Post No. 15,544
Date uploaded in London – 28 March 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 58
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 58
***
வயலூரில் முருகன் செய்த அற்புதம்
என்னால் பிறக்கவும் … என் செயலால் நான் இவ்வுலகில்
பிறப்பதற்கும்,
என்னால் இறக்கவும் … என் திறத்தால் நான் இறப்பதற்கும்,
என்னால் துதிக்கவும் … என் எண்ணத்தால் நான் துதிப்பதற்கும்,
கண்களாலே என்னால் அழைக்கவும் … என் கண்கொண்டு
மற்றவரை நான் அழைப்பதற்கும்,
என்னால் நடக்கவும் … என் செயலால் என் கால்கொண்டு
நான் நடப்பதற்கும்,
என்னால் இருக்கவும் … என் திறம் கொண்டு நான்
ஓரிடத்தில் இருப்பதற்கும்,
பெண்டிர்வீடு என்னால் சுகிக்கவும் … மாதர், வீடு இவற்றை
நான் இன்புற்று சுகிப்பதற்கும்,
என்னால் முசிக்கவும் … வேண்டுதல் வேண்டாமை காரணமாக
நான் நலிவுற்று மெலிவதற்கும்,
என்னால் சலிக்கவும் … இது போதும் என அலுப்புடன் நான் சலிப்பு
அடைவதற்கும்,
தொந்தநோயை என்னால் எரிக்கவும் … வினையின் வசமாக வரும்
நோய்களை நான் பொசுக்குவதற்கும்,
என்னால் நினைக்கவும் … பல நினைவுகளையும் நான் இங்கு
நினைப்பதற்கும்,
என்னால் தரிக்கவும் … இன்ப துன்பங்களை நான் தாங்கிக்
கொள்வதற்கும்,
இங்கு நான் ஆர் … இங்கே நான் யார்? (எனக்கு என்ன சுதந்திரம்
உண்டு?)
கன்னார் உரித்த என் மன்னா … என் நெஞ்சக் கல்லிலிருந்து நார்
உரிப்பது போலக் கசியச் செய்த அரசே,
எனக்குநல் கர்ணாமிர்தப்பதம் தந்தகோவே … செவிக்கு நல்ல
அமுதம் போன்ற உபதேச மொழியை எனக்கு அருளிச்செய்த அரசனே,
கல்லார் மனத்துடன் நில்லா மனத்தவ … உன்னைக் கற்றறியார்
மனத்தில் தங்காத மனத்தோனே,
கண்ணாடியில் தடம் கண்டவேலா … கண்ணாடி போல் தெளிவான தடாகத்தை வேலால் கண்டவனே*,
மன்னான தக்கனை முன்னாள் … அரசனாக விளங்கிய
தக்ஷப்ரஜாபதியை முன்னொருநாள்
முடித்தலை வன்வாளியிற் கொளும் … அவனது கிரீடம் அணிந்த
தலையை கொடிய அம்பால் கொய்த
தங்கரூபன் மன்னா … பொன் போன்ற மேனியுடைய சிவபிரானுக்குகுருராஜனே,
குறத்தியின் மன்னா … குறத்தி வள்ளியின் தலைவனே,
வயற்பதி மன்னா … வயலூரின்** அரசனே,
முவர்க்கொரு தம்பிரானே. … பிரமன், திருமால், சிவன் ஆகிய
மும்மூர்த்திகளுக்கும் ஒப்பற்ற தலைவனே.
* வயலூரில் முருகன் தன் சக்தி வேலை ஓரிடத்தில் பாய்ச்சி அங்கு ஒரு குளத்தை /தடாகத்தை உண்டாக்கினான். அத்தடாகம் சக்தி தீர்த்தம் எனப்படும். அதன் நீர் பளிங்கு போன்று தெளிவானது.
** வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.
வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.
****
சமரில் பூதம் யாளி பரி பிணி கனகத் தேர்கள் யானை
அவுணர்கள் … போரில் பூதம், யாளி, குதிரை இவைகளைப் பிணித்துக்
கட்டிய பொன் மயமான தேர்கள், யானைகள், அசுரர்கள் ஆகியவை
தகரக் கூர் கொள் வேலை விடு திறல் உருவோனே …
பொடிபட்டு அழிய, கூர்மையான வேலாயுதத்தைச் செலுத்திய வலிமையான உருவத்தனே,
சமுகப் பேய்கள் வாழி என எதிர் புகழக் கானில் ஆடு பரிபுர
சரணத்து ஏக வீர அ(ம்) மை மன மகிழ் வீரா … கூட்டமான
பேய்கள் வாழி என்று எதிரே நின்று புகழ, சுடு காட்டில் (சிவனுடன்)
நடனம் செய்யும் சிலம்பணிந்த திருவடிகளை உடைய, தன்னிகரில்லாதவீரம் வாய்ந்த தாயாகிய பார்வதி மனம் மகிழும் வீரனே,
அமரர்க்கு ஈசனான சசி பதி மகள் மெய்த் தோயு நாத …
தேவர்களுக்குத் தலைவனான, இந்திராணியின் கணவனாகிய
இந்திரனின் மகளான தேவயானையின் உடலைத் தழுவும் நாதனே,
குற மகள் அணையச் சூழ நீத கர(ம்) மிசை உறு வேலா …
குறப் பெண்ணாகிய வள்ளி உன்னை அணைவதற்கு வேண்டிய
சூழ்ச்சிகளைச் செய்த நீதிமானே, திருக்கையில் கொண்ட வேலாயுதனே.
அருளில் சீர் பொ(ய்)யாத கணபதி திரு அக்கீசன் வாழும்
வயலியின் … திருவருள் பாலிப்பதற்குப் புகழ் பெற்ற, பொய்யுறாத
கணபதியும்*, அழகிய அக்னீசுரர் என்னும் பெயருடைய சிவபெருமானும் வீற்றிருக்கும் வயலூரின்**
அழகுக் கோயில் மீதில் மருவிய பெருமாளே. … அழகிய
கோயிலில் அமர்ந்திருக்கும் பெருமாளே.
* இவரே “செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு” என்று அருணகிரிநாதருக்கு அருளினார். அந்தப் பாடல்தான் ‘பக்கரை விசித்ரமணி’ ஆகும்.
** வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.
***
குடிகார அரக்கர்கள்
அமரில் சுரா பான திதி புத்ரர் ஆலோகம் அது துக்கமே ஆக
மிஞ்சிடாமல் … போரில் கள் குடிக்கும் (திதியின் மக்களாகிய)
அசுரர்களின் அறியாமையானது உலகத்துக்குத் துக்கத்தையே தர,
அந்தத் துக்கத்தை ஒழிக்க,
அடம் இட்ட வேல் வீர … எப்போதும் துடித்துக் கொண்டிருக்கும்
வேலினைச் செலுத்திய வீரனே,
திருவொற்றியூர் நாதர் அருண சிகா நீல கண்ட பாரம் மம
பட்ச மா தேவர் அருமைச் சுவாமீ … திருவொற்றியூர் நாதரும்,
சிவந்த ஜடை, நீல கண்டம், பெருமை ஆகியவற்றைக் கொண்டவரும்,
என் மீது அன்புள்ளவருமான மகாதேவர் சிவபெருமானுக்கு
அருமையாக வாய்ந்த சுவாமியே,
நிமல நிட்களா மாயை விந்து நாதம் வர சத்தி மேலான பர
வத்துவே … மாசில்லாதவனே, உருவம் இல்லாதவனே, மாயை, விந்து,
நாதம், வரங்களைத் தரும் சக்தி இவைகளுக்கு மேம்பட்ட பரம் பொருளே**,
மேலை வயலிக்குள் வாழ் தேவர் தம்பிரானே. … மேலை
வயலூர்*** என்னும் தலத்தில் வாழ்கின்ற, தேவர்களின் தம்பிரானே.
* நான்கு பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:
1. சரியை: /சாலோகம்’.
2. கிரியை: – சாமீபம்’.
3. யோகம்: – சாரூபம்’.
4. ஞானம்- சாயுஜ்யம்’.
. . . சிவஞான சித்தியார் சூத்திரம்.
** இறைவன் ஏக நாதன் என்பதைக் குறிக்கும்.
அருவத் திருமேனி நான்கு = சிவம், சக்தி, நாதம், விந்து.
உருவத் திருமேனி நான்கு = மகேசன், ருத்திரன், மால், அயன்.
அருவுருவத் திருமேனி ஒன்று = சதாசிவம்.
****
விராலிமலைக்கு முருகன் வரச் சொன்ன அற்புதம்
தாமரையின் மட்டு வாசமல ரொத்த … தாமரைப்பூவிலேயே
நிரம்பிய மணம்வாய்ந்த மலருக்குச் சமானமான
தாளிணை நினைப்பில் அடியேனை … உன் இரு திருவடிகளின்
நினைப்பே இல்லாத அடியேனை,
தாதவிழ் கடுக்கை … மகரந்தப்பொடி விரியும் கொன்றை,
நாகமகிழ் கற்ப தாருவென … சுரபுன்னை, மகிழமரம் இவையெல்லாம் கற்பக விருட்சங்கள் போல வளர்ந்து
மெத்திய விராலி மாமலையில் … நிறைந்த விராலிப் பெருமலையில் நிற்ப நீகருதி யுற்று வாவென … யாம் நிற்போம்* நீ அதை மனத்தில் நினைத்து அந்தத் தலத்திற்கு வருவாயாக என்று அழைத்து என்மனதாசை மாசினை அறுத்து … அழைப்பு விடுத்து,என் மனத்திலுள்ள ஆசை என்னும் குற்றத்தை ஒழித்து,
ஞானமுது அளித்த வாரம் … ஞானாமிர்தப் பிரசாதம் அளித்த அன்பை
இனி நித்த மறவேனே … இனி என்றைக்கும் யான் மறக்கமாட்டேன்.
* இச் சம்பவம் அருணகிரிநாதர் வாழ்க்கையிலே நடந்த வரலாறு – முதல் நான்கு அடிகள் விராலிமலைக்கு சுவாமிகளை முருகன் வரச் சொன்னதை குறிக்கின்றன.
***
ஆறுமுகம் போய் ஒரு முகம் வந்த சம்பவம்
நின் மயில் வாழ்வும் கருணை வாரி கூர் ஏக முகமும் வீர(ம்)
மாறாத கழலு(ம்) நீப வேல் வாகு(ம்) மறவேனே … மயில் மேல்
வீற்றிருக்கும் உனது வாழ்வையும், கருணைக் கடல் போல மிக்க ஒளிவீசும் உனது திருமுகத்தையும்*, வீரம் என்றும் மாறுதல் இல்லாத திருவடியையும், கடம்பையும், வேல் ஏந்திய திருப்புயத்தையும் நான் என்றும் மறவேன்.
* இப்பாடல் அருணகிரிநாதருக்கு முருகவேள் ஒரு முகத்துடன் வயலூரில் தரிசனம் கொடுத்ததைக் குறிக்கும்.
***
சிலப்பதிகார வரிகள்
மலையை மத்து என வாசுகியே கடை கயிறு எனத் திருமால்
ஒரு பாதியும் மருவும் மற்றது வாலியும் மேல் இட … (மந்தர)
மலையை மத்தாக நாட்டி, வாசுகி என்னும் பாம்பைக் கடைகின்ற
கயிறாகக் கொண்டு, திருமால் ஒரு பாதிப் புறமும், பொருந்திய
மற்றொரு பாதிப் புறத்தை வாலியுமாக முற்பட்டு,
அலை ஆழி வலய முட்ட ஒர் ஓசையதாய் ஒலி திமிதி மித்திம்
எனா எழவே … அலைகள் வீசும் கடலிலிருந்து பூவலயம் முழுமையும் ஒரே பேரொலியாய் சப்தம் திமி திமித்திம் என்று கிளம்பவும்,
அலை மறுகிடக் கடையா எழ மேல் எழும் அமுதோடே துலை
வருத் திரு மா மயில் வாழ்வுள வயலை அற்புதனே … கடல்
கலங்கும்படி கடைதலை மேற்கொள்ள, (அப்போது) மேலே எழுந்த
அமுதுடனே அதற்கு ஒப்பாக வந்த அழகிய மயில் போன்ற லக்ஷ்மியின் வாழ்க்கைக்கு இடமாக (செல்வச் சிறப்போடு) விளங்கும் வயலூரில்* உறையும் அற்புத மூர்த்தியே,
வினையானவை தொடர் அறுத்திடும் ஆரிய கேவலி
மணவாளா … வினைகளின் தொடர்பை அறுத்து எறியும் அழகு,
மேன்மை இவை கொண்ட, முக்தியைத் தரவல்ல, தேவயானையின் மணவாளனே,
துவள் கடிச் சிலை வேள் பகைவா திரு மறு ஒர் எட்டுடன்
ஆயிரம் மேல் ஒரு துகள் அறுத்து அணி ஆர் அழகா சுரர்
பெருமாளே. … வளைந்துள்ள, புதுமை வாய்ந்த (கரும்பு) வில்லைக் கொண்ட காம வேளாகிய மன்மதனுக்கு எதிராய் வந்து (அவன் தரும் சிற்றின்பத்துக்கு எதிரான பேரின்பத்தைத் தரும்) செவ்வேளே, அழகிய மச்ச ரேகை ஆயிரத்து எட்டுக்கும் மேலாகக் கொண்டு, குற்றமெல்லாம் அறுத்து எறியும் ஒப்பற்ற வேலைக் கொண்ட அழகனே, தேவர்கள் பெருமாளே.
London Swaminathan clicks in Bangkok Airport; Churning the Milky Ocean sung by Ilanko in Silappadikaram
வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி — ஆய்ச்சியர் குரவை; சிலப்பதிகாரம்- இளங்கோ
வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை யசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே ;
“கண்ணனே நீ முன்பு ஒரு நாள் மந்தரமலையை மத்தாக நாட்டி வாசுகி என்னும் பாம்பினைக் கடை கயிறாகக் கொண்டு பாற்கடலின் நடுவிடத்தைக் கலக்கினாய், அங்ஙனங் கலக்கிய நின்கை அசோதைப் பிராட்டியின் கடை கயிற்றினால் கட்டுண்ட கை, தாமரை மலர் போலும் உந்தியினையுடையாய் இஃது ஒரு மாயமோ; மிகவும் மருட்கையை உடைத்தாயிருந்தது;
***
அகத்தியரின் தமிழ் டீச்சர் முருகன்
மோகன விருப்பைக் காட்டி ஞானமும் எடுத்துக் காட்டி மூ
தமிழ் முனிக்குக் கூட்டு குருநாதா … அன்பு மிக்க விருப்பத்தைக்
காட்டி, ஞான சாஸ்திரங்களை விரித்து எடுத்து உரைத்துக் காட்டி, பழந் தமிழ் வல்ல அகத்திய முனிவருக்கு அந்த ஞானத்தைக் கூட்டுவித்த குருநாதனே,
மூ உலகு அளித்துக் காட்டி சேவலை உயர்த்திக் காட்டு மூரி
வில் மதற்குக் காட்டு வயலூரா … மூவுலகங்களையும் காத்துக்
காட்டி, சேவற் கொடியை உயர்த்திக் காட்டும் (வயலூரானே), வலிமை
கொண்ட (கரும்பு) வில்லை மனமதனுக்குப் படையாகத் தந்து உதவிய வயலூர்* முருகனே,
வாகையை முடித்துக் காட்டி கானவர் சமர்த்தைக் காட்டி வாழ்
மயில் நடத்திக் காட்டும் இளையோனே … (வேடர்களுக்குத்
தெரியாதவாறு வள்ளியைக் கவர்ந்த) வெற்றியைக் காட்டி, வேடர்களின்
திறம் எவ்வளவு சிறிது என்பதைக் காட்டி, (நல் வாழ்வு பெற்ற சூரனாகிய) மயிலை உலகெலாம் செலுத்திக் காட்டிய இளைய பெருமானே,
மா மலை வெதுப்பிக் காட்டி தானவர் திறத்தைக் காட்டி
வானவர் சிரத்தைக் காத்த பெருமாளே. … பெரிய கிரவுஞ்ச மலை
வெந்து போகும்படிச் செய்து காட்டி, அசுரர்களுடைய திறமை எல்லாம் இவ்வளவு தான் என்பதைக் காட்டி, தேவர்களின் தலையைக் காத்த பெருமாளே.
–subham—
Tags– வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி,வயலூரில் , முருகன் செய்த அற்புதங்கள், Part 58, அருணகிரிநாதர் , அரிய செய்திகள்