Post No. 15,540
Date uploaded in London – 27 March 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 57
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 57
***
இது சூரிய கிரகணம் , சுதர்சன சக்கரம் இல்லை
திகிரி கொண்டு இருளாக்கியே இரு தமையர் தம்பியர் மூத்த
தாதையர் திலக மைந்தரை ஏற்ற சூரரை வெகுவான செனம்
அடங்கலும் மாற்றியே … சக்கரத்தைக் கொண்டு பகலை இருளாகச்
செய்து*, (கர்ணன், துரியோதனன் ஆகிய) இரண்டு தமையன்களையும்
மற்ற தம்பிமார்களையும், துரோணர், பீஷ்மர் ஆகிய பெரியோர்களையும்,
துரியோதனன் பிள்ளை லக்ஷண குமரன் முதலிய சிறந்த
பிள்ளைகளையும், போரை ஏற்று வந்த சூரர்களான பகைவர்களையும்,
நிறைந்த பகைவராகிய மக்கள் எல்லாரையும் அழிவு செய்து,
உடல் தகர அங்கு அவர் கூட்டையே நரி திருகி உண்டிட
ஆர்த்த கூளிகள் அடர் பூமி அகடு துஞ்சிட மூட்டு பாரத
முடிய … அவர்களுடைய உடல் பொடியாக, அங்கே அவற்றை நரிகள்
திருகி உண்டிட, பேரொலி செய்த பேய்கள் நிறைந்த போர்க் களத்தில்
நடுப்பாகம் சேதப்பட, மூள்வித்த பாரதப் போர் முடிய,
அன்பர்கள் ஏத்தவே அரி அருளும் மைந்தர்கள் வாழ்த்து
மாயவன் மருகோனே … அன்பர்கள் துதி செய்ய யமன், வாயு, இந்திரன் ஈன்ற தருமன், வீமன், அருசுனன் ஆகியவர்கள் வாழ்த்தித் துதிக்கும் திருமாலின் மருகனே,
அமரர் அந்தணர் போற்றவே கிரி கடல் அதிர்ந்திட நோக்கு
மா மயில் அழகோடும் பழுவூர்க்குள் மேவிய பெருமாளே. …
தேவர்களும் அந்தணர்களும் போற்ற, மலைகளும் கடலும் அதிரும்படிச் செய்ய வல்ல சிறந்த மயிலின் மேல் அழகுடனேஅமர்ந்து பழுவூரில்**எழுந்தருளி இருக்கும் பெருமாளே.
* பாரதப் போரில் 13-ம் நாள் ஜயத்ரதன் அர்ச்சுனனுடைய பிள்ளை அபிமன்யுவைக் கொன்று விட்டான். உடனே அர்ச்சுனன் நாளை சூரியன் அஸ்தமிப்பதற்குள் ஜயத்ரதனைக் கொல்வேன் இல்லையேல் தீக்குளிப்பேன் என்று சபதம் செய்தான். சூரியன் அஸ்தமிக்கு முன் கண்ணன் தமது சக்கரத்தால் சூரியனை மறைத்தார். சூரியன் அஸ்தமித்து விட்டது என்று ஜயத்ரதன் வெளியே வர, அர்ச்சுனன் பாசுபதாஸ்திரத்தை விட்டு அவனைக் கொன்றான்.
** திருப்பழுவூர் திருவையாற்றுக்கு அருகில் உள்ளது.
கதைகளில் இதை சுதர்சன சக்கரம் என்று சொன்னாலும் இது உண்மையில் அன்று மாலையில் நடந் தசூரிய கிரகண ம் ஆகும். பாராதப்போர் ஒருநாள் விட்டு ஒரு நாள் நடந்தது. மேலும் சில புனித நாட்களில் போர் நடக்கவில்லை என்பது என்னுடைய கருத்து
****
தாருகாவன சம்பவம்
சாடும் உவணப் பதாகை நீடு முகில் ஒத்த மேனி தாது உறை
புயத்து மாயன் மருகோனே … தாக்கிய, கருடக் கொடியைக்
கொண்ட, பெரிய கரு மேகத்தை ஒத்த உடலையும், தாது மலர்
மாலையை அணிந்துள்ள புயங்களையும் கொண்ட திருமாலின் மருகனே,
வாரணம் உரித்து மாதர் மேகலை வளைக்கை நாண(ம்) மா
பலி முதல் கொள் நாதன் முருகோனே … (கஜமுகாசுரன் என்ற)
யானையைக் கொன்று அதன் தோலை உரித்து (போர்த்தி), (தாருகா
வனத்து ரிஷி) பத்தினிகளின் இடையணி, கைவளைகள், நாணம் இவை மூன்றையும் அழகிய பிச்சையால் முன்னாளில் கொண்ட*
சிவபெருமானின் மகன் முருகனே,
வார் உறு தனத்தினார்கள் சேரும் மதிள் உப்பரீகை வாகு
உள குறட்டி மேவு(ம்) பெருமாளே. … கச்சு அணிந்த மார்பகங்களை
உடைய மாதர்கள் சேர்ந்து வாழும் மதிலையும் மேல் மாடங்களையும் கொண்ட அழகு வாய்ந்த குறட்டி** என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
* தாருகா வனத்து முனிவர்கள் சிவபெருமானிடத்தில் அன்பு இல்லாதவர்களாகப் பல வேள்விகளைப் புரிந்து வந்தனர். இவர்கள் செருக்கை அடக்க, திருமால் மோகினியாகவும், சிவபெருமான் பிச்சை எடுத்தும் அவ்வனத்துக்குச் செல்ல, முனிவர்கள் மோகினியின் அழகில் மயங்கி அவளைப் பின் தொடர்ந்தனர். இசை பாடி பிச்சை எடுக்கச் சென்ற சிவனது அழகைக் கண்டு ரிஷி பத்தினிகள் அவர் மீது மோகம் கொள்ள, தமது நாணம், கைவளை, மேகலை மூன்றையும் இழந்தனர்
– சிவ புராணம்.
** குறட்டி புதுக்கோட்டைக்கு கிழக்கே 5 மைலில் உள்ளது.
–subham—
Tags-திருப்புகழில், அருணகிரிநாதர், அரிய செய்திகள், Part 57 தாருகாவன சம்பவம்