திருப்புகழில் திருமால் அவதாரங்கள்! விஷ்ணுவை விநாயகர் அடக்கிய கதை! -22 (Post No.15,428)


Written by London Swaminathan

Post No. 15,428

Date uploaded in Sydney, Australia –  16 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

22திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 22

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 22

திருப்புகழில் திருமால் அவதாரங்கள்!

குறியவன் செப்பப் பட்டஎவர்க்கும் பெரியவன் … வாமன

வடிவமாகிக் குறுகி, ஆனால் சொல்லப்படும் யாவரினும் பெரியவர்

ஆனவரும்,

கற்பிக்கப்படு சுக்ரன் குலைகுலைந்து உட்கக் சத்யமிழற்றுஞ்

சிறுபாலன் … கல்வி கற்றுக் கொடுக்கவந்த சுக்கிராச்சாரியார் உள்ளம் நடுநடுங்கி அஞ்சும்படி, உண்மையையே உரைத்த சிறு குழந்தை பிரகலாதனின்

குதலையின் சொற்குத் தர்க்கமு ரைக்குங் … மழலைச் சொல்லிற்கு

எதிர்வாதம் பேசிய

கனகன் அங்கத்தில் குத்தி … ஹிரண்யனுடைய உடலைக் குத்தி,

நிணச்செங் குடர் பிடுங்கி … மாமிசம் நிறைந்த சிவந்த குடலைப்

பிடுங்கி,

திக்குற்ற முகச்சிங்க முராரி … எட்டுத் திசைகளிலும் பிடறி மயிர்

பறக்கும் சிங்க முகத்தை உடைய நரசிம்மரும், முரன் என்ற

அரக்கனைக் கொன்ற முராரியும்,

பொறிவிடுந் துத்திக் கட்செவி யிற்கண் … ஒளிவீசும் படப்

பொறிகளை உடைய பாம்பு ஆதிசேஷன் மீது

துயில்கொளுஞ் சக்ரக் கைக்கிரி … துயில்பவரும், சக்ராயுதத்தைக்

கையிலே தாங்கும் மலை போன்றவரும்,

சுத்தம் புயலெனும் பொற்புப் பெற்றநி றத்தன் … தூய மேகம்

போன்ற அழகிய நிறத்தை உடையவரும்,

ஜகதாதை … உலகுக்கெல்லாம் தந்தையும்,

புனிதசங்கத்துக் கைத்தல நிர்த்தன் … பாஞ்ச ஜன்யம் என்ற

பரிசுத்தமான சங்கைக் கரத்திலே கொண்டவரும், (காளிங்கன் என்ற

பாம்பின் தலையில்) நடனமாடியவரும்,

பழையசந்தத்தைப் பெற்றமடப்பெண் … பழமையான (மோகினி)

வடிவத்தைப் பெற்று இளம்பெண்ணாக வந்தவரும்,

புகலுகொண் டற்குச் சித்தியளிக்கும் பெருமாளே. … புகழப்

பெறும் நீல மேகம் போன்ற நிறத்தினருமாகிய திருமாலுக்கு வீடு

பேற்றினைத்* தந்தருளிய பெருமாளே.

காஞ்சியில் ‘திருமேற்றளி’ என்ற இடத்தில் திருமால் சிவசாரூபம் பெற வேண்டி, நீண்ட தவம் செய்தார். திருஞானசம்பந்தர் உருவில் முருகன் அங்கு வந்து முகுந்தனை லிங்க வடிவமாக்கினார் – காஞ்சிப் புராணம்.

****


ஏழிசைகள் பற்றி

ப்ரிதி ஒழிந்து ஒக்கக் கைக்கிளை துத்தம் குரல் ஆதி பிரிவில்

கண்டு இக்கப்பட்ட உருட்டும் கமுகமும் … விருப்பம் முழுதும்

ஒழிந்து ஓர் இசையில் தான் அதிக விருப்பம் என்று இல்லாமல் எல்லா

இசை வகைகளையும், கைக்கிளை, துத்தம்* முதலான இசைப் பிரிவுகளில் பகிர்க்கப்பட்ட, புரளும் குரலிசையும், ஸ்வர பேதமும்,

சிற்பச் சித்ரம் உருக்கும் பிரதி அண்டத்தைப் பெற்று அருள்

சிற்று உந்தியும் … சிற்ப நூல்களில் சொல்லப்பட்ட அழகிய உருக்கமான நுண்கலையும், (இந்த ப்ரபஞ்சத்தின்) ஒவ்வொரு அண்டத்தையும்  பெற்றருளியதுமான சிறிய வயிறும்,

நீலக் கரிய கொண்டற்கு ஒப்பித்த கதுப்பும் … இருண்ட கறுத்த

மேகத்துக்கு நிகரான கூந்தலும்,

திலகமும் செம் பொன் பட்டமும் முத்தின் கன வடம்

கட்டப்பட்ட கழுத்தும் … நெற்றிப் பொட்டும், செம் பொன் பட்டமும்,

முத்தின் சிறந்த மாலை கட்டப்பட்ட கழுத்தும்,

திருவான கருணையும் சுத்தப் பச்சை வனப்பும் … தெய்வத்

தன்மை வாய்ந்த கருணையும், சுத்தமான பச்சை நிற அழகும் உள்ளவளும்,

கருதும் அன்பர்க்குச் சித்தி அளிக்கும் கவுரி அம்பைக்கு புத்ர

எவர்க்கும் பெருமாளே. … தியானிக்கும் அடியார்களுக்கு வீடு பேற்றை அளிக்கும் அம்பிகையுமான கெளரி (பார்வதி) தேவிக்கு மகனே, எல்லார்க்கும் பெருமாளே.

தமிழின் ஏழிசைகள்:

குரல் (ஷட்ஜம்), துத்தம் (ரிஷபம்), கைக்கிளை (காந்தாரம்), உழை (மத்திமம்), இளி (பஞ்சமம்), விளரி (தைவதம்), தாரம் (நிஷாதம்) என்பன.

ஒப்பிடுக

காரைக்கால் அம்மையார் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில் தமிழ் இசைக் கருவிகள் பட்டியலை ஒரே பாடலில் அழகாகக் கொடுத்திருக்கிறார்:

“ துத்தங்கைக் கிள்ளை விளரி தாரம்

உழைஇளி ஓசைபண் கெழும பாடிச்

சச்சரி கொக்கரை தக்கை யோடு

தகுணிதம் துந்துபி டாளம் வீணை

மத்தளம் கரடிகை வன்கை மென்றோல்

தமருகம் குடமுழா மொந்தை வாசித்து

அத்தனை விரவினோ டாடும் எங்கள்

அப்பன் இடம்திரு வாலங் காடே”

இதில் குரல், துத்தம், கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்பன ஏழு ஸ்வரங்களாகும்.

சச்சரி,கொக்கரை, தக்கை, தகுணிதம் கரடிகை, வங்கை, மெந்தோல் ,டமருகம், குடமுழா என்பன தோல் கருவிகள். அல்லது தாளம் எழுப்பும் கருவிகள். துந்துபி ஊதும் கருவி.

***

பார்வதியும் பரமசிவனும் ஒன்றே (அர்த்தநாரி)

குலசயிலத்துப் பிறந்த பெண்கொடி … சிறந்த மலையாகிய

இமயமலைக்குப் பிறந்த கொடி போன்றவள்,

உலகடை யப்பெற் றவுந்தி … உலகம் முழுவதையும் ஈன்றெடுத்த

திருவயிற்றை உடையவள்,

அந்தணி … அழகிய தட்பத்தை (காருண்யத்தை) உடையவள்,

குறைவற முப்பத்திரண்டு அறம்புரிகின்றபேதை …

குறைவில்லாமல் முப்பத்திரண்டு அறங்களையும்* முறையே புரியும்

பாலாம்பிகை,

குணதரி சக்ரப் ப்ரசண்ட சங்கரி … நற்குணங்களைத் தரித்தவள்,

மந்திர யந்திரத்தில் வீரத்துடன் வீற்றிருக்கும் சங்கரி,

கணபண ரத்நப் புயங்க கங்கணி … கூட்டமான படங்களையும்,

ரத்தினங்களையும் உள்ள சர்ப்பங்களைக் கைகளில் வளையல்களாகத் தரித்தவள்,

குவடு குனித்துப் புரஞ்சு டுஞ்சின வஞ்சி … மேரு மலையை

வில்லாக வளைத்து, திரிபுரத்தைச் சினத்துடன் எரித்த** வஞ்சிக் கொடி போன்றவள்,

நீலி கலப விசித்ரச் சிகண்டி … நீல நிறத்தினள், தோகை மயிலின்

அழகிய சாயலை உடையவள்,

சுந்தரி கடியவி டத்தைப் பொதிந்த கந்தரி … பேரழகிகொடிய

விஷத்தைக் கழுத்திலே பொதிந்தவள்**,

கருணைவி ழிக்கற்பகம் … கருணை பொழியும் விழிகளை உடையவள், கேட்டவரம் நல்கும் கற்பகத் தரு,

திகம்பரி யெங்களாயி … திசைகளையே ஆடைகளாய் உடைய எங்கள் தாய்,

கருதிய பத்தர்க்கிரங்கும் அம்பிகை … அவளை நினைத்த

பக்தர்களுக்கு கருணை புரியும் அம்பிகை,

சுருதிதுதிக்கப் படுந்த்ரியம்பகி … வேதங்களால் போற்றப்படும்

முக்கண்களை (சூரியன், சந்திரன், அக்னி) உடையவள்**,

கவுரிதிருக்கொட்டமர்ந்த … (இத்தனை பெருமைகளை உடைய)

கெளரியாகிய காமாக்ஷியின் கோயிலாகிய திருக்கோட்டத்தில்

(காஞ்சீபுரத்தில்) வீற்றிருப்போனே,

இந்திரர் தம்பிரானே. … தேவர்களுக்கெல்லாம் தலைவர்களான

இந்திரர்கள் வணங்கும் பெருமாளே.

** சிவபிரானைக் குறிக்கும் யல்களும் இயல்புகளும் இங்கு பார்வதி தேவிக்கும் பொருந்துவன. ஏனெனில் தேவி சிவனின் இடது பாகத்தில் இருப்பவள்.

***

விஷ்ணுவை விநாயகர் அடக்கிய கதை

பணம் பத்திக் கணத் துத்திப் படுக்கைக் கச்சபத்து இச்சைப்

படுக் கச்சிப் பதிச் சொக்கப் பெருமாளே. … படங்களின்

வரிசையையும், நெருங்கிய புள்ளிகளையும் உடைய ஆதிசேஷனை

படுக்கையாகக் கொண்ட, ஆமை உரு எடுத்ததிருமால் ஆசைப்பட்ட

இடமான* கச்சி நகரில் (காஞ்சீபுரத்தில்) உறையும் அழகிய பெருமாளே.

பாற்கடலைக் கடைந்த போது திருமால் கச்சபமாக (ஆமையாக) முதுகு கொடுத்துத் தாங்கிப் பின்னர் இறுமாப்பு அடைந்து கடலைக் கலக்கினார். அந்த ஆமையை விநாயகர் அடக்கி மடிவிக்கஅதன் ஓட்டைச் சிவ பெருமான் அணிந்தார். பின்னர் திருமால் குற்றம் தீர்ந்து காஞ்சியில் ஜோதிலிங்கத்தைப்

பூஜித்து அந்நகரில் விளங்கினார் – காஞ்சிப் புராணம்.

மேலும் ஒரு கதை !

புரத்தைச் சுட்டு எரித்துப் பற்றலர்க்குப் பொற் பதத் துய்ப்பை …

திரி புரங்களைச் சுட்டு எரித்து, திரிபுரங்களில் பற்று இல்லாமல் சிவவழிபாட்டில் இருந்த மூவர்க்கு* மேலான பதவி நுகர்ச்சியை

புணர்த்து அப்பித்தனைக் கற்பித்து அருள்வோனே … கூட்டி

வைத்த (அந்தப்) பித்தனாகிய சிவபெருமானுக்கு (குருவாய் நின்று

பிரணவப் பொருளை) ஓதுவித்து அருளியவனே,

செருக்கு அக் குக்கரைக் குத்திச் செருப் புக்குப் பிடித்து

எற்றி … அகந்தை கொண்ட அந்த நாய் போன்று இழிந்தோர்களாகியஅசுரர்களைக் குத்தியும் போரில் புகுந்து பிடித்து மோதியும், சினத்திட்டுச் சிதைத்திட்டுப் பொரும் வீரா … கோபித்து

அழியச் செய்தும் சண்டை செய்த வீரனே,

திருத்தத்தில் புகல் சுத்தத் தமிழ்ச் செப்புத் த்ரய …

பிழையில்லாமல் சொல்லப்படும் சுத்தமான இயல், இசை, நாடகம் என்று மூவகைகளால் ஓதப்படும் தமிழ் (விளங்கும்)

சித்ரத் திருக் கச்சிப் பதிச் சொக்கப் பெருமாளே. … சிறப்பு

வாய்ந்த மேன்மையான கச்சி என்னும் ஊரில் வாழும் அழகிய பெருமாளே.

வித்யுன்மாலிதாரகாட்சன்கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள் பொன்வெள்ளிஇரும்பு இவைகளால் ஆகிய திரிபுரங்கள் என்ற பறக்கும் பட்டணங்களைக் கொண்டு அனைவரின் மேலே விழுந்துத் துன்புறுத்தினர். ஆதலால் சிவபெருமான்

அவர்களை எரித்தபோதுசிவ வழிபாட்டால் மாளாது பிழைத்த மூவரில்இருவர் கோயில் காவலாளர் ஆனார்கள். மற்றவர் முழவு முழக்கும் பேற்றினை அடைந்தார்

– சுந்தரர் தேவாரம்.

—subham—

Tags– திருப்புகழில்திருமால் அவதாரங்கள்விஷ்ணு,  விநாயகர் அடக்கிய கதை அரிய செய்திகள் Part ௨௨,  சொல் அழகும்பொருள் வளமும்

Leave a comment

Leave a comment