
Hunas attacking
Post No. 15,417
Date uploaded in Sydney, Australia – 12 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
English version was posted yesterday
ஆங்கில எழுத்து H– ல் துவங்கும் சொற்கள்
Words beginning with “H”
ஹலாயுத (हलायुध).—1.பலராமனின் பெயர்; கலப்பை ஏந்தியவன் என்பது பொருள்; ஹல என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லும் கலப்பையும் ஒரே வேர்ச் சொல்ல்லிலிருந்து பிறந்தவை. 2.அபிதான ரத்னமாலா என்ற நூலின் ஆசிரியர் பெயர்.
***
ஹால – சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சாதவாகன அரசன்; விக்ரமாதித்தன் போலவே கவிகளை ஆதரித்தவன்; பிராகிருத மொழியில் காதா சப்த சதி என்ற அகத்துறைக் கவிதைகளைத் தொகுத்தவன்.
***
ஹம்பி – விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைநகர் ; முஸ்லீம்கள் படையெடுப்பில் அழிக்கப்பட்ட நகரம்; இப்போது எஞ்சியுள்ள சின்னங்களும் கோவில்களும் அதன் மகத்தான பழங்காலத்தைக் காட்டி நிற்கின்றன. விட்டல் கோவில், விரூபாட்ச கோவில், தாமரை மஹால், ஹம்பி பஜார், இசைத் தூண்கள், கல் ரதம் ஆகியன பல சதுரமைல்களுக்குப் பரவி நிற்கின்றன. கர்நாடக மாநிலத்தில் ஹாஸ்பெட் அருகில் உள்ளது.
***
ஹரிஹரன்
விஷ்ணுவும் சிவனும் இணைந்த உருவம்; சங்கர நாராயணன்; ஹரியும் சிவனும் ஒன்று என்ற ஒற்றுமையை விளக்கும் மூர்த்தி.
***
ஹரிஜன்
தாழ்த்தப்பட்ட ஜாதியினரும் ஹரியின் புதல்வர்கள் – இறைவனின் பிள்ளைகள் – என்பதை உணர்த்த மஹாத்மா காந்தி உருவாக்கிய சொல்; 1930–35 ஆண்டுகளில் புழக்கத்துக்கு வந்த சொல்.
***
ஹவிஸ்
தமிழில் அவி; Havis (Sanskrit: हविस्)
சங்க இலக்கியம், திருக்குறள் முதலிய நூல்களில் 2000 ஆண்டுகளாகப் பயன்படும் சொல்; வேள்வித் தீயில் இறைவனுக்குப் படைக்கப்படும் பொருள் அவி உணவு ஆகும்; பொதுவாக நெய் கலந்த சோறும் ஏனைய பொருட்களும் இதில் அடக்கம்.
***
ஹட யோகா
யோக முறைகளில் ஒன்று; மரணத்தை வெல்லவும், அபூர்வ சக்திகளை பெறவும் உதவும் முறை; ஆசனம் பிராணாயாமம் தியானம் என்பனைத்தில் உண்டு; தமிழ்ச் சித்தர்களும் இதைப் பின்பற்றி பாடியுள்ளனர்.
***
ஹர்ஷ வர்தன ( 606 to 647 CE)
வட இந்தியாவையும் நர்மதை நதிக்கு அப்பாலுள்ள தென் இந்தியப்பகுதிகளையும் ஆண்ட மன்னன் ; பிரபாகர் வர்த்தனனின் புதல்வன்; சிறந்த கவிஞன்; நாகானந்தம் ரத்னாவளி, பிரியதர்சிகா முதலிய சம்ஸ்க்ருத நூல்களை இயற்றினார். இவரது அரசவைக் கவிஞர் பாணபட்டர் , ஹர்ஷ சரிதம் என்ற சம்ஸ்க்ருத நூலில் இவரது சரித்திரத்தை எழுதியுள்ளார்.
***
ஹரித்வார்
உத்தர கண்ட் மாநிலத்தில் உள்ள முக்கிய புனிதத் தலம் ; கங்கை நதி இமயமலையிலிருந்து சமவெளிக்குள் அசுர வேகத்தில் பாயும் நகரம். சிவனின் தலையிலிருந்து பாய்ந்த கங்கை, ஹரியின் பாதங்களைத் தொட்டு வரும் இடம்; மேலும் அர்த்த கும்ப மேளா என்னும் மினி கும்பமேளா நடக்கும் நான்கு நகரங்களில் இதுவும் ஒன்று; மாயா என்ற பெயரில் ஏழு புனிதத் தலங்களில் ஒன்று .இதைத் தாண்டித்தான் நான்கு முக்கிய இமயமலைத் தலங்களுக்குச் செல்ல வேண்டும்.
***
ஹேரம்ப
கணபதியின் 16 நாமங்களில் ஒன்று ; ஐந்து முகங்களுடன் பத்து கைளுடன் உள்ள உருவம்; பக்தர்களைக் காக்கும் விநாயகர் என்பது பொருள்; பத்து கைகளில் பல்வேறு ஆயுதங்கள் உண்டு; பலவீனமானவர்களைக் காக்கும் உருவம்; சிம்ம வாகனத்தில் காட்சி தருவார் .
***
இமய மலை
ரிக்வேதம் முதல் சங்க இலக்கியம் வரைப் புகழப்படும் உலகின் முக்கிய மலைகளில் ஒன்று ; இமயம் என்றால் பனி என்று பொருள்; குமார சம்பவத்தில் முதல் பத்து ஸ்லோகங்களில் காளிதாசன், புகழ்ந்த செய்திகளை சங்க இலக்கியத்தில் காணலாம். கங்கை, சிந்து, பிரம்மபுத்ரா உற்பத்தியாகும் இடம்; கைலாஷ் என்னும் புனிதத் தலம் உள்பட புகழ்பெற்ற தலங்கள் எல்லாம் உள்ளன; உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் உள்பட நிறைய உயரமான சிகரங்களை உடைய மலை இது ஒன்றுதான்; சுமார் 1500 மைல் நீள த்துக்கு இந்தியாவின் வட பகுதியில் பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறது .
***
ஹிந்து
சனாதன தர்மம் என்று அழைக்கப்படும் உலகின் மிகப் பழைய மதத்துக்குப் பாரசீகர்கள் சூட்டிய பெயர் ஹிந்து; சிந்து நதிக்கரையில் வேதத்தை முழக்கியவர்களை அவர்கள் இந்து சொன்னதற்குக் காரணம்— பாரசீக மொழியில் ச என்னும் எழுத்து கிடையாது; சிந்து நதியை இண்டஸ் என்றும் அதன் கரையில் வசித்தவர்களை இந்து என்றும் அழைத்தார்கள்; அவர்களிடமிருந்து கிரேக்க மொழிக்கும் அந்தச் சொல் தாவியது; ஹிம்சை செய்யாதவர்கள் ஹிந்துக்கள் என்ற பொருளையும் கற்பிக்கலாம் ; மறுபிறப்பு , கர்ம வினைக் கொள்கை, ஒரே தெய்வத்தைப் பல உருவங்களில் வழிபடும் முறை ஆகியன இந்து மதத்தின் சிறப்பு அம்சங்கள்; உலகத்தில் பெண்களையும் பெண் தெய்வங்களையும் வணங்கும் ஒரே மதம் இந்து மதம் இந்து மதம் தான்; வேதங்களையும் அதன் கருத்துக்களை எதிரொலிக்கும் தெய்வீகத்த தமிழ்ப் பாடல்களையும் போற்றுவோர் இந்துக்கள்; ரிக் வேதத்திலும் ராமாயண, மஹாபாரத இதிகாசங்களிலும் புராணங்களிலும் காணப்படும் இந்து தெய்வங்கள் மற்றும் அவர்களது சிறப்புகள் முதலியன சங்கத் தமிழ் இலக்கியம் முழுதும் பரலாகக் காணப்படுகின்றன ; இந்துக்கள் கற்பித்த யோகாசனத்தை இன்று உலகம் முழுதும் ஏற்று பின்பற்றுகின்றனர்.
***
ஹிரண்ய தானம்
ஹிரண்யம் என்றால் தங்கம் என்று பொருள். ரிக் வேத காலம் முதல் தற்காலம் வரை பயிலப்படும் சொல் ; இந்துக்கள் பின்பற்றும் பதினாறு தானங்களில் ஹிரண்ய தானம் முக்கியமானது; 1400 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தோனேஷியாவை ஆண்ட மூலவர்மன், விஜய நகர சாம்ராஜ்ய மன்னன் கிருஷ்ணதேவராயர் போன்றோரின் கல்வெட்டுகளில் இந்த தனத்தைக் காணமுடிகிறது ,
***
ஹீனயானம்
புத்த மதத்தின் இரண்டு முக்கியப் பிரிவுகள் ஹீனயானம் , மகாயானம் ஆகும்; ஹீனயானம் என்றால் சிறிய வாஹனம் ; அதாவது சிறிய வழிமுறை; இவர்கள் புத்த மதத்தின் பழைய கொள்கைகளை மாற்றாமல் ஏற்றவர்கள்; பிற்காலத்தில் தோன்றிய மகாயானம் புத்தரைத் தெய்வமாக்கி கொண்டாடத் துவங்கியது ; இதனால் புதிய முறைகள் புகுந்தன.
***
ஹிரண்யகசிபு
ஹிரண்யகசிபு , ஒரு அசுர மன்னன்; ஏற்கனவே கொல்லப்பட்ட ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனின் சகோதரன் ; பிரம்மா கொடுத்த வரத்தினால் மனிதர்களால் கொல்ல முடியாதவன்; அவனது மகன் பிரகலாதனோ பெரிய விஷ்ணு பக்தன்; எங்கும் உள்ள இறைவனைக் காட்டு என்று ஒரு தூணையுதைத்தபோது அதிலிருந்து வெளிவந்த நரசிம்மத்தினால் கொல்லப்பட்டான்.
***


ஹோம / ஹவன்
வேள்வி என்ற பெயர் சங்க காலம் முதல் உள்ளது ; சங்க கால மன்னர்கள் ராஜ சூயம், அஸ்வமேதம், சோம யாகம் முதலியவற்றைச் செய்தார்கள் ; பிராமணர்கள் முத்தீ வளர்த்து தினமும் யாகம் , ஹோமம், வேள்வி செய்தது சங்க இலக்கியம் முழுதும் உள்ளது; பெரிய யாகங்களை வேதம், புராணம் இதிகாசங்களில் காணமுடிகிறது. சுமார் 400 வகை யாகங்கள் இருந்த போதும் தற்காலத்தில் மஹா ருத்ரம், சஹஸ்ர சண்டி, கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம்,சுதர்சன ஹோமம் போன்றவற்றை மட்டுமே அதிகம் செய்கிறார்கள் ; வேள்வித் தீயை வளர்த்து அதில் ஆகுதியாக பல பொருட்களை மந்திரம் சொல்லி போடும்போது இதம் ந மம – இது என்னுடையது அல்ல என்பார்கள் இது தியாக மனப்பான்மையையும் மழையையும் உண்டாக்கியது.
***

ஹுன மன்னர்கள்
சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் வடக்கு, வட மேற்குப் பகுதிகளை ஆண்ட முரட்டு ஜாதியினர்; ராஜ தரங்கிணி என்னும் காஷ்மீர் வரலாற்று நூலை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கல்ஹணர் என்ற ஸம்ஸ்க்ருதக் கவிஞர் மிஹிரகுலன் என்ற ஹுன மன்னன் மலை முகட்டிலிருந்து நூற்றுக் கணக்கான யானைகளை உருட்டிவிட்டு அவை மரணம் அடைவதை அவன் வேடிக்கை பார்த்ததாக எழுதியுள்ளார்; அவன் சைவத்தை ஆதரித்து காஷ்மீரிலிருந்து புத்த மதத்தை விரட்டியாகவும் எழுதியுள்ளார் ;ஹூணர்கள் தமிழ் நாட்டினையும் இலங்கையையும் தாக்கியதாக கல்ஹணர் சொன்னபோதும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை
To be continued………………
Tags- HINDU DICTIONARY, IN ENGLISH AND TAMIL, Part33; இந்துமத கலைச்சொல் அகராதி-33, ஆங்கில எழுத்து H- ல் துவங்கும் சொற்கள் , ஹலாயுத, ஹோமம், ஹிந்து, நரசிம்மம்