கண்ணனுடன் 16,000 பெண்கள்! திருப்புகழில் ரத்தினைக் கற்கள் -53 (Post.15,525)

Written by London Swaminathan

Post No. 15,525

Date uploaded in London – 23 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

53திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 53

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 53

***

கண்ணனுடன் 16,000 பெண்கள் !

காம பாணம் அட்டு அநந்த கோடி மாதரைப்புணர்ந்த …

மன்மதனது பாணம் வருத்தினதால், கணக்கில்லாத மாதர்களைக் கலந்த*

காளை யேறு கர்த்த னெந்தை யருள்பாலா … திருமாலாகிய

ரிஷபத்தின்** மேல் ஏறிய தலைவன், எம் தந்தை சிவன் அருளிய பாலனே,

சேலை நேர்விழிக்குறம்பெணாசை தோளுறப்புணர்ந்து … சேல்

மீனைப் போன்ற கண்ணையுடைய குறப்பெண் வள்ளியை ஆசையுடன் அவள் தோள் பொருந்தச் சேர்ந்து உறைபவனே,

சீரை யோது பத்தரன்பிலுறைவோனே … உன் புகழை ஓதும்

பக்தர்களின் அன்பில் வீற்றிருப்பவனே,

தேவர் மாதர் சித்தர் தொண்டர் ஏக … தேவர்களும், பெண்டிரும்,

சித்தர்களும், அடியார்களும் சென்று வணங்கும்

வேளுருக்கு உகந்த … புள்ளிருக்கும் வேளூர் ஆகிய வைத்தீசுரன்

கோயில் என்னும் தலத்தை உகந்த பெருமாளே,

சேவல் கேது சுற்று உகந்த பெருமாளே. … சேவற்கொடி

சுற்றியிருக்க மகிழும் பெருமாளே.

கண்ணபிரான் நரகாசுர வதை செய்துப் பின் கொண்டுசென்ற மந்தரமலையின் சிகரத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த தேவ, கந்தர்வ, சித்த கன்னிகைகள் பதினாயிரம் பேரையும் மணந்து கொண்டு, கண்ணன் துவாரகையில் வாழ்ந்தான் என விஷ்ணு புராணம் கூறுகிறது.

** திரிபுர சம்ஹாரத்துக்கு சிவன் எழுந்த தேர் அச்சு அறுந்து விழுந்த போது, தேர் நிலை கலங்க, திருமால் ரிஷப உருவத்தில் சிவபிரானைத் தாங்கினார் – சிவ புராணம்.

***

ஆழ்வார் பாடலிலும் இது உள்ளது

நரகாசுரனிடமிருந்து 16,000 தேவியரை மீட்ட செய்தி

பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்சப் புணர்முலை வாய்மடுக்க

வல்லானை மாமணி வண்ணனை மருவுமிடம் நாடுதிரேல்

பல்லாயிரம் பெருந்தேவிமாரொடு பௌவம் ஏறி துவரை

எல்லாரும் சூழச் சிங்காசனத்தே இருந்தானைக் கண்டாருளர்.–பெரியாழ்வார் திருமொழி 4-1

அரக்கனான நரகாசுரன் வதம் செய்யப்பட்ட தினத்தைத்தான் தீபாவளியாக நாம் கொண்டாடுகிறோம் ;பிரக்யோதிஷ்பூர் என்னும் கிழக்கு இந்திய பகுதியின் மன்னனாக இருந்தவன் நரகாசுரன்.  கடும் தவம் இருந்த நரகாசுரன், பிரம்மனிடமிருந்து ஒரு வரத்தைப் பெறுகிறான். ஆண்கள் எவராலும் கொல்லப் படக்கூடாது என்ற வரத்தைப் பெறுகிறான்  அதன் பிறகு நரகாசுரனின் அட்டகாசம் அதிகரிக்கிறது.  16 ஆயிரம் பெண்களை கடத்தி வந்து தன் அந்தப்புரத்தில் சிறை வைத்தவன்.  தேவர்கள் எல்லோரும்  கிருஷ்ணனை சந்தித்தனர். விடுதலை தர வேண்டும் என முறையிட்டனர்.

கிருஷ்ணர் களம் இறங்கினார். நரகாசுரன் பெற்ற வரம் குறித்து அறிந்த கிருஷ்ணர், தனது ரத சாரதியாக மனைவி சத்யபாமாவை (இவர் பூதேவயின் மறு உருவம் என்பதால்) அழைத்துக் கொண்டு கிளம்புகிறார். நரகனுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே கடும் சண்டை தொடங்குகிறது. அப்போது நரகாசுரன் விட்ட ஒரு அம்பு தாக்கி கிருஷ்ணன் மயக்கமடைகிறார். இதையடுத்து சத்யபாமா, வில்லை எடுத்து, அம்பைத் தொடுத்து நரகாசுரனைக் குறி பார்த்து தாக்குகிறார். நகராசுகரன் வீழ்கிறான். பின்னர் கிருஷ்ணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார்.

***

திருப்புகழில் ரத்தினைக் கற்கள்

சுழலும் எனது உயிர் மவுன பரம சுகம் மகா உததி படியாதோ …

சுழல்கின்ற என்னுடைய உயிர் மவுன நிலை என்கின்ற பரம சுகம் ஆகிய பெரிய கடலில் மூழ்கித் திளைக்காதோ?

கவள கர தல கரட விகட கபோல பூதர முகமான … வாயளவு

கொண்ட உணவை உட்கொள்ளும் துதிக்கையையும், மதம் பாயும் சுவடு கொண்ட அழகிய கன்னத்தையும், யானையின் முகத்தையும் கொண்ட

கடவுள் கணபதி பிறகு வரும் ஒரு காரணா கதிர் வடிவேலா …

கடவுளாகிய கணபதிக்குப் பின்னால் தோன்றிய ஒப்பற்ற மூலப்

பொருளே, ஒளி வீசும் வடி வேலனே,

பவள மரகத கநக வயிர கபாட கோபுர அரி தேரின் பரியும்

இடறிய புரிசை தழுவிய பாகை மேவிய பெருமாளே. …

பவளத்தின் செந்நிறத்தையும், மரகதத்தின் பச்சை நிறத்தையும்,

பொன்னின் மஞ்சள் நிறத்தையும், வைரத்தின் வெண்மை நிறத்தையும் கொண்ட கதவுகளையும், கோபுரத்தையும் கொண்டு, சூரியனது தேரின் குதிரைகளும் இடறும்படி உயர்ந்துள்ள மதில்கள் சூழ்ந்துள்ள பாகை*என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

பாகை மாயூரத்திற்கு அருகே கடற்கரையை ஒட்டி உள்ள பாகசாலை என்னும் தலம்.

***

கபடிகள் அசடிகள்விகடிகள் ,கசடிகள்திருடிகள் !

விலைமாதர்கள் பற்றி உலகில் அதிகமாகப்  பாடியவர் அருணகிரிநாதர்தான் 1311 திருப்புகழில் பெரும்பாலாவற்றில் ன  முதல் பகுதி விலைமாதர்கள் பாற்றியதே. தனது இளமைக் காலத்தை  அவர்கள்  பாழ் படுத்தியதால் வேறு எவரும் அத்துன்பத்துக்கு ஆளாக்கக்கூடாது என்று ஆயிரம் பாடல்களுக்கும் அதிகமாக வேசிகளைப் பேசியுள்ளார்;  ஏசியுள்ளார் ; இதோ ஒரு பாடல் :

முலை குலுக்கிகள் கபடிகள் வடி புழுக்கைகள் அசடிகள்

முறை மசக்கிகள் திருடிகள் … எப்போதும் தங்கள் மார்பகத்தைக்குலுக்குபவர்கள். வஞ்சனை மனம் உடையவர். வடித்து எடுக்கப்பட்ட இழிந்தவர்கள். முட்டாள்கள். உறவு முறை கூறி மயங்கச் செய்பவர்கள். திருடிகள்.

மதவேள் நூல் மொழி பசப்பிகள் விகடிகள் அழு மனத்திகள் தகு நகை முக மினுக்கிகள் கசடிகள் இடையே சூழ் கலை நெகிழ்த்திகள் … மன்மதனுடைய காம நூலில் கூறியவாறு பேச்சினால்

ஏய்ப்பவர்கள். செருக்கு உடையவர். சிணுங்கி அழுகின்ற மனத்தை உடையவர்கள். தக்க சிரிப்புடன் முகத்தை மினுக்குபவர்கள். குற்றம்  உடையவர்கள். இடுப்பில் சூழ்ந்துள்ள ஆடையைத் தளர்த்தி விடுபவர்கள்.

இளைஞர்கள் பொருள் பறித்து அமளியின் மிசை கனி இதழ்ச்

சுருள் பிளவு இலை ஒரு பாதி கலவியில் தரும் வசவிகள் விழி

மயக்கினில் வசம் அழி கவலை அற்றிட நினது அருள்

புரிவாயே … இளைஞர்களின் பொருளை அபகரித்து, படுக்கையில் கனி போன்ற தங்கள் வாயிதழில் உள்ள சுருள் பாக்கு வெற்றிலையில் ஒரு

பாதியை புணர்ச்சி நேரத்தில் கொடுக்கும் கெட்ட நடத்தை உடையவர்கள் (ஆகிய விலைமாதர்களின்) கண் மயக்கில் நான் வசம் அழியும் கவலை என்னை விட்டு ஒழிய உன் திருவருளைப் புரிவாயாக.

***

அருணகிரிநாதருக்கு முருகன் கொடுத்த தீட்சை

தலை நாளில் பதம் ஏத்தி அன்புற உபதேசப் பொருள்

ஊட்டி … வாழ்வின் தொடக்கத்தில் உன் திருவடியை என் தலை மேல் வைத்து, அன்புடன் உபதேசப் பொருளை எனக்குப் போதித்து,

மந்திர தவ ஞானக் கடல் ஆட்டி என்தனை அருளால் … சிவ

மந்திரங்களால் என்னைத் தவ ஞானக் கடலில் ஆட்டுவித்து, என்னை

உனது திருவருளால்

உன் சதுர் ஆகத்தோடு கூட்டி அண்டர்கள் அறியா முத்தமிழ்

ஊட்டி … உன்னைச் சார்ந்த சாமர்த்தியம் உள்ள அடியார்களோடு கூட்டி வைத்து, தேவர்களும் அறியாத முத்தமிழ் ஞானத்தைப் புகட்டி,

முண்டக தளிர் வேதத் துறை காட்டி மண்டலம் வலம் மேவும் …

முண்டக உபநிஷதம் முதலிய உபநிஷத உண்மைகளையும் வேத

வழிகளையும் புலப்படுத்தி, அக்கினி முதலிய மும் மண்டல ங்களையும் உள்ள மேலிடத்தில்,

கலை சோதிக் கதிர் காட்டி நன் சுடர் ஒளி நாதப் பரம் ஏற்றி …

இடைகலை பிங்கலை* என்னும் நாடிகளின் மார்க்கமாக ஏற்படும் ஜோதி ஒளியைத் தரிசனம் செய்து வைத்து, ஆன்மாவை நல்ல பேரொளி உள்ளபர நாதத்தோடு (பரசிவத்தோடு) சேர்த்து வைத்து,

முன் சுழி கமழ் வாசல் படி நாட்டமும் கொள விதி தாவி …

முன்னதாக, சுழி முனை நாடி விளங்கும் வாசற்படியில் தியானம்

கொள்ள, சுவாதிஷ்டான** ஆதாரத்தைக் கடந்து,

கமல ஆலைப் பதி சேர்த்து முன் பதி வெளியாகப் புக ஏற்றி …

யோக ஒளியை ஏற்றி வைத்து, (குண்டலினி என்னும் மகத்தான சக்தியை எழுப்பி தலையில் உள்ள ஆறாவது சக்கரத்துக்கு கொண்டு சென்றால் அமுதம் சுரக்கும். அதை அனுபவிக்கும் நிலை எல்லையில்லாத ஆனந்தம் அளிக்கும்.)

சஹஸ்ராரம் (Sahasrara) என்பது மனித உடலின் ஏழாவது மற்றும் மிக உயர்ந்த சக்கரமாகும், இது தலை உச்சியில் அமைந்துள்ளது (Crown Chakra). ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரையாகக் குறிக்கப்படும் இது, பிரபஞ்ச சக்தியுடன் ஆன்மா இணையும் இடம், பேரானந்தம், ஞானம் மற்றும் உச்சக்கட்ட ஆன்மீக உணர்தலை உணர்த்துகிறது.

அன்பொடு கதிர் தோகைப் பரி மேற் கொ(ள்)ளும் செயல்

மறவேனே … அன்புடன் ஒளி வீசும் தோகையை உடைய மயில்

வாகனத்தின் மேல் நீ வந்து அருளிய செயலை நான் மறக்க மாட்டேன்.

……………………………..

சுரர் போற்று(ம்) தண் பொழில் வழுவூர் நல் பதி வீற்றிருந்து

அருள் பெருமாளே. … வழுவூர்*** என்னும் நல்ல ஊரில் வீற்றிருக்கும்பெருமாளே.

இப்பாடல் அருணகிரிநாதர் திருவடி தீக்ஷை, உபதேசம் முதலிய பேறுகளைப் பெற்ற வரலாற்றைக் குறிக்கும்.

–aubham—

Tags- கண்ணனுடன் 16,000 பெண்கள், திருப்புகழில் ரத்தினக் கற்கள், பகுதி -53, விலைமாதர்கள்

Leave a comment

Leave a comment