விடைகளைப் புது விதமாகத் தரும் புதிர் கவிதை! (Post No.15,534)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,534

Date uploaded in London – 26 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

சுபாஷிதச் செல்வம்

விடைகளைப் புது விதமாகத் தரும் புதிர் கவிதை!

ச. நாகராஜன்

விடையை முதலிலிருந்து படித்தும் பின்னாலிருந்து படித்தும் தரும் ஒரு புது வித சுபாஷிதம் இதோ:1

க்ஷோணோ கம் சஹ்தே கரோதி திவி கா ந்ருத்யம் ஷிவாயா: பதிர்

  பூதானாம் கமயுங்க்த ஜீவஹரணே கா  ராமசஸ்த்ரோ புரீ|

கம் ரக்ஷந்தி ச  ராகவ: பசுப்தே: கிம் வாஹனம் ப்ரோச்யதாம்

  ப்ராலோமப்ரதிலோமசாஸ்த்ரசதுரைரேகம் த்வயோருதரம் ||

இது ஒரு புதிர் கவிதை.

பூமி எதைத் தாங்குகிறது? விடை: பாரம்

சொர்க்கத்தில் யார் நடனமாடுகிறார்? விடை: ரம்பா -தேவலோகப் பெண்

உலகத்தில் உள்ள உயிர்களை எடுக்க பார்வதியின் கணவர் யாருக்கு அதிகாரம் அளித்திருக்கிறார்? விடை: காலம் (யமன்)

ராமரின் எதிரியான ராவணனின் நகரம் எது? விடை: லங்கா

நல்லவர்கள் யாரைக் காப்பாற்றுகின்றனர்? விடை: தீனம் (ஏழைளை)

சிவனின் வாகனம் எது? விடை: நந்தி

இந்தக் கவிதையில் உள்ள சிறப்பு என்னவெனில் இரண்டு இரண்டு கேள்விகளாக எடுத்துக் கொண்டால் விடையானது முதலிலிருந்தும் பின்னாலிலிருந்தும் படிக்கலாம்.

பா-ரம் (சம்ஸ்கிருத எழுத்துப்படியான எழுத்துக்கள்)  – திருப்பினால் வருவது ரம்பா

கா-லம் – லங்கா

தீ- னம் – நந்தி

2

பெண்ணின் பாதுகாப்பு!

பிதா ரக்ஷதி கௌமாரே பர்தா ரக்ஷதி யௌவனே |

புத் ரஸ்து ஸ்தாவிரே பாவே ந ஸ்த் ரீ ஸ்வாதந்தர்யமர்ஹதி ||

குழந்தைப் பருவத்தில் ஒரு பெண் குழந்தையை தகப்பனார் காப்பாற்றுகிறார். யௌவனப் பருவத்தில் கணவன் காப்பாற்றுகிறான். வயதான காலத்தில் அவளது மகன்கள் காப்பாற்றுகின்றனர். ஒரு பெண்ணானவள் பாதுகாப்பின்றி ஒரு போதும் விடப்படக் கூடாது.

(ஒரு பெண் என்பவள் மிகவும் மதிப்பு வாய்ந்தவள் என்பதால் அவள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையே இந்த செய்யுள் வலியுறுத்துகிறது.

3

எல்லா தேசமும் எமது தேசமே!

கோதிபார: சமர்தானாம் கிம் தூரம் வ்யவசாயினாம் |

கோ விதேஷ: சுவித்யானாம் க: பர: ப்ரியவாதினாம் ||

திறமைசாலிக்கு எந்த விஷயமும் பாரமாக இருக்காது.

கடுமையான உழைப்பவனுக்கு எந்த லட்சியமும் வெகு தூரத்தில் இருக்காது.

நன்கு படித்தவனுக்கு எந்த தேசமும் அன்னிய நாடாகாது.

இனிமையாகப் பேசுபவனுக்கு யாரும் அன்னியன் கிடையாது. (எந்த தேசமும் அவனது தேசமே!)

4

குலப்பெருமையைக் கூட்டும் மகன்!

ஏகேநாபி சுவ்ருக்ஷேண புஷ்பிதேன சுகந்திநா |

வாஸிதம் தத் வனம் சர்வம் சுபுத்ரேண குலம் யதா ||

ஒரே மரம் தான் என்றாலும் அதில் பூத்துக் குலுங்கும் மணமுள்ள மலர்களால் காடே நறுமணம் உடையதாகிறது. அதே போல நல்ல செயல்களைச் செய்யும் நற்குணமுள்ள ஒரு புத்திரன் குலம் முழுவதற்கும் நற்பெயரைத் தருகிறான்.

5

ஒட்டகத்தின் கல்யாணத்தில் கழுதைகளின் பாட்டு!

உஷ்ட்ராணாம் ஹி விவாஹேஷு கீதம் காயந்தி கர்தபா: |

பரஸ்பரம் ப்ரஷம்ஸந்தி அஹோ ரூபம் அஹோ த்வனி: ||

ஒட்டகத்தின் கல்யாண வைபவத்தில் கழுதைகள் பாடுகின்றன. பரஸ்பரம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு கழுதைகள் ஒட்டகங்களின் உடல் அழகை வர்ணிக்க ஒட்டகங்களோ கழுதைகளின் இனிய குரலைப் பாராட்டுகின்றன!

**

Leave a comment

Leave a comment