சப்தஸ்தான தலங்களின் பட்டியல், துஷ்டர்கள் பட்டியல் (Post No.15,535)

Thanjavur District Maps

Written by London Swaminathan

Post No. 15,535

Date uploaded in London – 26 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 56

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 56

துஷ்டர்கள் பட்டியல்

ஆசார வீனக் குதர்க்க துட்டர்கள் … ஆசார ஒழுக்கங்களில்

குறைபாட்டுடன் விதண்டாவாதம் செய்யும் துஷ்டர்கள்,

மாதாபிதாவைப் பழித்த துட்டர்கள் … தாய் தந்தையரை இழிவு

செய்யும் துஷ்டர்கள்,

ஆமாவின் ஊனைச் செகுத்த துட்டர்கள் … பசுவின் மாமிசத்துக்காக

அதைக் கொல்லும் துஷ்டர்கள்,

பரதாரம் ஆகாதெ னாமற் பொசித்த துட்டர்கள் … பிறர்

மனைவியை இச்சிக்கக் கூடாது என்ற நல்லறிவின்றி அனுபவித்த

துஷ்டர்கள்,

நானா வுபாயச் சரித்ர துட்டர்கள் … பலவித தந்திரச் செயல்களைச்

செய்த சரித்திரம் உடைய துஷ்டர்கள்,

ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள் … வெறியேற்றும் கள்ளைக்

குடித்த துஷ்டர்கள்,

தமியோர்சொம் கூசாது சேரப் பறித்த துட்டர்கள் … தனியாய்

அநாதையாக உள்ளவரின் சொத்தைக் கூசாமல் தமக்காகவே பிடுங்கி

எடுத்த துஷ்டர்கள்,

ஊரார்கள் ஆசைப் பிதற்று துட்டர்கள் … ஊரில் எல்லாரின்

ஆசைகளையும் தாமே கொண்டு அறிவின்றிக் குழறும் துஷ்டர்கள்,

கோலால வாள்விற் செருக்கு துட்டர்கள் … ஆரவாரத்துடன்

வாளாலும் வில்லாலும் போர் செய்து அகந்தை கொண்டு திரியும்

துஷ்டர்கள்,

குருசேவை கூடாத பாவத்து அவத்த துட்டர்கள் … குருவின்

சேவை கிடைக்கப் பெறாத பாவமும் பிழையும் கொண்ட துஷ்டர்கள்,

ஈயாது தேடிப் புதைத்த துட்டர்கள் … மற்றவர்க்குக் கொடுக்காமல்

பொருளைத் தேடித் தேடி மறைத்துச் சேகரிக்கும் துஷ்டர்கள்,

கோமாள நாயிற் கடைப்பி றப்பினில் உழல்வாரே … இந்த

துஷ்டர்கள் அனைவரும் பைத்தியம் பிடித்த நாயை விட இழிவான பிறப்பை அடைந்து அதில் துன்புறுவார்கள்.

***

ராமன்அனுமன்பகீரதன் பற்றி

நிகர் இல் வஞ்சக மாரீச ஆதிகள் தசமுகன் படை கோடா

கோடிய நிருதரும் பட ஓர் ஏய் ஏவியே அடு போர் செய்

நெடியன் … வஞ்சகச் செயல்களில் நிகரற்ற மாரீசன் முதலிய அரக்கர்கள்,

ராவணன், அவனுடைய கோடிக் கணக்கான சேனைகள் யாவரும்

அழியும்படி ஒப்பற்ற அம்பைச் செலுத்திக் கொல்லும் போரைச் செய்த நெடியோனாகிய மாயோனும்,

அங்கு அனுமானோடே எழுபது வெ(ள்)ளம் கவி சேனா

சேவித நிருபன் அம்பரர் கோமான் ராகவன் மருகோனே …

அங்கு அனுமனோடு எழுபது வெள்ளம் குரங்குப் படையால் வணங்கப்

பெற்ற அரசனும், தேவர்களுக்குத் தலைவனும் ஆகிய ராமனுக்கு மருகனே,

சிகர உம்பர்கள் பாகீராதிகள் பிரபை ஒன்று பிராசாதாதிகள்

சிவ சடங்கமொடு ஈசானாதிகள் சிவ மோனர் தெளியும் மந்த்ர

கலா பாய் யோகிகள் அயல் விளங்கு சுவாமீ … மேலான

தேவர்கள், பகீரதன்* முதலிய அடியார்கள், ஒளி பொருந்திய அருள்

பெற்றவர்கள், சிவ சம்பந்தமான கிரியைகளில் வல்ல ஈசானன் முதலியோர், சிவ மெளனிகள், தெளிந்துள்ள மந்திர சாத்திரத்தில் பாயும் மனத்தை உடைய யோகிகள், இவர்கள் யாவரும் பக்கத்தில் விளங்கும் சுவாமியே,

காமரு திரு வலஞ்சுழி வாழ்வே தேவர்கள் பெருமாளே. …

அழகிய நகராகிய திருவலஞ்சுழியில்** வாழ்பவனே, தேவர்களின்

பெருமாளே.

பகீரதன் சூரிய வம்சத்து அரசன். கங்கையை உலகிற்கு வரவழைத்தவன். வல்லக்கோட்டையில் முருகனைப் பூஜித்தவன்.

** திருவலஞ்சுழி கும்பகோணத்துக்கு அருகே உள்ளது.

***

மன்மதனின் மறுபெயர்

Manmatha and Rathi

சம்ப ராரியைக் கொன்ற தீவிழிச் சம்பு போதகக் குருநாதா …

மன்மதனைக்* கொல்வித்த நெருப்புக் கண்ணை உடைய சிவனுக்கு உபதேசம் செய்த குருநாதனே,

சண்ட கோபுரச் செம்பொன் மாளிகைத் தஞ்சை மாநகர்ப்

பெருமாளே. … திண்மை வாய்ந்த கோபுரமும், செம்பொன்னால்

கட்டப்பட்ட மாளிகையும் கொண்ட தஞ்சை மாநகரில் வீற்றிருக்கும் பெருமாளே.

* ‘சம்பரன்’ என்ற அசுரனை மன்மதன் தனது மறு பிறப்பில் கொன்றதால்,’சம்பராரி’ என்று மன்மதனுக்குப் பெயர் உண்டு.

***

கற்பக மரத்தைக் கொணர்ந்தவன்


Krishna with Rukmini and Sathyabhama

இந்த்ர தாருவை ஞால(ம்) மீதினில் கொணர்ந்த சங்க

பாணியன் ஆதி கேசவ ப்ரசங்கன் என்று வாழ் மணி மார்பன்

வீர விக்ரமன் தன் மருகோனே … இந்திரலோகத்து கற்பக

விருட்சத்தை பூமிக்குக் கொண்டு வந்தவன், பாஞ்ச சன்னியம் என்னும் சங்கைக் கையில் ஏந்தியவன், ஆதிகேசவன் என்னும் கீர்த்தியைப் பெற்றவன், சூரியனுடைய ஒளி போன்று என்றும் பிரகாசிக்கும் கெளஸ்துபம் என்னும் மணியை மார்பில் அணிந்தவன், வீர வல்லமை வாய்ந்தவனாகிய திருமாலின் மருகனே,

எண் திசா முக வேலை ஞாலம் முற்று(ம்) மண்டு கந்த …

எட்டுத் திசைகளிலும் உள்ள கடலால் சூழப்பட்ட பூமி முற்றிலும்

நிறைந்து விளங்கும் கந்தனே,

தாருக சேனை நீறு பட்டு ஒதுங்க வென்று பேரொளி சேர்

ப்ரகாசம் விட்டு இலங்கு கதிர்வேலா … தாருகாசுரனும் அவன்

சேனையும் தூள்பட்டு அழிய அவர்களை வென்று, பெரும் புகழ்

கொண்ட ஒளி வீசி விளங்கும் கதிர் வேலனே,

சந்த்ர சேகரி நாக பூஷணத்தி அண்டம் உண்ட நாரணி ஆல

போஜனத்தி அம்பை தந்த பூரண ஞான வேள் குறத்தி துஞ்சு

மணி மார்பா … சந்திரனைச் சூடியவள், பாம்பை ஆபரணமாகக்

கொண்டவள், பூவுலகை உண்ட வைஷ்ணவி, ஆலகால விஷத்தை

உண்டவள், அம்பிகை ஆகிய பார்வதி பெற்ற ஞான பூரணனாகிய

முருகவேளே, குற மகளாகிய வள்ளி உறங்கும் அகன்ற மார்பனே,

சண்ட நீல கலாப வாசியில் திகழ்ந்து கஞ்சன் வாசவன் மேவி

வாழ் பதிக்கு உயர்ந்த தஞ்சை மாநகர் ராஜ கோபுரத்து

அமர்ந்த பெருமாளே. … அதி வேகம் கொண்டதும் நீலநிறத் தோகை

உள்ளதுமான மயிலாகிய குதிரை மீது விளங்கி, பிரமன், இந்திரன்

வீற்றிருந்து வாழும் தலைநகரான ஊர்களைக் காட்டிலும் மேலான

தஞ்சை மாநகரில் ராஜ கோபுரத்தில் அமர்ந்த பெருமாளே.

***

சப்தஸ்தான தலங்களின் பட்டியல்

சலசம் மேவிய பாத(ம்) நினைத்து முன் அருணை நாடு

அதில் ஓது திருப்புகழ் … தாமரையை ஒத்த உனது திருவடியைத்

தியானித்து, முன்பு திருவண்ணாமலை நாட்டில் நான் ஓதிய திருப்புகழை

தணிய ஓகையில் ஓத எனக்கு அருள் புரிவாயே … மனம் குளிர

மகிழ்ச்சியுடன் (எப்போதும்) ஓதும்படியான பாக்கியத்தை எனக்கு அருள் புரிவாயாக.

………………………………………

திருவின் மா மரம் ஆர் பழனப் பதி அயிலும் சோறவை

ஆளு(ம்) துறைப் பதி … லக்ஷ்மிகரம் பொருந்திய பெரிய மாமரங்கள்

நிறைந்த திருப்பழனம் [1] என்னும் தலம், உண்பதற்குரிய

திருச்சோற்றுத்துறை [2] என்ற தலம்,

திசையில் நான் மறை தேடிய முன் குடி … திசைகள் தோறும்

நான்கு வேதங்கள் (ஈசனைத்) தேடி அடைந்த பழம் பதியாகிய

திருவேதிக்குடி [3] என்ற தலம்,

விதி ஆதிச் சிரமும் மா நிலம் வீழ் தரு மெய்ப்பதி …

பிரமனுடைய முதல் (உச்சித்) தலை பெரிய பூமியில் (சிவபிரானால்)

கிள்ளி வீழ்த்தப்பட்ட திருக்கண்டியூர் [4] என்ற தலம்,

பதும நாயகன் வாழ் பதி நெய்ப்பதி திருவையாறுடன் ஏழு

திருப்பதி பெருமாளே. … தாமரையில் வாழும் நாயகனான சூரியன்

பூஜித்து வாழ்ந்த ஊராகிய திருப்பூந்துருத்தி [5] என்ற தலம்,

திருநெய்த்தானம் [6], திருவையாறு [7] என்ற தலங்களுடன், ஏழு

திருப்பதிகளில் (சப்தஸ்தானத்தில்**) வாழ்கின்ற பெருமாளே.

இவை திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர்,திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம், திருவையாறு என்னும் ஏழு தலங்கள் – தஞ்சாவூருக்கு அருகில் உள்ளன.

***

சாங்கிய யோகம்சுகப்பிரம்ம ரிஷி பற்றி

தாங்கு நிற்சரர் சேனா நீதர் உ(ன்)ன ஆங்கு ருத்ர குமாரா

கோஷண தாண்டவற்கு அருள் கேகீ வாகன துங்க வீரா …

(ஜைன மதக் கொள்கைகளை அனுஷ்டித்துத்) தாங்கி நின்ற

குருமார்களின் கூட்டமாகிய நீசர்கள் ஆழ்ந்து நினைக்கக் காரணமாக இருந்து, அங்கு (மதுரையில் திருஞானசம்பந்தராக) வந்த சிவ குமாரனே, பேரொலியுடன் நடனம் செய்த சிவபெருமானுக்கு உபதேசித்து அருளிய மயில் வாகனனே, உயர்ந்த வீரனே,

சாங்கிபற் சுகர் சீ நாத(ர்) ஈசுரர் இந்திரன் மெச்சிய வேலா

போதக சாந்த வித்தக ஸ்வாமி நீப அலங்கன் மார்பா … ஆத்ம

தத்துவத்தை விவரிக்கும் சாங்கிய யோகம் பயின்றவர்கள், சுகப் பிரம ரிஷி, லக்ஷ்மியின் நாதராகிய திருமால், சிவபெருமான், தேவேந்திரன் ஆகியோர் மெச்சிப் போற்றிய வேலனே, உபதேச குருவே, சாந்தமூர்த்தியே, அறிஞனே, சுவாமியே, கடப்ப மாலை அணிந்த மார்பனே,

பூங்குளத்திடை தாராவோடு அ(ன்)னம் மேய்ந்த செய்ப்பதி நாதா மா மலைபோன்ற விக்ரக சூரா அரி பகிரண்ட ரூபா … தாமரைப் பூ உள்ள குளத்தில் குள்ள வாத்துக்களுடன் அன்னப் பறவைகளும் மேய்ந்த வயலூர்ப் பெருமானே, பெரிய மலை போன்ற உருவத்தைக் கொண்டிருந்த சூரனுக்குப் பகைவனே, வெளி அண்டங்களாய் நிற்கும் உருவத்தனே,

போந்த பத்தர் பொ(ல்)லா நோய் போயிட வேண்ட அநுக்ரக போதா மேவிய பூந்துருத்தியில் வாழ்வே தேவர்கள் தம்பிரானே. … (உன் அடியை வேண்டி) வந்த அடியார்களின் பொல்லாத பிறவியாகிய நோய் ஓடிப் போக வேண்டிய அருள் செய்தஅறிஞனே, பொருந்திய திருப்பூந்துருத்தி என்னும் தலத்துச் செல்வமே, தேவர்கள் தம்பிரானே.

திருப்பூந்துருத்தி தஞ்சாவூருக்கு அருகில் உள்ள அஷ்ட வீரட்ட தலங்களில் ஒன்று.

–subham—

Tags – சாங்கிய யோகம், சுகப்பிரம்ம ரிஷி, சப்தஸ்தான தலங்  கள்,  பட்டியல் , துஷ்டர்கள் , திருப்புகழ்,  அருணகிரி நாதர் – Part 56

Leave a comment

Leave a comment