
Goddess born as a shark.
Post No. 15,419
Date uploaded in Sydney, Australia – 13 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 19
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 19
***

சன்யாசிகளைத் திட்டாதே
பகலி ராவினுங் கருவி யால் … பகலிலும் இரவிலும் இந்த உடம்பு
என்ற கருவியால்
அ(ன்)னம் பருகி யாவிகொண்டு … சோறு உண்டு உயிரைப்
பாதுகாத்து
உடல்பேணி … இவ்வுடம்பை விரும்பி வளர்த்த யான்,
பழைய வேதமும் புதிய நூல்களும் … பழமையான வேத
நூல்களையும் புதுமையான நூல்களையும்
பலபுராணமுஞ் சிலவோதி … பலவகையான புராணங்களையும்
ஒரு சிலவற்றை ஓதி உணர்ந்து,
அகல நீளமென்று அளவு கூறரும் … இத்தனை அகலம்
இத்தனை நீளம் என்று அளக்க முடியாத
பொருளிலே அமைந்து அடைவோரை … பேரின்பப் பொருளிலே
மனத்தை வைத்து அமைதியுறும் ஆன்றோரை,
அசடர் மூகரென்று அவலமே மொழிந்து … மூடர், ஊமையர்
என்றெல்லாம் வீண் வார்த்தைகளால் அவமதித்து
அறிவிலேன் அழிந்திடலாமோ … அறிவிலியாகிய அடியேன் அழிந்து போகலாமா?
***
எட்டுவகை அபூர்வ சக்திகளை அடைய உதவும் துதி
அழி தொழிற்கு விருப்பொடு நத்திய அசடனைப் பழி உற்ற
அவத்தனை அடைவு கெட்ட புரட்டனை முட்டனை
அடியேனை … அழிந்து போகும் தொழில்களில் விருப்பத்துடன்
ஆசைப்படும் முட்டாளை, பழிக்கு ஆளான வீணனை, தகுதி இல்லாத பொய்யனை, மூடனாகிய அடியேனை
அகில சத்தியும் எட்டுறு சித்தியும் எளிது எனப் பெரு
வெட்டவெளிப்படும் அருண பொன் பதம் உற்றிட வைப்பதும்
ஒரு நாளே … சகல சக்தியும், அஷ்டமா* சித்திகளும் எளிதில்
கிட்டும்படி, பெரிய வெட்ட வெளியில் தோன்றும் உனது சிவந்த அழகிய திருவடிகளை நான் சேரும்படியாக வைக்கும் ஒரு நாள் எனக்குக் கிடைக்குமா?
அஷ்டமாசித்திகள் பின்வருமாறு:
அணிமா – அணுவிலும் சிறிய உருவினன் ஆதல்.
மகிமா – மேருவினும் பெரிய உருவினன் ஆதல்.
கரிமா – ஆயுதங்களுக்கும், ஆகாயத்துக்கும், காலத்துக்கும் அப்பால் ஆதல்.
லகிமா – ஆகாயகமனம், அந்தரத்தில் இருத்தல்.
பிராப்தி – பர காயங்களில் புகுதல் (கூடுவிட்டு கூடுபாய்தல்).
பிராகாமியம் – எல்லாவற்றிலும் நிறைந்திருத்தல்.
ஈசத்துவம் – எல்லாவற்றுக்கும் நாதனாக இருத்தல்.
வசித்துவம் – எல்லா இடங்களிலும் இருந்து யாவற்றையும் வசப்படுத்தல்.
***
வேதத்தின் கண் – உபநிஷத்துக்கள்
ஆசை வைத்துக் கலக்க மோகம் உற்றுத் துயர்க்குள் ஆகி
மெத்தக் களைத்து உள் அழியாமே … ஆசை வைத்து, கலக்கும்
மோகத்தைக் கொண்டு, துயரத்துக்கு உள்ளாகி மிகவும் சோர்ந்து உள்ளம் குலைந்து போகாமல்,
ஆரணத்துக் கண் நத்து நாண் மலர்ப் பொன் பதத்தை
யான் வழுத்திச் சுகிக்க அருள்வாயே … வேதத்தின் கண் விரும்பிப் போற்றும் புது மலர் அணிந்துள்ள அழகிய திருவடியை நான் போற்றிச் சுகம் பெற அருள் புரிவாயாக.
***

14 லோகங்கள், 7 மலைகள், 7 கடல்கள்
தருக்கிய வேதன் சிறைப் பட நாளும் சதுர்த் தச
லோகங்களும் வாழச் சமுத்திரம் ஏழும் குலக் கிரி ஏழும்
சளப்பட மாவும் தனி வீழ … செருக்கு மிக்க, வேதம் வல்ல பிரமன்
சிறையில் அடைபடவும், நாள்தோறும் பதினான்கு உலகங்களும் வாழும்படியும், ஏழு கடல்களும் சிறந்த ஏழு மலைகளும் துன்பப்படவும், மாமரமாகிய சூரனும் தனித்து விழவும்,
திருக் கையில் வேல் ஒன்று எடுத்து அமர் ஆடும்
செருக்கு மயூரம் தனில் வாழ்வே … அழகிய கைகளில் ஒப்பற்ற
வேலாயுதத்தை எடுத்து போர் செய்தவனே, களிப்புற்ற மயில் ஏறும் செல்வமே,
சிறப்பொடு ஞானத் தமிழ் த்ரய(ம்) நீடும் திருத்தணி
மேவும் பெருமாளே. … சிறப்புற்ற ஞானமும், முத்தமிழும் விரிவாக விளங்கும் திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே.
* கீழ் உலகங்கள் ஏழு:
அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், ரசாதலம், பாதாளம்.
** மேல் உலகங்கள் ஏழு:
பூலோகம், புவலோகம், சுவலோகம், ஜனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்திய லோகம்.
***
ஏழு கடல்கள்
உப்புதேன் மதுஒண் தயிர் பால் கரும்பு
அப்புத்தான் என்று உரைத்தன ஆழிகள்
துப்புப்போல் குருதிப் புனல் சுற்றலால்
தப்பிற்று அவ் உரை இன்று ஓர் தனிவினால்
-யுத்த காண்டம், மூல பல வதைப்படலம்
பொருள்
பவழம் போன்று சிவந்த உதிர நீர், எங்கும் சூழ்ந்ததால், உப்பு, தேன், நெய், தயிர், பால், கரும்புச் சாறு,சுத்த நீர் என்று பிரிந்து ஏழு கடல்கள் என்று கூறப்படும் பெயர் மறைந்து, எல்லாக் கடல்களுமே உதிரக் கடல் என்று கூறும்படி ஆயின.ஸம்ஸ்க்ருதத்தில் இவற்றை லவண (உப்பு), க்ஷீர (பால்), க்ருத (நெய்), ததி (தயிர்), சுரா (மது), இக்ஷு (கரும்புச் சாறு), ஜல (தண்ணீர்) சாகரங்கள் என்பர்
***


ஆழ்வார் பாடலில் ஏழு கடல்கள்
உவர் நீர், தேன்/மது, நன்னீர், பால், தயிர், நெய், கரும்புச் சாறு
உப்பு, தேன், மது, ஒண் தயிர், பால், கரும்பு,
அப்புத்தான் என்று உரைத்தன ஆழிகள்
துப்புப்போல் குருதிப் புனல் சுற்றலால்,
தப்பிற்று அவ் உரை, இன்று ஓர் தனுவினால்.
***


ஏழு மலைகள்
இமயம்/கயிலை, மந்த்ரம், விந்தியம், நிடதம், ஹேமகூடம், நீலம், கந்தமாதனம்
***
ஐந்து வகை தாள வாத்தியங்கள்
கொக்கரை சச்சரி மத்தளி ஒத்து இடக்கை முழக்கு ஒலி ஆல …
கொக்கரை, சச்சரி, மத்தளி, ஒத்து, இடக்கை ஆகிய மேளவாத்தியங்கள் முழங்கும் ஒலி ஒலிக்க,
கொக்கு இறகு அக்கு அர மத்தம் அணிக்கு அருள் குத்த(ம்)
தணிக் குமரேசா … கொக்கின் இறகு, எலும்பு, பாம்பு, ஊமத்தம் பூ
இவைகளை (சடையில்) அணிந்த சிவபெருமானுக்கு, ரகசிய
உபதேசத்தை அருளிய திருத்தணிகை மலைக் குமரேசனே,
***
புஸ்தகப் பித்தர்கள் மீது தாக்குதல்
பொற்பதத்தி னைத் துதித்து நற்பதத்திலுற்ற பத்தர் … உன்
அழகிய பாதங்களைத் துதித்து உயர்ந்த பதவியை அடைந்த பக்தர்களுடைய
பொற்பு உரைத்து நெக்கு உருக்க அறியாதே … சிறப்பினை
எடுத்துரைத்து உள்ளம் நெகிழ்ந்துருகத் தெரியாமலும்,
புத்தகப் பிதற்றை விட்டு வித்தகத்து உனைத்துதிக்க …
புத்தகத்தைக் கற்று அவற்றைப் பிதற்றுவதை விட்டு, ஞானத்தால்
உன்னைத் துதித்திட
புத்தியிற்கலக்க மற்று நினையாதே … கலக்கமற்ற புத்தியுடன்
உன்னை நினையாமலும்,
முற்படத்தலத்துதித்து பிற்படைத்த கிர்த்ய முற்றி … இந்தப்
பூமியில் பிறத்தலில் நான் முற்பட்டவனாகி, பின்னர் இங்கு நான் செய்யும் அக்ரமமான செயல்கள் நிரம்பி,
முற்கடைத் தவித்து நித்தம் உழல்வேனை … பிறருடைய
வாசல்களின் முன் நின்று தவித்து தினமும் அலைகின்ற என்னை,
முட்ட இக் கடைப்பிறப்பி னுட் கிடப்பதைத் தவிர்த்து …
அடியோடு இந்த இழிவான பிறப்பினுள் விழுந்து கிடப்பதிலிருந்தும் நீக்கி,
முத்தி சற்று எனக்களிப்பது ஒருநாளே … மோக்ஷ இன்பத்தை
சிறிது நீ எனக்கு அளித்தருளும் ஒரு பாக்கிய நாள் கிடைக்குமா?
****
32 அறங்களின் பட்டியல்
புகைத்த அழலைக் கொ(ண்)டு திரி புரம் எரி பட
நகைத்தவருக்கு இடம் உறைபவள் வலை மகள் பொருப்பில்
இமக் கிரி பதி பெறும் இமையவள் அபிராமி … புகை தரும்
நெருப்பினால் முப்புரங்கள் எரிபட்டு அழியும்படி சிரித்தவருடைய
இடது பாகத்தில் வீற்றிருப்பவள், வலைஞர் மகளாக* (மீனவப்
பெண்ணாகத்) தோன்றியவள், மலைகளுள் சிறந்த இமயமலை
அரசன் பெற்ற இமயவல்லி, அபிராமி,
பொது உற்று திமித்திமி நடம் இடு(ம்) பகிரதி எழுத்து அறி
ருத்திரி பகவதி கவுரி கை பொருள் பயனுக்கு உரை அடுகிய
சமைபவள் அமுதாக செகத்தை அகட்டு இடு நெடியவர்
கடையவள் … அம்பலத்தில் திமித்திமி என நடனம் செய்யும் தேவி,
இலக்கணங்கள் அறிந்துள்ள ருத்திரன் தேவி, பகவதி, கெளரி,
ஒழுங்காக சொல்லும் பொருளும் போலச் சிவத்தோடு கலந்திட்டு
நிற்பவள், அமுதுருண்டை போல பூமியை வயிற்றில் அடக்கிய
நெடியோனாகிய திருமாலுக்குத் தங்கை,
அறத்தை வளர்த்திடு பர சிவை குலவதி திறத் தமிழைத்
தரு பழையவள் அருளிய சிறியோனே … (காஞ்சியில் காமாட்சி
தேவியாக முப்பத்திரண்டு)** அறங்களையும் வளர்த்த பர சிவை,
குலச்சிறப்பமைந்தவள், (இயல், இசை, நாடகம் என்ற) முன்று
வகையான தமிழைத் தந்த முன்னைப் பழம் பொருளான உமை
அருளிய குழந்தையே,
செருக்கும் அரக்கர்கள் பொடி பட வடிவுளகரத்தில் அயில்
கொடு பொருது இமையவர் பணி திருத்தணி பொன் பதி
தனில் மயில் நடவிய பெருமாளே. … கர்வம் கொண்ட அசுரர்கள்
பொடிபட்டு விழ, அழகிய கையில் வேல் கொண்டு சண்டை செய்து,
தேவர்கள் பணிந்து போற்றும் திருத்தணிகையாகிய அழகிய தலத்தில்மயில் மீது நடனமிடும் பெருமாளே.
திருவிளையாடல் புராணக் கதை
* மறைப் பொருளைத் தேவிக்கு உபதேசித்த போது, தேவியார் கவனக்குறைவாக இருப்பதைக் கண்ட சிவபெருமான் நீ மீன் பிடிக்கும் வலைஞருக்கு மகளாகுக. அப்போது உன்னை மணப்பேன் எனச் சபித்தார். மீனவள் வலைஞரால் வளர்க்கப்பட்டு வந்தாள். சிவன் தேவிக்கு உபதேசித்த போது முருகனையும், கணபதியையும் உள்ளே விட்ட காரணத்தால் நந்தி தேவரும் சுறா மீனாக ஆகுமாறு சபிக்கப்பட்டார். இந்தச் சுறாமீன் வலையில் அகப்படாது பல
இடர்களைச் செய்ததால் வலைஞர் அரசன் மீனைப் டிப்பவர்களுக்குத் தன் பெண்ணை மணம் செய்விப்பேன் என அறிவித்தான். சிவபெருமான் வலைஞன் போல வந்து மீனைப் பிடித்துத் தேவியை மணந்தார்.
***
** பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு:
சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு, பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல், அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல், நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய்,ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல், தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.
—subham—
Tags- 32 அறங்கள், 14 உலகங்கள், 14 லோகங்கள் 7 மலைகள், 7 கடல்கள், அஷ்டமா சித்திகள், எட்டு வகை அபூர்வ சக்திகள், திருவிளையாடல் புராணம், சுறாமீன் கதை, திருப்புகழ், புஸ்தகப் பித்தர்கள் Part 19 , அருணகிரிநாதர் அரிய செய்திகள் , சொல் அழகு, பொருள் வளம்