ஆறுமுறை ‘எட்டு இரண்டு’- அருணகிரியின் சொற்சிலம்பம்! 4 வகை ஜீவன் முக்தர்கள்- Part 31 (Post.15,454)

Written by London Swaminathan

Post No. 15,454

Date uploaded in Sydney, Australia –  25 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

31திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் – Part 31

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 31

ஆறுமுறை எட்டு இரண்டு- அருணகிரியின் சொற்சிலம்பம்! நான்கு வகை ஜீவன் முக்தர்கள்– Part 31

***

16,000 கோபியர் !

வட குல கோபாலர் தம் ஒரு பதி நூறாயிரம் வனிதையர்

தோள் தோய் தரும் அபிராம மரகத நாராயணன் மருமக …

வடக்கே கோபாலர் குலத்தவரான இடையர்களின் ஒரு பதினாயிரம்

மாதர்களது தோள்களை அணைந்த அழகிய பச்சை நிற நாராயணனுக்கு மருகனே,

சோணாசல மகிப சதா காலமும் இளையோனே …

திருவண்ணாமலைக்கு அரசே, என்றும் இளமையாக இருப்பவனே,

உடுபதி சாயாபதி சுரபதி மாயாது உற … நட்சத்திரங்களுக்குத்

தலைவனான சந்திரனும், சாயா தேவிக்குக் கணவனாகிய சூரியனும்,

தேவர்கள் தலைவனான இந்திரனும் இறந்து படாமல் வாழ,

உலகு உய்ய வார் ஆர்கலி வறிது ஆக … உலகம் பிழைக்க,

நீண்ட கடல் வற்றிப் போக,

உயரிய மா நாகமும் நிருதரும் நீறாய் விழ … சிறந்த பெரிய

கிரவுஞ்ச மலையும் அசுரர்களும் தூள்பட்டு விழ,

ஒரு தனி வேல் ஏவிய பெருமாளே. … ஒப்பற்ற வேலைச்

செலுத்திய பெருமாளே.

அருணகிரியின் சொல் அழகு– உடுபதிசாயாபதி, சுரபதி !

***

கூறும் அடியார்கள் வினை நீறுபடவே அரிய கோல மயிலான

பதம் அருள்வாயே … உன்னைப் போற்றும் அடியார்களின் வினை

தூளாகிப் போக, அருமையான அழகிய மயிலான பதவியை அருள்பவனே,

கூட அரனோடே நடமாடு அரிய காளி அருள் கூரும்

சிவகாமி உமை அருள் பாலா … சிவபெருமானோடு சேர்ந்து நடனம்

ஆடும் அரிய காளியும் திருவருள் மிக்க சிவகாமியும் ஆன உமாதேவி அருளிய குழந்தையே,

ஆறு முகமான நதி பால குற மாது தனம் ஆர விளையாடி

மணம் அருள்வோனே … ஆறு முகங்கள் கொண்ட கங்கா நதியின்

குழந்தையே, குறப் பெண் வள்ளியின் நெஞ்சம் குளிர விளையாடி

அவளை மணம் புரிந்தவனே,

ஆதி ரகுராம ஜய மாலின் மருகா பெரிய ஆதி அருணா

புரியில் பெருமாளே. … ஆதி ரகுராமனும் வெற்றி பொருந்தியவனுமான

திருமாலின் மருகனே, பெரிய திருவண்ணாமலையில் வீற்றிருக்கும்

பெருமாளே.

கூறுமடியார்கள் வினை’, ‘ஆறுமுகமான’, ‘ஆதியருணாபுரியில்’, என்ற சொற்றொடர்கள் ‘ஏறுமயில் ஏறி’ என்னும் பாடலை ஒத்திருப்பதைக் காணலாம்.

ஒப்பிடுக

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!

ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!

கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!

குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!

மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!

வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!

ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!

ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

***

ஜீவன் முக்தர்களின் வகைகள்

நினைத்தார் சித்தத்து … உன்னை நினைப்பவர்களது சித்தத்தில்

உறைவோனே … வீற்றிருப்பவனே,

திருத்தாள் முத்தர்க்கு … உன் திருவடிகளை ஜீவன் முக்தர்களுக்கு*

அருள்வோனே … தந்தருள்பவனே,

திருக்கா ளத்திப் பெருமாளே. … திருக்காளத்தியில் உள்ள

பெருமாளே.

ஜீவன் முக்தர்கள் நான்கு வகைப்படுவர்:

பிரம்ம வித்துக்கள் – ஞானம் அடைந்து உலகத்திற்காக உழைப்பவர்கள்,

பிரம்ம வரர் – சமாதிநிலையில் இருந்து தாமே உணரும் ஞானிகள்,

பிரம்ம வரியர் – சமாதியில் இருந்து பிறர் கலைக்க எழும் ஞானிகள்,

பிரம்ம வரிஷ்டர் – சமாதியில் இருந்து கலைக்கப்பட முடியாத ஞானிகள்.

ஜீவன் முக்தன்

உயிருடன் உலவும்போதே இறைவனை முழு அளவில் உணர்ந்து விட்டவர்களை ஜீவன் முக்தர்கள் என்பார்கள் ; அவர்களும்  சாதாரண மனிதர்களைப்  போலவே நோயவாய்ப்படுவர்; இன்ப துன்பங்களை அனுபவிப்பர் ஆயினும் அவர்கள் என்றும் பேரின்ப நிலையில் திளைத்து இருப்பர் ; நமது காலத்தில் ராம கிருஷ்ண பரமஹம்சர், சேஷாத்ரி சுவாமிகள், ரமணர், காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் போன்றோர் இந்த நிலையை அடைந்தவர்கள் ஆவர்.

சிவன் நடனம் ஆடிய ஐந்து சபைகள்!

தெரிதமிழை … யாவரும் தெரிந்து மகிழும்படி தமிழை

உதவு சங்கப் புலவோனே … ஆராய்ந்து உதவிய சங்கப்

புலவனாக* வந்தவனே,

சிவனருளு முருக … சிவபெருமான் பெற்றருளிய முருகனே,

செம்பொற் கழலோனே … செம்பொன்னாலான வீரக் கழலை

அணிந்தவனே,

கருணைநெறி புரியும் … அருள் நெறியை அனுஷ்டிக்கும்

அன்பர்க் கெளியோனே … உன் அன்பர்க்கு எளிமையானவனே,

கனகசபை மருவு … கனகசபையில்** வீற்றிருக்கும்

கந்தப் பெருமாளே. … கந்தப் பெருமாளே.

* உக்கிரபாண்டியனாக முருகன் மதுரையில் அவதரித்து, சங்கப் புலவர்களுடன் தமிழை ஆராய்ந்து உதவிய செய்தி இங்கு குறிப்பிடப்படுகிறது.

** பஞ்ச சபைகளில் ஒன்று கனகசபை (பொன்னம்பலம்) – சிதம்பரம். மற்ற சபைகள்:

ரத்னசபை – திருவாலங்காடு, ரஜதசபை (வெள்ளியம்பலம்) – மதுரை, தாமிரசபை – திருநெல்வேலி, சித்திரசபை – திருக்குற்றாலம்.

***

தமிழ்த் தடாகம்

ஒண் குக அன்பர் ஓதுசெந்தமிழ் ஞான தடாகம் என் சிவ

கங்கை அளாவும் மகா சிதம்பர திண் சபை மேவும் ம(ன்)னா

சவுந்தர தம்பிரானே. … செந்தமிழ் ஞானத் தீர்த்தமாகிய சிவகங்கை

என்னும் தடாகம்* விளங்கும் சிறந்த சிதம்பரம் என்னும் தலத்தில்,

திண்ணிய கனக சபையில் விளங்கி நிற்கும் அரசனே, அழகிய தம்பிரானே.

இத் தீர்த்தத்தில் நீராடினால் செந்தமிழ் ஞானம் பெறலாம்.

***

சோழநாட்டில் மனு நீதி

மவுலியில் அழகிய பாதாள லோகனு … மணிமுடிகள் அழகாக

உள்ள பாதாளலோகனாகிய ஆதிசேஷனும்,

மரகத முழுகிய காகோத ராஜனு … பச்சை நிறம் உடல் முழுதும்

உள்ள சர்ப்பராஜன் பதஞ்சலியும்,

மநுநெறியுடன்வளர் சோணாடர் கோனுடன் … மநு நீதியுடன்

ஆளும் சோழநாட்டரசர் தலைவன்அநபாயனுடன்

உம்பர்சேரும் மகபதி … தேவர்கள் புடைசூழ வரும் இந்திரனும்,

புகழ்புலி யூர்வாழு நாயகர் … புகழ்கின்ற புலியூர் சிதம்பரத்தில்

வாழ்கின்ற சபாநாயகர் நடராஜரும்

மடமயில் மகிழ்வுற … அவர் அருகில் இளமயில் போல நிற்கின்ற

சிவகாமசுந்தரியும் மகிழ்ச்சி அடைய

வானாடர் கோவென … வானில் உள்ள தேவர்களுக்கெல்லாம்

தலைவனாக விளங்கும்,

மலைமகள் உமைதரு வாழ்வே மனோகர … மலைமகள் பார்வதி

பெற்ற செல்வமே, மனத்துக்கு இனியவனே,

மன்றுளாடும் … பொன்னம்பலத்தில் நடனமாடும்

சிவசிவ ஹரஹர தேவா நமோநம … சிவசிவ ஹரஹர தேவா*,

போற்றி, போற்றி,

தெரிசன பரகதி யானாய் நமோநம … கண்டு களிக்க வேண்டிய

மேலான கதிப் பொருளானாய், போற்றி, போற்றி,

திசையினும் இசையினும் வாழ்வே நமோநம … எல்லாத்

திசைகளிலும், இசைகளிலும் வாழ்பவனே, போற்றி, போற்றி,

செஞ்சொல்சேரும் … இனிய சொற்களையே பேசுகின்ற

திருதரு கலவி மணாளா நமோநம … வள்ளிநாயகியின்

இன்ப மணவாளனே, போற்றி, போற்றி,

திரிபுரம் எரிசெய்த கோவே நமோநம … திரிபுரத்தை எரித்த

தலைவனே*, போற்றி, போற்றி,

ஜெயஜெய ஹரஹர தேவா … ஜெயஜெய ஹரஹர தேவா,

சுராதிபர் தம்பிரானே. … தேவர் தலைவர்களுக்குத் தம்பிரானே.

நடராஜனும் முருகனும் ஒருவரே என்னும் கருத்துப்பட அருணகிரிநாதர் பாடுகிறார்.

***

எட்டும் இரண்டும்பட்டி மண்டபம்- மாணிக்க வாசகர் எதிரொலி 

மாணிக்க வாசகரும் எட்டு இரண்டு, பட்டிமண்டபம் ஆகிய சொற்களைத் திருவாசகத்தில் பயன்படுத்தியது ஒப்பு நோக்கத்தக்கது. இந்தப் பாடலில் எட்டு இரண்டு என்பதை அருணகிரிநாதர் மீண்டும் மீண்டும் பயன்படுத்த்திச் சொல் சிலம்பம் ஆடுவதைக் கண்டு ரசிக்கலாம். 

எட்டு இரண்டும் அறியாத என் செவியில் … எட்டும் இரண்டும்

பத்து என்பதையும் தெரியாத என் காதுகளில்

எட்டும் இரண்டும் இது ஆம் இலிங்கம் என … இவையே சிவக்

குறியாகிய இலிங்கம் *8 என்று

எட்டு இரண்டும் வெளியா மொழிந்த குரு முருகோனே …

அந்த அகார உகார மகார *9 இலக்கணங்களைத் தெளிவாக

உபதேசித்த குருவான முருகோனே,

எட்டு இரண்டு திசை ஓட செம் குருதி … எட்டுத் திசைகளிலும்,

இந்த அண்டத்தின் கீழும் மேலுமாக, பத்து திக்குகளிலும் சிவப்பு நிற

இரத்தம் ஓடும்படி

எட்டு இரண்டும் உருவாகி வஞ்சகர் மெல் … பதினாறு வகை *10

உருவத் திருமேனி விளங்க (பாசறையில் இருந்து), வஞ்சகர்களாகிய

அசுரர்களின் மீதும்

எட்டு இரண்டு திசையோர்கள் பொன்ற அயில் விடுவோனே …

பின்னும் பத்துத் திசை அண்டங்களில் இருந்த அசுரர்கள் மீதும்

அவர்கள் அழிய வேலை விடுபவனே,

செட்டி என்று சிவகாமி தன் பதியில் … வளையல் செட்டி

வடிவெடுத்து, சிவகாமி அங்கயற் கண்ணியாய் வீற்றிருக்கும் மதுரையில்,

கட்டு செம் கை வளை கூறும் எந்தை இட(ம்) … கைகள் சிவக்க,

வளையல்களை அடுக்கி விலை கூறின எந்தை சிவபெருமானுடைய

சித்தமும் குளிர அநாதி வண் பொருளை நவில்வோனே …

மனமும் குளிரும்படி ஆதியற்றதும், வளமையானதுமான

மூலப் பிரணவப் பொருளை உபதேசித்தவனே,

செட்டி என்று வனம் மேவி … வளையல் செட்டியின் வேடத்துடன்

நீயும் வள்ளிமலைச் சாரலில் தினை வனத்துக்குச் சென்று,

இன்பரசச் சத்தியின் செயல் இ(ன்)னாளை அன்பு உருக …

அங்கே இச்சா சக்தி மயமான வள்ளி நாயகியை அன்பு கனிந்து

தெட்டி வந்து புலியூரில் மன்றுள் வளர் பெருமாளே. …

அபகரித்து வந்து, சிதம்பரத்தில் பொன் அம்பலத்தில் விளங்கும்

பெருமாளே.

(*1) இங்கு சிவயோக முறைகள் விளக்க ப்பட்டுள்ளன.

சுவாச நடப்பை ‘ப்ராணாயாமம்’ என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.

***

திருவாசகம்  திருச்சதகம்

   கட்டறுத்தெனை யாண்டுகண் ணாரநீறு

    இட்ட அன்பரொ டியாவருங் காணவே

    பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை

    எட்டினோடிரண்டும் அறியேனையே.

பட்டிமண்டபம்-வாத சபை..

திருப்பெருந்துறையில் திருவருள் பெற்று அமர்ந்திருந்த அடியார்களிடையே, தம்மையும் ஒருவராக்கி அமர்த்தியமையை நினைக்கின்றார் அடிகளார். சிவஞானம்(பர ஞானம்) கைவரப்பெற்ற அவர்கள் எங்கே? உலக ஞானம்(அபர ஞானம்) கூடப் பெறாத தாம் எங்கே?

இந்த நினைவு வந்தவுடன் தம்முடைய அறியாமைக்கு ஓர் எல்லை வகுக்கும் முறையில் எட்டும், இரண்டும் எவ்வளவு என்று அறியாத தாம் என்கிறார்.

எட்டினோடு இரண்டும் என்ற தொடருக்கு அகர(8) உகரம்(2) என்றும், இவை இரண்டும் கூட்டிய பத்துக்கு யகரம் என்றும் பொருள் கூறுவாரும் உளர். இவ்வாறு எல்லாம் பொருள் கொள்ள இடந்தந்து நிற்பதுதான் அடிகளாரின் பாடற்சிறப்பு (தமிழ் எண் வடிவில் அகரம் எட்டையும் உகரம் இரண்டையும் குறிக்கும். பத்து என்பதை யகரம் போன்ற எழுத்துக் குறிக்கும்).

இன்னும் ஒரு உரை

பொ-ரை: பாசங்களை ஒழித்து என்னை ஆட்கொண்டு, கண்கள் பார்த்து மகிழும்படியாக நீஎன்னை ஏற்றுக் கொண்டாய். திருநீறிட்ட பேரன்பரோடு எல்லோரும் பார்க்கும்படியாகவேநாயனைய என்னை உனது திருவோலக்க மண்டபத்தில் ஏற்றுவித்தாய். அகர உகரமாகிய சிவம் சக்தி இயல்பு அறியேனாகிய என்னை ஏற்றுவித்தாய். இது நீதியோ?  

 Cutting off all my worldly ties, Thou brought me into the forefront alongside Thy ash- smeared devotees, for all the world to see. And elevated me into Thy congregation. This Thoudidst to me, although I have come to know nothing of the scriptures.

பத்து என்பதற்கு தசகாரியம் என்றும் பொருள் சொல்லுவார்கள்

1. (Śaiva Philosophy) The ten spiritual experiences of the soul in its path towards final deliverance, viz.,

tattuvarūpam, tattuvataricaṉam, tattuvacutti, āṉmarūpam, āṉmataricaṉam, āṉmacutti, civarūpam, civataricaṉam, civayōkam, civapōkam;

தத்துவரூபம், தத்துவதரிசனம், தத்துவ சுத்தி, ஆன்மரூபம், ஆன்மதரிசனம், ஆன்மசுத்தி, சிவ ரூபம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் என்ற ஆன்மாநுபவ நிலைகள்.

xxxxx

திருமூலர் சொல்லுவதைக் காண்போம்

985. கூடிய எட்டும் இரண்டும் குவிந்தறி

நாடிய நந்தியை ஞானத்துள் ளேவைத்து

ஆடிய ஐவரும் அங்குஉறவு ஆவார்கள்

தேடி அதனைத் தெளிந்தறி யீரே.

பொருள் : எட்டும் இரண்டும் அகர உகரம். இவை உயிரும் இறையும் என்று கூறப்படும். எட்டும் இரண்டும் கூடுங்கால் பத்தாகும். பத்தென்பது யகரம். அஃதுயிர், உயிர் சிவத்துடன் ஒன்றி ஒரு மனப்பட்டு நாடப்படும் நந்தியை நாடித் திருவடியுணர்வினுள் வைத்தால் வாடுதலைச் செய்விக்கும் ஐம்புலனும் சிவத்தைத் தேடுதலுக்குத் துணை செய்யும். இங்ஙனம் தேடு நிலையைத் தெளிந்துணர்க.

xxxxxx
986. எட்டும் இரண்டும் இனிதுஅறி கின்றிலர்

எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்

எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப்

பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே.

பொருள் : எட்டும் இரண்டும் பத்து. இதன் அடையாளம் ய யகரம் உயிர். உயிரின் அடையாளக் குறி. இவற்றை யாவரும் இனிதறிய மாட்டார். இதை யறிவல்ல அறிவிலார் இருமூன்று நான்கு கூட்டும் கணக்குப் போல் பத்தென்பர். சிவபெருமான் திருவடியே பத்தென்பதாகும். செந்நெறியில் கூறப்படும் பருமை நுண்மையாகிய திரு ஐந்தெழுத்து பத்தாகும். (சிவக்குறி – சிவக் கொழுந்து – சிவலிங்கம்)

xxxxxxxx

“எட்டும் இரண்டும் அறியாத என்னை

எட்டும் இரண்டும் அறிவித்தான் என்நந்தி

எட்டும் இரண்டும் அறிவால் அறிந்தபின்

எட்டும் இரண்டும் இலிங்கமதாகும்.”- திருமந்திரம்

காயத்ரி மந்திரம் ஜபித்தால் மறுஜென்மம் கிடையாது

ஆறெழுத்தாவது ஆறு (1)மந்திரங்கள்
ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர்
சாவித் திரியில் தலையெழுத்து ஒன்றுள
பேதிக்க வல்லார் பிறவியற் றார்களே. 994.

994: Six Letters Aum are the Six Faiths and Savitri Mantra

The Six Letters are the Six religions,

The Six Letters multiplied by four,

Into four-and-twenty proliferated,

That the Letters of Savitri mantra art;

Savitri has the Letter First (that is Aum)

They whom separate meditate on it,

Have no more the birth-travail.

பொருள் : ஆறு எழுத்துக்களால் ஆயது ஆறு சமயங்கள் என்பர். ஒவ்வோர் எழுத்தையும் நான்கு பாகுபாடு செய்ய ஆறுக்கும் இருபத்து நான்கு எழுத்தாகும். இவ் இருபத்து நான்கு எழுத்தும் காயத்திரி என்ப. காயத்திரியின் முன் சேர்ந்து மொழியும் எழுத்து ஓங்காரம். அவ் ஓங்காரத்து அறிவதாகிய உண்மை காண வல்லார் பிறவா பெருவாழ்வு எய்துவர். (சாவித்திரி – காயத்திரி. 24 எழுத்துக்கள் கொண்டது. தலை எழுத்து – பிரணவம். பேதிக்க. பிரித்தறிய.)

—subham—

Tags- ஆறுமுறை எட்டும் இரண்டும் – அருணகிரியின் சொற்சிலம்பம்! நான்கு வகை ஜீவன் முக்தர்கள்– Part 31 , செட்டி, பஞ்ச சபை, திருப்புகழ், அரிய செய்திகள்

Leave a comment

Leave a comment