சரபேஸ்வரர் பற்றி அருணகிரிநாதர்; நரி பரியான கதை (Post No.15,556)

Written by London Swaminathan

Post No. 15,556

Date uploaded in London – 31 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 61

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 61

***

சரபேஸ்வரர் பற்றி அருணகிரிநாதர்

இலகு கடலை கற்கண்டு தேனொடும் … நல்ல விளக்கமுடைய

கடலை, கற்கண்டு, தேன் இவைகளுடன்

இரதம் உறு தினைப் பிண்டி பாகுடன் … ருசிகரமான தினை

மாவு, வெல்லப் பாகு இவற்றைக் கலந்து

இனிமையில் நுகர் உற்ற எம்பிரான் ஒரு கொம்பினாலே …

மகிழ்ச்சியுடன் உண்ணும் விநாயகர் ஒற்றைக் கொம்பால்

எழுது என மொழியப் பண்டு பாரதம் … வியாச முனிவர் எழுதும்படி

வேண்ட, முன்பு, பாரதக் கதையை

வட கன சிகரச் செம் பொன் மேருவில் … வடக்கே உள்ளதும்

கனத்த உச்சிகளை உடையதுமான செம்பொன் மயமான மேரு மலையில்,

எழுதிய பவளக் குன்று தாதையை அன்று சூழ வலம் வரும்

அளவில் … எழுதிய பவள மலையைப்போன்ற கணபதி, அன்று

தந்தையாகிய சிவபெருமானைச் சுற்றி வந்து வலம் வரும் நேரத்துக்குள்,

சண்ட மாருத விசையினும் விசையுற்று எண் திசா முக

மகிதலம் அடையக் கண்டு … சூறாவளியின் வேகத்திலும் வேகமாக

எட்டு திசையிடங்களைக் கொண்ட உலகம் முழுவதையும் பார்த்து,

மாசுணம் உண்டு உலாவு மரகத கலபச் செம் புள் வாகன

மிசை வரு முருக … பாம்பை உண்டு உலாவுகின்றதும், பச்சைத்

தோகையைக் கொண்டதும், வலிமையான பக்ஷியுமாகிய மயில்

வாகனத்தின் மீது வந்த முருகனே,

சிம்புளே என மதுரையில் வழிபட்டு உம்பரார் தொழு

தம்பிரானே. … சிங்கத்தை அடக்கவல்லதாகக் கூறப்படும்

எண்காற்புள்ளே (சரபப் பக்ஷியே*) என்று புகழ்ந்து, மதுரைத் தலத்தில் வழிபட்டு தேவர்கள் தொழுகின்ற தம்பிரானே.

நரசிம்மராக வந்த விஷ்ணு ஹிரண்யனின் வதைக்குப் பின் வெறி அடங்காமல் திரிந்தார். சிவபிரான் தமது இன்னொரு அம்சமாகிய சரபப்பக்ஷியாக வந்து நரசிம்மரின் ஆணவ ஆட்டத்தை அடக்கினார். முருகனும் அதுபோன்றே ஒரு சிவ அம்சம்.

***

மேலேயுள்ள ஏழு உலகங்கள்

வானெழு புவிக்கு மாலும் அயனுக்கும் … மேல் ஏழு

உலகங்களுக்கும்* திருமாலுக்கும், பிரம்மனுக்கும்

யாவரொருவர்க்கும் அறியாத … வேறு யாருக்குமே அறியமுடியாத

மாமதுரை சொக்கர் மாதுமை களிக்க … சிறந்த மதுரைத் தலத்து சொக்கேசர் சிவனும், பார்வதியும் மகிழ

மாமயில் நடத்து முருகோனே … அழகிய மயிலின் மீதேறி அதனைச் செலுத்தும் முருகனே,

தேனெழு புனத்தில் … தேன் மிகுந்த வள்ளிமலைத் தினைப்புனத்தில்

மான்விழி குறத்தி சேர … மான் ஒத்த கண்ணாள் குறத்தி வள்ளி உன்னைச் சேரும்படியாக

மருவுற்ற திரள்தோளா … அவளை அணைத்திட்ட திரண்ட புயங்களை உடையவனே,

தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை … தேவர்களது மனத்தில் சூரனைப் பற்றித் தோன்றிய அச்சத்தை

வேல்கொடு தணித்த பெருமாளே. … உன் வேலாயுதத்தால் போக்கிய பெருமாளே.

மேல் ஏழு உலகங்கள்:

பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மஹலோகம், தபலோகம், ஜனலோகம், சத்யலோகம்.

***

மதுரையின் புகழ்

பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய

     பவனி வரும்படி …… யதனாலே

பகர வளங்களு நிகர விளங்கிய

     இருளை விடிந்தது …… நிலவாலே

வரையினி லெங்கணு முலவி நிறைந்தது

     வரிசை தரும்பத …… மதுபாடி

வளமொடு செந்தமி ழுரைசெய அன்பரு

     மகிழ வரங்களு …… மருள்வாயே

அரஹர சுந்தர அறுமுக என்றுனி

     அடியர் பணிந்திட …… மகிழ்வோனே

அசலநெ டுங்கொடி அமையுமை தன்சுத

     குறமக ளிங்கித …… மணவாளா

கருதரு திண்புய சரவண குங்கும

     களபம ணிந்திடு …… மணிமார்பா

கனக மிகும்பதி மதுரை வளம்பதி

     யதனில் வளர்ந்தருள் …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய … யாவரும் துதிக்கும் நீண்ட கதிர்களை உடைய சூரியன் உலகுளோர் விரும்பும்படி

பவனி வரும்படி யதனாலே … உலா வரும் காட்சிதானோ (இந்தத் திருவடி) என்றும்,

பகர வளங்களு நிகர விளங்கிய … சொல்லத்தக்க வளப்பங்களுக்கு ஒப்பாக விளங்குவதும்,

இருளை விடிந்தது நிலவாலே … இருளைப் போக்கி உதிக்கும் நிலவொளிதானோ (இந்தத் திருவடி) என்றும்,

வரையினி லெங்கணும் உலவி நிறைந்தது … மலைகள் தோறும் எங்கும் உலாவி நிறைந்து

வரிசை தரும்பதம் அதுபாடி … வரிசையான காட்சியைத் தரும் உன் திருவடியை நான் பாடி,

வளமொடு செந்தமிழுரைசெய … சொல் வளம், பொருள் வளத்துடன் செந்தமிழ்ப் பாக்களால் உன்னைப் புகழ,

அன்பரு மகிழ வரங்களும் அருள்வாயே … அப்பாடல்களைக் கேட்டு அன்பர்கள் அகம் மகிழ, வரங்களைத் தந்து அருள் புரிவாயாக.

அரஹர சுந்தர அறுமுக என்றுனி … ஹர ஹர, அழகா, ஆறுமுகனே,என்று உன்னைத் தியானித்து,

அடியர் பணிந்திட மகிழ்வோனே … அடியார்கள் வணங்க மகிழ்ச்சி கொள்பவனே,

அசலநெடுங்கொடி அமையுமை தன்சுத … ஹிமவானின் மகளான பெருமைவாய்ந்த கொடியைப் போன்ற அம்மை உமாதேவி பெற்ற பிள்ளையே,

குறமகள் இங்கித மணவாளா … குறமகள் வள்ளிக்கு இனிமையான

மணவாளனே,

கருதரு திண்புய சரவண … நினைப்பதற்கு அருமையான திண்ணிய புயங்களை உடைய சரவணபவனே,

குங்கும களபம் அணிந்திடு மணிமார்பா … குங்குமமும் சந்தனமும் சேர்த்து அணியும் அழகிய மார்பனே,

கனக மிகும்பதி மதுரை வளம்பதி … பொன் மாடங்கள் நிறைந்த நகராகிய மதுரை என்ற செழிப்பான

யதனில் வளர்ந்தருள் பெருமாளே. … தலத்தில் விளங்கி வீற்றிருந்து அருளும் பெருமாளே.

****

ஈட்டிய சுர பதி மகள் தனை மணம் அது உற்றிடுவோனே …

நெருங்கி நின்ற, தேவர்கள் தலைவனான இந்திரனுடைய மகளான, தேவயானையை திருமணம் செய்து கொண்டவனே,

திறத்தினால் பல சமணரை எதிர் எதிர் கழுக்கள் ஏற்றிய

புதுமையை இனிதொடு திருத்தமாய்ப் புகழ் மதுரையில் உறை தரும் அறுமுகப் பெருமாளே. … (திருஞான சம்பந்தராக வந்த உனது) சாமர்த்தியத்தால் பல சமணர்களை எதிர் எதிராக கழுமரங்களில் ஏற வைத்த அற்புத நிகழ்ச்சியை இன்பகரமாக நடத்தி, (தத்தம்) பிழை திருந்திய நிலையினராய் ஆக்கிப் பின், மதுரையில் வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே.

***

கோவில் பொறியால் வரு மா சுத குமரேசா … கண்களினின்று எழுந்த தீப்பொறியால் வெளிவந்த சிறந்த பிள்ளையான குமரேசனே,

கூர் முத்தமிழ் வாணர்கள் வீறிய சீர் அற்புத மா நகர் ஆகிய …சிறந்த முத்தமிழ்ப் புலவர்கள் விளங்கிய சிறப்பைக் கொண்ட அற்புதமான பெருநகரமாகிய

கூடல் பதி மீதினில் மேவிய பெருமாளே. … நான்மாடற்கூடலாம் மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே.

***

நரி பரியான கதை

வாதவூரனை மதித்து ஒரு குருக்கள் என ஞான பாதம் வெளி

இட்டு … திருவாதவூரர் ஆகிய மாணிக்கவாசகரைக் குறிக் கொண்டு ஒரு குரு மூர்த்தியாக நின்று (முக்திக்கு வழிகளான சரியா பாதம், கிரியா பாதம், யோக பாதம், ஞான பாதம் ஆகிய நால் வகையான சைவ சமய வழிகளில்) ஞான மார்க்கத்தை அவருக்கு உபதேசித்தும்,

நரியின் குழுவை வாசியாம் என நடத்து உவகை உற்று

அரசன் அன்பு காண மாடை ஆடை தர பற்றி முன் நகைத்து …

நரிகளின் கூட்டத்தை குதிரைகளாம் என்னும்படி திருவிளையாடலில்

மகிழ்ச்சி பூண்டு பாண்டிய மன்னன் தனது அன்பைக் காட்ட

பொன்னாடையைக் கொடுக்க அதை வாங்கிக் கொண்டு மன்னனின்

முன்பு சிரித்தும்,

வைகை ஆறின் மீது நடம் இட்டு மண் எடுத்து மகிழ் மாது

வாணி தரு பிட்டு நுகர் பித்தன் அருள் கந்த வேளே …

வைகையாற்றங்கரை மீது கூத்தாடியும், (ஆற்றில் அணைகட்ட) மண்

சுமந்து மகிழ்வுற்றும், மாது வந்தி அம்மையார் கூலியாகத் தந்த பிட்டை உண்டும் விளையாடிய பித்தனாகிய சிவ பெருமான் பெற்றருளிய கந்த வேளே,

வேத லோகர் பொன் நிலத்தர் தவ சித்தர் அதி பார சீல முனி

வர்க்க(ம்) முறை இட்டு அலற வேலை ஏவி அவுணக் குலம்

இறக்க நகை கொண்ட சீலா … வேதம் ஓதும் நன் மக்கள்,

பொன்னுலகத் தேவர்கள், தவசிகள், சித்தர்கள், மிக்க பெருமை வாய்ந்த

ஒழுக்கம் நிறைந்த முனிவர் கூட்டங்கள் முறையிட்டுக் கூச்சலிட,

வேலைச் செலுத்தி அசுரர்களின் கூட்டம் இறக்கும்படி சிரித்த தூயவனே,

வேதம் மீண கமலக் க(ண்)ணர் மெய் பச்சை ரகு ராமர் ஈண

மயில் ஒக்க மதுரைப் பதியில் மேவி வாழ் அமரர் முத்தர் சிவ

பத்தர் பணி தம்பிரானே. … (அவுணர்களால் கவரப்பட்ட) வேதத்தைமீட்டுத் தந்த** தாமரை போன்ற கண்களை உடையவரும், உடல் பச்சை நிறமுடையவரும் ஆகிய ராமர் பெற்ற மயில் போன்ற பெண்களான தேவயானை, வள்ளி இவர்கள் இருவருடன் மதுரை நகரில் வீற்றிருந்து வாழ்கின்றவனே, தேவர்களும், ஜீவன் முக்தர்களும், சிவனடியார்களும் வணங்குகின்ற தலைவனே.

***

கர தூஷண வதைப் படலம்

திருவைக் கொண்டு ஒரு தண்டக வன(ம்) மிசை வர அச்சம் கொடு வந்திடும் உழை உடல் சிதற … லக்ஷ்மியாகிய சீதையை அழைத்துக் கொண்டு ஒப்பற்ற தண்டகாரணியம் என்னும் காட்டில் வந்தபொழுது, பயத்தோடு வந்து உலவிய (மாரீசனாகிய) பொன்மானின் உடல்பாணத்தால் சிதறி அழியவும்,

கண்டக வெம் கரனொடு திரி சிரனோடு திரம் இல் தங்கிய கும்பகன் ஒரு ப(த்)து தலை பெற்று உம்பரை வென்றிடும் அவனொடு சிலையில் கொன்ற முகுந்தன் நல் அகம் மகிழ் மருகோனே … துஷ்டர்களான கொடிய கரன், திரிசிரன்* என்னும் அசுரர்களையும், வலிமை கொண்டிருந்த கும்பகர்ணனையும், பத்துத்

தலைகளைப் பெற்று தேவர்களை வென்றவனுமான ராவணனையும்,(கோதண்டம் என்னும்) வில்லால் கொன்ற திருமாலின் நல்ல உள்ளம் மகிழ்கின்ற மருகனே,

மருவைத் துன்றிய பைம் குழல் உமையவள் சிவனுக்கு அன்பு அருள் அம்பிகை கவுரிகை மலை அத்தன் தரு சங்கரி கருணை செய் முருகோனே … (வாசனை கொண்ட) மருக் கொழுந்தைச் சூடியுள்ள அழகிய கூந்தலை உடைய உமா தேவி,

சிவபெருமானுக்குத் தனது அன்பைத் தருகின்ற அம்பிகை, கெளரி, இமய மலை அரசன் பெற்ற சங்கரி தனது கருணையைக் காட்டும் முருகோனே,

வட வெற்பு அங்கு அயல் அன்று அணி குசம் சரவணையில்தங்கிய பங்கய முக … வடக்கே உள்ள இமய மலைக்கு அங்கே சமீபத்தில் உள்ள அழகிய தர்ப்பைகள் வளர்ந்துள்ள சரவணப் பொய்கையில் முன்பு வளர்ந்த தாமரை போன்ற திரு முகத்தை உடையவனே,

தமிழ் மதுரைச் சங்கிலி மண்டப இமையவர் பெருமாளே. …

தமிழ் வளர்ந்த மதுரையில் சங்கிலி** என்னும் மண்டபத்தில் வீற்றிருப்பவனே, தேவர்களின் பெருமாளே.

சூர்ப்பனகையின் சகோதரர்களான கரன், தூஷணன், திரிசிரன் என்ற மூவரும் தண்டகாரண்யத்தில் அவளது காதும், மூக்கும் லக்ஷ்மணனால் வெட்டப்பட்டபோது

உதவிக்கு வந்தனர். அவர்களில் இருவரைக் கொன்றது ராமபாணம்.

** இது இப்போது கிளி மண்டபம் என வழங்கும்.

***

தமிழ்  மொழியில் 51 அக்ஷரங்கள் !

அகரம் ஆதியாம் அக்ஷரங்கள் அவனி கால் விண் ஆர் அப்பு

ஒடு அங்கி அடைய ஏக ரூபத்தில் ஒன்றி முதலாகி … அகரம்

முதலான (51)* அக்ஷரங்கள், மண், காற்று, ஆகாயம், நிறைந்த நீர்

இவைகளுடன் நெருப்பு ஆகிய ஐம்பூதங்கள் எல்லாம் கூடி ஓர் உருவமாக அமைந்து (கூத்த பிரானாகிய நடராஜப் பெருமானாகி), முதற் பொருளாக விளங்கி,

அமரர் காணவே அத்த மன்றில் அரிவை பாட ஆடிக் கலந்த

அமல நாதனார் முன் பயந்த முருகோனே … தேவர்கள் தரிசிக்க

(தில்லைப்) பொன்னம்பலத்தில் பார்வதி தேவி பாட அங்கு ஆடி விளங்கிய மலம் அற்றவராகிய சிவபெருமான் முன்பு பெற்றருளிய முருகனே,

சகல வேத சாமுத்ரியங்கள் சமயம் ஆறு லோக த்ரயங்கள்

தரும நீதி சேர் தத்துவங்கள் தவ யோகம் தவறு இ(ல்)லாமல்

ஆளப் பிறந்த தமிழ் செய் … எல்லா வேதங்களிலும் கூறப்பட்ட

லட்சணங்கள், ஆறு சமயங்கள், மூன்று உலகங்கள், தரும நீதிகளுடன் சேர்ந்த உண்மைகள், தவம், யோகம் (இவை எல்லாம் சிறந்து ஓங்கும்படி) பிழையின்றி ஆட்சி செய்வதற்கே தோன்றிய தமிழ் வளர்த்த திருஞான சம்பந்தனே,

மாறர் கூன் வெப்பொடு அன்று தவிர ஆலவாயில் சிறந்த

பெருமாளே. … பாண்டியனுடைய சுரத்தோடு கூனும் அன்று நீங்க

மதுரையில் (திருநீறு தந்து) சிறந்த பெருமாளே.

கோல் எழுத்துக் காலத்திலும், வட்டெழுத்துக் காலத்திலும் தமிழில் 16 உயிர்களும் 35 மெய்களும் சேர்ந்து 51 எழுத்துக்கள் இருந்தன. சதுர எழுத்து காலத்தில்தான் தமிழுக்கு 12 உயிர்களும் 18 மெய்களும் சேர்ந்து 30 எழுத்துக்களும் – அவற்றுக்கு உரிய உயிர்மெய் எழுத்துக்களும் இருப்பதாக அறிஞர்கள் வகுத்தார்கள்.

–subham—

Tags- தமிழ் மொழி, 51 அக்ஷரங்கள்,  நரி பரியான கதை ,

அருணகிரி நாதர் , Part 61, சரபேஸ்வரர் , மதுரையின் புகழ்

Leave a comment

Leave a comment