யமன் நிஜம் தான்! மரண தேவதைகளைச் சந்தித்த ஶ்ரீ அன்னை! (Post.15,444)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,444

Date uploaded in London – 21 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

அன்னை ஜெயந்தி தினம் – சிறப்புக் கட்டுரை!

புதுவை ஶ்ரீ அன்னை ஜனனம்: 21-2-1874 சமாதி: 17-11-1973

யமன் நிஜம் தான்! மரண தேவதைகளைச் சந்தித்த ஶ்ரீ அன்னை! 

ச. நாகராஜன்

 கேள்வி: மரண தேவன் ஒருவன் இருக்கிறான் என்று சொல்கிறார்களே, அது உண்மையா? 

ஶ்ரீ அன்னையின் பதில் : ஆம், நான் அதை,, மரணத்தின் அதிதேவதை என்பேன், எனக்கு அவனை நன்றாகத் தெரியும்.

மரண தேவதைகள் பலர் இருக்கின்றனர். நூற்றுக் கணக்கில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இரண்டு பேரையாவது நான் பார்த்திருக்கிறேன். ஒருவனை பிரான்சில் சந்தித்தேன். இரண்டாமவனை ஜப்பானில்.

அவர்கள் இருவருக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. ஒவ்வொரு நாட்டின் கல்வி, பண்பாடு நம்பிக்கைகளுக்கு ஏற்றபடி வெவ்வேறு மரண தேவதை இருக்கலாம் எனத் தெரிகிறது. இப்படியே எல்லா இயற்கை சக்திகளுக்கும் அதி தேவதைகள் இருக்கின்றன. நெருப்புத் தெய்வம், காற்றுத் தெய்வம், நீர்த் தெய்வம், மழைத் தெய்வம் என்றிப்படி. அதைப் போல மரண தெய்வம் அல்லது மரண தேவதையும் உண்டு.

ஒவ்வொரு மரண தேவதைக்கும் ஒரு நாளைக்கு எத்தனை மரணங்கள் என்று கணக்கு உண்டு. இந்த ஏற்பாடு மிகப் பிரமாதமானது. பிராண சக்திகளுக்கும், இயற்கை சக்திகளுக்கு ஓர் உடன்படிக்கை இருப்பது போலத் தெரிகிறது. மரண தேவதை இன்றைக்கு எனக்கு இத்தனை மரணங்கள், இன்னார் எல்லாம் இன்று சாக வேண்டும் என்று முடிவு எடுத்துக் கொண்டு, உரிமையுடன் சாகப் போகிறவன் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொள்வான். உனக்கு இதை உணரக் கூடிய சக்தி இருந்தால், மரண தேவதை நீ சாக விரும்பாத ஒருவனைப் பிடிக்கப் போவதைக் கண்டால், உனக்கு ஒருவகை நுண்ணுலகு சக்தி (Occult Power) இருந்தால், “கூடாது, நீ அவன் உயிரை எடுக்கக் கூடாது” என்று தடுக்கலாம். இப்படி ஒரு தடவை அல்ல, பல தடவைகள் இங்கும் ஜப்பானிலும் நடந்திருக்கின்றன. இரண்டும் ஒரே தேவதை அல்ல. அதனால் தான் பல தேவதைகள் இருக்கின்றன என்றேன்.

ஓர் உயிரைக் கவர மரண தேவதை வரும் போது சூட்சும சக்தி படைத்த யாராவது இந்த உயிரைக் கொண்டு போகக் கூடாது என்று தடுத்து விட்டால் பக்கத்திலுள்ள வேறு யாருடைய உயிரையாவது, முதலில் குறிக்கப்பட்டவனுக்குப் பழக்கமானவன் அல்லது அவனுடைய பகைவன் இப்படி அவனோடு தொடர்புடைய ஒருவனுடைய உயிரைக் கொண்டு போய் விடுவான். வெளிப்பார்வைக்குத் தற்செயலாக நடப்பது போல் தோன்றும். உண்மைக் காரணம், மரண தேவதைக்கு அன்றைக்கு அவனுக்குரிய  எண்ணிக்கை தேவைப்பட்டது என்பதுதான். அவனுக்கு ஓர் உயிர் வேண்டும். நீ இந்த உயிரைக் கொண்டு போகக்கூடாது என்று தடுத்துவிட்டால் (அதற்கு உனக்குச் சக்தி இருக்க வேண்டும்) வேறு ஓர் உயிரைக் கொண்டு போய் விடுகிறான்.

நெருப்பு தேவதை விஷயமும் இப்படித்தான். நான் நெருப்பு தேவதையை பார்த்திருக்கிறேன். குறிப்பாக ஜப்பானில். ஜப்பானில் நெருப்பு மிகவும் அபாயமானது. எங்காவது தீப்பிடித்துக் கொண்டால் அந்தப் பகுதி முழுவதுமே எரிந்து போகும். அங்கு வீடுகள் மரத்தால் கட்டப்பட்டிருப்பதால் நெருப்புக்குச்சி எரிவது போல் கணநேரத்தில் எல்லாம் எரிந்து சாம்பலாகிவிடும்,

ஒரு நாள் நான் எனது படுக்கையில் இருந்தேன். ஒருமுனைப்பட்டு மனிதர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென வீட்டுப்பக்கத்தில் நெருப்பு மேகம் போல் ஓர் உருவம் தெரிந்தது. உற்று நோக்கிய போது அது ஓர் உணர்வுள்ள ஜீவன் என்பது தெரிந்தது. 

“ஏய் உனக்கு என்ன வேண்டும்?” 

“இந்த வீட்டை எரிக்கும் உரிமை எனக்கு இருக்கிறது. நெருப்பு மூட்டி.” 

“எரிக்கும் உரிமை உனக்கு இருக்கலாம். ஆனால் இந்த வீட்டில் நடக்காது.”

 அதனால் என்னை மீற முடியவில்லை.’ 

யார் பலவான் என்பதைப் பொறுத்த விஷயம் இது. இங்கே உன் வேலை நடக்காது என்று சொன்னதும் போய்விட்டது.

ஐந்து நிமிடம் கழித்து கூச்சல் கேட்டது. இரண்டு மூன்று வீடுகளுக்கு அப்பால் ஒரு வீடு தீப்பற்றிக் கொண்டது. நான் இருந்த வீட்டை எரிக்கக் கூடாது என்ற உடனே அது போய்விட்டது. ஆனால் அதற்கு ஒரு வீட்டை எரிக்க உரிமை உண்டல்லவா? அதனால் அது அந்த அடுத்த வீட்டைப் பிடித்துக் கொண்டது. 

அரவிந்த ஆசிரம காலாண்டு வெளியீடான வைகறை பத்திரிகையில் 1973ம் ஆண்டு இரண்டாவது இதழில் வெளியான கட்டுரை. இதே இதழில் மரண பயத்தை வெல்வது எப்படி என்றும் அன்னை அற்புதமாகக் கூறி இருக்கிறார். அரவிந்த ஆசிரமம், பாண்டிச்சேரியில் அரவிந்தர் மற்றும் அன்னை நூல்களைப் பெறலாம்.

**

Leave a comment

Leave a comment