ஆறு சாஸ்திரங்கள், ஏழு குலகிரிகள்,  துவார பாலகர், ஏழிசை பெயர்கள்-Part 50 (Post.15,515)

Written by London Swaminathan

Post No. 15,515

Date uploaded in London – 20 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 50

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 50

திலகவதியார் புகழ்

மாது புகழை வளர்க்குந் திருவாமூர் … மாதரசி திலகவதியாரின்*

புகழை வளர்க்கும் தலமாம் திருவாமூரில்**

வாழு மயிலி லிருக்குங் குமரேசா … வாழுகின்ற குமரேசனே, மயில்

மீது வீற்றிருக்கும் குமரேசனே,

காத லடியர் கருத்தின் பெருவாழ்வே … அன்புள்ள அடியார்களின்

கருத்தில் உறையும் பெருஞ் செல்வமே,

காலன் முதுகை விரிக்கும் பெருமாளே. … யமனுடைய முதுகைப்

பிளக்கும்படி அடித்து விரட்டும் பெருமாளே.

* திலகவதியார் அப்பரின் தமக்கை. திருவாமூரில் வாழ்ந்து, அப்பரை சமணத்திலிருந்து சைவத்துக்கு மீட்டார். திருவாமூர் பண்ருட்டியிலிருந்து 5 மைலில் உள்ளது.

***

ஏழு மலைகளின் பெயர்கள் என்ன ?

அணிதரு கயிலை நடுங்க … அழகுள்ள கயிலைமலை நடுநடுங்க,

ஓரெழு குலகிரி யடைய இடிந்து தூளெழ … ஏழு குலகிரிகள்*

எல்லாமுமாய் இடிந்து தூள்பறக்க,

அலையெறி யுததி குழம்ப வேல்விடு முருகோனே … அலைவீசும்

கடல் கொந்தளித்துக் குழம்ப, வேலினைச் செலுத்தும் முருகனே,

அமலைமுன் அரிய தவஞ்செய் … தேவி முன்பு அரிய தவம் செய்த

பாடல வளநகர் மருவி யமர்ந்த தேசிக … பாடலவளநகராகிய

திருப்பாதிரிப்புலியூரில்** பொருந்தி வீற்றிருக்கும் குரு மூர்த்தியே,

அறுமுக குறமக ளன்ப மாதவர் பெருமாளே. … ஆறுமுகனே,

குறமகள் வள்ளியின் அன்பனே, பெரிய தவசிகளின் பெருமாளே.

ஏழு குலகிரிகள்:

இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஹேமகூடம், நீலகிரி, கந்தமாதனம்.

** திருப்பாதிரிப்புலியூர் கடலூருக்கு வடக்கே 3 மைலில் கெடில நதிக்கரையில் உள்ளது.

***

ஆறு சாஸ்திரங்கள் யாவை ?

சாத்திரம் ஆறையு நீத்த மனோலய … ஆறு* சாஸ்திரங்களையும்

கடந்து, மனம் லயித்து ஒடுக்கவல்ல

சாத்தியர் மேவிய பதவேளே … சாமர்த்தியசாலிகள் போற்றும்

திருவடிகளை உடைய வேளே,

தாத்தரி தாகிட சேக்கெனு மாநட … தாத்தரி தாகிட சேக் என்ற

தாளத்துக்கு ஏற்ப சிறந்த நடனம் செய்யும்

தாட் பரனார்தரு குமரேசா … பாதங்களை உடைய நடராஜப்

பெருமான் தந்த குமரேசனே,

வேத்திர சாலமது ஏற்றிடு வேடுவர் … அம்புக் கூட்டங்களைச்

சுமந்து திரியும் வேடர்களின்

மீக்கு அமுதாமயில் மணவாளா … மிக்க அமுதைப் போன்ற,

மயிலை ஒத்த, வள்ளியின் மணவாளனே,

வேத்தம தாம் மறை ஆர்த்திடு சீர் … அறியப் படுவதான

வேதங்களின் கோஷம் முழங்கும் அழகிய

திருவேட்கள மேவிய பெருமாளே. … திருவேட்களத்** தலத்தில்

வீற்றிருக்கும் பெருமாளே.

ஆறு சாஸ்திரங்கள் (சட்-தரிசனம்):

ந்யாய சாஸ்திரம்: கௌதமரால் அருளப்பட்டது. தர்க்கம் (Logic) மற்றும் அறிவின் ஆதாரங்களை (Epistemology) வலியுறுத்துகிறது.

வைஷேஷிக சாஸ்திரம்: கனாடரால் அருளப்பட்டது. பிரபஞ்சத்தின் அமைப்பு மற்றும் அணு கொள்கையை (Atomic theory) விளக்குகிறது.

சாங்க்ய சாஸ்திரம்: கபிலரால் அருளப்பட்டது. பிரகிருதி (இயற்கை) மற்றும் புருஷன் (ஆன்மா) என்ற இருமைத் தத்துவத்தை விளக்குகிறது.

யோக சாஸ்திரம்: பதஞ்சலியால் அருளப்பட்டது. மனதைக்கட்டுப்படுத்தி, ஆத்ம ஞானம் பெறுவதற்கான வழிமுறைகளை (யோக முறைகள்) கூறுகிறது.

மீமாம்ஸ சாஸ்திரம் (பூர்வ மீமாம்ஸா): ஜைமினியால் அருளப்பட்டது. வேதங்களில் கூறப்பட்டுள்ள கர்மகாண்டம் (சடங்குகள்) மற்றும் தர்மத்தை வலியுறுத்துகிறது.

வேதாந்த சாஸ்திரம் (உத்தர மீமாம்ஸா): பாதராயணரால் அருளப்பட்டது. உபநிடதங்களின் சாரமான பிரம்ம ஞானம் மற்றும் முக்தியை வலியுறுத்துகிறது.

இந்த சாஸ்திரங்கள் மனிதன் தனது வாழ்க்கை இலக்கை அடையவும், உண்மையை உணர்ந்து கொள்ளவும் வழிகாட்டுகின்றன.

***

இன்னுமொரு விளக்கம்

(1) வேதாந்தம் (உபநிஷதம்)

(2) வைசேஷிகம் (கணாதரால் ஸ்தாபிக்கப்பட்ட தர்க்க சாஸ்திரம்)

(3) பாட்டம் (குமாரில பட்டரால் பிரசாரம் செய்யப்பட்ட வேதமே தெய்வம் என்ற சாஸ்திரம்)

(4) ப்ரபாகரம் (ப்ரபகரன் என்பவரால் வேத வேதாந்தப் பொருட்களை ஆராயும் சாஸ்திரம்)

(5) பூர்வ மீமாம்சை (வேதத்தின் கர்ம காண்டத்தை ஆராய ஜைமினி முநிவர் இயற்றிய சாஸ்திரம்)

(6) உத்தர மீமாம்சை (வேதத்தின் பிற்பகுதியான ஞான காண்டத்தை ஆராய வியாசரால்  எழுதப்பட்ட பிரம்ம சூத்திரம் முதலிய சாஸ்திரம்.

***

ஈனர்லோபர்அசடர்பாதகர், பூரியர், மூடர்கள் –

அறிவி லாதவர் ஈனர் … அறிவு இல்லாதவர்கள், இழிவானவர்கள்,

பேச்சிரண்டு பகரு நாவினர் லோபர் … இருவிதமான பேச்சு பேசும்

நாவினை உடையவர்கள், கஞ்சர்கள்,

தீக் குணங்கள் அதிக பாதகர் … கெட்ட குணங்களையே

மேற்கொண்டு மிக்க பாவங்களைச் செய்பவர்கள்,

மாதர்மேற் கலன்கள் புனையாதர் … பொது மகளிருக்கு

நகைகளைப் புனைந்து பார்க்கும் அறிவிலிகள்,

அசடர் பூமிசை வீணராய்ப் பிறந்து திரியு மானுடர் … அசடர்கள்,

பூமியில் வீணாகக் காலத்தைப் போக்கப் பிறந்து திரிகின்ற மனிதர்கள்,

பேதைமார்க்கு இரங்கி யழியு மாலினர் … பெண்கள் மீது காம

இரக்கம் கொண்டு அழியும் மோக மனத்தினர்,

நீதிநூற் பயன்கள் தெரியாத நெறியிலாதவர் … நீதி நூல்களின்

பயன் தெரியாது, நன்னெறியில் போகாதவர்கள்,

சூதினாற் கவர்ந்து பொருள்செய் பூரியர் … சூதாட்டத்தால்

மற்றவர் பொருளைக் கவர்ந்து சேகரிக்கும் கீழ்மக்கள்,

மோகமாய்ப் ப்ரபஞ்ச நிலையில் வீழ்தரு மூடர்பால் … ஆசைப்பெருக்கால் உலக இன்பத்தையே விரும்பும் மூடர்கள் – இத்தகையோரிடம் சென்று,

சிறந்த தமிழ்கூறி … நல்ல தமிழ்ப் பாடல்களைப் பாடிக்காட்டி,

நினைவு பாழ்பட வாடிநோக்கு இழந்து … நினைவு தேய்ந்து, பாழ்பட்டு, வாட்டம் அடைந்து, பார்வை மங்கி,

வறுமை யாகிய தீயின்மேற் கிடந்து … வறுமை என்ற

நெருப்பின்மேல் கிடந்து

நெளியு நீள்புழு வாயினேற்கு இரங்கி யருள்வாயே … நெளியும் நீண்ட புழுப்போல ஆன என்னை இரக்கத்துடன் ஆண்டருள்வாயாக.

நறிய வார்குழல் வானநாட்டு அரம்பை மகளிர் …

நறுமணத்துடன் கூடிய நீண்ட கூந்தலை உடைய தேவநாட்டுப் பெண்கள்

காதலர் தோள்கள்வேட்டு இணங்கி … தங்கள் காதலர்களுடைய தோள்களை விரும்பித் தழுவி,

நகைகொடு ஏழிசை பாடிமேற் பொலிந்து களிகூர …

சிரிப்புடனே ஏழு ஸ்வரங்களிலும்* பாடி மகிழ்ந்து குலவவும்,

நடுவிலாத குரோதமாய்த் தடிந்த தகுவர் மாதர் … நியாயம்

இல்லாதவராய், கோபம் மிக்கவராய், அழிவுப்பாதையிலே செல்லும்

அசுரர்களின் மனைவியர்

மணாளர்தோட் பிரிந்து நசைபொறாது அழுது … தங்கள்

கணவரின் தோள்களைப் பிரிந்து, தமது பிரிவாற்றாமையை அடக்க

முடியாமல் அழுது,

ஆகமாய்த்து அழுங்கி யிடர்கூர … தங்கள் உடலைத் தாமே துன்புறுத்தி வருத்தமே பெருகவும்,

மறியும் ஆழ்கடலூடு போய்க் கரந்து … அலைகள் பொங்கும்

ஆழ்கடலின் உள்ளே சென்று ஒளிந்துகொண்டு,

கவடு கோடியின் மேலுமாய்ப் பரந்து … கிளைகள்

கோடிக்கணக்காய் கடல் மேல் விரிந்து

வளரு மா இரு கூறதாய்த் தடிந்த வடிவேலா … வளர்ந்த

மாமரமாய் நின்ற சூரன் இரண்டு கூறாகும்படி வெட்டிப் பிளந்த வேலாயுதனே,

மருவு காள முகீல்கள்கூட் டெழுந்து … பொருந்திய கரு மேகங்கள்கூட்டமாக எழுந்து,

மதியு லாவிய மாடமேற் படிந்த … நிலவொளி வீசும் உயர்ந்த

மாடங்களின் மீது படியும் தலமாம்,

வயல்கள் மேவுநெல் வாயில்வீற் றிருந்த பெருமாளே. …

வயல்கள் சூழ்ந்த திருநெல்வாயிலில்** அமர்ந்த பெருமாளே.

ஏழிசை:

குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என தமிழிசையில் முறையே வழங்கும்

ஸப்த ஸ்வரங்களான ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் ஆகும்.

** திருநெல்வாயில் சிதம்பரத்துக்குத் தென்கிழக்கில் 3 மைலில் உள்ள சிவபுரி என்ற தலம் ஆகும்.

***

துவார பாலகர் யார் ?

அடைத்தார் கடல் ஓர் வலி ராவண குலத்தோடு அரி ஓர்

சரனார் சினம் அழித்தார் முகில் ஏய் நிற ராகவர்

மருகோனே … கடலை அணையிட்டு அடைத்தவராய், ஒப்பற்ற வலிமை வாய்ந்த ராவணனை, அவன் குலத்தோடு அறுத்துத் தள்ளிய ஓர் அம்பைக் கொண்டவர், (அசுரர்களின்) கோபத்தை இவ்வாறு அழித்து ஒழித்தவர், மேகத்துக்கு ஒப்பான கருநிறம் கொண்ட ராமபிரானின் மருகனே,

அறுத்தார் அயனார் தலையே புரம் எரித்தார் அதிலே புலனார்

உயிர் அளித்தார் உடல் பாதியிலே உமை அருள்பாலா …

பிரமனின் தலையை அறுத்துத் தள்ளியவர், திரிபுரத்தை எரித்தவர், அந்தத் திரிபுரத்தில் இருந்த அறிவுள்ள (மூன்று) அசுரத் தலைவர்களின் உயிரைக் காத்தருளியவர்* ஆகிய சிவபெருமானின் பாதி உடலில் உள்ள உமாதேவி அருளிய குழந்தையே,

விடத்தார் அசுரார் பதி வேர் அற அடித்தாய் கதிர் வேல் கொடு

சேவகம் விளைத்தாய் … விஷம் போன்ற கொடிய குணம் வாய்ந்த

அசுரர்களுடைய ஊர்கள் வேருடன் அற்று விழ சம்ஹாரம் செய்தாய், ஒளி வீசும் வேலாயுதத்தால் வீரச் செயல்களைப் புரிந்தாய்,

குடி வாழ அமரோர் சிறை மிடி தீர விழித் தாமரை போல்

அழகா குற மகட்கு ஆன வ(ண்)ணா … தேவர்கள் சிறையும்

வறுமையும் நீங்கவும், அவர்கள் பொன்னுலகுக்குக் குடி போகவும்

செய்வித்த தாமரை போன்ற கண்களை உடைய அழகனே, குறமகள் வள்ளிக்குப் பிரியமுள்ள அழகனே,

என(து) தாய் உறை விருத்தாசலம் வாழ் மயில் வாகன

பெருமாளே. … என்னுடைய தாயான விருத்தாம்பிகை அமர்ந்துள்ள விருத்தாசலத்தில் வாழும் மயில் வாகனப் பெருமாளே.

வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள் பொன், வெள்ளி, இரும்பு இவைகளால் ஆகிய திரிபுரங்கள் என்ற பறக்கும் பட்டணங்களைக் கொண்டு அனைவரின் மேலே விழுந்துத் துன்புறுத்தினர். ஆதலால் சிவபெருமான், அவர்களை எரித்தபோது, சிவ வழிபாட்டால் மாளாது பிழைத்த மூவரில், இருவர் கோயில் காவலாளர் ஆனார்கள். மற்றவர் முழவு முழக்கும் பேற்றினை அடைந்தார்  – சுந்தரர் தேவாரம்.

–subham—

Tags- துவார பாலகர், ஏழிசை, ஆறு சாஸ்திரங்கள் (சட்-தரிசனம்), ஏழு மலை, குல கிரிகள்,  பெயர்கள் , Part 50, திலகவதியார் புகழ்

Leave a comment

Leave a comment