Written by London Swaminathan
Post No. 15,480
Date uploaded in Kumbakonam, India – 10 March 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 40
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 40
***
தாமா தாமா லாபா லோகா
தாரா தாரத் …… தரணீசா
தானா சாரோ பாவா பாவோ
நாசா பாசத் …… தபராத
யாமா யாமா தேசா ரூடா
யாரா யாபத் …… தெனதாவி
யாமா காவாய் தீயே னீர்வா
யாதே யீமத் …… துகலாமோ
காமா காமா தீனா நீணா
காவாய் காளக் …… கிரியாய்கங்
காளா லீலா பாலா நீபா
காமா மோதக் …… கனமானின்
தேமார் தேமா காமீ பாகீ
தேசா தேசத் …… தவரோதுஞ்
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
தாமா தாம ஆலாபா லோக ஆதாரா … மாலையை உடையவனே,
இனிமையாக உரையாடுபவனே, உலகுக்கு ஆதாரமாக உள்ளவனே,
தார(ம்) தரணி ஈசா … நீர், மண் முதலிய ஐந்து பூதங்களுக்கும்
ஈசனே,
தான ஆசாரோ பாவா பாவோ நாசா … கொடை அளிக்கும்
ஒழுக்கம் உள்ளவர்களால் தியானிக்கப் படுபவனே, பாவ நாசனே,
பாசத்து அபராத யாமா யாமா தேசார் ஊடு … பாசங்களில்
பற்று வைத்ததின் அபராதமாக தெற்கில் உள்ள யமபுரியைச்
சேர்ந்தவர்களிடையே,
ஆராயா ஆபத்து எனது ஆவி ஆமா காவாய் … ஆராய்ச்சி
இல்லாமல் ஆபத்தான நிலையை என்னுடைய உயிர் அடைதல்
ஆகுமோ? என்னைக் காத்து அருள்வாய்.
தீயேன் நீர் வாயாதே ஈமத்து உகலாமோ … கெட்டவனாகிய
நான் நற் குணம் வாய்க்காமல் சுடுகாட்டைத் தீயைத் தாவிச் சேர்தல்
நன்றோ?
காமா காம ஆதீனா நீள் நாகா வாய் காள கிரியாய் …
அன்பனே, அடியார்கள் விரும்புவதை அளிப்பவனே, நீண்ட நாக கிரி
என்னும் திருச்செங்கோட்டில்* வீற்றிருப்பவனே,
கங்காளா லீலா பாலா நீபா … எலும்பு மாலையை விளையாட்டாக
அணியும் சிவனின் குழந்தையே, கடப்ப மாலை அணிந்தவனே,
காம ஆமோதக் கன மானின் … மிகுந்த விருப்பமுள்ள, பெருமை
பொருந்திய மான் போன்ற வள்ளியின்
தேம் ஆர் தே மா காமீ பாகீ … தேன் கலந்த இனிய தினை மாவில்
விருப்பம் உள்ளவனே, தகுதி வாய்ந்தவனே,
தேசா தேசத்தவர் ஓதும் சேயே … ஒளி உள்ளவனே, உலகத்தோர்
போற்றும் குழந்தையே,
வேளே பூவே கோவே தேவே தேவப் பெருமாளே. …
தலைவனே, பொலிவு உடையவனே, அரசனே, தேவனே,
தேவர்களுடைய பெருமாளே.
இன்னுமொரு சொல் விளையாட்டு
மெய்ச்சார் வற்றே பொய்ச்சார் வுற்றே
நிச்சார் துற்பப் …… பவவேலை
விட்டே றிப்போ கொட்டா மற்றே
மட்டே யத்தத் …… தையர்மேலே
பிச்சா யுச்சா கிப்போ ரெய்த்தார்
பத்தார் விற்பொற் …… கழல்பேணிப்
பிற்பால் பட்டே நற்பால் பெற்றார்
முற்பா லைக்கற் …… பகமேதான்
செச்சா லிச்சா லத்தே றிச்சே
லுற்றா ணித்துப் …… பொழிலேறுஞ்
செக்கோ டைக்கோ டுக்கே நிற்பாய்
நித்தா செக்கர்க் …… கதிரேனல்
முச்சா லிச்சா லித்தாள் வெற்பாள்
முத்தார் வெட்சிப் …… புயவேளே
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
மெய்ச் சார்வு அற்றே பொய்ச் சார்வு உற்றே … உண்மையான
புகலிடத்தை விட்டுவிட்டு, பொய்யான துணையைப் பற்றிக்கொண்டு,
நிச்சார் துற்பப் பவ வேலை விட்டேறிப் போக ஒட்டாமல் …
நிச்சயமாக நிறைந்த துன்பமே உள்ள பிறப்பு என்னும் கடலைத் தாண்டி
கரை ஏறிப் போக முடியாதபடி,
தே(ன்) மட்டே அத் தத்தையர் மேலே பிச்சாய் உச்சாகிப்
போர் எய்த்தார் … தேன்கூட இவர்கள் சொல்லுக்கு இனிமை குறைந்தது
என்று சொல்லத்தக்க அந்தக் கிளி போன்ற பொது மகளிரின் மீது காம
வெறி முற்றிப்போய் கலவிப் போரில் இளைத்தவர்கள்,
பத்தார் விற்பொற் கழல்பேணிப் பிற்பால் பட்டே நற்பால்
பெற்றார்முன் … பிற்பாடு, உனது பக்தர்களின் அழகிய,
ஒளி பொருந்திய திருவடிகளைப் பணிந்து, அந்த நல்ல தொண்டால்
தகுதியான நல்ல வழியில் நின்று நற் குணங்களைப் பெற்றவர்களாக
மாறும் போது அவர்களுக்கு
பாலைக் கற்பகமே தான் … நீ பாலைவனத்தில் கிடைத்த தெய்வ
விருட்சமாகிய கற்பகமாகத் திகழ்வாய்.
செச் சாலிச் சாலத் தேறிச் சேல் உற்று ஆணித்துப்
பொழிலேறும் … செம்மையான நெற்கதிர் கூட்டத்தில் ஏறிச் சேல்
மீன்கள் அருகிலுள்ள சோலையில் போய்ச் சேரும்
செக்கோடைக் கோடுக்கே நிற்பாய் நித்தா … திருச்செங்கோட்டு*
மலை உச்சியில் நிற்பவனே, என்றும் அழியாது இருப்பவனே,
செக்கர்க் கதிர் ஏனல் முச்சாலிச் சாலித் தாள் வெற்பாள்
முத்து ஆர் வெட்சிப் புயவேளே … சிவந்த கதிர் கொண்ட
தினைப்பயிர் மூன்று போகம் விளையும் நெல்வயலின் அடித் தண்டுகள்
கொண்ட வள்ளிமலைக்கு உரியவளாகிய வள்ளியின் முத்துமாலை
நிறைந்துள்ளதும், வெட்சிமாலை அணிந்ததுமான புயங்களை உடைய
செவ்வேளே,
முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே. …
முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான** அக்கினி
வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி
அளிக்கும் பெருமாளே.
இது வேண்டுகோள் எதுவும் அற்ற ஒரு துதிப் பாடல். வட மொழிச் சொற்களும், சந்திகளும் நிறைந்தது.
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.
‘செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே’ – என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
***
சிவபெருமானுக்கு யானைத் தோல் வந்த கதை
குன்று எடுத்துப் பந்தடித்துக் கண் சிவத்துச் சங்கரித்துக்
கொண்டல் ஒத்திட்டு இந்திரனுக்கு இச் சுர லோகா … கிரவுஞ்ச
கிரியை எடுத்து பந்தைத் தூக்கி எறிவது போல் எடுத்து எறிந்து கண்
சிவக்கக் கோபித்து அழித்து, (கைம்மாறு கருதாது உதவும்) மேகம் போல் இந்திரனுக்கு ஈந்த தேவ லோகத்தவனே,
கொம்பு குத்திச் சம்பு அழுத்தித் திண் தலத்தில் தண்டு
வெற்பைக் கொண்டு அமுக்கிச் சண்டை இட்டுப் பொரும்
வேழம் … கொம்பால் குத்தியும், சம்பங்கோரை போன்ற நுனியால்
அழுத்தியும், திண்ணிய இப்பூமியில் கதையையும் மலையையும் சேர்த்து அடக்கிப் போர் புரிந்த (கயாசுரன் என்ற) யானையை
சென்று உரித்துச் சுந்தரிக்கு அச்சம் தவிர்த்துக் கண் சுகித்துச்
சிந்தையுள் பற்று இன்றி நித்த(ம்) களி கூரும் … சென்று தாக்கி
தோலை உரித்து*, அழகிய பார்வதி தேவிக்கு பயத்தை நீக்கி, கண்
களிப்புடன் மனதில் பற்று ஒன்றும் இல்லாமல் தினமும் மகிழ்ச்சி
கொள்ளும்,
செண்பகத்துச் சம்புவுக்குத் தொம் பதத்துப் பண்பு உரைத்து …
செண்பக மலர் அணியும் சம்புவாகிய சிவபெருமானுக்கு தத்வம் அசி
என்னும் வேத வாக்கியத்தில் த்வம் என்னும் சொல்லுக்கு (குருவாக
நின்று) விளக்க இயல்பை எடுத்து விளக்கி,
செங்குவட்டில் தங்கு சொக்கப் பெருமாளே. …
திருச்செங்கோட்டில் உறையும் அழகிய பெருமாளே.
* கயாசுரன் என்பவன் பிரமனிடம் வரம் பெற்றுப் பேராற்றல் கொண்டு, மண்ணவர், விண்ணவர் யாவரையும் வருத்தினான். யானை முகம் கொண்ட அந்த அசுரனைச் சிவபெருமான் உதைத்துத் தள்ளி, உமா தேவியும் அச்சம் நீங்க, அந்த யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டார்.
–subham—
Tags- கயாசுரன், சிவபெருமான், யானைத் தோல், தாமா தாமா யாமா யாமா , சொற் சிலம்பம், அருணகிரிநாதர் ,அரிய செய்திகள் Part 40