யாதவர்களும் கிருஷ்ணனும் அழிந்த கதை; முருகனுக்கு ஆட்டு வாகனம் ஏன் ? (Post.15,552)

Written by London Swaminathan

Post No. 15,552

Date uploaded in London – 30 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 60

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 60

உலக கண்டம் இட்டு ஆகாச மேல் விரி சலதி கண்டிடச் சேர்

ஆயம் ஆம் அவருடன் மடிந்திடக் கோபாலர் சேரியில்

மகவாயும் உணர் சிறந்த சக்ராதார நாரணன் மருக …

உலக்கையை* துண்டு துண்டாகப் பொடி செய்து ராவித் தூளாக்கி, ஆகாயம் மேலே விரிந்துள்ள நடுக் கடலில் (அப்பொடிகளைச்) சேரும்படி செய்தும், கூட்டமான ஆயர் அனைவரும் (சாபத்தின் காரணமாக) ஒருசேர இறந்து பட, இடையர்கள் வாழும் சேரியில் குழந்தையாக வளர்ந்தும், ஞானம் சிறந்த சக்ராயுதத்தை ஏந்தியும் இருந்த நாராயணனின் மருகனே,

மந்திரக் காபாலியாகிய உரக கங்கணப் பூதேசர் பாலக

வயலூரா … (ஐந்தெழுத்து) மந்திரத்தின் மூலப் பொருள் ஆனவரும்,

பிரம கபாலத்தைக் கையில் ஏந்தியவரும், பாம்பைக் கையில் வளையாகக்

கொண்டவரும், பூதகணங்களைக் கொண்ட தலைவருமாகிய ஈசர்

சிவபெருமானின் பிள்ளையே, வயலூரில் வாழ்பவனே,

கொலை தரும் வி(ல்)லைப் போர் வேடர் கோ என இனையும்

அம் குறப் பாவாய் வியாகுலம் விடு விடு என்று கைக் கூர்

வேலை ஏவிய இளையோனே … கொலை செய்யும் வில்லைக்

கொண்டு போர் புரியும் வேடர்கள் கோ கோ என்று பேரொலி இட்டு

நெருங்க, (அதைக் கண்டு) வருந்திய வள்ளி நாயகியை நோக்கி,

வருந்துகின்ற அழகிய குறப் பாவையே, நீ வருத்தத்தை விடு விடு

என்று கூறி, தான் கையில் ஏந்திய கூர்மையான வேலை (வேடர்கள்

மீது) செலுத்திய இளையோனே,

விறல் சுரும்பு நல் க்ரீ தேசி பாடிய விரை செய் பங்கயப் பூ

ஓடை மேவிய விஜயமங்கலத் தேவாதி தேவர்கள்

பெருமாளே. … வீரம் வாய்ந்த வண்டுகள் நல்ல முயற்சியுடன் தேசி

என்னும் ராகத்தைப் பாடிடும், நறு மணம் கொண்ட தாமரைப் பூக்களைக் கொண்ட நீர் நிலைகள் உள்ள விஜயமங்கலத்தில்** வீற்றிருக்கும், தேவாதி தேவர்களின் பெருமாளே.

யாதவர்கள் தங்களுள் சாம்பன் என்பவனுக்கு கர்ப்பிணி வேஷமிட்டு, துர்வாச முனிவரை இவளுக்குப் பிறப்பது ஆணோ பெண்ணோ எனக் கேட்க, கோபமடைந்த துர்வாசர் ஓர் இரும்பு உலக்கை பிறக்கும், அதுவே யாதவர் குலத்தை அழிக்கும் என்று சபித்தார். இதை அறிந்த கண்ணன், பிறந்த உலக்கையைப் பொடியாக்கி நடுக்கடலில் கரைக்கச் செய்தான். பின்னர்

உலக்கைப் பொடி கரையிலே வந்து கோரைப்புல்லாக முளைக்க, யாதவர் தம்முள் கலகம் மூண்டதும் அப்புல்லைப் பிடுங்கி ஒருவரை மற்றவர் குத்தி இறந்தனர். இரும்புத் துண்டு ஒன்று மீனின் வயிற்றில் வளர, அம்மீனைப் பிடித்த ஒரு வேடன் அதன் வயிற்றிலிருந்த துண்டைத் தன் அம்புநுனியில் வைத்தான். கண்ணனின் இறுதி நாளன்று தூக்கி வைத்திருந்த கண்ணனின்

பாதத்தைப் பறவையென எண்ணி வேடன் அந்த அம்பை எய்தான்.

யாதவகுலத்தில் கடைசியாக எஞ்சிய கண்ணனும் பரமபதம் அடைந்தான்.

** விஜயமங்கலம் ஈரோட்டுக்கும் திருப்பூருக்கும் இடையே உள்ள ரயில் நிலையத்திலிருந்து 2 மைல் வடக்கில் உள்ளது.

***

முருகனுக்கு ஆட்டு வாகனம் ஏன் ?

சவதமொடுந் தாண்டித் தகர் ஊர்வாய் … சபதம் செய்து இந்த

ஆட்டை* அடக்குவேன் என்றுரைத்து, குதித்து ஆட்டின் மீது ஏறி

அதனை வாகனமாகச் செலுத்துவாய்.

சடுசமயங் காண்டற்கு அரியானே … ஆறு** சமயத்தவராலும்

காணுதற்கு அரியவனே,

சிவகுமர அன்பு ஈண்டிற் பெயரானே … சிவகுமாரனே, உன்னை

அன்பு கொண்டு நெருங்கினால் நெருங்கியவரை விட்டு ஒருநாளும்

பிரியாதவனே,

திருமுருகன் பூண்டிப் பெருமாளே. … திருமுருகன்பூண்டி***

என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

நாரதர் செய்த யாகத்தில் தோன்றிய ஒரு முரட்டு ஆட்டுக் கிடாவை வீரபாகு மூலமாக பிடித்துவரச் செய்து, முருகன் அதனை அடக்கி வாகனமாகக் கொண்ட வரலாறு – கந்த புராணம்.

***

சுந்தர வாழ்வில் நடந்த அற்புதங்கள்

இதப் பட்டிடவே கமலாலய ஒருத்திக்கு இசைவான பொன் ஆயிரம் இயற்றப் பதி தோறும் உலாவிய தொண்டர் … இன்பம் அடையுமாறு திருவாரூரில் இருந்த ஒப்பற்ற காதலி பரவை நாச்சியாருக்கு ஏற்றதான ஆயிரம் பொன்னைச் சம்பாதிக்க தலங்கள்* தோறும் சென்றுதரிசித்த அடியராகிய சுந்தரர்

தாள இசைக்கு ஒக்க இராசத பாவனை உ(ள்)ளப் பெற்றொடுபாடிட வேடையில் இளைப்பு உக்கிட வார் மறையோன் எனவந்து கானில் திதப்பட்டு எதிரே … தாளத்தின் இசைக்குப்பொருந்தும்படி உறுதியான முயற்சித் தெளிவுடன் உள்ளப்பெருக்கத்துடன் தேவாரப்பதிகம் பாடி வருகையில், கோடைக் கால வெப்பத்தால் அவருக்கு ஏற்பட்ட இளைப்பு நீங்க, நேர்மையான ஒருமறையவர் கோலத்துடன், சுந்தரர் வந்து கொண்டிருந்த காட்டில் வந்து நிலையாகவே சுந்தரரின் எதிரே தோன்றி,

பொதி சோறினை அவிழ்த்து இட்ட அவிநாசியிலே வரு

திசைக்கு உற்ற சகாயனும் ஆகி மறைந்து போம் … (தாம்

கொண்டு வந்த) சோற்றுக் கட்டை அவிழ்த்துத் தந்தவரும், அவிநாசிஎன்னும் தலத்துக்கு வரும்போது, சுந்தரர் திசை தடுமாறிய சமயத்தில் அவருக்குத் திசையைக் காட்டி உதவி செய்து மறைந்து போனவரும்,

முன் செறிப்பு இத்த கரா அதின் வாய் மகவு அழைப்பித்த

புராண க்ருபாகர … முன்பு ஏரியில் இருந்த முதலையின் வாயிலிருந்து(உள்ளிருந்த) பிள்ளையைச் (சுந்தரர் பாட்டுக்கு இரங்கி) வரச் செய்த**பழையவராகிய கருணாமூர்த்தியும்,

திருப்புக் கொளியூர் உடையார் புகழ் தம்பிரானே. …

திருப்புக்கொளியூர்*** என்னும் தலத்தை உடையவருமாகிய சிவபெருமான் புகழும் தம்பிரானே.

சுந்தரர் இறைவனைப் பொன் வேண்டிய இடங்கள் திருப்புகலூர், திருப்பாசிலாச்சிராமம், திருமுது குன்றம் என்பன.

** திருப்புக்கொளியூர் ஏரியில் குளிக்கச் சென்ற பாலகனை ஒரு முதலை உண்டது. பிறகு ஓராண்டு கழித்து அங்கு சென்ற சுந்தரமூர்த்தி நாயனார், வற்றிய ஏரியின் கரையில் அவிநாசியின் மேல் பதிகம் பாட, ஏரி நீர் நிரம்பி, முதலை வந்து கரையில் பாலகனை ஓராண்டு வளர்ச்சியுடன் உயிரோடு உமிழ்ந்தது.

திருப்புக்கொளியூர் அவிநாசிக்கு மிகச் சமீபத்தில் உள்ளது.

***

சிவபெருமான் கொடு கொட்டி நடனம் ஆடிய கதை

பச்சை மா மயில் மெச்ச ஏறிய பாகா … பச்சை நிறம் கொண்டதும், அழகுள்ளதுமான மயில் மீது தேவர் முதலானோர் மெச்சும்படி ஏறிய பாகனே,

சூரா ஆகா போகாது எனும் வீரா … அடா சூரனே, ஆஹா,

அப்புறம் போகாதே (நில்) என்று சொன்ன வீரனே,

பட்டி ஆள்பவர் கொட்டி ஆடினர்* பாரூர் ஆ சூழ் பேரூர்

ஆள்வார் பெருமாளே. … (பிரமனாகிய) முனிவனுக்கு அருள்

செய்தவரும், கொடு கொட்டி என்னும் நடனத்தை ஆடினவரும், பூமியில் சிறந்த ஊராகத் திகழும் தலமும், (தேவலோகத்துப் பசு) காமதேனுவாக வந்த திருமால் வலம் செய்ததுமான பேரூரை** ஆண்டருள்பவருமாகிய சிவபெருமானுக்கு குருவாக வந்த பெருமாளே.

பிரமன் படைப்புத் தொழில் வராது வருந்திச் சிவபெருமானிடம் முறையிட, நீ பட்டி முனியாய் பேரூரில் வந்து பக்தி செய்வாயாகில் எமது நடனத்தைக் காணலாம் என்றார். திருமால் காமதேனுவாகவும், பிரமன் பட்டி முனிவராகவும் பேரூரில்

வழிபட்டு, நடராஜப் பெருமானின் கொடு கொட்டி என்ற ஆடலைக் கண்டனர்.

** பேரூர் கோயமுத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 3 மைலில் உள்ளது.

—subham—

Tags- யாதவர்களும் கிருஷ்ணனும் அழிந்த கதை, முருகனுக்கு ஆட்டு வாகனம் ஏன் ?, கொடு கொட்டி நடனம்

Leave a comment

Leave a comment