Hinduism through 500 Pictures in Tamil and English 44; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-44 (Post.15,537)

 English version posted as Part 43

நவக்ரஹங்கள்

முதலில் சுவையான செய்திகள்

பொதுவாக வைணவ கோயில்களில் நவக்ரஹ சந்நிதிகள் இருக்காது அபூர்வமாக இருக்கும். மது ரையில் கூடல் அழகர் பெருமாள் கோவிலில் நவக்ரஹ சந்நிதி உண்டு.

சைவ நவக்ரஹ  ஸ்தங்களுக்கு நிகராக வைணவ நவக்ரஹ ஸ்தலங்களும் உண்டு. தஞ்சை மாவட்டத்தில் பெரும்பாலான சைவத் ஸ்தலங்களும் திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பாலான வைணவ நவக்ரஹ ஸ்தலங்களும் இருக்கின்றன .

இதோ பட்டியல்

கோள்கள் —  சைவ தலம் –   வைணவ தலம்

சூரியன்- சூரியனார் கோயில்- ஸ்ரீவைகுண்டம்

சந்திரன் – திங்களூர் – வரகுணமங்கை- (NATHTHAM)

செவ்வாய்- வைத்தீஸ்வரன் கோயில்- திருக்கோளூர்

புதன்- திருவெண்காடு- திருப்புளியங்குடி

வியாழன் / குரு- ஆலங்குடி- ஆழ்வார் திருநகரி

சுக்கிரன் – கஞ்சனூர் – தென்திருப்பேரை

சனி – திருநள்ளாறு – பெருங்குளம்

ராகு- திருநாகேஸ்வரம்- இரட்டைத் திருப்பதி என்னும்

கேது – கீழப்பெரும்பள்ளம் – திருத்தொலைவில்லி மங்கலம்

***

கங்கை கொண்ட சோழபுரத்தில் அதிசயம்

கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள நவக்கிரஹ அதிசயம் பற்றி அதை படமாக வரைந்த பிரபல ஓவியர் சில்பி சொல்கிறார் :

“இங்கே அருமையான வேலைப்பாடுகளுடன் ஒரு நூதன அமைப்பு முறையில் ஒரே கல்லில் நவக்கிரகம் அமைந்திருக்கிறது . இதை வேறு எங்கிலும் காண முடியாது . நான்கு அடி சதுரத்தில் சூரிய பீடத்தைச் சுற்றி மற்ற கிரகங்கள் உள்ளன . சூரியனுள்ள இடம், தாமரை இதழ்களோடு கூடிய அழகிய சக்கரவடிவில் அமைந்திருக்கிறது

சனியின் தந்தையாகிய சூரியனுக்கு ஏழு குதிரைகள் பூட்டிய ரதம் ஏழு நிறங்க சூர்ய ஒளியில் இருப்பதாக விஞ்ஞானம் தெரிவிக்கறதல்லவா? அந்த ஏழு நிறங்களையும் புராணம் , ஏழு குதிரைகளாக சூரிய ரதத்தில் பூட்டிவிட்டது .

இந்த ரதத்தில் அருணன் சாரத்தியம் செய்ய , மற்ற எட்டுக் கிரககங்களும் எட்டுத் திக்குகளை அலங்கரித்துக்கொண்டு இருக்கின்றன.

சூரிய ரதத்துக்கு ஒற்றைச் சக்கரம்தான் உண்டு என்பர்;இங்கே சூரிய ரதத்துக்கு இரட்டைச் சக்கரங்கள் . பக்கத்தில் மகிஷாசுர மர்த்தினி  “***

1990- களில் நான் லண் டன் மேகம் பத்திரிக்கையில் எழுதியதையும் கீழே தருகிறேன்

கிழமைகளைக் கண்டுபிடித்தது இந்துக்கள் ! ஈர்ப்புவிசையாக் கண்டுபிடித்தது இந்துக்கள்!!

ஞாயிறு , திங்கள், செவ்வாய், புதன் , வியாழன், வெள்ளி , சனி என்ற ஏழு கிழமைகளும்  சின்னக் குழந்தைகளுக்கும் தெரியும். யார் இதைக் கண்டுபிடித்தார்கள் ? இந்துக்களே இதைக் கண்டு பிடித்தார்கள்!

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட

கண்டன் மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள் கங்கை முடிமேல்

அணிந்து என் உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன்

வெள்ளி சனி பாம்பு இரண்டும் உடனே

ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே.”

——(சம்பந்தர் தேவாரம் : 02.085.01)

பொருள் : மூங்கில் போன்ற தோளினை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனும் விடம் உண்ட கண்டனும் ஆகிய சிவபிரான் திங்கள், கங்கை ஆகியவற்றை முடிமேல் அணிந்தவனாய் மகிழ்ச்சியுடன்  வீணையை மீட்டிக் கொண்டு என் உளம் புகுந்த காரணத்தால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பு இரண்டும் உடனுள்ள ஒன்ப

து கோள்களும் குற்றம் அற்ற நலத்தைச் செய்வனவாம். அவை அடியார்களுக்கும் மிகவும் நல்லனவே செய்யும்.

— கோளறு திருப்பதிகம், தேவாரம்

இதைப்  பாடிய திருஞான சம்பந்தர் வாழ்ந்தது மஹேந்திர பல்லவன் காலத்தில்- நின்ற சீர் நெடுமாறன் என்னும் பாண்டியன் காலத்தில்; அதாவது கிபி (பொது ஆண்டு) 600. இதே வரிசையில் உலகமே இன்று கிழமைகளை வெளியிடுகிறது .

வியாழனையும் அதை அடுத்து  வரும் வெள்ளியையும் இணைத்துப்பேசுவது இந்துமதத்தில் தேவ குரு , அசுரர் குரு என்ற கச்ச தேவயானிக் கதைகளிலும், திருப்பாவையிலும் காணப்படுகிறது . சங்க இலக்கியத்திலும் இரண்டு குருமார்கள் (அசுரர், தேவர்களுக்கு) என்ற தகவல் உள்ளது

xxxx

புதிய ஆதாரங்கள்

திருஞான சம்பந்தர் சொன்ன அதே வரிசையை நாம் இன்று பயன்படுத்துகிறோம்.

அதற்கு முன்னர் எழுந்த தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தில் ஆடி மாத வெள்ளிக்கிழமை என்ற குறிப்பு வருகிறது. அதன் காலம் கி பி 132 என்பது கடல் சூழ் இலங்ககைக் கயவாகு வேந்தனும் என்ற குறிப்பால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அது ரோமானியர் காலம்.

இந்துக்கள் மட்டுமே இன்றுவரை கிழமைகளுக்கு கிரகங்களின் பெயர்களை பயன்படுத்துகின்றனர். ஏனெனில் ஆங்கிலத்திலுள்ள ஏழு பெயர்களில் நான்கு கிரகங்கள் இல்லை. ட்யூஸ் டே Tuesday , வெட்னஸ் டே Wednesday, Thursday தர்ஸ் டே, Friday ப்ரை டே என்ற நான்கு கிழமைகளில் உள்ள டிர் , வோதன் , தோர் , பிறைக் என்பன நார்டிக் இன மக்களின் கடவுளர் ; கிரகங்கள் இல்லை. இவைகளை கிழமைகளின் பெயர்களில் நுழைத்தது ஆங்கிலோ சாக்ஸன் Anglo- Saxon  இனத்தினர். இதை ரோமானிய (லத்தீன் மொழி) இலக்கியங்களில் காண்பது இரண்டாம் நூற்றாண்டில்தான்! ஆனால் நம் சிலப்பதிகாரத்திலும், ஒரு கல்வெட்டிலும் அதற்கு முன்னரே கிழமைகள் வந்துவிடுகின்றன .

கிரேக்கர்களின் முதல் நாள் சனிக்கிழமை. அடுத்துவருவது வியாழன் , பின்னர் புதன் , சூரியன் …..

ஆக அவர்கள் கிரகங்களின் பெயர்களை இட்டாலும் வரிசை பிறண்டுள்ளதைக் காண்கிறோம் .

வீக் எண்ட் WEEK END  (வார இறுதி நாட்கள் ) என்றால் சனி ஞாயிறு ! ஆனால் மேலை நாட்டுக் காலண்டர்களில் சண்டே முதல் துவங்குவர் அல்லது பழைய கால கிரேக்க நாட்டில் சனிக்கிழமை முதல் நாள். ஒரே குழப்பம் !

நாம் ஒருவர்தான் ஞாயிறு துவங்கி சனியில் முடிக்கிறோம். நாம் ஒருவர்தான் வானில் உலவும் கிரகங்கள் பெயர்களை வைத்து இருக்கிறோம். ஆங்கிலப் பெயர்களில் நான்கு, கிரகங்கள் இல்லை .

 கிரகங்கள் என்றால் பிளாணட்ஸ் Planets என்று அகராதிகள் கூறும். அப்படியானால்  நாம் சொல்லும் சூரியனும் சந்திரனும் கிரகங்கள் இல்லையே, ராகுவும் கேதுவும் கிரகங்கள் இல்லையே என்று சிலர் கேள்வி எழுப்பலாம் ; கிரஹ என்றால் ஈர்ப்பு விசை= பிடிமானம்- கவ் வுதல் ; ஐசக் நியூயூட்டனுக்கும் முன்னரே நாம் ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்ததால் வானில் உலவும் சூரியன் சந்திரன் முதலிய அனைத்துக்கும் நவ கிரஹங்கள் என்று பெயர் சூட்டினோம்; இதனால் தான் GRIP. GRAB கிரிப் , கிராப் , கிராவிடி Gravity என்ற ஆங்கிலச் சொற்களும் பாணிக்கிரஹணம் சந்திர, சூர்ய கிரஹணம் என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொற்களும் புழக்கத்தில் உள்ளன )

தமிழர்களும் இதை அப்படியே மொழிபெயர்த்தனர் ; கோள் என்றால் பிடித்தல் , இழுத்தல், ஈர்த்தல்  என்று பொருள் ; கொள்முதல், கொள்ளவேண்டும் , கொள்கை என்பதில் இந்தப் பிடிப்பு என்ற கருத்து வருகிறது ஆகை யால் ஈர்ப்பு விசை என்னும் கிராவிட்டியைக் கண்டு பிடித்ததும் இந்துக்கள்தான் 

மீண்டும் கிழமைகளுக்கு வருவோம் .

ரோமானிய (லத்தீன்) கால காலத்திலிருந்து   வந்தது பிரெஞ்சு மொழி. அங்கு இன்றும் கூட ஆறு கிரகங்களின் பெயர்களைச் சொல்லிவிட்டு ஞாயிற்றுக் கிழமைக்கு திமான்ஸ்  Dimanche என்பர். அது சூரியன் தினம் இல்லையாம். கடவுள் தினமாம்.

சொல்லப்போனால் மேலை உலகம் முழுதும் ஒரே குழப்பம்.

கடிகாரங்களும் மணிக்கூண்டுகளும் இல்லாத கிராமவாசிகள் சந்திரனை வைத்தே நேரம் அறிவர். நாளையும் அறிவர். ஒரு மாதத்தை அமாவாசை முதல் 14 நாட்கள் பெளர்ணமி முதல் 14 நாட்கள் என்று பிரித்து எளிதில் நாளையும் (திதி), நேரத்தையும் அறிந்தனர். இதனால்தான் இன்றும் இந்துக்களின் பெரும்பாலான பண்டிகைகள் திதிக்கணக்கில் பெயரிடப்பட்டுள்ளன . ராம நவமி, ஜன்மாஷ்டமி , நாக பஞ்சமி , நரக சதுர்த்தசி (தீபாவளி), ஏகாதசி உபவாசம் என்று.

ஆகையால் நமக்கு நாள், கிழமை தெரிந்தும், திதிகளையே வழக்கத்தில் பின்பற்றினோம்.

நமக்கு அருமையான  ஆதாரம் நல்கிய இளங்கோ அடிகளுக்கும் , சம்பந்தருக்கும் நாம் என்றும் நன்றிக் கடன்பட்டுள்ளோம்.

Gangakonda chozapuram

தென் இந்தியாவிலுள்ள, எல்லாக் கோவியில்களிலும், குறிப்பாக சிவன் கோயில்களில் நவக்ரஹ சந்நிதிகள் இருக்கின்றன சிவபெருமானைச் சுற்றி வரும் பிரகாரத்தில் ஒன்பது வானவெளி கோளங்கள் இருக்கும் இவைகளை ஆங்கிலத்தில் பிளானெட்ஸ் என்று மொழிபெயர்ப்பது தவறு. கிரஹ என்ற சொல்லுக்கு ஈர்ப்புவிசை உடைய பொருள்கள், பற்றி இழுக்கக் கூடியவை என்று பொருள்

நக்ரஹங்களுக்கு நடுவில் சூரியன் கிழக்கு நோக்கி இருக்க வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. சூரியனைச் சுற்றியே கிரகங்கள் வலம் வருகின்றன என்ற விஞ்ஞான உண்மையை இந்துக்கள் இதன் மூலம் உணர்த்தினர்; சூரியனுக்கு ஒரே சக்கர தேரும் ஏழு குதிரைகளும் இருக்கும் அவருடைய மனைவியார் சாயா உஷா;

இதுவும் விஞ்ஞான உண்மைகளே; சூரிய  உதயத்துக்கு முன்னர் வருவது உஷத் காலம் ஆங்கிலத்தில் DAWN டான் ; சூரியனுக்குப் பின்னால் வருவது சாயா/ நிழல்! இதை மனைவி என்று கூறுவதற்குக் காரணம் இது சூரியனுடன் முன்னாலும் பின்னாலும் வருவதே !

மகன்கள்- சனிக்கிரகம் மனுக்கள், யமன், ரேவந்த்

ஆதித்ய ஹ்ருதயம், நவக்ரஹ துதிகள், சூர்ய நமஸ்கார மந்திரங்கள்  முதலியவற்றில் இவைகளின் பெருமையை அறியலாம் . மேலும் பிராமணர்கள் தினமும் செய்யும் மூன்று வேலை சந்தியாவந்தனத்தில் சூரியனின் மந்திரங்கள் வருவதோடு ஒன்பது விண்  கலங்களுக்கும் தர்ப்பணம்  செய்யும் மந்திரங்களும் உள்ளன

இந்துக் குழந்தைகள் பிறக்கும்போதே கிரஹ நிலைகளை  வைத்து ஜாதகமும் கணிக்கப்படுகிறது .இவைகளை பற்றி சம்ஸ்க்ருத நூல்களில் உள்ள எல்லா விஷயங்களும் சங்கத் தமிழ் இலக்கியத்தில் வரும் 200 குறிப்புகளிலும் காணப்படுகின்றன தமிழர்களும் சப்த ரிஷி மண்டலம், பிரேக் சந்திரன், சூரியனிங் வெளிப்பட்டதை சங்கத் தமிழ் நூல்களில் ங்காண்கிறோம்

நவக்ரஹ துதியில் விஞ்ஞான உண்மைகள்

தமிழனுக்கு வானவியல் தெரியுமா?

கிரேக்கர்களிடமிருந்துதான் சில விஷயங்களை நாம் கற்றோம் என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் எழுதியதைப் படித்ததுண்டு. அவர்கள் எழுதியன எல்லாம் தவறு என்பதற்குப் பல சான்றுகள் உண்டு.

முதலாவதாக, தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் ஒவ்வொரு கிரகத்துக்கும் பல பெயர்கள் இருக்கின்றன. புகழ்பெற்ற அமரகோஷம் என்ற வடமொழி நிகண்டிலும், தமிழ் நிகண்டுகளிலும் இவ்வாறு பல பெயர்களைக் காணும்போது உலகில் நாம் தான் இத்துறையில் முன்னேற்றம் கண்டோம் என்பது தெளிவாகிறது. உலகின் ஏனைய செம்மொழிகளில் இவ்வளவு பெயர்களை காண முடிவது இல்லை.

இரண்டாவது விஷயம், சம்ஸ்கிருத, தமிழ் நூல்களில் கிரகங்கள் பற்றி ஒரே கருத்து இருப்பதாகும். இமயம் முதல் குமரி வரை இப்படி சங்க காலத்திலேயே இருப்பது வியாழன், வெள்ளி கிரகங்கள் பற்றிய அடை மொழிகளில் (அந்தணர் இருவர்) என்ற குறிப்புகளில் இருந்து தெரிகிறது.

தனித் தமிழ் வெறி இல்லை. சம்ஸ்கிருதச் சொற்கள் தமிழ் நிகண்டுகளில் நிறைய பயன்படுத்தப்படுகின்றன.

மூன்றாவது, கிரகங்களுக்கு இட்ட பெயர்களே அதைப் பயிலுவோருக்குப் பல விஷயங்களைக் கற்பிக்கின்றன. ஒரு சில உதாரணங்களால் இதை விளக்குகிறேன். சனிக் கிரகத்துக்கு மந்தன், முடவன் என்ற வடமொழி, தமிழ் மொழிச் சொற்கள் இருக்கின்றன. சோதிடத்தில் பயன்படுத்தப்படும்— கண்ணுக்குத் தெரியக் கூடிய கிரகங்களில்—- சனிக் கிரகம்தான் சூரியனைச் சுற்ற அதிக காலம் எடுக்கிறது. ஒரு சுற்றுக்கு 30 ஆண்டுகள் ஆகும். இது விஞ்ஞான உண்மை. இதை விளக்கும் வகையில் நாம் பெயரிட்டோம். முடவன்/மந்தி என்ற பெயரால் சிறுவர்களும் இதை நினைவிற்கொள்ள முடியும். உலகின் ஏனைய செம்மொழிகளில் இப்படிப்பட்ட பெயர்களை காண முடிவது இல்லை.

மற்றொரு எடுத்துக் காட்டு, வெள்ளி கிரகத்துக்கு மழைக் கோள் என்று பெயர். புற நானூற்றில் நாலைந்து பாடல்களில் இந்தக் குறிப்பு வருகிறது. இதுவரை விஞ்ஞானிகள் கண்டு பிடிக்காத இந்த விஷயம் தமிழ் மொழி வடமொழி நூல்களில் மட்டுமே கானப்படும் உண்மை. எதிர்காலத்தில் விஞ்ஞானிகள் இதை உறுதிப்படுத்தும்போது நாம் மார்தட்டிக் கொள்ளலாம், —நாங்கள் அன்றே சொன்னோம்— என்று. வியாழன் கிரகத்தை “ஆண்டு அளப்பான்” என்று நிகண்டுகள் கூறும். அதாவது ஒரு ராசிக்கு ஒரு ஆண்டு வீதம் 12 ராசிகலையும் சுற்றிவர 12 ஆண்டுகள் ஆகும். மஹா மகம், கும்பமேளா முதலிய பண்டிகைகள் குரு சஞ்சாரத்தின் அடிப்படையில் அமைந்தவை. கிரகங்களின் பெயர்களில் இருந்தே விஞ்ஞானம்/ வான சாஸ்திரம் கற்கும் முறை நம்மிடம் மட்டுமே உள்ளது.

நாலாவதாக, கிரகங்களுக்கு நாம் இட்ட வர்ணப் பெயர்களும் நம்முடைய வான சாஸ்திர அறிவுக்குச் சான்று பகரும். சங்கத் தமிழில் சனிக் கிரகத்துக்கு மைம்மீன் என்று பெயர். இதையே வட மொழிகளில் “நீலாய” என்ற பதம் குறிக்கும். நீலம் என்பதை கருப்புக்கும் கரு நீலத்துக்கும் பயன்படுத்துவது உண்டு.

பொன் = வியாழன்

வெள்ளி = வெண்மை நிறம் உடைய வீனஸ்

செவ்வாய் = செந்நிறக் கோள்

பச்சை = புதன்

ஆங்கிலத்திலோ கிரேக்கத்திலோ இப்படி கலர் மூலம் எல்லா கிரகங்களையும் அழைப்பதில்லை.

ஐந்தாவதாக, நாம் சில புதிய விஷயங்களைக் கூறுகிறோம். இவை இரு மொழி நூல்களிலும் உள்ள உண்மைகள். இதுவரை விஞ்ஞானம் நிரூபிக்காத உண்மைகள். எதிர்காலத்தில் நாம் சொன்னது சரியே என்று நிரூபணமானால் நமக்கு (இந்துக்களுக்கு) நோபல் பரிசு கிடைக்கும். அவை என்ன? ஆறு மிகப் பெரிய உண்மைகள் என்று கீழே கொடுத்துள்ளேன்.

ஆறாவதாக, பிராமணர்கள் தினமும் முப்பொழுதும் செய்யும் த்ரிகால சந்தியாவந்தனத்தில் நவக்ரஹ வழிபாடு— ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக—- உள்ளது. இதை கிரேக்கர்கள் சொல்லி நாம் செய்தோம் என்றால் யார் நம்புவார்கள்?

ஏழாவதாக, ஞான சம்பந்தரின் கோளறு பதிகத்தின் முதல் பாடலிலேயே ஞாயிறு முதல் கிரகங்கள் ஒன்பதும் வருகின்றன. ஆக நம்மிடம் இருந்துதான், உலகமே இதைக் கற்றுக் கொண்டன என்பதற்கு அகச் சான்றுகளும், புறச் சான்றுகளும், நூற்றுக் கணக்கான இடங்களில் உள்ளன.

ஆறு மிகப் பெரிய உண்மைகள்

இந்துக்கள் உலக மக்களுக்கு ஆறு மிகப் பெரிய உண்மைகளை சொல்கின்றனர்:–

1.செவ்வாய் கிரகம், பூமியின் புதல்வன்

2.புதன் கிரகம் சந்திரனின் புதல்வன்

3.சனிக் கிரகம், சூரியனின் புதல்வன்

4.வெள்ளிக் கோளுக்கும் மழைக்கும் தொடர்பு உண்டு

5.சந்திரனுக்கும் மனதுக்கும் தொடர்பு உண்டு (இது ரிக் வேதத்தில் புருஷ சூக்தத்தில் உள்ளது)

6.சூரியனுக்கும் கண்களுக்கும் தொடர்பு உண்டு (இது ரிக் வேதத்தில் புருஷ சூக்தத்தில் உள்ளது)

இது தவிர ஏழாவது உண்மையும் இருக்கிறது. சூரியனை சுற்றி வாலகீயர்கள் என்னும் 60,000 குள்ளமான முனிவர்கள் இருக்கின்றனர். இது பற்றி ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதினேன்.

எட்டாவது உண்மை, குரு கிரகம் பற்றியும் அதன் கவன் கண் வீச்சு ஆற்றல் பர்றியும், அது எப்படி ராக்கெட்டுகளை எரிபொருள் இல்லாமல் விண்ணில் பறக்க வைக்கிறது என்பதையும் ஏற்கனவே தனிக் கட்டுரையில் கொடுத்து இருக்கிறேன். குரு என்றாலேயே கனம் என்று பொருள். நவக் கிரகங்களில் பெரியது குரு என்பது விஞ்ஞான உண்மை என்பதையும் ஏற்கனவே ஒரு கட்டுரையில் விளக்கி இருக்கிறேன்.

இவைகளின் பொருள் என்ன?

ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்:

பூமியின் புதல்வன் செவ்வாய் என்று தமிழ் நிகண்டு, சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் சொல்லும். பூமியும் செவ்வாயும் ஒரே நில அமைப்பை உடையவை என்று ஒரு பொருள் கொள்ளலாம். நமக்கு மிக அருகில் இருப்பதால் அங்குதான் முதல் “காலனி” அமைக்க விஞ்ஞானிகளும் முயற்சி செய்கின்றனர்.

இரண்டாவது அர்த்தம், ஒரு காலத்தில் பூமியின் மீது ஏதோ ஒன்று மோத செவ்வாய் கிரகம் “சுகப் பிரசவம்” ஆனது. அதாவது மோதலில் பிரிந்த/பிறந்த கிரகம் செவ்வாய்!

இதே போல சந்திரனின் மகன் புதன் என்பதற்கும் பொருள் சொல்லலாம். சந்திரனின் ஒரு துண்டுதான் புதன். இரண்டும் ஒரே அமைப்புடையவை. ஆனால் இவைகளை எல்லாம் எதிர்கால சோதனைகள்தான் சரியா தப்பா என்று சொல்ல முடியும். இன்னும் வான சாஸ்திர அறிஞர்கள் உறுதி செய்யாத விஷயங்கள் இவை. லண்டனிலும், அமெரிக்காவிலும் வெளியிடப்படும் வான சாஸ்திர மாத இதழ்களைப் படிப்போருக்கு புதுப் புது செய்திகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. இதனுடைய சுருக்கச் செய்திகள் இந்தியப் பத்திரிக்கைகளிலும் வெளிவருகின்றன. சுருங்க்சச் சொன்னால் விஞ்ஞானிகளே இன்னும் முடிவுக்கு வராத விஷயங்கள் இவை. ஆனால் ஒரு போக்கு தெளிவாகத் தெரிகிறது—நாம் சொன்னவை சரி என்ற செய்தி விரைவில் வரும் என்ற போக்கு அது!

என்னுடைய கருத்து:

இது சரியா? தப்பா? என்பதைவிட இப்படி யோசித்த மூளையை எண்ணி எண்ணி வியக்க வேண்டி இருக்கிறது. இப்படி ஒரு கிரகத்துக்கும் இன்னொரு கிரகத்துக்கும் முடிச்சுப் போட்டோமே. இதைச் செய்யக்கூட அதைப் பற்றிய அறிவும், தொடர் சிந்தனையும் தேவை. நாம் இதை எல்லாம் எழுதிய காலத்தில் உலகம் தட்டை என்று எண்ணிக் கொண்டிருந்தனர் மேலை நாட்டினர்!!!

நாமோ பூமியை எப்பொழுதுமே “பூகோளம்” (புவி உருண்டை) என்றுதான் பாடமே நடத்தினோம். கோப்பர் நிகசும், கலீலியோவும் கண்டுபிடித்ததாக மேலை நாட்டுக்காரர்கள் பெருமை பேசிய விஷயங்கள் ஆரியபட்டர், வராஹமிகிரர் எழுதிய நூல்களில் மட்டுமின்றி சங்கத் தமிழ் இலக்கியத்திலும், இதிஹாச புராணங்களிலும் உள்ளது.

கட்டுரைக்கான மேற்கோள்கள்

1.சந்த்ரமா மனஸோ ஜாத: சக்ஷோர் சூர்யோ அஜாயத (புருஷசூக்தம் – ரிக்வேதம்)

இறைவனின் மனதிலிருந்து சந்திரன் உண்டானான்; கண்ணிலிருந்து சூர்யன் உண்டானான்.

2. செவ்வாய் கிரக பெயர்கள்:—அங்காரகன், மங்களன், மங்களப்ரதாயன், மகாபத்ராய, மஹீசுதன், மடிமகன்/படிமகன்,பூமி புத்ரன், பூமகன்

3. புதன் கிரகப் பெயர்கள்:—சௌம்யன், இந்துஜா, சோமஜாய, சந்திரன் மகன், அறிஞன், தேவன், புலவன், வானவன், அனுவழி, சவுமன், கணக்கன், சாமன், சிந்தை, தூதுவன், தேர்ப்பாகன், நற்கோள்,

நிபுணன், பச்சை, பண்டிதன், பாகன், புந்தி, மதிமகன், மாலவன், மால், மேதை, கூரியன்

4. வெள்ளி, சுக்கிரன், பார்கவன், ப்ருகன், ஸ்வேதாம்பரன், அசுர குரு, கௌடதேசஸ்விராய, ரஜதப்ரபாய, மழைக்கோள், புகர், பளிங்கு, உசனன், பிரசுரன்,சல்லியன், ஒள்ளியோன், சிதன்

5.சனி, நீலவர்ணன், நீலாஞ்சனநிபாய, க்ரூரன், சவுரி, கதிர்மகன், மைம்மீன், கெட்டவன், அந்தகன், காரி, கரியவன், கீழ்மகன், சந்தில், சாவகன், தமனியன், நீலன், நோய்முகன், பங்குபாதன், முடவன், மந்தன், முதுமகன், மேற்கோள், சாயாபுத்ர, காரியூர்தி, கருவிளங்கண்ணியன்.

வாழ்க நவக்ரகங்கள்!! வளர்க அவற்றின் அருட் பார்வை!!!

***

நான் கூறும் கருத்துக்கள் நவக்கிரஹ ஸ்துதியை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டது; இதோ அந்த துதி

ஜபாகுஸுமா ஸங்காசம் …… நவக்கிரஹ துதி வரிகள்

ஜபாகுஸும ஸங்காஸம் காஶ்யபேயம் மஹாத்³யுதிம் |

தமோ(அ)ரிம் ஸர்வபாபக்⁴நம் ப்ரணதோ(அ)ஸ்மி தி³வாகரம் || (சூரியன்)

த³தி⁴ஶங்க²துஷாராப⁴ம் க்ஷீரோதா³ர்ணவஸம்ப⁴வம் |

நமாமி ஶஶினம் ஸோமம் ஶம்ப⁴ோர்மகுடபூ⁴ஷணம் || (சந்திரன்)

த⁴ரணீகா³ர்ப⁴ஸம்பூ⁴தம் வித்³யுத்காந்திஸமப்ரபம் |

குமாரமஶக்திஹஸ்தம் தம் மங்க³லம் ப்ரணமாம்யஹம் || (செவ்வாய்)

ப்ரியங்கு³கலிகாஶ்யாமம் ரூபேணாப்ரதிமம் பு³த⁴ம் |

ஸৌম்யம் ஸৌম்யகு³ணோபேதம் தம் பு³த⁴ம் ப்ரணமாம்யஹம் || (புதன்)

தே³வானாம் ச ருஷீணாம் ச கு³ரும் காஞ்சனஸந்நிபம் |

பு³த்³தி⁴பூ⁴தம் த்ரிலோகேஶம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம் || (வியாழன்/குரு)

ஹிமகுந்³த²ம்ருணாளாபம் தைத்யானாம் பரமம் கு³ரும் |

ஸர்வஶாஸ்த்ரப்ரவக்தாரம் பா⁴ர்க⁴வம் ப்ரணமாம்யஹம் || (சுக்கிரன்)

நீலாஞ்சனஸமாபா⁴ஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் |

சாயாமார்தாண்டஸம்பூ⁴தம் தம் நமாமி ஶனைஶ்சரம் || (சனி)

அர்த⁴காயம் மஹா‍வீர்யம் சந்த்ராதி³த்யவிமர்த³னம் |

ஸிம்ஹிகா³ர்ப⁴ஸம்பூ⁴தம் தம் ராகும் ப்ரணமாம்யஹம் || (ராகு)

பலாஶபுஷ்பஸங்காஸம் தாரகா³க்ரஹமஸ்தகம் |

ரௌத்³ரம் ரௌத்³ராத்மகம் கோ⁴ரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம் || (கேது)

****

Surya in Delhi Airport

Konark, Odisah

Navaratna ring based on Navagrahas 

அமரகோசத்தின் ஆசிரியர் அமரசிம்மன் சூரியனுக்கு 37 பெயர்களைச் சொல்லியிருக்கிறார். அவையாவன:–

(சம்ஸ்கிருத உச்சரிப்பு: சம்ஸ்கிருதத்தில் சொல்லுக்குப் பின்னே இரண்டு புள்ளிகள் ( : ) விசர்கம் இருந்தால் அதற்கு முந்திய உயிரெழுத்தைப் போல உச்சரிக்கவும்; எடுத்துக் காட்டு:– பாஸ்கர: = பாஸ்கரஹ, க்ரஹபதி: = க்ரஹபதிஹி, சித்ரபனு:= சித்ரபானுஹு)

அர்யமா = பித்ரு தேவதா, சூரியனின் பக்தர்கள்

ஆதித்ய: = அதிதி வம்சத்தில் வந்தவர்

த்வாதசாத்மா = 12 ஆன்மாக்களை (மாதங்களை ) உடையவன்

திவாகர: = நாள் என்பதை உருவாக்குபவன்

பாஸ்கர: = ஒளியூட்டுபவன் (பாஸ்பரஸ் என்ற மூலகத்தின் பெயரும் இதே பொருளுடைத்து)

அஹஸ்கர: = நாள் என்பதை உருவாக்குபவன்

ப்ரத்ன:= இருட்டை ஒழிப்பவன்

ப்ரபாகர: = ஒளியூட்டுபவன்

விபாகர: = ஒளியூட்டுபவன்

பாஸ்வான்= ப்ளியுடையவன்

விவஸ்வான் = பலவித ஆடைகளை உடையவன்

சப்தாஸ்வ = ஏழு குதிரைகளை உடையவன் (வானவில்லின் வண்ணங்கள்)

ஹரிதஸ்வ = பச்சைக் குதிரை உஅடையவன்

உஷ்ணரஸ்மி: = வெப்பமான கதிர் உடையவன் (பல பெண்களுக்கு ரஸ்மி என்று பெயர்; அதாவது கிரணம், கதிர் ஒளி)

விகர்தன: = பாலிஷ் செய்யப்பட்டவன், மெருகூட்டப்பட்டவன், விசேஷன கர்தவ்யம்

அர்க: = பூஜிக்கப்படதக்கவன் (அருகம் புல், தாமிரம், ஸ்படிகம், இந்திரன் என்றும் இச்சொல் பொருள்படும்)

மார்த்தாண்ட: = ‘இறந்த கோளத்தில்’ இருப்பவர்

மிஹிர: = வெளிவருபவன் (புத்தன் என்றும் இச்சொல் பொருள்படும்)

அருண: = சூர்ய சாரதி ( மற்ற பொருள்கள்= சந்த்யா ரகம், நிசப்தம், கபிலர், குஷ்டநோய், குணவான்)

பூஷா = புஷ்டியை ஏற்படுத்துபவன் (சூரியனிடமிருந்து ஆரோக்கியத்தைப் பெறு என்பது சம்ஸ்கிருத பழமொழி; இலவச வைட்டமின் ‘டி’ தருபவன்)

த்யுமணி: = வானில் தோன்றும்ரத்தினக் கல்

தரணி = சம்சாரக் கடலைக் கடக்கச் செய்வோன் (ஏனைய பொருள்= குமரி, படகு)

மித்ர: = சூரியன் (நண்பன்)

சித்ரபானு: = வண்ணக் கதிர் உடையோன்

விரோசன: = ஒளிவீசுபவன் 9மற்ற அர்த்தங்கள் = நிலவு, பிரஹலாதன் மகன்)

விபாவசு: = ஒளிதருபவன் (மற்ற பொருள்= ஒருவித நெகலஸ், பாவக)

க்ரஹபதி: = கிரகங்களுக்கு நாயகன்/தலைவன்

த்விஷாம்பதி:= ஒளிக்கு அதிபன்/தலைவன்

அஹர்பதி:= நாளுக்கு தலைவன் (அஹர் = பகல், பகலவன்)

பானு: = ஒளி

ஹம்ச: = சூரியன்

சஹஸ்ராம்சு: = 1000 கதிர் உடையோன்

தபன: = தபிக்கச் செய்பவன்(தபி = சூடேற்று; தப=தவ)

சவிதா= சூரியன்

ரவி: = சூரியன்

சுர: = பார்க்கக்கூடிய அனைத்தையும் தூண்டுபவன் (விழித்தெழச் செய்வான்)

சூர்ய: = சுர: என்பதைக் காணவும்.

 தமிழ்நாட்டில் தினமணி, தினகரன் போன்ற பத்திரிக்கைகள், ஆங்கிலத்தில் ‘சன்’ போன்ற பத்திரிக்கைகள் சூரியன் பெயரைத் தாங்கி வருகின்றன. உலகிலுள்ள எல்லா முக்கிய மொழிகளிலும் சூரியன் பெயரில் நாளேடுகள் இருக்கின்றன. சூரிய நமஸ்காரத்திலுள்ள 12 மந்திரங்களும் மீண்டும் பிரபலமாகி வருகின்றன.

பல ஆண்கள், பெண்களின் பெயர்களும் சூரியன் பெயரிலிருந்தும், ஒளி என்பதிலிருந்தும் வந்தவை.

சூரியனுக்கு ‘இனன்’ என்று ஒரு பெயர் உண்டு; அதிருந்து வந்ததே இன்கா நாகரீகம் என்று முன்பே எழுதியிருக்கிறேன்.

அம்சுமாலி (நீர்நிலைகளின் தலைவன்), பஹ: ( ஐஸ்வர்யம்) முதலிய வேறு 17 பெயர்களையும் அமர கோச உரைகாரர்கள் விளம்புவர்)

சூரியனுக்கு அருகாமையில் உள்ள மாடர, பிங்கள:, தண்ட: பற்றியும் அமரம் பேசும்; இவை ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள்.

சூர்ய சாரதியின் பெயர்கள்:- சூர்யசுத:, அருண:, அனூரு:, காஸ்யபி, கருடாக்ரஜ:

கிரணங்களின் பெயர்கள்:– கிரண:, உஸ்ர:, மயூக:, அம்சு:, கபஸ்தி:, க்ருணி:, க்ருஷ்ணி:, பானு:, கர:, மரீசி:, தீதிதி:

சூர்யப் பிரபைக்கான பெயர்கள்:- ப்ரபா, ருக், ருசி:, த்விஷ், பா:, சவி:, த்யுதி:, தீப்தி:, த்யுதிமதி, ரோசி:, சோசி:

தீப்தி போன்ற பெண்களின் பெயர்கள் இந்தப் பிரபை (ஒளி மண்டலம், ஒளிவட்டம்) யிலிருந்து வந்தவையே.

சூரிய வெப்பத்துக்கான பெயர்கள் முதலிய விஷயங்களையும் அமரம் உரைக்கும்.

****

ஆரோக்கியத்துக்கு சூரியன்

 சூரியனிடத்தில் ஆரோக்கியத்தைக் கேள்:

1).ஆரோக்யம் பாஸ்கராத் இச்சேத் – பூஜா ப்ரகாச:

சூரியனிடத்தில் ஆரோக்கியத்தைக் கேள்

(சூரியன் மூலம் வைடமின் ‘டி’ கிடைக்கிறது. கண், ஒளி பெறுகிறது. இதை அறிந்த முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே இப்படிச் சொல்லிவைத்தனர்; ஒப்பிடுக: கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரமா?)

***

).ஸ்யேம நு சூர்யமுச்சரந்தரம்  – ருக் வேதம்

தலைக்கு மேல் சூரியனை எப்போதும் காண்போமாக (நூறாண்டுக் காலம் நல்லபடி வாழ்வோமாக)

12).பஸ்யேமஸ் சரதஸ்சதம், ஜீவேம சரதஸ்சதம் – யஜூர், அதர்வ வேதங்கள்.

நூறாண்டுக் காலம் நாம் காண்போமாக; நூறாண்டுக் காலம் நாம் வாழ்வோமாக

(நூறாண்டுக் காலம் வாழ்க; நோய்நொடியிலாமல் வாழ்க)

To be continued……

Tags- நவக்கிரகம், சூரியன், நவக்ரஹ துதி, விஞ்ஞான உண்மைகள் , சுவையான செய்திகள், Hinduism through 500 Pictures in Tamil and English 44; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்44

Leave a comment

Leave a comment