அவனிபுகழ் சோமநாதன் யார்?  அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 55 (Post No.15,532)

Written by London Swaminathan

Post No. 15,532

Date uploaded in London – 25 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

55திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 55

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 55

***

அவனிபுகழ் சோமநாதன் யார்?

அரிவையொரு பாகமான அருணகிரி நாதர் பூசை … தேவியை

ஒருபாகத்தில் கொண்ட அருணாசலேஸ்வரர் பூஜையை

அடைவு தவறாது பேணும் அறிவாளன் … ஒழுங்கு தவறாமல்

புரிந்து வருகின்ற அறிவாளியும்,

அமணர்குல காலனாகும் … சமணர் குலத்துக்கு ஒரு யமனாகத்

தோன்றியவனும்,

அரியதவ ராஜராஜன் … அருமையான தவங்கள் பல செய்ததவராஜனும்,

அவனிபுகழ் சோமநாதன் மடமேவும் முருக … இந்த உலகெல்லாம் புகழ்பவனும் ஆன சோமநாதனுடைய* ஊராகிய சோமநாதன்மடத்தில் வீற்றிருக்கின்ற முருகனே,

திருவண்ணாமலையாரை ஆத்மார்த்த மூர்த்தியாகக் கொண்டு புத்தூரில் வாழ்ந்த தவசீலர் ஒருவர் சோமநாதன் என்ற பெயரோடு நியமம் தவறாது பூஜை செய்து வந்தார். அவர் புத்தூரில் ஒரு மடத்தில் முருகனையும் துதித்து வந்தார். அந்த இடமே சோமநாதன்மடம் என்று வழங்கப்படுகிறது. வட ஆற்காட்டு

மாவட்டத்தில் ஆரணி வட்டத்தில் புத்தூர் உள்ளது.

***

ஞானப்ரசங்கத் திருப்பெருந்துறை

.தனத்த குந்தகு தானன தந்தக் கொதித்து வந்திடு சூர் உடல்

சிந்தச் சலத்துடன் கிரி தூள் பட எறிந்திட்டிடும் வேலா …

தனத்த குந்தகு தானன தந்த என்ற ஓசையுடன் கோபித்து எழுந்து

(போருக்கு) வந்த சூரனுடைய உடல் அழியவும், கடல் வற்றிப்

போவதுடன் கிரெளஞ்ச மலை பொடிபடவும் வேலாயுதத்தை எறிந்தவனே,

சிரத்துடன் கரம் ஏடு பொழிந்திட்டு இரைத்து வந்து

அமரோர்கள் படிந்துச் சிரத்தினும் கமழ் மாலை மணம் பொன்

சரணோனே … தலை வணக்கத்துடன் கையிலுள்ள மலர்களைப்

பொழிந்து போற்றி செய்யும் தேவர்கள் அவர்களது சிரத்தில் தலையில் மணக்கின்ற மாலைகளின் நறு மணத்தைப் பெற்ற அழகிய திருவடிகளை உடையவனே,

செகத்தினில் குருவாகிய தந்தைக்கு அளித்திடும் குரு …

உலகில் குருவாய் விளங்கும் உனது தந்தையாகிய சிவபெருமானுக்கு வேத உபதேசம் அளித்த பரமகுருவே,

ஞான ப்ரசங்க* திருப் பெருந்துறை மேவிய கந்தப்

பெருமாளே. … (உன் தந்தை) ஞானச் சொற்பொழிவு செய்த

தலமாகிய திருப்பெருந்துறையில்** விரும்பி வீற்றிருக்கும் கந்தப்

பெருமாளே.

நான்கு சைவக் குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் அரசனுக்காக  குதிரை வாங்கச் சென்றபோது திருப்பெருந்துறையில் சிவனே குரு மூர்த்தியாக இருந்து அடியார்களுக்கு ஞான உபதேசம் செய்வதைக் கண்டுத் தாமும்

இழுக்கப்பட்டு அவ்வடியர்களுடன் உபதேசம் பெற்றார். அதனால் ஞானப்ரசங்கத் திருப்பெருந்துறை எனப்பட்டது.

** இது அறந்தாங்கி ரயில் நிலையத்தில் இருந்து 8 மைலில் உள்ளது.

***

எனதிடர் மங்கஉனதருள் பொங்க  கழல்தாராய்!

இருவினை யஞ்ச … சஞ்சித வினை, பிராரப்த வினை ஆகிய இருவினைகளும் பயப்படும்படியாக,

வருவினை கெஞ்ச … இனி வந்து தாக்க இருக்கும் (ஆகாமிய) வினை தான் வரவில்லை என்று கெஞ்சிக் கூத்தாடி விலக,

இருள்பிணி துஞ்ச … இருண்ட நோய்கள் வாராது மாய்ந்து போக,

மலம் மாய … ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் அழிந்தொழிய,

எனதிடர் மங்க … எனது துயரமெல்லாம் குறைந்துபோக,

உனதருள் பொங்க … உனது திருவருள் பெருக,

இசைகொடு துங்க புகழ்கூறி … இசையுடன் உன் பரிசுத்தமான திருப்புகழைப் பாடி,

திருமுக சந்த்ர … சந்திரன் போன்ற அழகிய திருமுகத்தை உடையோனே,

முருக கடம்ப சிவசுத கந்த … முருகா, கடம்பா, சிவகுமாரா, கந்தா,

குகவேல சிவசிவ என்று … குகா, வேலா, சிவசிவ என்று கூறி

தெளிவுறு நெஞ்சு திகழ … அதனால் தெளிவுபெற்ற என் நெஞ்சு பொலிவு அடைவதற்காக

ந டஞ்செய் கழல்தாராய் … நடனம் செய்யும் உன் திருவடிகளைத் தந்தருள்வாய்.

***

முருகனின் யானை வாஹனம்

செழு மத கரி நீல கோமள அபி நவ மயில் ஏறு சேவக செய

செய முருகா குகா வளர் கந்த வேளே … செழுமை வாய்ந்த

பிணிமுகம்* என்னும் யானை மீதும், நீல நிறம் உள்ள அழகிய நவீனமானமயில் மீதும் ஏறுகின்ற வலிமையாளனே, வெற்றி வேல் முருகனே, குகனே, புகழ் ஓங்கும் கந்த வேளே,

திரைபொரு கரை மோது(ம்) காவிரி வருபுனல் வயல் வாவி

சூழ்தரு திருவிடை மருதூரில் மேவிய தம்பிரானே. … அலைகள்

ஒன்றோடொன்று போரிட்டு கரையில் மோதுகின்ற காவிரியில் வரும் நீர் பாயும் வயல்களும், குளங்களும் சூழ்ந்துள்ள திருவிடைமருதூரில்** வீற்றிருக்கும் தம்பிரானே.

முருகன் மயில் வாகனன் ஆகினும், அடியார்களை ஆட்கொள்வதற்கும், அருள் செய்வதற்கும், போர் புரிவதற்குப் புறப்படும்போதும் ‘பிணிமுகம்’ என்ற யானை வாகனத்தில் செல்வான் என்பர். பல தலங்களில் முருகனுக்கு பிணிமுக யானை வாகனமாக உள்ளது.

** திருவிடைமருதூர் கும்பகோணத்துக்கு அருகே வடக்கில் 5 மைலில் உள்ளது.

—subham—

Tags- சோமநாதன், ‘பிணிமுகம்’ , யானை வாகனம், அருணகிரிநாதர், அரிய செய்திகள் , Part 55

Leave a comment

Leave a comment