அந்தகாசுரன் கதை; ஆண் பனை மரங்கள் காய்த்த கதை – Part 45 (Post.15,499)

Written by London Swaminathan

Post No. 15,499

Date uploaded in London – 15 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 45

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 45

நடராஜர் ஆடிய பஞ்ச சபை

முதிர் நடமாடும் கூத்தர் புதல்வோனே … முதன்மையான

நடனம்** ஆடுகின்ற கூத்தர் நடராஜனின் மகனே,

முருகு அவிழ் தாரும் சூட்டி ஒரு தனி வேழம் கூட்டி …

நறுமணம் கமழும் மாலையையும் சூட்டி, ஒப்பற்றுத் தனித்து வர

யானையையும் (விநாயகரையும்) வரவழைத்து

முதல் மற மானின் சேர்க்கை மயல் கூர்வாய் … முன்பு,

வேடர்குலப் பெண்ணாகிய வள்ளியோடு சேர்தலில் மோகம் மிக்கவனே,

இடி என வேகம் காட்டி நெடிதரு சூலம் தீட்டி … இடியைப்

போல வேகத்தைக் காட்டி, புலால் நாற்றம் கொண்ட சூலாயுதத்தைக்

கையில் எடுத்து,

எதிர் பொரு சூரன் தாக்க வர ஏகி … எதிர்த்து வந்த சூரன்

சண்டைக்கு வர, அவனை எதிர்த்துச் சென்று

இலகிய வேல் கொண்டு ஆர்த்து உடல் இரு கூறு அன்று

ஆக்கி … விளங்குகின்ற வேலாயுதத்தை ஆரவாரத்துடன் செலுத்தி,

அவன் உடலை இரண்டு பிளவாக அன்று ஆக்கி,

இமையவர் ஏதம் தீர்த்த பெருமாளே. … தேவர்களுடைய

துன்பத்தை நீக்கிய பெருமாளே.

திருவாலங்காடு சென்னைக்கு மேற்கே 37 மைலில் உள்ளது. இது நடராஜர் தாண்டவமாடிய பஞ்ச சபைகளில் ஒன்று – ரத்னசபை.

** திருவாலங்காட்டில் செய்யப்பட்ட நடனம் சண்ட தாண்டவம் (ஊர்த்துவ தாண்டவம்). இது ஆகாய உச்சியை நோக்கி மேலே செல்லும்படியாக இடது பாதத்தைத் தூக்கி வலது பாதத்தை ஊன்றிச் செய்யப்படும் சம்ஹார தாண்டவமாகும். இது பிறவியை நீக்கும் என்பது கோட்பாடு.

நடராஜர் தன் பிரபஞ்ச நடனமான தாண்டவத்தை ஆடிய ஐந்து முக்கியத் திருத்தலங்கள் பஞ்ச சபைகள் எனப்படுகின்றன. இவை அனைத்தும் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன. சிதம்பரம் கனக சபை  (பொன்னம்பலம் ), மதுரை ரஜத சபை (வெள்ளி அம்பலம் ), திருவாலங்காடு (ரத்தின சபை), திருநெல்வேலி (தாமிர சபை), மற்றும் குற்றாலம் (சித்திர சபை) ஆகியவை அந்த ஐம்பெரும் சபைகளாகும்.

***

ஆண் பனை மரங்கள் காய்த்த கதை

பவமாய்த்து ஆணது வாகும் பனைகாய்த்தே … பிறப்பை ஒழித்து,

ஆணாக இருந்த பனைமரம் காய்த்து

மண நாறும் பழமாய்ப் பார்மிசை வீழும்படி … நறுமணம் வீசும்

பழங்களாக பூமியின் மீது விழும்படியாக,*1

வேதம் படியாப் பாதகர் … வேதத்தைப் படிக்காத பாதகர்கள் *2

பாயன்றி யுடாப் பேதைகள் … பாயைத் தவிர வேறு எந்த ஆடையும்

உடுக்காத பேதைகள் *3

கேசம் பறி கோப் பாளிகள் … தலைமயிரைப் பிய்த்துப் பறிக்கும்

கூத்தாடிச் சமர்த்தர்கள் *4 ஆகிய சமணர்

யாருங் கழுவேற … எல்லாருமாகக் கழுவில் ஏறும்படியாக,

சிவமாய்த் தேனமுதூறுந் திருவாக்கால் … சிவமயமானதும்,

தேனும் அமுதும் ஊறினது போலத் தித்திக்கும் உனது

(திருஞானசம்பந்தரது) திருவாக்கினாலும் தேவாரப் பாடல்களினாலும்,

ஒளி சேர்வெண் டிருநீற் றால் … பெருமை வாய்ந்த வெள்ளைத்

திருநீற்றாலும்,

அமராடுஞ் சிறியோனே … வாதுப் போர் புரிந்த இளையோனே,

செழுநீர்ச் சேய்நதி … செழுமை வாய்ந்த நீரைக் கொண்ட சேயாறு

ஆரங் கொழியாக் கோமளம் வீசும் … முத்துக்களைக் கரையிலே

கொட்டும் அழகு நிறைந்த

திருவோத்தூர்தனில் மேவும் பெருமாளே. … திருவோத்தூர்*5

என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

திருவோத்தூரில் பனைமரங்கள் ஆண்பனையாக இருந்தமை கண்டு சமணர்கள் பரிகசிக்க, அவ்வூரில் சிவனைத் தரிசித்த ஞானசம்பந்தர் (குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர் என்ற) தேவாரத்தைப் பாட, ஆண்பனைகள் யாவும் குலைதள்ளி பனம் பழங்களைக் கொட்டின. பனைகளின் பிறப்பும் ஒழிந்தன.

(1)   (2) (3) இவையாவும் சமண குருமாரைக் குறிப்பன:

***

அந்தகாசுரன் அழிந்த கதை

பாடு அம்பு ஆர் திரி சூல நீடு அந்தக அர வீர பாசம் தா

திருமாலின் மருகோனே … பெருமை வாய்ந்த அம்பு போல கூர்மை

வாய்ந்த முத்தலைச் சூலத்தால், மேம்பட்டு நின்ற அந்தகாசுரனை*

வருத்தின வீரனாகிய சிவன் மீது அன்பைப் பொழியும் திருமாலின்

மருகனே,

வேல் அம்பு ஆர் குற மாது மேல் உம்பார் தரு மாதும் வீறு

அங்கே இரு பாலும் உற வீறு … வேல் போலவும் அம்பு போலவும்

(உள்ள கண்களைக் கொண்ட) குறப் பெண்ணாகிய வள்ளியும், தேவர்கள்

வளர்த்த தேவயானை அம்மையும் பெருமிதத்துடன் அங்கே இரண்டு

புறமும் பொருந்த விளங்க

வேத அந்தா அபிராம நாத அந்தா … வேதத்தின் முடிவில்

இருப்பவனே, அழகனே, ஒலியின் முடிவில் இருப்பவனே,

அருள் பாவு வேலங்காடு உறை சீல பெருமாளே. …

திருவருளைப் பரப்பும் திருவேற்காட்டில்** வீற்றிருக்கும் தூயவனே,பெருமாளே.

அந்தகாசுரன் அரக்கன் இரணியனுக்கு மைந்தன், பிரகலாதனுக்குத் தம்பி.இவன் தேவர்களை வ ருத்த, சிவபெருமான் பைரவ மூர்த்தியை ஏவினார்.அவர் சூலத்தினால் அந்தகாசுரனைக் குத்தி அடக்கினார்.

** திருவேற்காடு, சென்னையின் அருகிலுள்ள ஆவடி ரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கில் 4 மைலில் உள்ளது.

–Subham—

Tags – ஆண் பனை மரங்கள் காய்த்த கதை , அந்தகாசுரன் அழிந்த கதை , பஞ்ச சபை, Part 45

Leave a comment

Leave a comment