உடல்நலம் மேம்பட வள்ளலார் பெருமான் தரும் ஆரோக்கியக் குறிப்புகள்! (Post.15,555)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,555

Date uploaded in London – 31 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மார்ச் 2026 ஹெல்த்கேர் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை! 

உடல்நலம் மேம்பட வள்ளலார் பெருமான் தரும் ஆரோக்கியக் குறிப்புகள்! 

ச. நாகராஜன் 

வடலூர் வள்ளலார் பெருமான் ஏராளமான ஆரோக்கியக் குறிப்புகளைத் தந்துள்ளார்.

அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். 

இந்த உடம்பை அலக்ஷியம் செய்யாமல் பொன்னைப் போல் பார்க்க வேண்டும். 

சூரியோதயத்திற்கு முன் நித்திரை நீங்கி எழுந்து விபூதி தரித்து சிறிது நேரம் உட்கார்ந்து கடவுளைத் தியானம் செய்ய வேண்டும்.

 பசி கண்டவுடன் தடை செய்யாமல் ஆகாரம் கொடுத்தல் வேண்டும்.

 பகலில் போஜனம் செய்தபின் சற்றே படுத்தெழுதல் நல்லது.

(இது ஆழ்ந்த துயிலாக இராமல் அரைத் தூக்கமாக இருக்க வேண்டும்.

 இரவில் கொள்ளும் போஜனம் பகலில் கொள்வதை விடச் சற்று குறைவாக உண்ணல் வேண்டும்.

இரவில் போஜனம் செய்த பின் சிறிது உள்ளே உலாவுதல் வேண்டும்.

 இளவெயில், கடுவெயில், மழை, குளிர்காற்று, பனி – இவைகளால் உடம்பை வருத்தாமல் காத்துக் கொள்ள வேண்டும்.

 எப்போதும் பயத்துடன் இருத்தல் கூடாது.

 எப்போதும் மன உற்சாகத்துடன் இருத்தல் வேண்டும்.

கொலை, கோபம், சோம்பல், பொய்மை,பொறாமை, கடுஞ்சொல் முதலிய தீமைகள் ஆகா.

 உரத்துப் பேசுதல், வேகமாக நடந்து செல்லல், ஓடி நடத்தல், வழக்கிடல், சண்டையிடுதல் ஆகியன கூடாது.

எந்த விதத்திலும் பிராணவாயு அதிகம் செலவாகாதபடி ஜாக்கிரதையோடு பழகுதல் வேண்டும்.

 சுத்த ஜலம் கிடைக்காத பட்சத்தில் நீரை பச்சையாகக் கொள்ளக் கூடாது. வெந்நீராகக் கொள்ளுதல் வேண்டும்.

 மலம் கழிக்கும் போது வலது கையால் இடது பக்கம் அடி வயிற்றைப் பிடித்திருத்தல் வேண்டும். ஜலம் கழிக்கும் போது இடது கையால் வலது பக்கம் அடி வயிற்றைப் பிடித்திருத்தல் வேண்டும்.

 பதார்த்தங்களில் புளி, மிளகாய் சிறிதே சேர்க்க வேண்டும்.

மிளகு, சீரகம், அதிகமாகச் சேர்த்தல் வேண்டும். கடுகு சேர்ப்பது அவசியமல்ல. உப்பு குறைவாகவே சேர்த்துக் கொள்ளல் வேண்டும். அன்றி, எந்த வகையிலும் உப்பு மிகுதியாகக் கொள்ளாமல் உபாயமாகக் கொள்வது தேகம் நீடிப்பதற்கு ஏதுவாம்.

 கிழங்கு வகைகள் உண்ணாமல் இருத்தல் வேண்டும். அவற்றில் கருணைக்கிழங்கு மாத்திரம் கொள்ளுதல் கூடும்.

 சஞ்சீவி மூலிகைகளாவன: கறுப்பு நாயுருவி, குளிர்ந்த கொள்ளி, தீப்பூடு, முத்துப் பூண்டு, கருங்காந்தள் ஆகியவையாகும்.

 கீழாநெல்லி காமாலையைப் போக்கும். பித்தத்தை நீக்கும்.

 துளசி தோஷம் போக்கும்.

 தாமரை கண் குளிர்ச்சியைத் தரும்.

 எலுமிச்சை பித்தம் போக்கும்.

 பொன்னாங்கண்ணி கண்ணொளியைத் தரும். உஷ்ணத்தைச் சமனாக்கும்.

 திப்பிலி தாது விருத்தியைத் தரும்.

சுண்டைக்காய் சுரங்களைப் போக்கும்.

(இப்படி ஏராளமான மூலிகைகளின் பயன்களை வள்ளலார் தந்துள்ளார். இதை அவரது மூலிகை குண அட்டவணையில் காணலாம்,)

 நீடித்து ஆரோக்கியமாக வாழ வள்ளலார் பெருமான் தந்துள்ள அறிவுரைக் குறிப்புகளில் சிலவற்றையே மேலே காண்கிறோம்.

 இன்னும் அவர் கூறியுள்ள ஏராளமான பயன் தரும் அறிவுரைகளை அவரது நூல்களிலும் கடிதங்களிலும் அருட்பாக்களிலும் காணலாம்.

 இது தவிர சாகாக் கலை பற்றி அவர் கூறும் விஷயங்கள் நம்மை பிரமிக்க வைக்கும்.

 திருக்குறளில் வள்ளுவர் சாகாக் கலை பற்றிக் கூறியுள்ளார் என்பதில் ஆரம்பித்து சாகாமல் மனிதன் நிலைத்து வாழ இருக்கும் வழிமுறைகளையும் அவர் விவரமாகத் தந்துள்ளார்.

 உலகீர் இறவாத பெருவரம் நீர் ஏன் அடைய மாட்டீர் (ஆறு திருமுறைகளில் பாடல் எண் 5600)

 என் மார்க்கம் இறவாத சன்மார்க்கம் (பாடல் எண் 4960)

 மரண பயத்தை விட்டொழித்தேன் (பாடல் எண்4731)

 மரணம் தவிர்த்தேனென்று அறையப்பா முரசு (பாடல் எண் 5925)

 எமன் எனும் அவன் இனி இலை மகனே (பாடல் எண் 3702)

 இப்படி ஏராளமான இடங்களில் அவரது அருளுரைகளைக் காண்கிறோம்.

தான் கூறிய படியே அவர் ஶ்ரீமுக வருடம் தை மாதம் 19ம் நாள் பூச நட்சத்திரத்துடன் கூடிய வெள்ளிக்கிழமையன்று (30-1-1874 அன்று) தன் அறைக்குள்ளே சென்று இறைவனுடன் கலந்து அழியாத அமர நிலையை அடைந்தார்.

 ஆகப் பெரும் சித்த மருத்துவத்தை முழு வலிமையுடன் உலகிற்குத் தந்து, வாழ்ந்து காட்டிய மகான் வள்ளலார் என்பதில் ஐயமில்லை!

**

Leave a comment

Leave a comment