Post No. 15,425
Date uploaded in Sydney, Australia – 15 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
21திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 21
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 21

திருப்பதி மலை மீது முருகன் இருக்கிறார், பஞ்சாப்பில் வயிரவி வனத்தில் முருகன் கோவில் உள்ளது , முருகன் கைகளில் மாதுளம்பழம் என்றெல்லாம் புதிர்போட்ட அருணகிரிநாதர் மேலும் ஒரு புதிர் போடுகிறார். சரஸ்வதியின் சகோதரன் முருகன்!
சகலமும் முதலாகிய அறுபதி நிலைமேவிய தட மயில் தனில்
ஏறிய பெருமாளே. … சகல தலங்களுக்கும் முதலாக விளங்கும்
ஆறு திருப்பதியில்* வீற்றிருக்கும், பெரிய மயில் மேல் ஏறிய, பெருமாளே.
* ஆறு திருப்பதிகள் (படை வீடுகள்):
திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன்குடி,
திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை என்பன. இத்தலங்கள் திருமுருகாற்றுப்படையில் கூறப்பட்ட முருகவேளின் ஆறு படை வீடுகள்.
ஆற்றுப்படை வீடு என்பது ஆறுபடை வீடு என மருவி நின்றது.
ஆற்றுப்படை என்ற சொல் சங்க இலக்கிய நூல்களான திருமுருகாற்றுப்படை , சிறுபாணாற்றுப்படை பெரும் பாணாற்றுப்படை முதலிய நூல்களிலும் இருப்பதால் ஆற்றுப்படை வீடுகள் என்பதே சரி.
***
சரஸ்வதியின் சகோதரன் முருகன்!
சாரதியுத்தமி துணைவ முருகோனே … சரஸ்வதி தேவியாம்
உத்தமியின் சகோதரனே*, முருகனே,
ஆனதிருப் பதிகம் அருள் இளையோனே … திருஞானசம்பந்தராக
வந்து பல தேவாரத் திருப்பதிகங்களை அருளிச் செய்த இளம்பூரணனே,
ஆறுதிருப்பதியில் வளர் பெருமாளே. … ஆறு படை வீட்டுத்**
திருத்தலங்களில் வளர்கின்ற பெருமாளே.
* முருகனுக்கு பிரமன் மாமன் மகனாதலால் மைத்துனன் உறவு.
எனவே சரஸ்வதி சகோதரி உறவு.
***
தக்ஷயாகத்தில் தண்டிக்கப்பட்ட தேவர்கள் யார் யார் ?
கதி பொருந்தக் கற்பித்து நடத்தும் கனல் தலம் புக்கு …
(வேள்வி இயற்ற வேண்டிய) நியதிக்குத் தக்க ஏற்பாடு செய்து
(தக்ஷன்) வேள்வி நடத்திய அக்கினி குண்டங்கள் இருந்த யாக
சாலையுள் நுழைந்து,
சக்ரம் எடுக்கும் கடவுளும் பத்ம தச்சனும் உட்கும் படி
மோதிக் கதிரவன் பல் குற்றி … சக்கரம் ஏந்தும் கடவுளாகியதிருமாலும், தாமரையில் வீற்றிருக்கும் படைத்தல் தொழில் புரியும் பிரமனும் அச்சம் உறும்படி தாக்கியும், சூரியனின் பற்களைக் குத்தியும்,
குயிலைத் திண் சிறகு அரிந்து எட்டுத் திக்கர் வகுக்கும்
கடகமும் தட்டுப் பட்டு ஒழியக் கொன்ற … இந்திரனாம் குயிலின்
திண்ணிய சிறகை வெட்டியும், அஷ்ட திக்குப் பாலகர்களான இந்திரன்,அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோர் அணி வகுத்த சேனைகளும் நிலை குலைந்து அழிந்து போகும்படிக் கொன்றும்,
அபிராமி பதிவ்ரதம் பற்றப் பெற்ற மகப் பெண் பரிவு
ஒழிந்து … பேரழகியும், பதிவிரதத் தன்மையைக் கைப்பிடிக்கப் பெற்ற
இன்பப் பெண்ணும், ஆகிய தாக்ஷாயணியின் (தன்னையும் தன் கணவன் சிவனையும் தக்ஷன் புறக்கணித்தான் என்னும்) வருத்தம் தீரவும்,
அக்கிக்கு உட்படு தக்கன் பரிபவம் பட்டுக் கெட்டு ஒழிய …
நெருப்பில் விழப் பெற்ற தக்ஷன் அவமானப்பட்டு கெட்டு ஒழியவும்,
தன் செ(வ்)வி போய் அப் பனவி பங்கப்பட்டு அப்படி
வெட்கும்படி முனிந்து … தனது அழகு போய் அந்தப் பார்ப்பனியாகிய
சரஸ்வதி (மூக்கை இழந்து) பங்கம் அடைந்து வெட்கும்படியாகவும்,
கோபித்து
அற்றைக் கொற்றம் விளைக்கும் பரமர் வந்திக்கக் கச்சியில்
நிற்கும் பெருமாளே. … அன்று இறுதியில் வெற்றி பெற்ற சிவ
பெருமான் வணங்க, காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
***
தக்ஷயாகத்தில் தண்டிக்கப்பட்ட தேவர்கள் அனைவரையும் பட்டியலிட்டுக்கூறுவது இப்பாடல்.
தக்ஷயாகத்தில் (தக்ஷன் நடத்திய வேள்வி) சிவபெருமானை அவமதித்த காரணத்தால், வீரபத்திரரால் தண்டிக்கப்பட்ட முக்கிய தேவர்கள் மற்றும் முனிவர்கள் பின்வருமாறு:
தக்ஷன்: அவனது தலை துண்டிக்கப்பட்டு, வேள்வித் தீயிலேயே எரிக்கப்பட்டது. பின்னர் ஆட்டுத் தலை பொருத்தப்பட்டது.
பாகன் (Bhaga): இவனுடைய கண்கள் தோண்டி எடுக்கப்பட்டன.
பூஷன் (Pushan): சூரியன் – இவனுடைய பற்கள் பிடுங்கப்பட்டன.
இந்திரன்: வீரபத்திரரால் மிதிக்கப்பட்டு, கடுமையாகத் தாக்கப்பட்டான்.
சந்திரன்: கடுமையாகத் தாக்கப்பட்டார்.
பிருகு முனிவர்: இவனுடைய தாடி மற்றும் மீசை பிடுங்கப்பட்டன.
அக்கினி தேவன்: இவனுடைய கைகள் வெட்டப்பட்டன.
சரஸ்வதி தேவி: மூக்கின் நுனி வெட்டப்பட்டது.
மேலும், யாகத்தில் கலந்து கொண்ட பிற தேவர்கள், முனிவர்கள் மற்றும் தக்ஷனின் படைகள் வீரபத்திரரால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.
***
குமணன் பற்றி
குமரன் என்று அர்ச்சித்து அப்படி செப்பும் கவி மொழிந்து
அத்தைக் கற்று அற உற்றும் … குமரன் என்று பூஜித்து, அத்தகைய
பாடல்களைச் சொல்லும் கவிகளைப் பாடி, அவற்றை நன்றாகப் படித்து அப்பாடல்களில் முற்றும் ஈடுபட்டும்,
புவியோர் போய் குனகியும் கைக்குக் கற்பகம் ஒப்பென்று
அனகன் என்று இச்சைப் பட்டது அளிக்கும் குமணன் என்று
ஒப்பிட்டு … உலகோர் அறியாமையால் (செல்வந்தரிடம்) போய் கொஞ்சிப் பேசியும், உமது கைக்கு (கேட்டதைத் தரும்) கற்பகத் தரு தான் நிகரானது என்றும், நீர் யாதொரு பாவமும் இல்லாதவர் என்றும், யாசிப்போர் விரும்பியதை எல்லாம் கொடுக்கும் குமண* வள்ளலே என்றும் உவமைகள் கூறி,
****
குமணன் கதை
கேட்பாருக்கு இல்லை என்னாமல், கொடுக்கும் வள்ளல்களுள் ஒருவன் ‘குமணன்’. கொடையில் மஹாபாரத கர்னணனுக்கு நிகரானவன். அவனுக்கு ஒரு சகோதரன் இருந்தான். அவன் பெயர் இளங்குமணன். அவன் கல்வியறிவு இல்லாத மூடன். அவனுக்குப் பல கெட்ட நண்பர்கள் இருந்தார்கள். இளங்குமணன் தருமத்தின் பெருமையை அறியாத மூடனாகையால், தன் அண்ணன் மீது பகைமை கொண்டான்; குமணனைக் கொன்று விடவும் யோசனை செய்தான். இதனை அறிந்த குமணன், நள்ளிருளில், காட்டிற்கு ஓடி விட்டான்.
ஒருகால், பரிசில் வேண்டிவந்த பெருந்தலைச் சாத்தனார் அவனைக் காட்டிற் கண்டு பாடிப் பரவினர். புலவருக்கு கொடுப்பதற்கு கையில் காசு பணம் ஏதுமில்லை. அவன், தன் வாளை புலவர் கையில் தந்து தன் தலையைக் கொய்துகொண்டு தன் தம்பிக்குக் காட்டி, வேண்டும் பொருள் பெற்றுச் செல்லுமாறு வேண்டினன். ஏனெனில் இளங் குமணன் தன் தமையனது தலையைக் கொண்டு வருவார்க்கு ஏராளமான பரிசு கொடுப்பதாகப் அறிவித்து இருந்தான் .
அவருக்கு மனதில் ஒரு யோசனை பளிச்சிட்டது; ஒரு செவ்வாழைக் கிழங்கை எடுத்துக் குமணன் தலை போலச் செய்தார்; அதனைத் துணியில் சுற்றி எடுத்துக் கொண்டு இளங்குமணனிடம் சென்றார். தன் சகோதரன் தலையை இளங்குமணன் கண்டான். கண்டதும், கண்களிலிருந்து நீர் அருவி போலப் பாய்ந்தது. புலவர் கொண்டு வந்தது பொய்த் தலை என்பது விளங்கியதும், அவன் அப்புலவரை நோக்கி, ‘ஐய, என் அண்ணனை உயிருடன் நீர் கொண்டு வந்தால், உமக்கு இப்போது சொன்னபொருளைப்போல இரண்டு மடங்கு தருவேன்,’ என்று கூறினன்.
கவிவாணர் உடனே காட்டிற்கு ஓடினார். குமண வள்ளலிடம் நடந்ததை நவின்றார். குமணன் பெருங் களிப்படைந்தான். புலவர் குமணனை அழைத்துச் சென்றார். இளங்குமணன் தன் அண்ணன் கால்களில் வீழ்ந்தான்; தான் செய்த மூடச் செயலுக்காகத் தன்னை மன்னிக்கும்படி வேண்டினான்; அரசை அண்ணனுக்கே தந்தான். புலவருக்கு இரு மடங்கு பரிசு கிடைத்தது!
***
பிள்ளையார் சாப்பிடும் பொருள்களின் பட்டியல்
கனப் பெரும் தொப்பைக்கு எள் பொரி அப்பம் கனி கிழங்கு
இக்கு … கனத்த பெரிய வயிற்றில் எள், பொரி, அப்பம், பழம், கிழங்கு, கரும்பு இவைகளையும்,
சர்க்கரை முக்கண் கடலை கண்டு அப்பி … சர்க்கரை, தேங்காய்,கடலை, கற்கண்டு இவைகளையும் வாரி உண்டு,
பிட்டொடு மொக்கும் திரு வாயன் … பிட்டுடன் விழுங்கும் திரு
வாயை உடையவர்,
கவள(ம்) துங்கக் கை கற்பக(ம்) முக்கண் … சோற்றுத் திரளை
உண்ணும் சிறந்த துதிக்கையை உடைய கற்பக விநாயகர் (கற்பகத்தரு போல கேட்டதைக் கொடுப்பவர்), முக்கண்ணர்,
திகழு(ம்) நம் கொற்றத்து ஒற்றை மருப்பன் கரி முகன் …
விளங்கும் நமது வீரம் வாய்ந்த ஒற்றைக் கொம்பர், யானை முகத்தினர்,
சித்ரப் பொன் புகர் வெற்பன் தனை ஈனும் பனவி … அழகிய,
பொலிவுள்ள (மத்தகத்தில்) புள்ளிகளை உடைய மலை போன்ற
கணபதியைப் பெற்ற அந்தணி,
ஒன்று எட்டுச் சக்ரத் தலப் பெண் … (1+8) ஒன்பது கோணங்களை உடைய சக்ரத்தில் ( நவாவரணத்தில் ) வீற்றிருக்கும் பெண்,
கவுரி செம் பொன் பட்டுத் தரி அப்பெண் … கெளரி, செவ்விய
அழகிய பட்டாலாகிய மேலாடை அணிந்துள்ள அந்தப் பெண்,
பழய அண்டத்தைப் பெற்ற மடப் பெண் … பழையவளும்,
அண்டங்களைப் பெற்றவளுமாகிய இளம் பெண்,
பணிவாரை பவ தரங்கத்தைத் தப்ப நிறுத்தும் பவதி …
தன்னைப் பணிபவர்களுடைய பிறப்பு என்னும் அலை கடலை விலக்கி நிறுத்தும் பகவதி (பார்வதி),
கம்பர்க்குப் புக்கவள் பக்கம் பயில் … ஏகாம்பர நாதரைக்
கணவராக அடைந்தவள் ஆகிய உமா தேவிக்குப் பக்கத்தில் அமர்ந்து,
வரம் பெற்றுக் கச்சியில் நிற்கும் பெருமாளே. … வரத்தைப்
பெற்று**, காஞ்சீபுரத்தில் நின்றருளும் பெருமாளே.
** தந்தை சொல்லி அனுப்பியும் பிரமனைச் சிறையினின்று விடாது, பின்னர் அவர் நேரில் வந்து சொல்லிய பின் பிரமனை முருகன் விடுத்தார். இந்த குற்றம் நீங்க, முருகவேள் காஞ்சீபுரத்தில் உள்ள குமரக் கோட்டத்தில் தவம் புரிந்து,
தோஷம் நீங்கி வரம் பெற்றார்.
****
தேவியின் நவாவர்ணம் என்றால் என்ன?
தேவியின் நவாவர்ணம் (Navavarana) என்பது ஸ்ரீ லலிதா மகா திரிபுரசுந்தரி அம்மனை, ஸ்ரீ சக்கரம் (ஸ்ரீ யந்திரம்) வடிவில், ஒன்பது வெவ்வேறு அடுக்குகளில் (ஆவரணங்கள்) வைத்து வழிபடும் மிக உயரிய தந்திர வழிபாடாகும்.
‘நவ’ என்றால் ஒன்பது, ‘ஆவரணம்’ என்றால் அடுக்கு, திரை அல்லது சுற்று என்று பொருள்.
நவாவரண பூஜையின் சிறப்பம்சங்கள்:
ஸ்ரீ சக்கர வழிபாட்டின் உச்சம்: இந்த வழிபாடு ஸ்ரீ சக்கரத்தின் மையத்தில் இருக்கும் ‘பிந்து’வை அடைவதை நோக்கமாகக் கொண்டது, இதுவே பரசிவமும் சக்தியும் ஒன்றிணைந்து இருக்கும் இடம்.
ஒன்பது அடுக்குகள்: ஸ்ரீ சக்கரம் 9 ஆவரணங்களைக் கொண்டது. வெளியே இருந்து உள்ளே செல்ல செல்ல, தேவியின் வெவ்வேறு சக்திகள் (தேவதைகள், யோகினிகள்) மற்றும் ஒன்பது சித்தி தேவதைகள் வழிபடப்படுகிறார்கள்.
பரிவார தேவதைகள்: ஒவ்வொரு ஆவரணத்திலும் குறிப்பிட்ட முத்ரா தேவதைகள், யோகினிகள் மற்றும் பரிவார சக்திகள் உள்ளனர்.
குண்டலினி யோகத்துடன் தொடர்பு: இந்த வழிபாடு உடலிலேயே ஸ்ரீ புரத்தை (தேவியின் இருப்பிடம்) உருவாக்கி, குண்டலினி சக்தியை மூலாதாரத்தில் இருந்து சகஸ்ராரத்திற்கு உயர்த்துவதற்கு சமமாகக் கருதப்படுகிறது.
முத்து சுவாமி தீட்சிதரின் நவாவர்ண கீர்த்தனைகள்

முத்துசுவாமி தீட்சிதர் (1776-1835) இயற்றிய நவாவர்ண கீர்த்தனைகள், திருவாரூர் கமலாம்பாளைப் போற்றும் ஒன்பது மிகச்சிறந்த சமஸ்கிருத பாடல்களாகும். இவை தந்திர சாஸ்திரத்தின் ஸ்ரீ சக்ர வழிபாட்டு முறையை அடிப்படையாகக் கொண்டவை. கமலாம்பா நவாவர்ணக் கீர்த்தனைகள், நவகிரகக் கீர்த்தனைகள், மற்றும் பல்வேறு ராகங்களில் அமைந்த அபூர்வமான கிருதிகளைப் படைத்தவர். இந்த பாடல்கள் அனைத்தும் தியானம் மற்றும் தீட்சிதரின் ஆத்மார்த்தமான பக்தி உணர்வை வெளிப்படுத்துகின்றன.
முக்கிய நவாவர்ண கீர்த்தனைகள் (கமலாம்பா நவாவர்ணங்கள்):
முதல் ஆவரணம் (பூபுர சக்கரம்): கமலாம்பா ஸம்ரக்ஷது மாம் (ராகம்: ஆனந்தபைரவி)
இரண்டாம் ஆவரணம் (தசதள பத்மம்): கமலாம்பாம் பஜரே (ராகம்: கல்யாணி)
மூன்றாம் ஆவரணம் (அஷ்டதள பத்மம்): ஸ்ரீ கமலாம்பிகாயா (ராகம்: சங்கராபரணம்)
நான்காம் ஆவரணம் (சதுர்தசாரம்): கமலாம்பிகாயை கநகம் (ராகம்: காம்போஜி)
ஐந்தாம் ஆவரணம் (பஹர்தசாரம்): ஸ்ரீ கமலாம்பிகாயா (ராகம்: பைரவி)
ஆறாம் ஆவரணம் (அஷ்டதளம்): கமலாம்பிகாயா தவ (ராகம்: புன்னாகவராளி)
ஏழாம் ஆவரணம் (ஏகதளம்): ஸ்ரீ கமலாம்பிகாயாம் (ராகம்: சகானா)
எட்டாம் ஆவரணம் (திரிகோணம்): ஸ்ரீ கமலாம்பிகே (ராகம்: கண்டா)
ஒன்பதாம் ஆவரணம் (பிந்து): ஸ்ரீ கமலாம்பா ஜயஜய (ராகம்: ஆஹிரி)
இந்தக் கீர்த்தனைகள் அனைத்தும் இசை மற்றும் தத்துவத்தின் உச்சமாக, செம்மங்குடி ஸ்ரீநிவாச அய்யர் போன்றோரின் ஸ்வர அமைப்புகளுடன் வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
***
சிவனுடைய ஆபரணங்கள் பட்டியல் !
பிறை கரந்தை கொத்து பணி மத்தம் … சந்திரன், திருநீற்றுப்
பச்சைக் கொத்துக்கள், பாம்பு, ஊமத்தம் மலர்,
தலை எலும்பு அப்பு கொக்கின் இறகு அக்கம் … கபால எலும்பு,
கங்கை நீர், கொக்கின் இறகு, ருத்ராக்ஷ மாலை
பிரமன் அன்று எட்டற்கு அற்ற திரு கொன்றையும் வேணி …
பிரமன் முன்பு எட்டுதற்கு அரிதாக இருந்த அழகிய கொன்றை இவை எல்லாம் அணிந்த சடை
To be continued………………………..
Tags- சரஸ்வதியின் சகோதரன் முருகன்! அருணகிரிநாதர் அரிய செய்திகள் Part 21 , நவாவர்ணம் , முத்து சுவாமி தீட்சிதர், குமணன் கதை , வள்ளல்,