
Painting by Usha Venkatramani.Thanks
Written by London Swaminathan
Post No. 15,477
Date uploaded in Sydney, Australia – 9 March 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 39
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 39
சிவன் பெயரில் ரி ரி ரி ரி
கரி புராரி … யானையின் உடலை அழித்து தோலை உடுத்தியவரும்,
காமாரி … மன்மதனை எரித்தவரும்,
திரிபுராரி … திரிபுரத்தை அழித்தவரும்,
தீயாடி … சுடலை (மயான) நெருப்பில் மூழ்கி ஆடுபவரும்,
கயிலை யாளி … கயிலைமலைக்கு இறைவரும்,
காபாலி … மண்டையோட்டை (கபாலம்) கையில் ஏந்தியவரும்,
கழையோனி … மூங்கிலின் கீழே தோன்றியவரும்*,
கர உதாசன ஆசாரி … கையில் நெருப்பை ஏந்திய ஆசார்ய
குருநாதரும்,
பரசு பாணி … மழு (கோடரி) ஆயுதத்தைக் கையில் கொண்டவரும்,
பானாளி … நள்ளிரவில் ஆடுதற்கு விரும்புபவரும்,
கணமொ டாடி … பூத கணங்களுடன் ஆடுபவரும்,
காயோகி சிவயோகி … உலகங்களைக் காக்கும் யோகியும், சிவ
யோகியும்,
பரம யோகி மாயோகி … பரம யோகியும், மகா கனம் பொருந்திய
யோகியும்,
பரி அரா ஜடாசூடி … பெரிய பாம்பை ஜடாமுடியில் சூடியவரும்,
பகரொணாத மாஞானி … சொல்லுதற்கு அரிய மகா ஞானியும்,
பசுவேறி … பசுவை வாகனமாகக் கொண்டவரும்,
பரதம் ஆடி கானாடி … பரத நாட்டியம் ஆடுபவரும், காட்டிலே நடனம் செய்பவரும்,
பர வயோதிக அதீத … மேலானவரும், மூப்பைக் கடந்தவரும் ஆகிய
பரம ஞான வூர் … பரம சிவனாரின் பெரிய ஞான ஊருக்குள்
(சிவஞானபீடத்தில்)
பூத அருளாயோ … யான் புகுவதற்கு நீ அருளமாட்டாயோ?
……………………………..
பார திருவி ராலியூர்மேவு பெருமாளே. … பெருமை மிக்க
அழகிய விராலிமலையில்** அமர்ந்த பெருமாளே.
* சிவபிரான் மூங்கிலின் அடியில் சுயம்புவாகத் தோன்றியதால் வேய்முத்தர் எனப் பெயர் கொண்டார் – திருநெல்வேலி தலபுராணம்.
இப்பாடலில் சிவனை வருணிப்பது சிறப்பானது.
***
சீமான்களே சீமாட்டிகளே Ladies and Gentlemen
பழைய தமிழ்த் திரைப்படங்களில் நடிகர்கள் சொற்பொழிவு ஆற்றும் காட்சிகளில் லேடீஸ் அண்ட் ஜென்டில்மென் என்பதை இப்படி சொல்லுவார்கள் . இது ஸ்ரீமதி ஸ்ரீமான் என்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களின் தமிழ் வடிவம். இதை முதலில் பயன்படுத்தியவர் அருணகிரிதான் போலும் !
சீமாட்டியும் ஆய திரி புரை காலாக்கினி கோப பயிரவி …
பெருமாட்டியாகிய திரிபுரை, யுகாந்த கால வடவாமுகாக்னி போன்ற கோபம் கொள்ளும் பைரவி,
சீல உத்தமி நீலி சுர திரி புவன ஈசை … நல்லொழுக்கம் உள்ள
உத்தமி, நீல நிறம் உடையவள், விண் முதலிய மூவுலகங்களுக்கும் ஈசுவரியாகிய பார்வதி தேவியும்,
சீ(ர்) கார்த்திகையாய அறு வகை மாதாக்கள் குமாரன் என
வெகு சீராட்டொடு பேண … ஸ்ரீ கார்த்திகையாகிய அறுவகை
மாதர்களும் குமாரனே என்று மிக்க செல்லப் பாராட்டுகளுடன்
உன்னைப் போற்ற,
வட திசை கயிலாச கோமாற்கு உபதேசம் உபநிட வேத
அர்த்த மெய்ஞ் ஞான நெறி அருள் … வட திசையில் உள்ள
கயிலாயத்தில் வீற்றிருக்கும் தலைவாராகிய சிவபெருமானுக்கு
உபதேசமாக உபநிடதம், வேதம் இவைகளுக்குப் பொருளான
மெய்ஞ்ஞான மார்க்கத்தை அருள் செய்து,
கோது ஆட்டிய ஸ்வாமி என வரும் இளையோனே … அறியாமை
என்னும் குற்றத்தை நீக்கிய குரு மூர்த்தி என்னும் பெயர் விளங்க
வாய்ந்த இளையவனே,
***
ஆறு ஆதாரங்கள்
நடாதசுழி மூல விந்து … நட்டுவைக்கப் படாத சுழிமுனை,
மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்கள், விந்து இவற்றின்
நள் ஆவி விளை ஞான நம்ப … நடுவிலே இருக்கும் உயிர் விளங்கும் ஞான மூர்த்தியே*,
நபோமணி சமான துங்க வடிவேலா … சூரியனுக்குச் சமானமான
ஒளியும் பரிசுத்தமும் உடைய கூரிய வேலனே,
படாதகுளிர் சோலை … வெயில் படாத குளிர்ந்த சோலைகள்
அண்டம் அளாவி உயர்வாய் வளர்ந்து … ஆகாயம் வரை ஓங்கி
வளர்ந்து
பசேலெனவ மே தழைந்து தினமேதான் … பச்சைப் பசேல் என்ற
நிறத்துடன் தழைந்து நாள்தோறும்
விடாதுமழை மாரி சிந்த … விடாமல் மழை பொழிவதால்
அநேகமலர் வாவி பொங்கு … பல மலர்கள் நிறைந்த தடாகங்கள்
சூழ்ந்துள்ள
விராலிமலை மீது உகந்த பெருமாளே. … விராலிமலை** மீது
விரும்பி வாழும் பெருமாளே.
* ஒருவராலும் நட்டுவைக்கப்படாமல் இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட சுழிமுனை, விந்து, இவற்றுடன் மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகிய ஆறு ஆதாரங்களாகிய குண்டலினி சக்கரங்களின் நடுவில் ஞானப் பிழம்பாக உயிரோடு கலந்து முருகன் இருக்கிறான்.
***
தந்தையும் நீயே தாயும் நீயே த்வமேவ மாதாச பிதா த்வமேவ
மாலாசை கோபம் … மயக்கம், ஆசை, கோபம் இவையெல்லாம்
ஓயாதெ நாளும் … ஒய்ச்சல் இல்லாமல் நாள்தோறும்
மாயா விகார வழியேசெல் … பிரபஞ்ச மாயாவிகார வழியிலே
போகின்ற
மாபாவி காளி தானேனு … மகாபாவி, துர்க்குணம் உள்ளவன்தான்
நானெனிலும்,
நாத மாதா பிதாவு மினிநீயே … நாதனே, தாயும், தந்தையும் இனி
நீதான் எனக்கு
நாலான வேத நூல் … நான்கு வேத நூல்களையும்,
ஆக மாதி … ஆகமங்கள் ஆகிய பிற நூல்களையும்,
நானோதி னேனு மிலை … நான் படித்ததும் இல்லை.
வீணே நாள்போய் விடாமல் … வீணாக வாழ்நாள் போய் விடாமல்
ஆறாறு மீதில் … முப்பத்தாறு தத்துவங்களுக்கு* அப்பாற்பட்ட
ஞானோபதேசம்அருள்வாயே … நிலைத்த ஞானோபதேசத்தை
அருள்வாயே,
ஒப்பிடுக மாணிக்கவாசகரின்
அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
–Subham—
Tags- திருப்புகழில், அருணகிரிநாதர் , அரிய செய்திகள் Part 39,
சிவன் பெயரில் ரி ரி ரி ரி, தந்தையும் நீயே தாயும் நீயே ,