ஆனவன்

சேயன் அணியன் தித்திக்கும் தீங்கரும்

பாய்அமு தாகிநின்று அண்ணிக்கின் றானே.

மாயவன் என்று ஆகி மலரோனும் இறையுமாய் உடல் என்ற காய நல்ல நாட்டிற்கு கரு என்ற முதலாக ஆனவன். மகவு என்றானவன் எடுத்து அணிந்துக் கொள்ள வேண்டியவன் தீத்திக்கும் நல்ல தீங்கரும்பாகவும் அமுதாகவும் நின்று அண்ணிக்கின்றானே. பின்குறிப்பு – ஏகமே அநேகமாக நின்று அருள்கின்றது–‪திருமந்திரம்

***

விபச்சாரிகள் மீது வசைமாரி – ஐந்து அவஸ்தைகள்

தொடத் துளக்கிகள் அ(ப்)பகட நினைவிகள் குருட்டு

மட்டைகள் குமரிகள் கமரிகள் … தொட்டால் கூச்சம் அடைபவர்

போல அசைபவர்கள். அந்த வஞ்சக நினைவு கொண்டவர்கள். அறிவுக் கண் இல்லாத மூடர்கள். இள மகளிர். குற்றம் உள்ளவர்கள்.

சுதைச் சிறுக்கிகள் குசலிகள் இசலிகள் முழு மோசம்

துறுத்த மட்டைகள் அசடிகள் கசடிகள் … நிலப் பிளப்பில் (பிறரை

ஆழ்த்துபவர்கள்). இன்பச் சுவையைச் சிறுகச் செய்பவர்கள். தந்திரவாதிகள்.

எளிதில் பிணக்கம் கொள்பவர்கள். முழு மோசம் நிரம்பியுள்ள பயனிலிகள். மூடர்கள். துர்க்குணிகள்.

முழுப் புரட்டிகள் நழுவிகள் மழுவிகள் துமித்த மித்திரர்

விலை முலை இன வலை புகுதாமல் … முழுதும் மாறுபட்ட பேச்சுக் காரிகள், பிடிபடாது நழுவுகிறவர்கள், தங்கள் சூது வெளியாகாமல்

மழுப்புவோர்கள், (வருபவரின்) பொருளை நண்பர்கள் போல நடித்துப்

பறிக்கின்றவர்கள், மார்பகத்தை விலைக்கு விற்பவர்கள் (ஆகிய பொது மகளிரின்) வலையில் நான் புகாமல்,

அடைத்தவர்க்கு இயல் சரசிகள் விரசிகள் தரித்த வித்ரும

நிறம் என வர உடன் அழைத்து சக்கிர கிரி வளை படி கொடு

விளையாடி … (நற்கதிக்குப் போகும் வழியைத்) தடுத்து அடைத்த

விலைமாதர்களுக்குச் (சமமாக நடக்கும்), இன்பத்தைக் காட்டுபவர்களும்

துன்பத்தை ஊட்டுபவர்களும் ஆகிய (சித்துக்களைக் காட்டி மோசம்

செய்யும்) சிலரை, அணிந்துள்ள பவளம் போன்ற ஒளி போல மதித்து,

அவர்களை உடன் வரும்படி அழைத்துச் சென்று, சக்கிவாள கிரியால்

சூழப்பட்ட இப்பூமியில் அவர்களுடன் வீண் பொழுது போக்கி

விளையாடும்

அவத்தை தத்துவம் அழிபட இருளறை விலக்குவித்து ஒரு

சுடர் ஒளி பரவ ந(ல்)ல அருள் புகட்டி உன் அடி இணை

அருளுவது ஒரு நாளே … என்னுடைய ஜாக்கிராதி* மல

அவஸ்தைகளும், தத்துவ சேஷ்டைகளும் ஒடுங்க (எனது)

அஞ்ஞானத்தை நீக்கி, என் உள்ளே ஞானப் பேரொளி பரவ, நல்ல

(உனது) திருவருளை ஊட்டி, உன் திருவடிகளை அருளுகின்ற ஒரு

நாளும் எனக்குக் கிட்டுமோ?

படைத்து அனைத்தையும் வினை உற நடனோடு துடைத்த

பத்தினி மரகத சொருபி ஓர் பரத்தின் உச்சியில் நடம் நவில்

உமை அருள் இளையோனே … படைத்து எல்லாவற்றையும்

செயற்படச் செய்து காப்பாற்றி, நடராஜப் பெருமானோடு அழித்த

கற்புடையாள், மரகத நிறத்தினள், ஒப்பற்ற பர வெளிக்கு மேலே நடனம் செய்கின்ற உமா தேவியார் ஈன்ற இளையோனே,

அவஸ்தைகள் ஐந்து:

ஜாக்கிரம் (நனவு), சொப்பனம் (கனவு), சுழுத்தி (உறக்கம்),

துரியம் (பேருறக்கம்), துரியாதீதம் (உயிர்ப்படக்கம்).

***

கீதைதிருக்குறள் எதிரொலி  பிறவிப் பெருங்கடல்

நிலையாத சமுத்திரமான … அகலம், ஆழம் இவ்வளவு என்று

காணமுடியாத பெரும் சமுத்திரம் போன்ற

சமுசார துறைக்கணின் மூழ்கி … சம்சாரம் ஆகிய நீர்த்துறையிலே மூழ்கி,

நிசமானதெனப் பல பேசி … மெய் போன்ற பல பொய்களைப் பேசி,

அதனூடே நெடுநாளும் உழைப்புளதாகி … அந்த சம்சாரக்

கடலிலே, நீண்ட காலமாக உழைப்புள்ளவன் ஆகி,

பெரியோர்களிடைக் கரவாகி … பெரியோர்களின் கூட்டத்தில்

சேராமல் ஒளிந்து மறைந்து ஒதுங்கி,

நினைவால்நி னடித்தொழில் பேணி துதியாமல் … நல்ல

நினைவோடு நின்னடிக்கான தொண்டுகளை விரும்பிப் போற்றாமல்,

தலையான வுடற்பிணி யூறி … உடலில் முதன்மையான நோய்கள்

வந்து தாக்கவும்,

பவநோயின் அலைப்பல வேகி … இந்த சம்சார சாகரத்தில் பிறவி

நோய் என்னும் பல அலைகள் வீசவும்,

சலமான பயித்திய மாகி தடுமாறித் தவியாமல் … கோபம்

கொண்ட பைத்தியக்காரனாக மாறி, யான் தடுமாறித் தவிக்காமல்,

பிறப்பையு நாடி யதுவேரை யறுத்து … பிறவியின் மூல காரணத்தை ஆராய்ந்து, அதன் ஆணிவேராகிய ஆசையை அறுத்து,

உனையோதி தலைமீதில் பிழைத்திடவே … உன் புகழ் ஓதி

இவ்வுலகில் உய்யுமாறு

நினருள்தாராய் … உன் திருவருள் புரிந்து ஆட்கொள்வாயாக.

**

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்- திருக்குறள் 10

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

பத்தாவது குறளில் வரும் “பிறவிப் பெருங்கடல்” என்பது “சம்சார சாகரம்” என்பதன் மொழி பெயர்ப்பு. இது கிருஷ்ண பரமாத்மாவின் சொற்கள் (கீதை 12-7)

அதுமட்டுமல்ல கண்ணன் முதல் ஆதி சங்கரர் வரை எல்லா சமஸ்கிருத நூல்களிலும் ‘பிறவிப் பெருங்கடல்’ காணப்படுகிறது.

ஆதிசங்கரர் நூற்றுக் கணக்கான இடங்களில் சம்சார சாகரம் (பிறவிப் பெருங்கடல்) பற்றிப் பாடுகிறார். அவர் பாடிய விவேக சூடாமணியில் மட்டும் 9, 35, 37, 44, 136 எண் பாடல்களில் இந்தச் சொற்களைக் காணலாம்.

**

பிறவிஎனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்

துறவிஎனுந் தோற்றோணி கண்டீர் – நிறைஉலகில்

பொன்மாலை மார்பன்புனற் காழிச் சம்பந்தன்

தன்மாலை ஞானத் தமிழ்.

—நம்பியாண்டார் நம்பி 11-11 ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக் கோவை

சம்சார சாகரம்

சம்சார சாகரம் என்ற சொற்களை முதலில் பயன்படுத்தியவர் கிருஷ்ண பரமாத்மா. பகவத் கீதையில் 12-7 அவர் இதை 5000  ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னார். பின்னர் காளிதாசன் ரகு வம்ச 12-60 காவியத்தில் 2000  ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னார். அதற்குப்பின்னர் வள்ளுவர் திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் பிறவிப் பெருங்கடல் என்று அதைத் தமிழாக்கி நமக்குச் சொன்னார்

பகவத் கீதை என்ன சொல்கிறது?

பகவத் கீதை 12-7 ஆம் அத்தியாயம்

தேஷாமஹம் சமுத்தர்த்தா ம்ருத்யு ஸம்ஸார ஸாகராத்

பவாமி நசிராத் பார்த்த மய்யாவேசித சேதஸாம்  12-7

तेषामहं समुद्धर्ता मृत्युसंसारसागरात् ।

भवामि नचिरात्पार्थ मय्यावेशितचेतसाम् ॥ 12-7

teṣāmahaṃ samuddhartā mṛtyusaṃsārasāgarāt

bhavāmi nacirātpārtha mayyāveśitacetasām 12-7

என்பால் அறிவைப் புகுத்திய அன்னோரை நான் மரண சம்சாரக் கடலினின்றும் விரைவில் தூக்கிவிடுவேன். பகவத் கீதை 12-7

***

ரகுவம்ச காவியத்தில், காளிதாசன் என்ன சொல்கிறான் ?

ப்ரவ்ர்த்தா உபலப்தாயாம் தஸ்யாஹா சம்பாதி தர்சநாத்

மாருதி: சாகரம் தீர்ண: சம்சாரமிவ நிர்மம:

சம்பாதியைக் கண்டவுடன், சீதாதேவி பற்றிய செய்தியைக் கேட்டவுடன் அநுமன் , உலகப் பற்றில்லாத ஒருவன் சம்சாரக்  கடலினை எவ்வாறு தாண்டுவானோ அப்படித் தாண்டினான்

प्रवृत्तावुपलब्धायाम् तस्याः संपातिदर्शनात्।

मारुतिः सागरम् तीर्णः संसारमिव निर्ममः॥ १२-६०

pravṛttāvupalabdhāyām tasyāḥ saṁpātidarśanāt|

mārutiḥ sāgaram tīrṇaḥ saṁsāramiva nirmamaḥ || 12-60

On meeting sampAti, the elder brother of slain jaTAyu, Hanuma gained the news of Seetha’s whereabouts, whereby he crossed the ocean, just as one having no attachment for worldly objects crosses the ocean of this worldly existence. [12-60]

***

மதித்த முத்தமிழில் பெரியோனே!

நினைத்தது எத்தனையில் தவறாமல் … நினைத்தது எந்த அளவும்

தவறாமல் கைகூடவும்,

நிலைத்த புத்திதனைப் பிரியாமல் … நிலையான ஞானத்தை விட்டு

யான் பிரியாமல் இருக்கவும்,

கனத்த தத்துவம் உற்றழியாமல் … பெருமை வாய்ந்த

தத்துவங்களைக்* கடந்து அப்பாலான நிலையை யான் அடைந்து

அழியாமல் இருக்கவும்,கதித்த நித்தியசித்தருள்வாயே … வெளிப்படுகின்ற நிரந்தரமான சித்தநிலையை நீ அருள்வாயாக.

மனித்தர் பத்தர்தமக்கு எளியோனே … மனிதர்களுக்குள்

அன்புடையார்க்கு மிக எளியவனே,

மதித்த முத்தமிழில் பெரியோனே … மதிக்கப்படுகிற இயல்இசை,

நாடகமாகும் முத்தமிழில் சிறந்தவனே,

செனித்த புத்திரரிற் சிறியோனே ... சிவ மூர்த்தியிடம் தோன்றிய

குமாரர்களுள் இளையவனே**,

திருத்தணிப்பதியிற் பெருமாளே. … திருத்தணிகைப் பதியில்

எழுந்தருளியுள்ள பெருமாளே.

* 96 தத்துவங்கள்;** சிவ குமாரர்கள் நால்வர்:

விநாயகர்வீரபத்திரர்பைரவர்முருகன் (அனைவருக்கும் இளையவர்).

—subham—

Tags- திருப்புகழில், அருணகிரிநாதர், அரிய செய்திகள் Part 18

சொல் அழகும், பொருள் வளமும், அளவிட முடியாதவை எவை?

பிறவிப் பெருங்கடல், சம்ஸார சாகரம்

Leave a comment

Leave a comment