20 ரி ரி ரி ரி ரி தேவியர் நாமங்கள்; திருப்புகழில் சொல் அழகும் பொருள் அழகும்! -27 (Post No.15,442)

Written by London Swaminathan

Post No. 15,442

Date uploaded in Sydney, Australia –  21 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 27

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 27

மூன்று சிவபக்த அசுரர்கள் கதை!

உருவு கரியது ஒர் கணை கொடு பணி பதி இருகு உதையும்

முடி தமனிய தநு உடன் … உருவம் கரியவனாகிய திருமாலை ஒப்பற்ற

அம்பாகவும், பாம்பு அரசனான வாசுகியை (வில்லின் முனைகளில்)

முடியப்படும் கயிறாகவும், பொன்னுருவ மேரு மலையை வில்லாகவும் கொண்டு,

உருளை இரு சுடர் வலவனும் அயன் என மறை பூணும்

உறுதிபடு சுர ரதமிசை அடி இட … சக்கரங்கள் சூரிய சந்திரர்

எனப்படும் சுடர்களாகவும், தேர்ப்பாகன் பிரமன் ஆகவும், வேதங்களாகின

குதிரைகள் பூட்டப்பட்ட திண்ணிய தேவர்களே தேர் ஆகவும்

வைத்துக்கொண்டு, (சிவபெருமான்) தேரில் அடி எடுத்து வைத்தவுடனே,

நெறு நெறு என முறிதலு(ம்) நிலை பெறு தவம் உடைய

ஒருவரும் இருவரும் அருள்பெற … நெறு நெறு என்று அந்தத் தேர் முறி படவும், அசைவு உறாத தவ நிலையைக் கொண்ட திரிபுரத்தில் இருந்த மூன்று சிவபக்தர்கள்* (தீயில் மாளாது உய்ந்து) அருள் பெறவும்,

ஒரு கோடி தெருவு நகரியும் நிசிசரர் முடியொடு சடசட என

வெடி படுவன புகைவன திகு திகு என எரிவன அனல்

நகையொடு முனிவார் தம் சிறுவ … (திரிபுரத்திலிருந்த) ஒரு கோடிக்

கணக்கான வீதிகளும் ஊர்களும் அசுரர்கள் தலையுடன் சட சட என

வெடி பட்டும், புகை விட்டும், திகுதிகு என்று எரியவிட்டும் தீ எழுப்பிய சிரிப்பைக் கொண்டு கோபித்தவரான சிவபெருமானது குழந்தையே,

வனசரர் சிறுமியொடு உருகிய பெரும அருணையில் எழு

நிலை திகழ்வன சிகரி மிசை ஒரு கலபியில் உலவிய

பெருமாளே. … வேடர்கள் மகளைக் கண்டு உருக்கம் கொண்ட

பெருமை வாய்ந்தவனே, திருவண்ணாமலையில் ஏழு** நிலைகள்

விளங்கும் மலை உச்சியில் ஒப்பற்ற மயிலின் மேல் அமர்ந்து உலவி விளக்கம் தரும் பெருமாளே.

திரிபுரத்தில் இருந்த அசுரர்கள் சிவ பூஜையை விட்டால் ஒழிய அவர்களை வெல்ல முடியாது என உணர்ந்த திருமால், புத்த ஆசாரியராகவும், நாரதர் அவர் மாணாக்கர் ஆகவும் போந்து, அசுரர்களை மயக்கிச் சிவபூஜையை கைவிடச் செய்தனர். ஆனால்

மூன்று அசுரர்கள் மட்டும் சிவ நெறியிலேயே இருந்து ஒழுகி இறக்காமல் தப்பினர்.

** ஏழு நிலைகள் (குண்டலினி) – மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம்,அநாகதம், விசுத்தி, ஆக்ஞா, ஸஹஸ்ராரம்.

The seven fundamental chakras are known as muladhara, which is located at the perineum, the space between the anal outlet and the genital organ; swadhisthana, which is just above the genital organ; manipuraka, which is just below the navel; anahata, which is just beneath where the rib cage meets; vishuddhi, which is at the pit of the throat; ajna, which is between the eyebrows; and sahasrara, also known as brahmarandra, which is at the top of the head.

***

வேதங்கள் முரசு கொட்டி சொல்வது என்ன?

கலை கொடு கருத அரியதை … கலை நூல்களால் கருதவும்

அரிதான மெய்ப் பொருளை,

விழி புனல் வர மொழி குழறா … கண்களில் நீர் வர, பேச்சுக் குழறி,

அன்பு உருகி உனது அருள் பரவு வகை வரில் … அன்புடன்

மனம் உருகி உன் திருவருளைப் போற்றும் மன நிலை வந்தால்,

விரகு ஒழியில் உலக இயல் பிணை விடில் … தந்திர புத்தி

ஒழிந்தால், உலக சம்பந்தமான கட்டுக்கள் விட்டால்,

உரை செயல் உணர்வு கெடில் … மனம், வாக்கு, காயம் இம் மூன்றின்

தொழிலும் அழிந்தால்,

உயிர் புணர் இருவினை அளறு அது போக உதறில் … உயிரைச்

சார்ந்து ஆட்டுவிக்கும் இரண்டு வினைகளாகிய சேறு போகும்படி

உதறி விலக்கினால்,

எனது எனும் மலம் அறில் … எனது என்னும் ஆசையாகிய குற்றம்

அற்றுப் போனால்,

அறிவினில் எளிது பெறல் என மறை பறை அறைவது …

அறிவில் எளிதாகப் பெறுதல் முடியும் என்று வேதங்கள் பறையறைந்து சொல்லுவதான அதனை,

ஒரு உதயம் மரணம் இல் பொருளினை அருளுவது ஒரு

நாளே … ஒப்பற்ற, தோற்றமும் முடிவும் இல்லாத பொருளை

அடியேனுக்கு நீ அருள் செய்யும் ஒரு நாள் கிட்டுமா?

***

முருகனும் மடல் எழுதினான்!

வனசரர் கதி பெற முனி பெறு புன மானின் தரள முகபட(ம்)

நெறி பட நிமிர்வன தருண புளகித ம்ருகமத தன கிரி தழுவ

மயல் கொடு தனி மடல் எழுதிய பெருமாளே. … வேடர்கள் நற்

கதி அடைய, சிவ முனிவர் பெற்ற, தினைப் புனம் காத்த மான் போன்ற

வள்ளி நாயகியின் முத்தாலாகிய மேலாடை வளைவுபட நிமிர்ந்து

எழுவனவும், இளமை வாய்ந்தனவும், புளகாங்கிதம் கொண்டனவும்,

கஸ்தூரி அணிந்துள்ளனவுமான மார்பகங்களாகிய மலைகளைத் தழுவ மோகம் கொண்டு ஒப்பற்ற மடல்* எழுதிய பெருமாளே.

மடல் எழுதுதல்:

தலைவன் தலைவியின் அழகை வர்ணித்து ஓர் ஏட்டில்

மடலாக எழுதி அவளது ஊருக்குச் சென்று நாற்சந்தியில் ஒன்றும் பேசாமல் ஒருவரது வசைக்கும் கூசாமல் படத்தில் எழுதிய உருவத்தைப் பார்த்தவாறு பகலும் இரவுமாக நிற்பான். அவனது உறுதிகண்டு தலைவியின் வீட்டார் தலைவனுக்கு அவளை மணம் செய்து வைப்பர். முருகன் வள்ளியை ஊரறிய மடல் எழுதி மணம் செய்துகொண்ட காட்சி கந்த புராணத்தில் வருகிறது.

***

முருகனின் யானையின் பெயர்

முகர(ம்) முக படம் கவள(ம்) தவள கர அசல(ம்) மிசை வரும்

அபிநவ … பிளிறுவதும், முகத்தில் தொங்கும் அலங்காரத் துணி

கொண்டதும், உணவு கவளங்களை உட்கொள்வதும், வெண்ணிறம்கொண்டதும், துதிக்கை உடையதுமான மலை போன்ற யானையின்* மீது எழுந்தருளும் புதுமை வாய்ந்தவனே,

முருகன் மயில் வாகனன் ஆகினும், அடியார்களை ஆட்கொள்வதற்கும், அருள் செய்வதற்கும், போர் புரிவதற்குப் புறப்படும்போதும் ‘பிணிமுகம்’ என்ற யானை வாகனத்தில் செல்வான் என்பர்.

பல தலங்களில் முருகனுக்கு பிணிமுக யானை வாகனமாக உள்ளது.

***

அஷ்ட புஷ்பங்கள்/  எட்டு ஞான மலர்கள்

சோதி முருகா நித்தா பழய ஞானச் சோணகிரி வீதிக் கந்த

வேளே … ஜோதி வடிவமான முருகனே, என்றும் அழியாமல்

இருப்பவனே, ஞான பூமியாகிய திருவண்ணாமலையின் தெருவில் வீற்றிருக்கும் கந்த வேளே,

பாலக கலாபக் கோமள மயூரப் பாக உமை பாகத்தன்

குமாரா … குழந்தையே, தோகை நிறைந்த அழகிய மயிலை

நடத்துபவனே, உமை பங்கனான சிவ குமாரனே,

பாத மலர் மீதில் போத மலர் தூவிப் பாடுமவர் தோழத்

தம்பிரானே. … பாதத் தாமரையில் ஞான மலரை* இட்டுப் பாடும்

அடியார்களின் தோழனே, தம்பிரானே.

ஞான பூஜை செய்வார்க்கு உரிய எட்டு புஷ்பங்கள்:

மனத்தூய்மை, கொல்லாமை, ஐம்புலன் அடக்கம், பொறை, அருள், வாய்மை, தவம், அன்பு.

***

20 ரி ரி ரி ரி ரி தேவியர் நாமங்கள் சொல் அழகும் பொருள் அழகும்!

குமரி காளி வராகி மகேசுரி … குமரி, காளி, வராகி, மகேஸ்வரி,

கவுரி மோடி சுராரி நிராபரி … கெளரி, மோடி, முதலிய பெயர்களை

உடையவள், தேவர்களுக்குக் கண் போன்றவள், பொய்யிலி,

கொடிய சூலி சுடாரணி யாமளி மகமாயி … உக்ரமான சூலத்தை

ஏந்தியவள், ஒளி மயத்தவள், சியாமளப் பச்சை நிறம் உடையவள், மகமாயி,

குறளு ரூப முராரி சகோதரி … வாமன உருவம் கொண்ட

திருமாலின் சகோதரி,

உலக தாரி உதாரி பராபரி … உலகத்தைத் தரித்துப் புரப்பவள்,

தயாள குணம் உடையவள், முதன்மை பூண்டவள்,

குருபராரி விகாரி நமோகரி அபிராமி … குருவாகிய சிவனுக்குக்

கண் போன்றவள், வேறுபாடுகளைப் பூண்டவள், வணங்கப்படுபவள்,

அழகுள்ளவள்,

சமர நீலி புராரி தன் நாயகி … போர் வல்ல துர்க்கை, திரிபுரம்

எரித்த சிவபெருமானின் பத்தினி,

மலை குமாரி கபாலி நல் நாரணி … இமயவன் புதல்வி, கபாலம்

ஏந்தியவள், நல்ல குணம் வாய்ந்த நாராயணி,

சலில மாரி சிவாய மனோகரி பரை யோகி … நீர் பொழியும்

மேகம் போன்றவள், சிவ சம்பந்தப்பட்டு விரும்பத்தக்கவள்,

பரா சக்தி, யோகி,

சவுரி வீரி முநீர் விட போஜனி … வலிமை உள்ளவள், வீரம்

உள்ளவள், பாற்கடலில் எழுந்த ஆலஹால விஷத்தை உண்டவள்,

திகிரி மேவு கையாளி செயாள் … சக்கரம் ஏந்திய திருக்கரத்தை

உடையவள், இலக்குமி,

ஒரு சகல வேதமும் ஆயின தாய் உமை அருள் பாலா …

ஒப்பற்ற எல்லா வேதமுமாய் நிறைந்த தாய் உமா தேவி (ஆகிய பார்வதி) ஈன்றருளிய பாலனே,

திமிதம் ஆடு சுராரி நிசாசரர் … பேரொலி செய்து போராடிய

தேவர்களின் பகைவர்களாகிய அசுரர்களுடைய

முடிகள் தோறும் கடாவி இ(ட்)டு … தலைகளில் எல்லாம்

ஆயுதங்கள் படும்படி செலுத்தி வைத்து,

ஏய் ஒரு சில பசாசு குணாலி நிணாம் உண விடும் வேலா …

அங்கு கூடிய சில பேய்கள் குணலை என்ற ஆரவாரத்துடன் கூத்தாடி மாமிசங்களை உண்ணும்படி வேலைச் செலுத்தியவனே,

திரு உலாவு சொணேசர அ(ண்)ணாமலை … லக்ஷ்மீகரம்

நிறைந்த சோணாசலேஸ்வரது திருவண்ணாமலையில்

முகில் உலாவு விமான நவோ நிலை … மேகம் உலவும்

கோபுரத்தின் ஒன்பது நிலைகளைக் கடந்து 

சிகர மீது குலாவி உலாவிய பெருமாளே. … கோபுர உச்சியில்

விளக்கமுற்று உலாவிய பெருமாளே.

—subham—

Tags- 20 ரி ரி ரி ரி ரி தேவியர் நாமங்கள், திருப்புகழில், சொல் அழகு, பொருள் அழகு! -27 ,  அருணகிரிநாதர் , அரிய செய்திகள் ,மூன்று சிவபக்த அசுரர்கள் கதை!

Leave a comment

Leave a comment