ஏப்ரல் 2026 காலண்டர்: காஞ்சி சுவாமிகள் பொன்மொழிகள் (Post No.15,553)

Written by London Swaminathan

Post No. 15,553

Date uploaded in London – 30 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஏப்ரல் 2026 மாத பண்டிகைகள்

ஏப்ரல் 01- புதன் பங்குனி உத்திரம்;ஏப்ரல் 03 வெள்ளி-புனித வெள்ளி; 05 ஞாயிறு     ஈஸ்டர் டே; 14  சித்திரை 01 செவ்வாய்     தமிழ் வருடப்பிறப்பு:  20 திங்கள் அட்சய திருதியை; 21 சங்கர ஜயந்தி; 22 ராமானுஜர் ஜயந்தி; 28 செவ்வாய்     மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்; 30 வியாழன்  நரசிம்ம ஜெயந்தி, மதுரை கள்ளழகர் எதிர்சேவை

***

அமாவாசை-17; பெளர்ணமி-2; ஏகாதசி உண்ணாவிரத நாட்கள் 13,27

***

ஏப்ரல் 2026 முக்கிய சுப முகூர்த்த நாட்கள் (விவாஹ முகூர்த்தம்):

ஏப்ரல் 20, ஏப்ரல் 23, ஏப்ரல் 30;

(தேய்பிறை முகூர்த்த நாட்கள் 6, 12, 13, 16)

***

ஏப்ரல் 1 – புதன் கிழமை

“பிள்ளையார்” என்றே அன்போடு கூறுவது நம் தமிழ்நாட்டுக்கே உரிய வழக்கம். சர்வலோக மாதா பிதாக்களாகிய பார்வதி பரமேசுவரர்களின் ஜேஷ்ட புத்திரர் அவர். “பிள்ளை” என்றால் அவரைத்தான் முதலில் சொல்ல வேண்டும். வெறுமே “பிள்ளை” என்று சொல்லக்கூடாது என்பதால் மரியாதையாகப் “பிள்ளையார்” என்று சொல்வது தமிழ்நாட்டுச் சிறப்பு.

காஞ்சி சுவாமிகள் (1894-1994),தெய்வத்தின் குரல்

***

ஏப்ரல் 2 – வியாழக் கிழமை

“குமாரன்” என்றால் “பிள்ளை” என்றே அர்த்தம். பாரததேசம் முழுவதிலும் குமாரன், குமாரஸ்வாமி என்றால் பார்வதி பரமேசுவரர்களின் இளைய பிள்ளையாகிய சுப்பிரமணியரையே குறிப்பிடும். தமிழிலும் “குமரக் கடவுள்” என்கிறோம். ஆனால், அவரைக் “குமரனார்” என்பதில்லை; “குமரன்” என்றுதான் சொல்வார்கள். மூத்த பிள்ளைக்கே மரியாதை தோன்றப் பிள்ளையார் என்று பெயர் தந்திருக்கிறோம்.

***

ஏப்ரல் 3 – வெள்ளிக்கிழமை 

பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது எதற்காக? விக்நேசுவரர், தம் அப்பாவான ஈசுவரனைப் பார்த்து “உன் சிரசையே எனக்குப் பலி கொடு” என்று கேட்டு விட்டாராம். எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது எதுவோ அதைத் தியாகம் பண்ணினால்தான் மகா கணபதிக்குப் பிரீதி ஏற்படுகிறது. அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்குத் தயார் என்ற அறிகுறியாகத்தான், ஈசுவரனைப்போலவே மூன்று கண்கள் உடைய தேங்காயைச் சிருஷ்டித்து அந்தக் காயை அவருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும்படியாக ஈசுவரன் அநுக்கிரகித்திருக்கிறார்.அகங்கார மண்டையோட்டை உடைத்தால் உள்ளே அமிருத ரஸமாக இளநீர் இருப்பதை இந்தச் சிதறுகாய் உணர்த்துகிறது.

***

ஏப்ரல் 4- சனிக்கிழமை 

யானை எதை ரட்சிக்கும்? தன் தந்தத்தைத் தீட்டி வெள்ளை வெளேர் என்று வைத்திருக்கும். இந்தப் பிள்ளையார் என்கிற யானை என்ன பண்ணுகிறது என்றால், அந்தக் கொம்பில் ஒன்றையே ஒடித்து, அதனால் மகாபாரதத்தை எழுதிற்று. தன் அழகு, கௌரவம், கர்வம் எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிற ஒன்றைக் காட்டிலும், தர்மத்தைச் சொல்கிற ஒன்று தான் பெரிது என்பதை இவ்விதம் இந்த யானை காட்டியது.

***

ஏப்ரல் 5 – ஞாயிற்றுக் கிழமை

பிள்ளையாருக்கு எதிரே நின்று தோப்புக்கரணம் போடுகிறோமே, அதை நமக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தவர் மஹாவிஷ்ணுதான் என்று ஒரு கதை இருக்கிறது. ஒரு சமயம் மஹாவிஷ்ணுவினுடைய சக்கரத்தை அவரது மருமகனான பிள்ளையார் விளையாட்டாகப் பிடுங்கிக் கொண்டு தம் வாயில் போட்டுக்கொண்டு விட்டாராம். பிள்ளையாரிடமிருந்து திரும்பப் பிடுங்குவது முடியாது. அவர் மிகவும் பலம் உடையவர். அதட்டி மிரட்டி வாங்கவும் முடியாது. ஆனால், அவரைச் சிரிக்க வைத்துச் சந்தோஷத்தில் அவர் வாயிலிருந்து சக்கரம் கீழே விழுந்தால் எடுத்துக்கொண்டு விடலாம் என்று மஹாவிஷ்ணுவுக்குத் தோன்றியதாம். உடனே நான்கு கைகளாலும் காதுகளைப் பிடித்துக் கொண்டு ஆடினாராம். விநாயகர் விழுந்து விழுந்து சிரித்தார். சக்கரம் கீழே விழுந்தது. விஷ்ணு எடுத்துக் கொண்டு விட்டார்.

***

ஏப்ரல் 6 – திங்கட் கிழமை

“தோர்பி: கர்ணம்” என்பதே தோப்புக்கரணம் என்று மாறியது. “தோர்பி” என்றால் “கைகளினால்” என்று அர்த்தம். ‘கர்ணம்’ என்றால் காது. “தோர்பி கர்ணம்” என்றால் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது.

***

ஏப்ரல் 7- செவ்வாய்க்கிழமை 

ஜீவனும் பிரம்மமும் ஒன்றுதான் என்கிறார் ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதர்கள். அதாவது நாமேதான் ஸ்வாமி என்கிறார்.

***

ஏப்ரல் 8 – புதன் கிழமை

“நான்தான் ஸ்வாமி” என்று ஹிரண்யகசிபு சொன்னபோது தன்னைத் தவிர வேறு ஸ்வாமியே கிடையாது என்ற அகங்காரத்தில் சொன்னான். பகவத் பாதர்களோ ஸ்வாமியைத் தவிர வேறு எதுவுமே கிடையாது என்பதால் நாமும் ஸ்வாமிதான் என்கிறார். ஜீவன் தனக்கு உள்ள அகங்காரத்தை அடியோடு விட்டு விட்டால் இவனே பிரம்மத்தில் கரைந்து பிரம்மமாகி விடுகிறான் என்கிறார்.

***

ஏப்ரல் 9 – வியாழக் கிழமை

சமுத்திரமாக இருக்கிற அவரேதான் ஆற்று ஜலம், குளத்து ஜலம், கிணற்று ஜலம், அண்டா ஜலம், செம்பு ஜலம், உத்தரணி ஜலம்போல் தம் சக்தியைச் சிறுசிறு ரூபங்களாகச் செய்துகொண்டு பலவித ஜீவ ஜந்துக்களாகியிருக்கிறார். இதில் மனிதனாகும்போது பாப புண்ணியத்தை அனுபவிக்கவும், பாப புண்ணியம் கடந்த நிலையில் தாமே ஆகிவிடவும் வழி செய்திருக்கிறார். மனிதனாகும்போது மனசு என்ற ஒன்றைக் கொடுத்து அதைப் பாப புண்ணியங்களில் ஈடுபடுத்திப் பலனை அனுபவிக்கச் செய்கிறார்.

***

ஏப்ரல் 10 – வெள்ளிக்கிழமை 

மனசை அவர் குரங்காகப் படைத்திருக்கிறார். அந்தக் குரங்கு இப்போது தேகத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், ஸ்வாமி இந்தத் தேகத்தை நசிப்பதாக அல்லவா வைத்திருக்கிறார்? இந்த அழுகல் பழத்தை மனக்குரங்கு விட்டுவிட வேண்டும். அழுகாத பழம் கிடைத்தால் அழுகல் பழத்தைக் குரங்கு போட்டுவிடும். அழுகாத மதுரமான பழம் பரமாத்மாதான். அதை மனத்தால் பிடித்துக்கொண்டு சரீரப் பிரக்ஞையை விட்டுவிட அப்பியசிக்க வேண்டும்.

***

ஏப்ரல் 11 – சனிக்கிழமை 

‘அத்வைதம்’ என்பதே ஆதி சங்கர பகவத் பாதர்கள் நிலைநாட்டிய சித்தாந்தம் .‘அ-த்வைதம்’ என்றால் ‘இரண்டு இல்லை’ என்று அர்த்தம். எந்த இரண்டு இல்லை? இப்போது ஸ்வாமி என்று ஒருத்தர் இருக்கிறார். அவருக்கு இரண்டாவதாக ஜீவர்கள் என்ற நாம் இருக்கிறோம் என்று நினைக்கிறோம் அல்லவா! இப்படி இரண்டு இல்லவே இல்லை. ஸ்வாமி (பிரம்மம்) என்கிற ஒரே சத்திய வஸ்துக்குப் புறம்பாக எதுவுமே இல்லை. அது தவிர, இரண்டாவது வஸ்து எதுவுமே இல்லை. அந்த ஒன்றேதான் மாயா சக்தியினால் இத்தனை ஜீவர்கள் மாதிரியும் தோன்றுகிறது.

***

ஏப்ரல் 12 – ஞாயிற்றுக் கிழமை

ஜாக்ரத், ஸ்வப்னம், ஸுஷுப்தி என்று மூன்று அவஸ்தை (நிலை)களுண்டு. சாதாரணமாக விழித்துக் கொண்டிருப்பது ஜாக்ரம்; கனாக் காண்பது ஸ்வப்னம்; ஒன்றும் தெரியாமல் தூங்குவது ஸுஷுப்தி. இந்த மூன்று அவஸ்தைகளிலும் ஒருவனேதான் இருக்கிறான். கனாக் கண்டவனும் விழித்துக் கொண்டவனும் ஒருவனே. ஆனால், கனாக் கண்ட பொழுது நடக்கிறவைகளுக்கும், விழித்துக் கொண்டபின் நடக்கிறவைகளுக்கும் முன்னுக்குப் பின் சம்பந்தமே இல்லை. கனவில் வேற விதமான நடவடிக்கைகள் இருக்கின்றன. விழித்துக்கொண்டபோது வேறே விதமான நடவடிக்கைகள் இருக்கின்றன. அவஸ்தை வேறுபட்ட போதிலும், மனோபாவம் வேறுபட்ட போதிலும் இரண்டிலும் ஒருவனே இருப்பதுபோல, வேறு வேறு மனோபாவம் கொண்ட பல பிராணிகளிடத்திலும் இருப்பவன் ஒருவனே: அவனே நாம் என்று தெளிய வேண்டும்.

***

ஏப்ரல் 13 – திங்கட் கிழமை

இந்த உலகமும் ஒரு கனவுதான். உலக வாழ்வும் மாயா ஜுரத்தில் வந்த ஜன்னி என்று தெரிந்து கொண்டால், உண்மையில் எல்லாம் ஒன்று என்று உணர்வோம். நம் கனவில், நம் ஒருத்தரின் மனமே இத்தனை பேரை சிருஷ்டித்த மாதிரி, மகா பெரிய மனசு ஒன்றின் எண்ணங்கள்தான் இத்தனை ஜீவராசிகளும் என்று தெரியும்.

***

ஏப்ரல் 14- செவ்வாய்க்கிழமை 

ஒரு கோயிலுக்கு யானை வாகனம் செய்தான் ஒரு மரத்தச்சன். அதைப் பரீட்சிப்பதற்காக இன்னொரு தச்சன் போனான். அவனோடு அவனுடைய குழந்தையும் போயிற்று. மர யானையைப் பார்த்ததும் குழந்தை பயந்தது.  குழந்தைக்கு அந்த வாகனம் அசல் யானையாகவே இருந்தது. அதுமரம் என்கிற ஞானத்தைக் குழந்தையிடமிருந்து மறைத்தது. அது யானையாக்கும் என்கிற நினைப்பு, அதே சமயத்தில், அது தத்ரூபம் யானை மாதிரி இருந்தும் கூடத் தச்சன் பயப்படாததற்குக் காரணம், அதன் யானைத் தன்மை அவனைப் பொறுத்தமட்டில் மறைந்து அது மரம்தான் என்கிற அறிவு இருந்ததேயாகும்.

***

ஏப்ரல் 15 – புதன் கிழமை

மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை

என்று இந்த இருவர் நிலையையும் திருமூலர் திருமந்திரத்தில் சொல்லியிருக்கிறார்.

திருமூலர் பெரிய யோகீசுவரர். பெரிய தத்துவங்களை லகுவாகச் சொல்லிவிடுவார் அவர். அவரது திருமந்திரத்தில் தான் மேலே சொன்ன வாக்கு இருக்கிறது. திருமூலர் எதற்கு இந்தக் கதையைச் சொன்னார்? செய்யுளின் அடுத்த இரண்டு அடிகளைப் பார்த்தால் அது புரியும்.

பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்

பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்.

யானை வேறு, மரம் வேறு இல்லை என்பதுபோல் பரமாத்மா வேறு, உலகம் வேறு இல்லை என்று இப்படித் திருஷ்டாந்தம் காட்டி விளக்குகிறார் திருமூலர்.

***

ஏப்ரல் 16 – வியாழக் கிழமை

பரமாத்மா என்கிற மரத்தினாலேயே ஆனதுதான் இந்தப் பார் முதலிய பிரபஞ்சம் என்கிற பொம்மை. குழந்தைக்குப் பொம்மையில் மரம் தெரியாததுபோல், நமக்கு உலகத்தில் பரம் தெரிவதில்லை. நம் பார்வையில் பார் முதலான பஞ்சபூதங்கள் பரத்தை மறைத்துவிட்டன. ஞானிகளுக்கோ எல்லாம் பிரம்ம மயமாகவே தெரிகிறது. அவர்கள் விஷயத்தில், பார்முதற் பூதங்கள் மரத்தில் மறைந்துபோய் விடுகின்றன.

***

ஏப்ரல் 17 – வெள்ளிக்கிழமை 

எல்லாரும் பணக்காரராகி விடுவதாகவே வைத்துக் கொள்வோம். நிம்மதியாக, சாந்தமாக, நிர்ப்பயமாக இருக்க அது உதவுமா? பணக்காரர்கள் நிறைந்த தேசங்களைப் பாருங்கள். அங்கே எத்தனை சச்சரவு, நிம்மதியின்மை? எல்லோருக்கும் நிறையப் பணம் வந்துவிட்டாலும், ஒவ்வொருவனுக்கும் மற்றவனைவிட அதிகம் இருக்க வேண்டும் என்கிற ஆசையும், அதனால் போட்டியும், சச்சரவும் இருந்து கொண்டேதான் இருக்கும்.

***

ஏப்ரல் 18 – சனிக்கிழமை 

மகானாகிய நீலகண்ட தீக்ஷிதர் தம்முடைய ‘ஆனந்த ஸாகர ஸ்தவ’த்தில் இதற்குப் பதில் சொல்லுகிறார். ‘அம்மா மீனாக்ஷி, உன்னிடம் எதையும் சொல்லவே வேண்டாம். சகலமும் தெரிந்தவள் நீ. ஆனாலும் உன்னிடம் கஷ்டங்களை வாய் விட்டுச் சொல்லாவிட்டால் மனம் புண்ணாகிறது. வாய்விட்டுச் சொல்லிவிட்டாலே தற்காலிகமாக ஒரு ஆறுதலாக, தெம்பாக இருக்கிறது. அதனாலேயே உனக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும் நான் என் குறைகளைச் சொல்கிறேன்” என்கிறார்.

***

ஏப்ரல் 19 – ஞாயிற்றுக் கிழமை

பாபங்கள் இரண்டு தினுசு, ஒன்று சரீரத்தால் செய்த பாப கர்மா, இன்னொன்று மனசினால் செய்த பாப சிந்தனை. பாப கர்மாவைப் போக்கிக் கொள்ள புண்யகர்மா செய்ய வேண்டும். பாப எண்ணங்களைப் போக்கிக் கொள்ள புண்ணியமான நினைப்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

***

ஏப்ரல் 20 – திங்கட் கிழமை

காரியமே இல்லாமல் உட்காருகிறேன் என ஆரம்பித்தால் அப்போது மனசில் இல்லாத கெட்ட எண்ணங்கள் எல்லாம் படை எடுத்து வரும். இங்கிலீஷில்கூட “வேலையில்லாத சித்தம் சைத்தானின் பட்டடை” என்று ஒரு பழமொழி உண்டு. ஆகவேதான்—சித்தம் நின்று அத்வைத ஞானம் ஸித்திக்க வேண்டுமானால் அதற்குமுன் அந்தச் சித்தம் சுத்தப்பட வேண்டும்! ஆரம்பத்தில் ‘கர்மங்களாலேயே இந்தச் சித்த சுத்திக்கு வழி பண்ணிக் கொள்ள முடியும்’ என்பதால்தான் ஆசாரியாள் வேத கர்மாக்களை நிலைநாட்டினார்.

***

ஏப்ரல் 21 – செவ்வாய்க்கிழமை 

பாப சிந்தனைகளைப் போக்குகிற புண்ணிய சிந்தனைதான் பரோபகாரம், சேவா மனப்பான்மை, தியாகம் எல்லாம். பொதுவாக அன்பு என்று சொல்லலாம். இந்த அன்பை சகல ஜீவ ஜடப் பிரபஞ்சத்துக்கும் மூலமான பரமாத்மாவிடம் திருப்பி விடுவதுதான் பக்தி.

***

ஏப்ரல் 22 – புதன் கிழமை

மனித வாழ்வு உள்ள வரையில் ஆசை உண்டு, துன்பம் உண்டு, பயம் உண்டு, துவேஷம் உண்டு. இவற்றிலிருந்து விடுபடுவதே மோக்ஷம். அத்வைத அநுபவத்தால்தான் பாசமும், துன்பமும், பயமும், துவேஷமும் நிவிருத்தியாகி மோக்ஷ ஆனந்தத்தை இங்கேயே அநுபவிக்க முடியும். நமக்கு அந்நியமாக இன்னொரு வஸ்து உள்ள போதுதான் அதனால் துன்பம், அதனிடம் ஆசை அல்லது பயம், அதன்மீது துவேஷம் இவை உண்டாக முடியும். இன்னொன்றே இல்லை – காண்பன எல்லாம் ஒரே பரமாத்மா – என்ற அத்வைத ஞானம் அநுபவமாக வந்துவிட்டால், அப்புறம் ஆசையும், பயமும், கோபமும், துயரமும் ஏற்பட வழி ஏது?

***

ஏப்ரல் 23 – வியாழக் கிழமை

உலகம் மாயை என்று அத்வைதம் கூறுவதற்குப் பொருள் யாதெனில், ‘உலகம் இறுதி சத்தியமல்ல! இது விவகாரத்துக்கு மட்டுமே சத்தியம்; இதனுடைய இருப்பும் பிரம்மம் என்ற ஒன்றைச் சார்ந்ததே’ என்பதுதான்; இதையே மேற்சொன்ன ஸயன்ஸ் நிபுணர்களும் சொல்கிறார்கள். பிரம்மமே பாரமார்த்திக சத்தியம், உலகம் விவகாரிக சத்தியமே என்று அத்வைதம் சொல்வதைத்தான் இவர்கள் “உலக இயக்கமெல்லாம் இன்னொன்றைச் சார்ந்தவை (“relative”) தான்; முழு உண்மை (“absolute”) அல்ல” என்கிறார்கள்.

***

ஏப்ரல் 24 – வெள்ளிக்கிழமை 

நாம் கண்ணால் மட்டுமே பார்க்கிறோம். ஒன்றை ரோஜா என்கிறோம். இன்னொன்றை ஊமத்தை என்று சொல்கிறோம். ஞானம் என்கிற அறிவால் பார்த்தால் அது ரோஜா அன்று. ஆனந்தமாகத்தான் தெரியும். ஊமத்தம் பூவும் அப்படியே தெரியும். நமக்கு ஞானம் இல்லாதபடியால் ஒன்றை ரோஜாவாகவும், மற்றொன்றை இன்னொரு பொருளாகவும் பார்க்கிறோம். உண்மையில் எல்லாம் ஆனந்தம்தான். உண்மை நமக்குப் புலப்படாததற்குக் காரணம், நமக்குச் சித்தத்தில் அழுக்கு இருப்பதும், ஒருமைப்பாடு இல்லாததும்தான்.

***

ஏப்ரல் 25 – சனிக்கிழமை 

கண்ணாடி ஆடிக் கொண்டிருந்தால், அதில் தெரியும் பிரதி பிம்பம் யதார்த்தமாக அல்லாமல் விரூபமாகத் தெரியும். ஆட்டத்துடன் அந்தக் கண்ணாடியில் அழுக்கும் இருந்தால் பிரதிபிம்பத்தில் யதார்த்த பாவமே கொஞ்சங்கூட இராது. நம்முடைய மனக்கண்ணாடி ஆடிக் கொண்டும், அழுக்குப் படிந்தும் இருப்பதால் பொருள்களை அது உள்ளபடி ஆனந்த வஸ்துவாகப் பிரதிபலிப்பதில்லை.

***

ஏப்ரல் 26 – ஞாயிற்றுக் கிழமை

தானம், தருமம், கர்ம அநுஷ்டானம், ஈசுவர நாமோச்சாரணம், ஆலய தரிசனம் முதலியவையே ஸத்காரியங்கள். பாவத்தைப் போக்குவதற்கு இவையே உபாயம். இவற்றால் பாபத்தைப் போக்கிக் கொண்டு பிறகு ஞான மார்க்கத்தில் ஈடுபட்டு, எல்லையில்லாத ஞானமாக ஆனந்தமாக ஆக வேண்டும்.

***

ஏப்ரல் 27 – திங்கட் கிழமை

ஒரே ஒரு சூரியன்தான் உள்ளது; கையிலே கொஞ்சம் ஜலத்தை எடுத்துக் கொண்டு நல்ல வழுவழுப்பான தரையில் அதைத் தெளித்தால் ஒவ்வொரு முத்து ஜலத்திலும் பிரதி ரூபமாக ஒரு சூரியன் தெரிகிறது. அவை எல்லாம் பிரிந்து பிரிந்து காணப்பட்டாலும் அநேக சூரியன்கள் இருப்பதாக ஆகாது. சூரியன் ஒன்றுதான். அவ்வாறே, உலகில் காணும் இத்தனை ஜீவராசிகளுக்குள் சிறியதாக மினு மினுக்கின்ற அறிவொளி அனைத்தும் ஒரே பிரம்மத்தின் பிரதிபலிப்புத்தான். இதைத்தான் ஸ்ரீ ஆதி சங்கராச்சார்யரவர்கள் ப்ரம்ம ஸூத்ர பாஷ்யத்தில் சொல்லியிருக்கிறார்.

***

ஏப்ரல் 28 – செவ்வாய்க்கிழமை 

பழுத்த நிலையை அடைவதற்குமுன், மொட்டாக, பூவாக, பிஞ்சாக, காயாக இருந்துதான் முதிர வேண்டும். பழுக்கும் நிலைவரைக்கும் பொறுமையாகத்தான் இருக்க வேண்டும். காயாக இருக்கும்போதே பழமாவதற்கு அவசரம் காட்டி, வெம்பி விழுந்துவிட்டால் பயன் இல்லை. ‘வெம்பி விழுந்திடுமோ?’ என்று ராமலிங்கர் சொல்லுகிறார். நமக்கும் அந்தக் கவலை இருக்க வேண்டும். கனிந்த பழம் ஆகும் வரையில் பூஜை, ஜபம், தபம் எல்லாம் இருக்கவேண்டும்.

***

ஏப்ரல் 29 – புதன் கிழமை

இதை ஸ்ரீ கிருஷ்ணனே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

‘பொம்மலாட்டப் பொம்மை மாதிரிதான் சகல பிராணிகளும்; உள்ளே இருந்து ஈச்வரனே அவற்றை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறான்.’ [ஈச்வர: ஸர்வ பூதானாம் ஹருத் தேசே (அ) ர்ஜுன திஷ்டதி ப்ராமயன் ஸர்வ பூதானி யந்த்ரா ரூடானி மாயயா] என்கிறார்.

***

ஏப்ரல் 30 – வியாழக் கிழமை

தெருவிலே ஒரு பூமாலை கிடக்கிறது. அரை இருட்டு. எவனோ அந்தப் பக்கம் வந்தவன் அதை மிதித்துவிட்டு, “ஐயோ, பாம்பு, பாம்பு!” என்று பயத்தால் கத்துகிறான். மாலையாக இருப்பதும் பாம்பாக இருப்பதும் ஒன்றுதான். இது மாலைதான் என்று தெரிந்தவுடன், அவனுக்குப் பாம்பு இல்லை என்று தெரிந்து விடுகிறது. அதனால் முதலில் பாம்புக்கு ஆதாரமாக இருந்தது என்ன? மாலைதான்.

மாலையைப் பாம்பு என எண்ணுவதுபோல், அஞ்ஞானிகள் ஒன்றேயான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகப் பார்த்து மயங்குகிறார்கள். இந்தப் பிரபஞ்சத்துக்கு ஆதாரம் பிரம்மம்தான்.

***

BONUS QUOTES

கம்பர் சுந்தர காண்டத்தில் இதைத்தான் சொல்லுகிறார்:

‘அலங்கலில் தோன்றும் பொய்ம்மை

அரவுஎனப் பூதம் ஐந்தும்

விலங்கிய விகாரப் பாட்டின்

வேறு பாடுற்ற வீக்கம்

கலங்குவ தெவரைக் கண்டால்

அவர் என்பர் கைவி லேந்தி

இலங்கையில் பொருதா ரன்றே

மறைகளுக் கிறுதி யாவார்.’

அலங்கல் என்றால் மாலை. அரவு என்றால் பாம்பு. ‘அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு’ – மாலையில் தோன்றும் பாம்பு என்ற பொய்யான எண்ணம். இதுபோலப் பஞ்ச பூதங்கள் ஒன்று சேர்ந்து பொய்யான பிரபஞ்சம் என்ற வீக்கமாகி மயக்குகிறதே. அது யாரைக் கண்டால் விலகிப்போய் மாலையான ஈசுவரன் மட்டும் தெரியுமோ, அந்த மாயா நாசகனான பரமாத்மாதான் ராமசந்திர மூர்த்தி என்றார்.

***

நமக்கு எண்ணி முடியாத ஆசைகள் இருக்கின்றன. ஆனாலும் என்றோ ஒரு நாள் நாம் ஆசைப்படும் வஸ்துக்கள் நம்மை விட்டுப் பிரிவது அல்லது நாம் அவற்றைவிட்டுப் பிரிவது சர்வ நிச்சயம். சாவின் மூலம் இந்தப் பிரிவு ஏற்படாமல், அதற்கு முந்தி நாமாக ஆசைகளை ராஜினாமா செய்து விட்டுவிட்டால், அத்தனைக்கத்தனை ஆனந்தமாக இருக்கலாம். நமக்கு எத்தனை ஆசைகள் இருக்கின்றனவோ அத்தனை முளைகளை துக்கத்துக்கு அடித்துக்கொண்டு நம்மைக் கட்டிப்போட்டுக் கொள்கிறோம். ஆசைகளைக் குறைக்கக் குறைக்க துக்கஹேதுவுங் குறையும். இந்தப் பிறவி முடியுமுன் நாம் சகல ஆசைகளையும் விட்டுவிட்டால் மறுபடியும் பிறந்து அவஸ்தைப்படவே வேண்டாம்; அப்படியே பரமாத்மாவில் கரைந்து ஆனந்தமாகி விடலாம்.

***

வெளி வஸ்துக்களிலிருந்து நமக்கு ஆனந்தம் வரவில்லை. நம்மிடமிருந்தேதான் ஆனந்தம் பிறக்கிறது. நமது உண்மை ஸ்வரூபமான ஆனந்தத்தை நாம் அஞ்ஞானத்தினால் மூடி மறைத்துக் கொண்டிருக்கும் நிலையில்கூட ‘நம்முடையது’ என்று ஒன்றிடம் சம்பந்தம் வைக்கும்போதுதான் அதிலிருந்து ஆனந்தத்தை அடைகிறோம். அந்த சம்பந்தம் போய் விட்டால் ஆனந்தம் போய் விடுகிறது.

***

மாயையை எப்படி உடைப்பது என்றால் ஆசைகளை அடக்குவதுதான் வழி. மனம் இருக்கும் வரை ஆசைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் மனத்தை அடக்கிவிட வேண்டும். மனம் அடங்கி விட்டால் மரண நிலையில் இருப்பதுபோல் ஒரு சக்தியுமின்றி ஜடம் மாதிரி ஆவோம் என்று எண்ணக்கூடாது. மாறாக, இதுதான் சகல சக்திகளுக்கும் ஆதாரமான நிலை. சாதாரணமாக ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீக்ஷண்யம் இருக்கும். பல வாய்க்கால்களில் ஒன்றில் ஜலத்தை அடைத்துத் திருப்பினால் இன்னொன்றில் அதிகம் நீர் பெருகுவது போல், ஓர் அங்கத்தில் ஊனம் இருப்பதே இன்னொன்றில் தீக்ஷண்யத்தைத் தருகிறது. ஆத்ம சக்தியைப் பலவாறாகச் சிதறச் செய்யும் எல்லாம் இந்திரியங்களையும் அடைத்துக் கொண்டு விட்டால், அப்போது சகல சக்திகளும் ஒரே இடத்தில் அமைதியாக, ஆனந்தமாகக் கூடி நிற்கும். மிகுந்த சக்தியுடன் உலகுக்கு நல்லது செய்யலாம்.

***

வடக்கே ஒரு நதிக்கு ‘ஸோன்’ என்று பெயர். ‘சோணம்’ என்றால் சிவப்பு. இந்த நதி சிவப்பான மண் வழியே ஓடுகிறது. ஆந்திராவில் கிருஷ்ணா நதி இருக்கிறது. ‘கிருஷ்ண’ என்றால் கறுப்பு. இந்த நதி கறுப்பு மண் மீது ஓடுகிறது. ‘கங்கை’ என்றால் வெளுப்பு. இதுவும் அது ஓடிவருகிற பிரதேசத்தைப் பொறுத்து ஏற்பட்ட பெயர்தான். மூன்றும் ஒரே சமுத்திரத்தில்தான் கலக்கின்றன. சிகப்பு ரஜோ குணம், கறுப்பு தமோ குணம், வெள்ளை ஸத்வ குணம். மனசானது முக்குணங்களில் எதில் பாய்கிறதோ, அதை ஒட்டி ஜீவாத்மாவின் சுபாவம் அமைகிறது. எப்படியானாலும், கடைசியில் பரமாத்ம சமுத்திரத்தில்தான் கலந்தாக வேண்டும்.

***

மநுஷ்யனாகப் பிறந்த ஒவ்வொருத்தனும் ஓயாமல் அலைச்சலான அலைச்சல் அலைந்து கொண்டிருக்கிறானே, எதற்காக? ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்குத்தான். வெளியிலிருக்கிற வஸ்துக்களிடம் இவனுக்கு ஆசை. அவற்றைப் பெறவே அலைகிறான். ஒன்று கிடைத்து விட்டாலும் போதவில்லை. அதனால் வருகிற சுகம் தீர்ந்து போகிறது. இன்னொன்றுக்கு ஆசைப்படுகிறான். அதைத் தேடி ஓடுகிறான். இவனுக்கு சாந்தி என்பதே ஒரு நாளும் இல்லாமலிருக்கிறது.

வெளியில் இருக்கிற வஸ்து வந்தால்தான் சந்தோஷம், ஆனந்தம் என்று துரத்திக்கொண்டே இருப்பவனுக்கு சாந்தி எப்படி வரும்?***

***

உலக வாழ்வில் சகல மனிதர்களுக்கும் அளவில்லாத கஷ்டங்கள் உண்டாகத்தான் செய்யும். பணக்காரன், பெரிய பதவியில் இருப்பவன் கஷ்டமில்லாமல் இருப்பதாக மற்றவர்கள் நினைக்கலாம். அப்படி நினைத்துத் தாங்களும் அவர்களைப் போலப் பணமும் பதவியும் பெறப் பாடுபடலாம். ஆனால், பணக்காரனை, பதவியில் உள்ளவனைக் கேட்டால் தெரியும், அவனுக்கு எத்தனை கஷ்டங்களென்று. நாம் திண்ணையில் இருக்கிறோம்; விழுந்தால் சிராய்த்துக் கொள்வதோடோ, சுளுக்காவதோடோ போய்விடும். பணக்காரனும், பதவிக்காரனும் மாடிமேல் இருக்கிறான். எனவே, அவன் விழுந்தால் எலும்பெல்லாம் முறிந்து விடும்.

***

துக்கம் நம் உடன் பிறப்பு. நம் பூர்வ கர்மாவின் பயனாக இந்தத் துக்கங்களுக்கு நாம் முன்னமேயே விதை போட்டிருக்கிறோம். இதிலிருந்து தப்ப வழி இல்லை.

ஆனால் கர்மத்தினால் ஏற்படும் கஷ்டத்தைப் பொறுத்துக் கொண்டு சாந்தமாக இருக்க வழி உண்டு. புதிதாக கர்ம மூட்டையைப் பெருக்கிக் கொண்டு எதிர் காலத்தில் கஷ்டத்தை அதிகமாக்கிக் கொள்ளாமலிருக்க வழி உண்டு. முதலில் சொன்ன ஞானம்தான் அந்த வழி.

***

யோகிக்கு அநேக துக்கம் வரும்; அதாவது ஊர் உலகத்துக்கெல்லாம் அது துக்கமாகத் தோன்றும். ஆனால் அவனுக்குத் துக்கம் லவேசமும் தெரியாது. பட்ட கட்டை மாதிரி இருப்பான். பட்ட கட்டை என்பதுக்கூடச் சரியில்லை. அது உணர்ச்சியே இல்லாத நிலை அல்லவா? யோகி ஒருத்தன் தான் பூரணப் பிரக்ஞையோடு இருக்கிறவன். அவன் ஸதானந்தமாக இருக்கிறவன். அது வேண்டும், இது வேண்டும் என்பதேயில்லாமல் சதா ஆனந்தமாக உட்கார்ந்து கொண்டிருந்து விட்டால் அதுதான் யோகம்.

***

நல்லது கெட்டதுகளில் விழுகிற மாதிரி, இச்சரீரம் போய்ச் சிரம பரிகாரம் ஆனபின், இன்னொரு சரீரத்தில் விழித்துக் கொள்கிறோம். இந்த அலைச்சல்—புனரபி ஜனனம், புனரபி மரணம்—கூடாது. இந்தச் சரீரம் போனால் இன்னொரு முறை சரீரம் வரக்கூடாது. அப்படிச் செய்து கொள்ள வேண்டும். கட்டுப்பாடு, ஒழுங்கு, பரம கருணை, தபஸ், பூஜை, யக்ஞம், தானம் எல்லாம் அதற்குத்தான்.

–SUBHAM—

TAGS- ஏப்ரல் 2026 காலண்டர்:, காஞ்சி சுவாமிகள், பொன்மொழிகள்

Leave a comment

Leave a comment