

Post No. 15,504
Date uploaded in London – 17 March 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 47
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 47
***
அகர உகர மகர — விளக்கம்
அகர உகரதி மகரதி சிகரதி … அகரம் போன்ற முதற்பொருளே, உகர சிவசக்தியாக விளங்கும் நல்லறிவே, மமகாரமாகிய ஆணவத்தைத்
தகிப்பவனே, சிவமாகிய தூய அறிவே,
(இதற்கு ஓம்காரப் பொருளே என்றும் அர்த்தம் சொல்லலாம்; பிராணவமாகிய ஓம்- அ உ ம என்ற எழுத்துக்களால் ஆனது)
யகர அருளதி தெருளதி … யகரமாகிய ஜீவாத்மாவில் விளங்குபவனே, அதிகமான அருளே, மிகுந்த ஞானமே,
வலவல அரண முரணுறும் … மிகுந்த வல்லமை படைத்த காவற் கோட்டையில் இருந்த பகைமை பூண்ட
அசுரர்கள் கெடஅயில் விடுவோனே … அசுரர்கள் அழியும்படிவேலைச் செலுத்தியவனே,
அழகும் இலகிய புலமையு மகிமையும் … அழகும், விளங்கும் கல்விஞானமும், பெருமையும்,
வளமும் உறைதிரு மயிலையில் அநுதினம் … செழிப்பும் நிலைத்த மயிலாப்பூரில் நாள் தோறும்
அமரும் அரகர சிவசுத அடியவர் பெருமாளே. … வீற்றிருக்கும், ஹர ஹர கோஷத்துக்கு உரியவருமான, சிவபிரானின் மைந்தனே, அடியவர்கள்தம் பெருமாளே.
***
திருமால் முழவு வாசிக்க, பிரமன் தாளம் போட, சிவன் நடனம் ஆடினார்
அரி மத்தளம் மீது ஆர் தேம் முழ திடு என … திருமால் மத்தளம்
வாசிக்கும் இடத்தில் முழவு வாத்தியத்தை திடு திடு என்று வாசிக்க,
மிக்கு இயல் வேதாவே தொழு திரு நடம் இட்டவர் காதே
மூடிய குரு போதம் உரை செய்யும் உத்தம வீரா … மிகுந்த தகுதி
வாய்ந்த பிரமனும் (தாளம் போட்டுத்) தொழுகின்ற போது, திரு நடனம் செய்கின்ற சிவபெருமான் தமது செவிகளை (உபதேசம் கேட்க) பொத்தச் செய்த ஞானகுருவாக இருந்து ஞானப் பொருளை உபதேசித்த மேலானவனே, வீரனே,
நாரணி உமையவள் உத்தர பூர்வ ஆகார அணி உறு ஜக
ரக்ஷணி நீர ஆவாரணி தரு சேயே … நாராயணி, உமையவள்,
வடக்கு கிழக்கு முதலிய திசைகளின் ஆதி தேவதை, உலகை மிகவும் காப்பவள், மறைக்கின்ற (திரோதான) சக்திக் குணம் உடையவள் ஈன்ற குழந்தையே,
உயர் வரம் உற்றிய கோவே ஆரண மறை முடி வித்தக தேவே
காரண … உயர்ந்த வரங்களைத் தரும் தலைவனே, வேத
உபநிஷதங்களின் முடிவில் விளங்கும் ஞானியே, மூல காரணனே,
ஒரு மயிலைப் பதி வாழ்வே தேவர்கள் பெருமாளே. … ஒப்பற்ற
மயிலாப்பூரில்* வாழ்பவனே, தேவர்களின் பெருமாளே.
**
இதைக் கேட்டவுடன் நமக்கு நினைவுக்கு வருவது கோபால கிருஷ்ண பாரதியாரின் கீர்த்தனைகள்தான் :
நடனம் ஆடினார்…
ராகம்: வசந்தா
தாளம்: அட
பல்லவி
நடனம் ஆடினார் வெகு நாகரீகமாகவே கனக சபையில் ஆனந்த நடனம் ஆடினார்…
அநுபல்லவி
வடகயிலையில் முன்னால் மாமுனிக்கருள் செய்தபடி தவறாமல்
தில்லைப்பதியில் வந்து தை மாதத்தில் குரு பூசத்தில் பகல் நேரத்தில் நடனம் ஆடினார்…
சொல்கட்டு ச்வரம்
தாம் தகிட தகஜம் தகணம் தரிகும் தரிதீம் திமித தகஜம் தகிணம் தத னீ ச ரி ச ரி சா சா
ரி ச தா ச னி த த ரி ச சா த னி சா ச ச ச ரீ ச ரீ ரி ரீ ரி ரீ ச னி த ச ச ச ரி ச
ச ரி ச ச ச னி ச ரி ச ரி ச ச சா ச ரி ச னி தா தா த னி த த மா த ம க ரி ச
சரணம்
அஷ்டதிசையில் கிடுகிடென்று சேஷன்தலை நடுங்கஅண்டம் அதிர கங்கை துளி சிதற பொன்னாடவன் கொண்டாட நடனம் ஆடினார்…
இஷ்டமுடனே கோபாலக்ருஷ்ணன் பாட சடையாட அரவு படமாட அதிலே நடமாட தொம்தோமென்று பதவிகள்
தந்தோமென்று நடனம் ஆடினார்!
***
முருங்கைக்காயும் முருகனும்
கோயம்பேடு முருகன் !
முருங்கைக்காய் /காய்கறி மார்கெட்டுக்குப் பெயர் போன கோயம்பேட்டில் முருகனும் உண்டு
சீத மதி ஆடு அரவு ஏர் அறுகு மா இறகு சீத சலம் மா சடில
பரமேசர் சீர்மை பெறவே உதவு கூர்மை தரு வேல சிவ சீறி
வரு மா அசுரர் குலகாலா … குளிர்ச்சியான நிலா, ஆடும் பாம்பு,
அழகிய அறுகம் புல், கொக்கின் இறகு, குளிர்ந்த கங்கை நீர்
(இவைகளைக் கொண்ட) அழகிய சடையை உடைய சிவபெருமான்
உலகங்கள் செம்மை பெறவே தந்த கூரிய வேலனே, சிவனே, கோபித்து வரும் பெரிய அசுரர்கள் குலத்துக்கு யமனே,
கோதை குறமாது குண தேவ மட மாதும் இரு பாலும் உற
வீறி வரு குமரேசா … நல்லவளான குறப் பெண் வள்ளி, நற்குணம்
உள்ள தேவநாட்டு அழகிய மாது (தேவயானை) இரண்டு பக்கமும்
பொருந்த விளக்கத்துடன் வரும் குமரேசனே,
கோசை நகர் வாழ வரும் ஈச அடியர் நேச சருவேச முருகா
அமரர் பெருமாளே. … கோசை நகர்* எனப்படும் கோயம்பேட்டில்
வீற்றிருக்கும் ஈசனே, அடியார்களுக்கு அன்பனே, சர்வேசனே,
முருகனே, தேவர்களின் பெருமாளே.
* கோயம்பேடு சென்னை நகரின் ஒரு பகுதி.
***
கண்ணகி எரித்த மதுரையும் அனுமன் எரித்த இலங்கையும்!
இருவர் இட்ட தீயும் தீயோரை மட்டுமே பொசுக்கியது.
இலங்கையில் இலங்கிய இ(ல்)லங்களுள் இலங்கு அருள் இல்
எங்கணும் இலங்கு என முறை ஓதி … இலங்கையில் திகழ்ந்திருந்த
வீடுகளுள் முழுமையான அன்பு இல்லாத எல்லா இடத்திலும்,
அக்கினியே, பற்றி எரிவாயாக என்று நீதியை எடுத்துரைத்து,
இடும் கனல் குரங்கொடு நெடும் கடல் நடுங்கிட எழுந்தருள்
முகுந்தன் நன் மருகோனே … நெருப்பை வைத்த குரங்காகிய
அனுமனோடு, பெரிய கடலும் நடுக்கம் கொள்ளுமாறு கோபத்துடன் எழுந்தருளிய ராமனாகிய திருமாலின் மருகனே,
பெலம் கொ(ண்)டு விலங்கலும் நலங்க அயில் கொண்டு எறி
ப்ரசண்டகர தண் தமிழ் வயலூரா … பலத்துடன், கிரெளஞ்ச
மலையும் தூளாகும்படியாக வேல் கொண்டு எறிந்த மிக்க வீரம்
கொண்டவனே, தண்ணிய தமிழ் விளங்கும் வயலூரானே.
பெரும் பொழில் கரும்புகள் அரம்பைகள் நிரம்பிய பெருங்குடி
மருங்கு உறை பெருமாளே. … பெரிய சோலைகளும் கரும்பும்
வாழையும் நிறைந்த பெருங்குடிக்கு* அருகில் வீற்றிருக்கும் பெருமாளே.
* பெருங்குடி சென்னைக்கு அருகே பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தலம்.
சிலப்பதிகாரத்தில் கண்ணகி எரித்த மதுரை
பிராமணர்களையும் பெண்களையும் பொசுக்காதே என்று பிராமண வடிவில் வந்த அக்கினி பகவானுக்குக் கட்டளை பிறப்பித்தாள் கண்ணகி என்கிறார் பிராமண காவியம் இயற்றிய இளங்கோ அடிகள் !
பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர்
மூத்தோர், குழவி, எனும் இவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்க — வஞ்சின மாலை, சிலப்பதிகாரம்
—subham—
Tags- பிராமணர், பெண்கள், பொசுக்காதே பிராமண காவியம் இளங்கோ அடிகள் , பகுதி 47, அனுமன் , இலங்கை, முருங்கைக்காய், முருகன் , கோபாலகிருஷ்ண பாரதியார் , ஆடினார் நடனம் ஆடினார்