நம்மாழ்வார் – 2 (Post No.14,008)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,008

Date uploaded in Sydney, Australia – 23 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஞானமயம் 15-12-24 அன்று ஒளிபரப்பான உரை.

இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது

நம்மாழ்வார் – 2

ச. நாகராஜன்

முப்பததைந்து ஆண்டுகள் வாழ்ந்த பின்னர் நம்மாழ்வார் திருநாடு அலங்கரிக்கலானார்.

நம்மாழ்வாரின் பிரிவைத் தாங்க முடியாத மதுரகவி ஆழ்வார் அவரது பாசுரங்களைப் பாடிப் பரவி பரப்பியதோடு திருநகரியில் அவருக்கென ஒரு  கோவிலையும் எழுப்பினார். அதில் நம்மாழ்வாரின் விக்கிரகத்தையும் ஸ்தாபித்தார்.

ஒருநாள் அவரது பெருமைகளை வழக்கம் போல வீதியில் கூவிச் செல்கையில் பொறாமை பிடித்த புலவர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி ‘இதை நீர் நிரூபிக்க வேண்டும்’ என்றனர்.

இதனால் திகைத்த மதுரகவியார் நம்மாழ்வாரைத் துதிக்க ஒரு விருத்த வேதியர் அவரைச் சந்தித்தார்.

“நீர் கவலைப்பட வேண்டாம். நான் சொல்வதைச் செய்தால் போதும்’ என்று கூறினார்.

பின்னர் அவர்,

:கண்ணன் கழலிணை

நண்ணும் மனமுடையீர்

எண்ணும் திருநாமம்

திண்ணம் நாரணமே” என்ற பாசுரத்தின் முதல் அடியை ஒரு ஏட்டில் எழுதிக் கொண்டு போய் அந்த ஏட்டை அந்தப் புலவர்கள் வைத்திருக்கும் சங்கப் பலகையில் வைக்க அனுமதி பெறுங்கள். அது போதும்” என்றார்.

அதன் படியே மதுரகவியாரும் ஒரு ஏட்டில் முதல் அடியை எழுதி  சங்கப் புலவர்களிடம் தர அவர்கள் சிரித்தவாறே அந்த ஏட்டை சங்கப் பலகையில் வைத்தனர். பொற்றாமரைக் குளத்தில் விடப்பட்ட  அப்பலகையின் மீது அவர்களும் நின்றனர்.

ஏட்டை மட்டும் ஏந்திக் கொண்ட சங்கப் பலகை மற்ற புலவர்களை நீரில் ஆழ்த்தியது. அவர்கள் நீந்திக் கரை சேர்ந்தனர்.

நம்மாழ்வாரின் மகிமையை நன்கு அறிந்து கொண்ட அவர்கள் அவரைப் போற்றலாயினர்.

அது மட்டுமின்றி நம்மாழ்வாரின் பெருமையை தனித்தனிப் பாடல்களாக ஒவ்வொரு புலவரும் எழுதி சமர்ப்பிக்க எண்ணம் கொண்டனர்.

அப்படியே ஒவ்வொருவரும் ஒரு பாடலை எழுதிப் படிக்க முயன்ற போது என்ன ஆச்சரியம், அனைத்தும் ஒரே பாடலாகவே இருந்தன.

சேமங் குருகையோ? செய்ய திருப்பாற்கடலோ?

நாமம் பராங்குசமோ? நாரணமோ? – தாமம்

துளவோ? வகுளமோ? தோளிரண்டோ? நான்கு

முளவோ? பெருமா னுனக்கு

      என்ற பாடலாகவே அனைவர் எழுதியதும் இருந்தது.

ஈயாடுவதோ கருடற்கெதிரே? இரவிக்கெதிர்

   மின்மினி யாடுவதோ?

நாயாடுவதோ உறுவெம்புலிமுன்?

   நரி கேசரி முன் நடையாடுவதோ?

பேயாடுவதோ அழகூர்வசி முன்? பெருமாள்

    வகுளாபரணன் அருள் கூர்ந்து

ஒவாதுரை ஆயிரமாமறையின் ஒரு சொற்

    பெருமோ உலகிற்கவியே

கருடனுடைய வேகத்திற்கு எதிரே ஈ எங்கே?

ஒளிதரும் சூரியன் முன் மின்மினி வெளிச்சம் எங்கே?

புலிக்கு முன்னே நாய் எங்கே?

சிங்கத்தின் கம்பீர நடைக்கு முன்னே நரியின் நடை எங்கே?

தேவலோக ஊர்வசி முன் பேய் ஆடுவது எப்படி  இருக்கும்?

சடகோபரின் அருளிய  ஒரு சொல்லின் பெருமைக்கு அனைத்து வித்துவான்களின் கவிகள் ஈடாகுமோ/

என்று இப்படி பலபடப் புகழ்ந்து ஒவ்வொருவரும் பாடினர்.

நம்மாழ்வார் வைகாசி விசாகத்தன்று அவதரித்தார்.

அதை ஒட்டி மலர்ந்த பாடல் இது:

ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தை

பாரோர் அறியப் பகர்கின்றேன்

சீராரும் வேதந் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை

நாதன் அவதரித்த நாள்.

மதுரகவியாரின் கண்ணி நுண் சிறுத்தாம்பில் அவர் நம்மாழ்வார் பாசுரங்களைப் போற்றிப் புகழ்கிறார்.

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற

அருளினான் அவ்வருமறையின் பொருள்

அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்

அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே

மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்

நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்

தக்க சீர்ச் சடகோபன் என் நம்பிக்கு

ஆட்புக்க காதல் அடிமைப் பயன் அன்றே

வானணியும் மாமாடக் குருகை  மன்னன் வாழியே

வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே

சேனையர் கோன் அவதாரம் செய்த வள்ளல் வாழியே

திருக்குருகை சடகோபன் திருவடிகள் வாழியே

என்று கூறி என் உரையை முடிக்கின்றேன். நன்றி வணக்கம்!

 —-subham—–

திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள்! ஆண்டாளும் நகைகளும் -1 (Post No.14,007)

Written by London Swaminathan

Post No. 14,007

Date uploaded in Sydney, Australia – 20 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பெண்கள் என்றால் நகை ; நகைகள் என்றால் பெண்கள்.

உலகிலேயே அதிக நகைகளை அணிவோர் இந்துக்கள்தான். எகிப்திய ஓவியங்களைப் பார்ப்போர் கழுத்தில் உள்ள சங்கிலிகளை மட்டுமே காணலாம். ஆனால் இந்துக்களின் ஓவியங்களிலும் கற்சிலைகளிலும் பாதாதி கேசம் நகைகளைக் காணலாம். அஜந்தா  ஓவியங்களையும் பர்ஹுத் முதலிய இடங்களிலுள்ள சிலைகளையும் காண்போர், ஆண்களும் குண்டலங்களையும் கை வளையங்களையும் தோள்   வளையங்களையும் அணிந்திருப்பதைக் காணலாம். இவைகளில் பல, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவை. இதே போல இலங்கையில் சிகிரியா, தமிழ் நாட்டில் சித்தன்ன வாசல் ஓவியங்களிலும்  அலங்காரம் செய்துகொண்ட பெண்களைக் காண்கிறோம்.

சங்க இலக்கியத்திலும் அதற்குப் பின் வந்த சிலப்பதிகாரத்திலும் அதற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரைகளிலும் நவரத்தினங்களை காண்கிறோம். ஆண்டாளும் இதற்கு விதி விலக்கு அல்ல.  அவரும் நகைகளைப் பற்றிப் பாடுகிறார்.

அவளுக்கு நகைகள் மீது பற்று உண்டோ இல்லையோ மற்ற பெண்களைக் கவர்ந்து இழுக்கவாவது நகைகளைப் பற்றிப் பேசித்தானே ஆக வேண்டும்!

சங்ககாலத்துக்கு முந்தைய காளிதாசனின் காவியங்களிலும் பெண்கள், உதட்டுச் சாயம் பூசியத்தையும் கால், கைகளில் செம்பஞ்சுச் சாயம் பூசிக்கொண்டதையும் அறிகிறோம்.

பிருஹத் ஸம்ஹிதாவில் வராஹமிஹிரர் பட்டியலிடும் பலவகை முத்து மாலைகளை சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரையில் டிக்கலாம்.

காளிதாசனுக்குப்  பின்னர் எழுந்த சங்க இலக்கியத்தில் ஏராளமான நகைகள், அணிகலங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன

ஆறாவது பரிபாடலில் வையை நதியில் குளித்த பெண்களின் வருணனை வருகிறது

தொடி, தோள் வளை , மேகலை வடங்கள், ஆணிமுத்து வடங்கள் ஆகிய நகைகளும் இன்னுமொரு  பாடலில் கை வளையம் , ஆழி மோதிரம்,  தலைக்கோலம், எட்டுவட முத்து மேகலை, வாகுவலையம், காஞ்சி ஆகிய ஆபரணங்களும் வருகின்றன.

சிலப்பதிகாரம் கடலாடு காதையில் நவரத்தின அணிகளும் காணக்கிடக்கின்றன. 

இந்த அணிகளும் அவற்றின் பெயர்களும் ஆண்டாள் காலம் வரை வழக்கில் இருந்ததை திருப்பாவை  காட்டுகிறது .

இரண்டாவது பாடலில் என்ன செய்யலாம் என்ன என்ன செய்யக்கூடாது என்ற பட்டியலை ஆண்டாள் தருகிறாள்;

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற் கடலுள்

பையத் துயின்ற பரமன் அடி பாடி,

நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி,

மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்,

செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம்,

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி

உய்யுமாறு எண்ணி உகந்து — ஏலோர் எம்பாவாய்.

நெய், பால் சாப்பிட மாட்டோம்;

கண்ணுக்கு மையும் கூந்தலுக்குப் பூவும் பயன்படுத்த மாட்டோம்.

(குழாயடியிலும் கிணற்றடியிலும் வம்பளக்க மாட்டோம்)).

கோள் சொல்லமாட்டோம் .

தடைசெய்யப்பட்ட விஷயங்களையும் செய்யமாட்டோம்.

செய்யக்கூடியது

பரமனடி பாடுவோம் ;

அதிகாலையில் நீராடுவோம்;

பிரம்மச்சாரிகளுக்கும் சன்யாசிகளுக்கும் வறியோருக்கும் வேண்டும் அளவுக்கு  உணவு இடுவோம்

******

ஆயிழை ஏந்திழை சேயிழை நேரிழை

ஆண்டாளின் தமிழ் அறிவினைக் காண்போம். தமிழில் பெண்களை அன்மொழித்தொகையால் குறிப்பிடும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது .

ஆண்டாளும் பிறவியிலேயே கவிஞர். இதை திருப்பாவையிலும்,

அவர் எழுதிய நாச்சியார் திருமொழியிலும் காண்கிறோம்.    

நீராடப்போதுவீர் போதுமினோ நேரிழையீர் – பாசுரம் 1

திங்கள் திருமுகத்துச் சேயிழையார் -30 என்றும் பாடுகிறார்.

மாணிக்கவாசகரும் திருவெம்பாவையில்

நேசமும் வைத்தனையோ  நேரிழையாய் நேரிழையீர்-2

சேயிழையீர் சிவலோகம் பாடி- திருவாசகம் 9-53

திருக்குறளிலும் இத்தகைய பிரயோகம் உள்ளது. இது சங்ககால வழக்கு என்பதை பரிபாடலில் காண்கிறோம் அணியிழை 9-23, ஒள்ளிழை 9-39 /ஆகுபெயர்

இழை என்பது என்ன ?

நகைகள் , ஆபரணங்கள் ஆகும். ஒளிவீசும் நகைகள், அணி போன்ற நகைகள் என்பதை பரிபாடல் நன்கு காட்டும்.

திருப்பாவை நோன்பு முடிந்தவுடன் என்ன செய்வோம் என்பதை – 27-ஆவது பாடலில் வரிசைப்படுத்துகிறார்

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா *உன் தன்னைப்-

பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்*

நாடு புகழும் பரிசினால் நன்றாகச்*

சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே*

பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்*

ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு*

மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்*

கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

கையில் சூடகம் அணிவோம்

தோள் ல் பாஹுவலயம் அணிவோம்

காதுகளில்    தோடு ம் கர்ணப் பூவும் அணிவோம்

காலில் பாடகமும் அணிவோம்

பல்கலன் என்று சேர்த்திருப்பது மேலும் பல ஆபரணங்களையும் …. என்பதைக் காட்டும் 

முழங்கையில் நெய் வழியும் அளவுக்கு பால் சோறு, அக்கார அடிசில் ஆகியவற்றையும் சாப்பிடுவோம் என்கிறார் ஆண்டாள்

இப்படி நகைகளை அணியும் வழக்கம் இமயம் முதல் குமரி வரை இருந்ததை ராமாயணத்திலும் காண்கிறோம். சீதா தேவியை ராவணன், விமானத்தில  கடத்திச் செல்லுகையில் அவள் புடவைத் தலைப்பில் முடிந்து எறிந்த  ஆபரணங்களை ப் புறநானூற்றுப் புலவர் பாடி இருக்கிறார் .

காளிதாசனின் சாகுந்தலம் முதலிய நாடகங்களில் மோதிரம்,  ஆபரணம் முக்கியப்   பங்காற்றுகிறது; ராமாயணத்திலும் கணையாழி முக்கியமாக விளங்குகிறது. இவை அனைத்தும் பெண்களுக்கு —-இந்துப் பெண்களுக்கு —-நகைகள் உடலிலிருந்து பிரிக்க முடியாத அடையாளச் சின்னங்கள் என்பதைச் சொல்லாமல் சொல்லும்.

To be continued……………………………….

tags- திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள் 1, ஆண்டாளும் நகைகளும் , ஆபரணங்கள், நகைகள், ஆண்டாள், பரிபாடல், சேயிழை, நேரிழை 

ஆலயம் அறிவோம்! ஶ்ரீ வில்லிப்புத்தூர் (Post No.14,006)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan

Post No. 14,006

Date uploaded in Sydney, Australia – 20 DECEMBER 2024.            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

15-12-24 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை

ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்

சோதி மணிமாடந் தோன்று,மூர்

நீதியால் நல்லபத்தர் வாழுமூர் நான்மறைகள் ஓதுமூர்

வில்லிப்புத்தூர்  வேதக் கோனூர்

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது 108 வைணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றாக அமைவதும், பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த தலமாகவும் அமையும் ஶ்ரீ வில்லிப்புத்தூர் திருத்தலமாகும்.

இத்திருத்தலம் தமிழ்நாட்டில் மதுரையிலிருந்து ராஜபாளையம்-தென்காசி, குற்றாலம் போகும் வழியில் உள்ளது.

மூலவர் திருநாமம் : வடபத்ரசாயி

புஜங்க சயனம், கிழக்கே திருமுக மண்டலம்_

உற்சவர் : ரங்கமன்னார்

தாயார்: ஆண்டாள்

விமானம் : சம்ஸன விமானம்

தீர்த்தம் : திருமுக்குளம்

மங்களாசாஸனம் : பெரியாழ்வார், ஆண்டாள்

கருவறையில் விமலாக்ருதி விமானத்தின் கீழ் ஶ்ரீ தேவி, பூதேவி சமேத வடபத்ரசாயியை தரிசிக்கலாம்.

பெருமாளுக்கு ஆண்டாள் வலது புறமும் கருடாழ்வார் இடது புறமுமாக தரிசனம் தருகின்றனர். வடபத்ரசாயி ஆதிசேஷனில் பள்ளி கொண்டுள்ளார்.

இத்தலத்தைப் பற்றிய ஏராளமான புராண வரலாறுகள் உண்டு. முக்கியமான ஒரு வரலாறு இந்த ஊருக்குப் பெயர் வந்ததன் காரணத்தைத் தெரிவிக்கிறது.

முன்னொரு காலத்தில், இந்த நிலப்பகுதி ராணி மல்லி என்பவரின் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த ராணிக்கு வில்லி மற்றும் கண்டன் என்ற இரு மகன்கள் இருந்தனர். ஒரு நாள், அவர்கள் காட்டில் வேட்டையாடிய போது, கண்டன் ஒரு புலியால் கொல்லப்பட்டார். இந்த உண்மை தெரியாமல், வில்லி, அவரது சகோதரர் என்ன ஆனார் என்று காட்டில் தேடிக் கொண்டு இருந்தார்.

வெகுநேரம் காட்டில் தேடிய பின்னர் களைத்துப் போய் சிறிது நேரம் தூங்கினார். அவரது கனவில், கடவுள் அவரது சகோதரருக்கு என்ன ஆயிற்று என்பதை அவருக்கு விளக்கினார். உண்மை புரிந்ததும், தெய்வீக உத்தரவின் பேரில் வில்லி அந்த காடுகளைத் திருத்தி அமைக்க, ஒரு அழகான நகரம் உருவாக்கப்பட்டது. அதுவே  வில்லிப்புத்தூர் என்ற பெயரைப் பெற்றது.

இத்தலத்தில் பிறந்த பெரியாழ்வார் கருடாழ்வாரின் அம்சமாக பிறந்ததாக ஐதீகம்.

ஶ்ரீ வில்லிப்புத்தூரில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று  பெரியாழ்வார் தனது நந்தவனத்தில் துளஸிச் செடியின் கீழ் பெண்குழந்தை ஒன்றைக் கண்டெடுத்தார். தன் கையில் பூமாலை போலத் தோன்றிய பெண் குழந்தைக்கு கோதா என்று பெயர் சூட்டினார். அதுவே நம்மால் கோதை என்று வழங்கப்படுகிறது. கோ என்றால் நல்வார்த்தை தா என்றால் தருபவள். திருப்பாவை 30 பாசுரங்களையும் நாச்சியார் திருமொழி 143 பாசுரங்களையும் அருளிச் செய்ததால் அவர் கோதை ஆகிறார்.. இன்னும் ஏராளமான அர்த்தங்களை வேதாந்த தேசிகன் தனது கோதா ஸ்துதியில் தெரிவிக்கிறார்.

‘இறைவனையே ஆண்டவள்’ என்பதால் ஆண்டாள் என்ற் திருப்பெயரை கோதை பெற்றார்.

பாமாலை பாடி பூமாலை சூடிக் கொடுத்ததால் சூடிக் கொடுத்த நாச்சியார் என்ற சிறப்புப் பெயரும் ஆண்டாளுக்கு உண்டு.

பெரியாழ்வாருடன் ஆண்டாள் வாழ்ந்த வீடே கி.பி. 14ம் நூற்றாண்டில் மாவலி பாணாதிராயர் என்பவரால் திருக்கோயிலாக கட்டப்பட்டது.

11 நிலைகளுடன் 11 கலசங்கள் கொண்ட ராஜகோபுரம் 196 அடி உயரமுடையது.

கோவிலில் தினமும் காலையில் ஒரு காராம்பசு வந்து நிற்கும். ஆண்டாளின் பார்வை இந்தக் காராம்பசுவின் பின்புறம் விழும். ஆண்டாள் தினமும் கண்விழிப்பது இப்படித்தான்!

.

இங்குள்ள திருமுக்குள தீர்த்தம் பற்றிய வரலாறு ஒன்று உண்டு. கலாநேமி என்னும் அரக்கனை பெருமாள் தன் சக்ராயுதத்தால் வீழ்த்தினார். ரத்தம் தோய சக்கரத்தாழ்வார் வர அந்த சக்கரத்தைத் தூய்மைப்படுத்த கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் தமது தீர்த்தத்தை ஒரு குளத்தில் சொரிய அதில் சக்கரம் சுத்திகரிக்கப்பட்டது. இந்த மூன்று நதிகளின் நீர் சேர்ந்ததால் இது திருமுக்குளம் என்று அழைக்கப்படலாயிற்று.

இங்குள்ள கோவிலின் முன்புறமுள்ள கிணற்றில் கோடைக்காலமானாலும் நீர் வற்றுவதில்லை

ஆண்டாளின் தோளில் அழகுற வீற்றிருக்கும் கிளி தினமும் மாற்றப்படுகிறது. இந்தக் கிளி பச்சிலையால் செய்யப்பட்ட ஒன்றாகும். கிளியோடு இருக்கும் பெண் தெய்வங்கள் மதுரை மீனாட்சியும் ஆண்டாளும் தான். ராஜவம்சத்தில் வந்த மீனாட்சிக்கு கிளி வலது தோளிலும் எளிய பக்தி மார்க்கத்தில் வந்த ஆண்டாளுக்குக் கிளி இடது தோளிலும் இருக்கும். இந்தக் கிளி சுக முனிவரே என்று கூறுவர். இந்தக் கிளியைத்தான் ஆண்டாள் கண்ணனுக்குத் தூது விட்டாள். பூஜை முடிந்த பின்னர் தினமும் இந்தக் கிளியை பக்தர்கள் விரும்பி வாங்கிச் செல்வது வழக்கம்.

மார்கழி மாத உற்சவத்தில் ஶ்ரீ ஆண்டாளின் எண்ணெய் காப்பு உற்சவம் மிகச் சிறப்பான ஒன்றாகும். 61 வகை மூலிகைகள் அடங்கிய இந்தத் தைலத்தைக் காயச்ச நாற்பது நாட்கள் ஆகும். ஏழு படி நல்லெண்ணெயில் பசும்பால், நெல்லிக்காய், தாழம்பூ, இளநீர் மற்றும் மூலிகைகள் சேர்த்துக் காய்ச்சினால் இது நான்கு படியாகும். இதுவே தான் உற்சவத்தின் எட்டு நாட்களிலும் ஆண்டாளுக்குச் சாத்தப்படும்.

சர்வரோக நிவாரணியாகும் இதை பிரசாதமாக பக்தர்கள் வாங்கிச் செல்வர்.

இங்கு கோவிலில் கண்ணாடிக் கிணறு ஒன்று உள்ளது. இதில் தான் தினமும் ஆண்டாள் அழகு பார்த்துக் கொள்வது வழக்கம்.

சித்ரா பௌர்ணமியன்று மதுரை தல்லாகுளத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை மற்றும் பரிவட்டங்களை அணிந்த பிறகே வைகை ஆற்றில் இறங்குகிறார்.

12 ஆழ்வார்களில் இரு ஆழ்வார்கள் அவதரித்த திருத்தலம் என்ற சிறப்பை இந்தத் தலம் பெருகிறது.

கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கலைமகள் சிற்பத்தில் நாசியும் கால் பெருவிர்ல் நுனியும் ஒரே நேர் கோட்டில் அமைந்திருப்பது சிற்பக் கலையின் சிறப்பை விளக்கும் ஒரு அபூர்வமான வேலைப்பாடாகும்.

ஒவ்வொரு ஆடிப் பூரத்திலும் அழகிய தேர் இங்கு இழுக்கப்படுகிறது.

தமிழக அரசின் அதிகாரபூர்வமான சின்னமாகத் திகழ்வது ஶ்ரீ வில்லிப்புத்தூர் கோவில் ராஜகோபுரம் தான்.

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்

வேதம் அனைத்துக்கும் வித்தாகும்

கோதை தமிழ் ஐயைந்து மைந்தும் அறியாத மானிடரை

வையம் சுமப்பதும் வம்பு

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஶ்ரீ வடபத்ர சாயியும் ஆண்டாளும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

***

நம்மாழ்வார் – 1 (Post No.14,005)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,005

Date uploaded in Sydney, Australia – 20 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஞானமயம் 15-12-24 அன்று ஒளிபரப்பான உரை.

இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது

நம்மாழ்வார் – 1

ச. நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களே நாகராஜன் வணக்கம் நமஸ்காரம்.

இன்று நாம் தமிழுக்கு வைணவ பக்தி இலக்கியத்தில் ஒரு புதிய பரிமாணத்தை அளித்ததோடு அனைவரையும் திருமாலைத் துதிப்பதற்கான சிறந்த பாசுரங்களை அருளிய ஆழ்வாரான நம்மாழ்வார் பற்றி சிந்திக்கப் போகிறோம்.

இவரது காலம் 9ம் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது.

பகவானது திவ்ய குணங்களில் சதா ஆழ்ந்து இருந்ததால் ஆழ்வார்கள் என்ற பெயரைப் பெற்ற ஆசாரியர்களில் நம்மாழ்வார் தனிச் சிறப்புடன் திகழ்கிறார்.

முற்காலத்தில் பக்தியில் செழித்த பாண்டிய நாட்டில் திருக்குருகூர் என்றும் திருநகரி என்றும் அழைக்கப்படும் அழகிய நகரில் போற்காரியார் என்னும் பெயருடைய வேளளர் ஒருவர் வாழ்ந்து வந்தார். திருமால் பக்தரான அவர் உத்தமியான உடைய நங்கையார் என்ற மங்கையைத் திருமணம் செய்து கொண்டார். நங்கையாரின்  தந்தையார் திருவாழ்மார்பர் என்பவர் மலையமாநாட்டில் திருவண்பரிசாரம் என்னும் நகரில் வாழ்ந்து வந்தார்.

தனது மாப்பிள்ளையைச் சில காலம் தன்னுடனேயே தங்குமாறு திருவாழ்மார்பர் வேண்ட அப்படியே தன் மனைவியுடன் பொற்காரியார் அங்கு வாழ்ந்து வந்தார்.

சில காலம் கழித்துத் தன் ஊருக்குத் திரும்பிச் செல்ல எண்ணம் கொண்ட பொற்காரியார் திருக்குறுங்குடி என்னும் ஊரை அடைந்தார். அங்கு எழுந்தருளியிருந்த இறைவனான நம்பியை புத்திரப் பேறு அளிக்குமாறு மனதார வேண்டினார்.

இறைவன் அருளால் நங்கையார் கர்ப்பமுற்று அழகிய ஓரு ஆண் குழந்தையைப் பெற்றார். இறைவனே அப்படி ஆண் குழந்தையாக அவதரித்த போது நாராயணனுக்குத் தொண்டு செய்யும் ஆதிசேஷன் திருக்குருகூரில் ஒரு புளியமரமாகத் தோன்றி வளரலானார்.

பிறந்த குழந்தை சற்று வித்தியாசமாக இருந்தது. அழாமலும் பால் குடிக்காமலும் எப்போது மௌனத்துடன் இருந்த அந்தக் குழந்தையைக் கண்டு அனைவரும் அதிசயித்தனர்.

குழந்தையை பெருமாள் கோவிலுக்குக் கொண்டு சென்ற பொற்காரியார் உலக நடைக்கு முற்றிலும் மாறாக இருக்கும் குழந்தைக்கு மாறன் என்று பெயர் சூட்டி அங்குள்ள புளிய மரத்தில் ஒரு அழகிய தொட்டிலில் குழந்தையை இட்டு வீடு திரும்பினார்.

ஒரு குழந்தை தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்தவுடன் அக்குழந்தையின் மேல் சடம் என்னும் வாயு வீசும்.  உடனே பரிசுத்த மனம் கொண்ட குழந்தை மனம்  மாறி அழத் தொடங்கும் . உலக இயல்பைப் பெறும்.

ஆனால் இந்த தெய்வக் குழந்தையின் மீது வாயுவால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அந்த வாயுவை குழந்தை அப்புறம் தள்ளி விட்டது.

இப்படி சட வாயுவைத் தள்ளி விட்டதால் அவருக்கு சடகோபர் என்ற பெயர் உண்டாயிற்று.

இப்படியாக ஒரு நாள் அல்ல, ஒரு வருடம் அல்ல பதினாறு ஆண்டுகள் அவர் வளர்ந்து வந்தார்.

ஶ்ரீமன் நாராயணன் மாறனாருக்கு அனைத்து சாஸ்திரங்களையும் அளிக்கத் திருவுள்ளம் கொண்டு தனது கணத் தலைவரான விஷ்வக்ஸேனரை அழைத்து, ‘நீ திருக்குருகூர் சென்று அனைத்து வேதாந்த உட்பொருளையும் மாறனுக்க உபதேசித்து வா’ என்று அனுப்பினார்.

அதன்படியே விஷ்வக்ஸேனர் திருக்குருகூரில் உள்ள மாறனார் முன் பிரத்யக்ஷமாகி அவருக்கு அனைத்து வேதாந்த உட்பொருளையும் உபதேசித்தார். அனைத்து வேதங்களையும் மாறனார் அறிந்து கொண்டார். விஷ்வக்‌ஸேனர் தனது இருப்பிடம் மீண்டார்.

இப்படி நாட்கள் கழிகையில் திருமால் மீது அற்புதமான மதுரமான பாடல்களைப் பாடிய பக்தர் ஒருவர் அயோத்திக்குச் சென்றார். அவர் மதுரமான பாடல்களைப் பாடி வந்ததால் அவரை மதுரகவிகள் என்று அனைவரும் அழைத்தனர்.

ஒரு நாள் தெற்குத் திசையிலிருந்து பேரொளி ஒன்று வீசுவதைக் கண்டு ஆச்சரியப்பட்ட அவர் அது ஒளிரும் திசை நோக்கி நடக்கலானார்.

அந்த ஒளி காட்டிய பாதையால் அவர் திருக்குருகூரை வந்து அடைந்தார். அங்குள்ள புளியமரத்தடியில் தியானத்தில் இருந்த மாறனாரைக் கண்டார்.

அவர் பேசாமல் இருந்ததைக் கண்ட மதுரகவியார் ஒரு கல்லை எடுத்துத் தட்ட இதுவரை பேசாமல் இருந்த மாறனார் அவருடன் பேசலானார். அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அற்புதமாக பதிலைத் தரலானார்.

மாறனார் ரிக், யஜுர் மற்றும் அதர்வண வேதத்தின் கருத்துக்களை உள்ளடக்கி திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி என்னும் நூலகளை இயற்றி உலகிற்குத் தந்தார்.

திருவாய் மொழி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக ஆக அது பகவத் விஷயம் என்ற சிறப்புப் பெயரைப்  பெற்றது.

திருவாய்மொழியில் 1102 பாசுரங்களும் திருவிருத்தம் நூலில் 100 பாசுரங்களும் திருவாசிரியம் நூலில் 7 பாசுரங்களும், பெரிய திருவந்தாதி நூலில் 87 பாசுரங்களும் ஆக நான்கு பிரபந்தங்களில் மொத்தம் 1296 பாசுரங்கள் உள்ளன.

இப்படி வேதத்தை அழகிய தமிழில் விரித்துரைத்த அவரை அனைவரும் நம் ஆழ்வார் என்று அழைக்கலாயினர். அவர் நம்மாழ்வார் ஆனார்.

ஶ்ரீ ரங்க நாதரும் அவரை நம்மாழ்வார் என்று அழைக்கவே அப்பெயரே நிரந்தரமாயிற்று.

மற்ற ஆழ்வார்களை இவரது அவயவங்களாக கூறுவதால் இவரது சிறப்பு நமக்கு நன்கு விளங்கும்.

அவரது பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த பகவான் அவருக்கு ஒரு மகிழ மாலையைக் கொடுத்து அணிந்து  கொள்ளும்படி பணித்தார். அதை அவர் அணிந்தார். அதனால் அவர் வகுளாபரணர் என்ற பெயரைப் பெற்றார்.

தான் அருளிச் செய்த பிரபந்தங்களை நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வாருக்கு உபதேசித்து அருளினார்.

மஹா விஷ்ணுவே முதல் தெய்வம் என்று நிரூபித்த நம்மாழ்வார் பிற மதங்களைக் கண்டித்தார். அதனால் அவருக்குப் பராங்குசர் என்ற பெயர் உண்டாயிற்று.

பிற மதங்கள் என்னும் யானைகளைத் தன் அங்குசத்தால் அடக்கியவர் என்ற பொருளைத் தருகிறது பராங்குசர் என்ப்ற பெயர்,

நம்மாழ்வாருக்கு வேதம் தமிழ் செய்த மாறன், குருகூர் நம்பி,, ஞான பிரான், தொண்டர் பிரான் உள்ளிட்ட 35 பெயர்கள் உண்டு.

to be continued……………..

GNANAMAYAM SUNDAY BROADCAST 22-12-2024

22-12-2024 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி நிரல்

TIME:  ONE PM LONDON TIME; 6-30 PM IST

VIA ZOOM, FACE BOOK, YOU TUBE

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

***

World Hindu News in Tamil presented by Vaishnavi Anand from London

***

Talk by Bengaluru Nagarajan on MAHENDRANATH GUPTA (KNOWN AS “M”)

***

Talk by Brahannayaki Sathyanarayan on THIRU VALAM SUZHI SHRINE from Bengaluru

***

Talk BY GANESAN on Tamil Saint Manikkavasagar

***

Tiruppugaz songs recorded by Kalyanji

***

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

உலக இந்துமத செய்தி மடல்- லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த்

ஆலயம் அறிவோம் வழங்குபவர் திருமதி பிரஹந்நாயகி சுப்புலட்சுமி -தலைப்பு – தேவாரத் திருத்தலம் திருவலஞ்சுழி

****

பெங்களூர் நாகராஜன் சொற்பொழிவு -மகேதிரநாத் குப்தா’ எம்’ என அறியப்படுபவர்;ராமகிருஷ்ண கதாம்ருதம் எழுதியவர்

திருச்சி கணேசன் – சொற்பொழிவு மாணிக்கவாசகர்

இடையிடையே திருப்புகழ் பாடல்கள்

****

JOIN US ON SUNDAYS.

—subham—

TAGS- SUNDAY 22 12 2024 PROGRAMME, GNANAMAYAM BROADCAST

தொல்காப்பியத்தில் முக்கோல் அந்தணர் (Post.14,004)

Written by London Swaminathan

Post No. 14,004

Date uploaded in Sydney, Australia – 19 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தமிழில் கிடைத்துள்ள பழைய நூல் தொல்காப்பியம் என்பதே பெரும்பாலோரின் கருத்து . அதில் அந்தணர், பார்ப்பனர் பற்றியும் வேதங்களில் உள்ள உச்சரிப்பு பற்றியும் பல இடங்களில் குறிப்பிடுகிறார். அந்தணர் கைகளில் ஏந்தும் மூன்று கிளையுள்ள முக்கோல் அந்தணர் பற்றி நாம் தொல்காப்பியம் முதல் கம்பராமாயணம் வில்லி பாரதம் வரை காண்கிறோம்.

நூலே கரகம் முக்கோல் மணையே 

ஆயுங்காலை அந்தணர்க்குரிய

என்று ஒரு சூத்திரம் கூறும்.

எல்லா பிராமணர்களும் முக்கோல் ஏந்துவதை நாம் எந்தக் காலத்திலும் கண்டதில்லை. ஆயினும் சந்யாசிகள், ஜீயர், சங்கரா  ச்சார்யார்கள் எப்போதும் முக்கோலைப் பிடித்த வண்ணமே வலம் வருகிறார்கள்; இன்றும் இதைக் காண்கிறோம் .ஆக இந்த இடத்தில் அந்தணர் என்பது பிராமணர்அல்ல, சந்யாசிகள் என்பது தெளிவு.

ஆயினும் அந்தணர் என்ற சொல் முக்கோல் ஏந்தாத பிராமணர்களையும் குறிக்கும் என்பதைத் தொல்காப்பிய பாயிரமும் புறநானூறும்  ஏனைய சங்க நூல்களும் நமக்கு காட்டும்.

நூல் என்பது முப்புரிநூல், கரகம் என்பது கமண்டலம், முக்கோல் என்பது த்ரிதண்டம் , மணை என்பது ஆமை மணை என்று விளக்குகிறார்கள்

பூணூல் இல்லாத சன்யாசிகளாக இருந்தால் வேதத்தின் முடிவை அறிந்தோர் என்றும் கொள்ளலாம் 

தொல்காப்பிய பாயிரம் பாடிய பனம்பாரனார் நான் மறை முற்றிய அதங்கோட்டு ஆச்சாரியார்தான் தொல்காப்பியருக்கு சர்டிபிகேட் கொடுத்தார் என்று சொல்கிறார். அந்த நான்மறை , அந்தணர் என்பதுடன் சேர்ந்து வருவதை சங்க இலக்கியங்களில் பல இடங்களில் காண்கிறோம் ..

சன்யாசிகளைக் குறிக்கையில் நான்மறை/ நால்வேதம் பற்றிப் பேசுவதில்லை; ஏனெனில் அவர்கள் வேதத்தின் அந்தத்தைக் கண்டவர்கள்; அந்தம் என்றால் முடிவு. அதனால் அவர்களை வேதாந்திகள் என்கிறோம்.

அத்வைத சந்யாசிகள் ஏக தண்டம் / ஒரே தண்டம் கொண்டு செல்வார்கள். முப்பகையை வென்ற கருத்துடன் இறைவன் ஒருவனே/ சர்வம் பிரம்ம மயம் என்பதையும் இது உணர்த்தும்.

தண்டத்தை எடுத்துச் செல்வதன் பின்னுள்ள கருத்து ஒன்றே.

முக்கோல் ஏந்துவது எதற்காக?

காமம், க்ரோதம் லோபமென்ற மூன்று தீய குணங்களை வென்றதைக் காட்டும் அடையாளம் முக்கோல்.

மண், பெண், பொன் ஆசைகளைத் துறந்தவர்கள் என்றும் சொல்லலாம்.

திருமழிசை ஆழ்வாரும் மூங்கில் மூன்று தண்டு என்று த்ரிதண்டத்தை பாடுகிறார்.

வைஷ்ணவர்கள் ஜீவன் , பிரம்ம, ஐக்கியத்தை முக்கோல்  குறிப்பதாகச் சொல்லுவார்கள்

சங்க  நூலான  கலித்தொகையில்  இரண்டு  இடங்களில்  முக்கோல்  வருகிறது.

ஒரு பெண் காதலனுடன் ஓடிவிட்டாள் ; செவிலித் தாய் அவளைத் தேடிவரும்போது

எறித்தரு கதிர்தாங்கி ஏந்திய குடை நீழல்

உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும்

உடைய சந்நியாசியை செவிலித்தாய் கண்டு வினவுகிறாள்.அங்கும் அந்தணர் என்ற சொல் வருகிறது.

கையில் கரகமும் குடையும் முக்கோலும் ஏந்திக்கொண்டு , இறைவன் திருவடிகளையே நினைக்கும் நெஞ்சத்தை உடையவர்ககளாய், ஐம்பொறிகளை அடக்கியவர்களாய்  உள்ள அந்தணர் என்பது முழுப் பாட்டின் பொருள் 

கலித்தொகையில் இன்னும் ஒரு இடத்தில்

முக்கோல் கொள் அந்தணர்  முதுமொழி நினைவார் போல்

என்றும் காண்கிறோம்.

இங்கு ஓம் என்னும் பிராணவத்துக்கு முதுமொழி என்ற சொல் பயிலப்பட்டுள்ளது

முல்லைப்பாட்டு என்னும் சங்க நூலில் போர் வீரர்கள் பற்றிய காட்சியைப் புலவர் வருணிக்கிறார். அவர்கள் அம்பினை நட்டு அதன் மீது அம்பராத் துணியைப் போட்டிருந்தது படிவப் பார்ப்பான் முக்கோல் மீது காவி வஸ்திரத்தைப் போட்டு வைத்தது போல இருந்ததாம்..

இவைகளைப் பார்க்கும்போது தொல்காப்பிய காலம் முதல் வில்லி பாரதம் காலம் வரை குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முக்கோல் என்னும் த்ரி தண்டம் இருந்தது வெள்ளிடை மலை.

ராவரணன் சந்நியாசி வேடம் தரித்து வந்ததைக் ஆரண்ய காண்டத்தில் பாடுகையில் கம்பனும்,

தண்டோரு மூன்று முப்பகைத் தளையரி தவத்தவர்  என்று வருணிக்கிறார்.

வால்மீகியும் ராவணன் குடையுடன் வந்ததைக் குறிக்கிறார் (சைத்ரீ= குடை)

காமம் க்ரோதாம் லோபம் (காமம் , வெகுளி, மயக்கம்) அல்லது மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை ஆகியன முப்பகை  என்று திருவள்ளுவரும் பாடியுள்ளார்.

காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்

நாமம் கெடக்கெடும் நோய்– குறள் 360

விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வராமற் கெடும்.

ஆக தொல்காப்பியர் காலம் முதல் இமயம் முதல் குமரி வரை ஒரே இந்து நாகரீகம் நிலவியதை  நாம் சங்க நூல்கள் மூலம் அறிகிறோம்.

–SUBHAM—

TAGS-முக்கோல் அந்தணர் , படிவப் பார்ப்பான், த்ரிதண்டம், சந்யாசிகள் , மூன்று பகை,

யோகி வேமனா (Post No.14,003)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,003

Date uploaded in Sydney, Australia – 19 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

8-12-2024 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை. 

யோகி வேமனா 

ச. நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.

இன்று நாம் தெலுங்கு உலகில் யோகியாக விளங்கிய கவி வேமனா அவர்களைப் பற்றிச் சிறிது பார்க்கப் போகிறோம்.

குமரகிரி வேமன ரெட்டி என்ற பெயரைக் கொண்ட அவர் கவி வேமனா என்றும் யோகி வேமனா என்றும் பிரபலமாக அறியப்படுகிறார்.

கவி வேமனா இப்பொது ஆந்திர பிரதேசத்தில் உள்ள கொண்டவீடு என்ற நகரில் கடம் வேமா என்பவருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவரது காலம் சரியாக கணிக்கப்பட முடியாமல் உள்ளது. 1659 முதல் 1750 முடிய உள்ள காலத்தில் இவர் வாழ்ந்திருக்கக் கூடும்.

இளம் வயதில் அவர் லம்பிகா சிவா என்ற யோகியிடம் தீட்சை பெற்றார். யோகி அவருக்கு யோகாப்யாசத்தைக் கற்றுக் கொடுத்தார்.

அவர் தெலுங்கு மொழியில் ஏராளமான கவிதைகளை இயற்றினார். அவை வேதத்திற்கு ஒப்பானவை என்று அனைவராலும் போற்றப்பட்டன.

சாடு பத்யம் என்னும் நான்கு வரி கவிதைகளை அவர் இயற்றினார். மூன்று அடிகளில் பெரிய உண்மை அடங்கி இருக்கும். நான்காவது அடியில் விஸ்வதாபிராம வினுர வேமா என்று இருக்கும். அதாவது விஸ்வதா என்றால் உலகைப் படைத்த இறைவன் என்று பொருள். அபிராம என்றால் அவனுக்கு நெருங்கியவன் என்று பொருள். இறைவனுக்கு நெருங்கிய யோகியாக வேமனா திகழ்ந்தார்.

5000 பாடல்களுக்கு மேல் அவர் இயற்றியதாகக் கூறப்படுகிறது.

சி.பி.ப்ரவுன் என்ற ஆராய்ச்சியாளர் வேமனாவைப் பற்றி ஆய்வு நடத்தியதோடு அவரது கவிதைகளை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். 693 பாடல்களை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1829ம் ஆண்டு பிரசுரித்தார். 1839ல் இன்னொரு 1215 பாடல்களை அவர் பிரசுரித்தார்

வேமனாவின் வாழ்வில் ஏராளமான அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன.

ஒரு நாள் அவரது குரு ஒரு முக்கிய வேலையாக வெளியில் செல்ல வேண்டியிருந்தது. ஆற்றில் குளிக்கச் சென்ற அவர் வேமனாவிடம், “இதோ எனது துணி. இவற்றை பத்திரமாக வைத்துக் கொள். குளித்துவிட்டு வருகிறேன்” என்றார். துணிகளை வாங்கிக் கொண்ட வேமனா அதை பத்திரமாக கையில் வைத்துக் கொண்டிருந்தார். குளித்து விட்டு வந்த குரு வேமனாவை நோக்கி, “இங்கு வா” என்று கூற வேமானா துணிகளைக் கீழே சகதியில் போட்டு விட்டு அவரை நோக்கி ஓடினார்.

இதனால் வருத்தமடைந்த குரு அவரை நோக்க, வேமனாவோ முழித்தார். ஆகவே குரு மிகுந்த ஏமாற்றம் அடைந்து அவரிடம் ஒரு சுண்ணாம்புக் கல்லை எடுத்துக் கொடுத்து, “இதோ, இந்தக் கல்லில் ராம ராம என்று நான் வரும் வரை எழுது” என்று கூறி விட்டு அங்கிருந்து தனது வேலையை முடிக்க அவர் கிளம்பினார்.

வேமனா தன் குரு தன்னால் ஏமாற்றத்தை அடைந்தார் என்பதைப் புரிந்து கொண்டார். ராம ராம என்று அந்தப் பெரிய பாறையில் எழுத ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் சுண்ணாம்புக் கல் கரைந்தது. ஆனால் தன் விரலினால் ராம ராம என்று தொடர்ந்து எழுத ஆரம்பித்தார் வேமனா. அவரது கை விரல்கள் தேய்ந்து ரத்தம் சொட்ட ஆரம்பித்தது. ஆனாலும் அவர் விடவில்லை. எழுதுவதைத் தொடர்ந்தார்.

வேலையை முடித்துக் கொண்டுவந்த குரு அவரிடம் வந்த போது அவர் கை ரத்தம் சொட்டச் சொட்ட இருந்ததைப் பார்த்துத் திகைத்தார். வேமனாவை அள்ளி அணைத்து, “நான் இப்படிச் செய்து விட்டேனே” என்று வருந்தினார்.

அன்றிலிருந்து ஒரு பெரிய மாற்றம் வேமனாவிடம் ஏற்பட்டது. பெரிய கவிதை எழுதும் ஆற்றல் அவருக்கு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான கவிதைகளை சரளமாக அவர் இயற்ற ஆரம்பித்தார்

வேமனாவைப் பற்றிய இன்னொரு சுவையான சம்பவம் உண்டு. ஒருமுறை தோட்டத்தில் விதைகளை விதைக்க அவர் பலரையும் அழைத்தார். ஆனால் அதை அனைவரும் அசட்டை செய்த போது ஒரு சிலர் மட்டும் முன்வந்தனர். அவர்கள் தங்கள் வேலையை முடித்த போது சில காய்களை அவர்களது வேலைக்கான கூலியாக வேமனா தந்தார்.

வீட்டிற்கு வந்து அந்தக் காய்களை நறுக்கிய போது அதன் உள்ளிருந்து விதைகள் விழுந்தன. அந்த விதைகளுக்குள் தங்க மணிகளாக இருந்தன. இதைப் பார்த்த அவர்கள் ஓவென்று ஆச்சரியத்தால் கூவினர். செய்தி பரவியதும் கிராமத்தில் இருந்த அத்தனை பேரும் வேமனாவிடம் வேலை கேட்டு வந்தனர். அவர்களுக்கு கூலியாக தங்க மணிகள் கிடைத்தன.

சிலர் திருட்டுத்தனமாக அங்கு வந்து காய்களை எடுத்த போது அவர்களுக்கு அந்தக் காய்களிலிருந்து தங்க மணிகள் கிடைக்கவில்லை. புழுக்களே கிடைத்தன.

வேமனா சிறந்த ரசவதியாகத் திகழ்ந்தார். அவரால் எதையும் பொன்னாக மாற்ற முடிந்தது

வேமனா அசல யோகம் என்னும் ஒரு யோக முறையை உபதேசித்தார். அனைத்தையும் கடந்ததே அசலம் எனப்படும்.

இறைவனை அடைவதற்கான தத்துவ தர்சனங்கள் பல.

ஆனால் இறைவன் ஒருவனே

விவேகம் என்னும் அற்புதமான கோடாலியை எடு

அவித்யா என்னும் காட்டை அழி

அறிவு என்னும் பெரும் விளக்கைக் கையில் எடு

மோக்ஷத்தைக் காண்

கொவிலும் கல்; உள்ளே இருக்கும் விக்ரஹமும் கல்

நீ எதைத் தொழுகிறாய் என்று கேட்கும் அவர் உள்ளே இருக்கிறான் இறைவன் அவனைப் பார் என்கிறார்.


 “நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே

சுற்றி வந்து மொண மொணன்று சொல்லு மந்திரம் ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ ?”

என்ற சிவ வாக்கிய சித்தரின் கருத்தை வேமனாவின் கவிதைகளில் காண முடிகிறது.

இறைவனை உள்ளே பார் என்று அவர் உபதேசித்தருளினார்.

தூய்மையான இதயம் இல்லாமல் சடங்குகள் எதற்காக?

பானை சுத்தமாய் இல்லாதபோது  சமைப்பது ஏன்?

மனம் தூய்மையாக இல்லாத போது வழிபாடு ஏன்?

என்று  அவர் கேட்கிறார்.

தூய்மையான இத்யயத்துடன் செய்யப்படும் தர்மம் சிறிதாய் இருந்தாலும் நல்லது. என்று சொல்லும் அவர் உதாரணமாக ஆலமரத்தின் விதை சிறிதாக இருந்தாலும் மரம் பெரிதாக வளர்கிறதல்லவா? என்று சுட்டிக் காட்டுகிறார்.

ஒரு கீழான மனிதன் எப்போதுமே படாடோபமாய் பேசுவான். ஒரு நல்ல மனிதன் எப்போதுமே இனிமையாகப் பேசுவான். தங்கமானது பித்தளையைப் போல சத்தம் போடாது இல்லையா?

என்று கேட்கிறார் அவர்.

கூடை நிறைய பளபளக்கும் மதிப்பற்ற கற்களை விட நீலம் போன்ற ஒரு ரத்தினம் இருந்தால் போதும். மட்டமான ஏராளமான நூல்களை விட ஒரே ஒரு நல்ல கவிதை போதும் நல்ல இன்பத்தையும் ஊக்கத்தையும் பெற!

இன்னும் பல பாடல்களில் அவர் என்றும் நிலைத்து நிற்கும் வெற்றிகரமான வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக்களைக் கூறுகிறார். அவற்றில் சில இதோ:

மிளகு கருப்பாக இருக்கிறது. அதைக் கடித்தவுடன் அதன் காரம் உங்களுக்கு எரிச்சலைத் தருகிறது. ஒரு நல்ல மனிதனும் இப்படித்தான் இருப்பான். எவரையும் அவரது தோற்றத்தை வைத்து மதிப்பிடக் கூடாது. அவர்களது நிஜமான ஆளுமையை வைத்தே மதிப்பிட வேண்டும்.

நீர் நிறைந்த நதி கம்பீரமாகப் பாய்கிறது. அதனுடைய ஆழத்தையோ.அல்லது அது போகும் பாதையையோ அல்லது அதன் வேகத்தையொ அது நிரூபிக்கத் தேவை இல்லை. ஆனால் போகும் பாதை சீராக இல்லாத ஒரு சின்ன நீரோடை பாறைகளின் ஊடேயும் காடுகளின் உடேயும் வேகமாக அதிக சத்தத்துடன் பாய்கிறது. பிரபுத்வமான நல்ல நடத்தையே ஒருவரின் குணாதிசயத்தைக் காண்பிக்கிறது. வெறும் சத்தம் ஒருவரின் நல்ல குணங்களைக் காண்பிக்காது.

நீரில் இருக்கும் முதலையானது ஒரு யானையைக் கூட இழுத்து விடும்; ஆனால் அதிலிருந்து வெளியே இருக்கும் போது  அது மெலிந்த ஒரு நாயைக் கூட எதிர்க்க முடியாது. இதுதான் ஸ்தான பலம் எனப்படும் இருக்குமிடத்தைப் பொருத்து ஏற்படும் வலிமையாகும்.

ஒரு படகானது நீரில் எளிதாகப் போகும். ஆனால் அதுவே நிலத்திலோ என்றால் ஒரு அங்குலம் கூட நகராது. ஆக இதுவே சரியான இடத்தில் இருப்பதால் ஏற்படும் நன்மை என்பது பெறப்படுகிறது. திறமைசாலியான ஒருவன் கூட தவறான இடத்தில் இருந்தால் தோல்வியையே அடைவான்.

கிராமத்தலைவனுக்கு மோசடிப் பேர்வழி யார் என்று தெரியும். அதற்குத் தக அவனை அவன் நடத்துவான். அதே போல கடவுளிடம் யாரும் எதையும் மறைக்க் முடியாது. ஒரு மனைவி தன் கணவனின் பசியை அறிவாள்.

இந்தப் பாடலால் அறியப்படுவது என்னவெனில் ஒருவன் எப்போதும் தனக்கு உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதைத் தான்.

சிப்பிக்குள் விழும் மழை நீர் முத்தாக மாறுகிறது. ஆனால் நீருக்குள் விழும் மழை நீரோ நீருடனேயே கலக்கிறது. வெற்றி அடைய விதிக்கப்பட்ட ஒருவன் வாய்ப்பைத் தவற விடவே மாட்டான். சரியான நேரமும் காலமும் இடமுமே வெற்றி பெறத் தேவையானவை.

இப்படி நூற்றுக்கணக்கான நீதி மொழிகளை சரளமான தெலுங்கு வார்த்தைகளில் மிக அழகுறத் தருகிறார் வேமன கவி. அவை பட்டி தொட்டிகளில் எல்லாம் சாமான்யரால் இன்று கூட மேற்கோள்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வேமன சதகம் என்ற அவரது நூறு பாடல்களைக் கொண்ட சதக நூல் பிரசித்தி பெற்ற நூலாகத் திகிழகிறது.

அனந்தப்பூரில் கத்ரி தாலுகாவில் உள்ள கதருபள்ளியில் அவர் சமாதி அடைந்தார். அவரது சமாதி உள்ள இடத்தில் ஒரு அடையாளக் கல் உள்ளது.

வேமனாவின் கவிதைகள் பள்ளிக்கூட பாட புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன. ஆந்திர அரசு 2008ம் ஆண்டு அவர் பெயரை ஒரு பல்கலைக்கழகத்திற்குச் சூட்டியுள்ளது.

1947ம் ஆண்டு யோகி வேமனா என்ற படத்தில் நாகையா நடித்துள்ளார்.

இன்னொரு படமான ஶ்ரீ வேமன சரித்ரா 1986ல் வெளியிடப்பட்டது.

வேமனாவின் தபால் தலை ஒன்றை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

யோகி வேமனா பாரதத்தின் தலை சிறந்த மகான்களில் ஒருவர் என்பதையும் அவர் கூறும் நீதிகள் மனித குலம் அனைத்திற்கும் பொதுவானவை என்பதையும் அவர் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது நீதி பாடல்களைப் படிப்பதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.

யோகி வேமனாவின் திருவடி போற்றி.

நன்றி வணக்கம்.

*********

Hindu Crossword 18-12-24 (Post No.14,002)

Written by London Swaminathan

Post No. 14,002

Date uploaded in Sydney, Australia – 18 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 Across

4.Duryodhana’s wife

7.Congress people wore this during freedom struggle

8.That which is sour; acidic

10. People who lived beyond Sindhu River

Down

1.Literal translation- once again new- name of some Shankaracharyas

2.Name of Vali’s wife in Ramayana

3. Mother of Gods in the Rig Veda; also word for guest.

5.one of the Five Pndavas well versed in astrology.

6.One of Pandu’s wife

9.Go upward—well versed in gambling; helped to Kauravas to defeat Yuthisthira

1  2  3  
4 5 6    
         
  7      
         
    8    
        9
   10     

Hindu Crossword 18-12-24

A 1  R2  A3  
B4AN5UM6ATHI
H AMA H N
I K7ADHI U
N U H T K
A L A8MILA
V A R   S9
A  H10INDU 

 —subham—-

tags- Hindu Crossword 18-12-24

GNANAMAYAM BROADCAST ON 15-12-2024 SUMMARY

S. NAGARAJAN

MRS SATHYANARAYANAN

MRS VAISHNAVI ANAND

MRS VIMALA SURYANARAYANAN 

GNANAMAYAM BROADCAST FROM SYDNEY, LONDON AND INDIAN CITIES ON 15-12-2024 VIA ZOOM, FACEBOOK AND YOU TUBE.
VAISHNAVI ANAND PRESENTED WORD HINDU NEWS FROM LONDON;
BENGALURU S NAGARAJAN SPOKE ABOUT NAMMAAZVAR;
BENGALURU MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN SPOKE ABOUT SRIVILLIPUTHUR.
MRS VIMALA SURYANARAYAN FROM CHENNAI DID THE PRAYER SONG. TIRUPPUGAZ SONGS WERE PLAYED BY SRI KALYANJI FROM INDIA. LONDON SWAMINATHAN ANCHORED IT FROM SYDNEY IN AUSTRALIA.

SHRI KALYANJI

LONDON SWAMINATHAN (SYDNEY, AUSTRALIA)

–SUBHAM–

TAGS– GNANAMAYAM BROADCAST, ON 15-12-2024 SUMMARY

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்தி மடல் 15-12-2024 (Post.14,001)

xxxx  

Written by London Swaminathan

Post No. 14,001

Date uploaded in Sydney, Australia – 18 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை  வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

அனைவருக்கும் வணக்கம்

இன்று ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 15–ம் தேதி 2024-ம் ஆண்டு

*****

திருவண்ணாமலை கார்த்திகை  தீபத்  திருருவிழா

ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கான மக்களைக் கவர்ந்து இழுக்கும் திருவண்ணாமலை கார்த்திகை  தீபத்  திருருவிழா  இந்த ஆண்டும் வியாக்கிழமையன்று சிறப்பாக நடந்தது . மாலையில் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டவுடன் அண்ணாமலைக்கு அரோஹரா என்று பக்தர்கள் எழுப்பிய கோஷங்கள் விண்ணை முட்டியது.  ஆயிரக் கணக்கில் சிறப்பு பேருந்துகள் பக்கதர்களை சுமந்த வந்தன ; வட்டார பள்ளிகளுக்கு ஒன்பது நாள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகள் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டன.

கார்த்திகை தீபத் திருவிழா – காஞ்சியில் இருந்து திருவண்ணாமலை புறப்பட்ட திருக்குடைகள்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவினை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் இருந்து திருக்குடைகள் அண்ணாமலையாருக்கு சாத்த கொண்டு செல்லப்பட்டது.

பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி கோயில் நிர்வாகம் சார்பில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள இந்து ஆன்மீக சேவா சமிதி அறக்கட்டளை சார்பில் 7 திருக்குடைகள் அண்ணாமலையாருக்கு சாத்த கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக ஆன்மீக பக்தர்கள் பலர் வழி நெடுகிலும் நின்று திருக்குடையை வழங்கினர். விவசாயம் செழிக்கவும், மக்கள் நோயின்றி வாழவும் திருக்குடை அளித்து வருவதாக அறக்கட்டளை நிறுவனர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

xxxx

மகா கும்பமேளா 2025 பிரம்மாண்ட ஏற்பாடு.

உலகிலேயே மிகப்பெரிய திருவிழா மஹா கும்பமேளா ; இது அடுத்த ஆண்டு திரிவேணி சங்கமத்தில் நடக்கிறது; கங்கை, யமுனை சரஸ்வதி நதிகள் கலக்கும் இடம் திரிவேணி சங்கம். சரஸ்வதி நதி மட்டும் பாதாளத்தில் கலக்கிறது; முன்னர் அலஹாபாத் என்று பெயர் இருந்த இடத்துக்கு பிரயாக்ராஜ் என்ற பழைய பெயர் சூட்டப்பட்டதை நேயர்கள் அறிவார்கள் இதற்கு முந்திய மஹா கும்பமேளாவில் இரண்டு கோடி பேருக்கு மேல் வந்து கங்கையில் புனித நீர் ஆடினர்.

பல்லாயிரக் கணக்கான சாதுக்கள் இமய மலையிலிருந்து இறங்கி வந்து புனித கங்கை நதியில் குளிக்கும் காட்சியை உலகம் முழுதுமுள்ள டெலிவிஷன் நிலையங்கள் படம் பிடிப்பது வழக்கம் 

சாதுக்களுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை

உத்தர பிரதேச மாநில முதல்மைச்சர் முதல்வர் யோகி ஆதித்யநாத் மகா கும்பமேளா 2025—க்கான ஏற்பாடுகள் குறித்து சாதுக்களுடன் ஆலோசனை நடத்தினார். சாதுக்கள் ஏற்பாடுகளில் திருப்தி தெரிவித்து, பிரதமர் மோடியின் டிசம்பர் 13 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சம்மதித்தனர். யோகி பிரம்மாண்டமான கும்பமேளாவிற்கு உறுதியளித்தார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத், மகா கும்பமேளாவின் தெய்வீகத்தன்மையும் பிரம்மாண்டமும் சாதுக்களால் வருவதே, அரசும் நிர்வாகமும் ஏற்பாட்டிற்கு உதவி செய்பவை மட்டுமே என்றார். இன்று உலக அரங்கில் சனாதன கலாச்சாரம் பெருமைப்படுகிறது என்றால் அது சாதுக்களின் அருளால்தான் சாத்தியமாகிறது என்றார். மகா கும்பமேளா ஏற்பாடுகளில் நல்லது நடந்தால் அது முன்னோர்களின் அருள், மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் சாதுக்களின் ஆசியால் நடக்கிறது. எனவே இந்த முறையும் சாதுக்கள் மேளா நிர்வாக அதிகாரிகளுக்கு வழிகாட்டுதலை வழங்க வேண்டும்

என்று வேண்டுகோள் விடுத்தார்

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் 13 அகாடாக்களின் பிரதிநிதிகள், காக்-சௌக் பாரம்பரியம், தண்டிபாடா பாரம்பரியம், ஆச்சார்யபாடா பாரம்பரியம் மற்றும் தீர்த்த புரோகிதர்களின் பிரதிநிதிகள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சாதுக்களுடன் மகா கும்பமேளா ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடிய முதல்வர், இந்த ஆண்டு கங்கை நீர் தாமதமாக வற்றியதால் சில பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன, ஆனால் சாதுக்களின் ஒவ்வொரு கேள்விக்கும், ஒவ்வொரு எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய மாநில அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றார்.

பரிசுத்தமான திரிவேணி சங்கமத்தில் புனித நீராட விரும்பும் ஒவ்வொரு சாதுவும், பக்தரும் தொடர்ச்சியாக ஓடும் தூய்மையான கங்கை-யமுனையை தரிசிப்பார்கள். மகா கும்பமேளா 2025, கும்பமேளா 2019 ஐ விட பிரம்மாண்டமாக இருக்க அனைவரும் பங்களிக்க வேண்டும். சாதுக்களின் அருளாலும், பிரதமரின் வழிகாட்டுதலாலும் இன்று உலகம் முழுவதும் அயோத்தி, வாரணாசி மற்றும் பிரஜ்தாம் ஆகியன புதிய அம்சங்களை காண்கிறது என்றார்..

அகாடாக்கள் மற்றும் பல்வேறு சாதுக்களின் பிரதிநிதிகள் முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு நன்றி தெரிவித்து, முதல்வர் யோகியின் தலைமையில் நடைபெறும் மகா கும்பமேளா உலகம் முழுவதும் அமைதியின் செய்தியை வழங்கும் என்றனர். முதல்வர் யோகி ஆதித்யநாத் சனாதன தர்மத்தின் பாதுகாவலர் என்றனர். அவரது தலைமையின் கீழ் இன்று சனாதன சமூகம் பெருமைப்படுகிறது என்று பாராட்டி ஆசி வழங்கினார்கள்.

xxxxx

மகா கும்பமேளாவை முன்னிட்டு கோவையில் இருந்து வாரணாசி மற்றும் அயோத்திக்கு ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரெயில் !

கோவை, இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மகா கும்பமேளாவுக்கு தமிழகத்தத்தில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ், வாரணாசி மற்றும் அயோத்திக்கு அதிகப்படியான பக்தர்கள் செல்வார்கள். அவர்களின் வசதிக்காக ஆன்மிக சிறப்பு சுற்றுலா ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் கோவையில் இருந்து வருகிற 2025  பிப்ரவரி மாதம் 18-ந் தேதி திருப்பூர், ஈரோடு, சேலம், லார்பேட்டை,காட்பாடி, ரேணிகுண்டா வழியாக வாரணாசிக்கு இயக்கப்பட உள்ளது.

XXXX

உத்தர பிரதேசத்தில் கும்பமேளா ஏற்பாடுகள் – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு!

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கும்பமேளா ஏற்பாடுகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.

பிரயாக்ராஜில் மகா கும்பமேளா அடுத்த ஆண்டு கோலாகலமாக நடைபெறுகிறது. இதையொட்டி, கங்கை நதிக்கரையில் லட்சக்கணக்கான துறவிகள் திரள்வது வழக்கம். இந்த நிலையில், கும்பமேளா ஏற்பாடுகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை அளித்தார். பின்னர் அங்குள்ள புத்தக கடைக்குச் சென்ற அவர், இரண்டு புத்தகங்களை வாங்கி அதற்கான தொகையை யுபிஐ மூலம் செலுத்தினார்.

இதையடுத்து கங்கை நதியில் புதிதாக கட்டப்பட்ட ரயில்வே பாலத்தின் உறுதித்தன்மையை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார்.  அந்த வழித்தட வரைபடத்தையும் அவர் பார்வையிட்டு அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தார்.

******

நடிகர் திலீப்புக்கு முன் வரிசை தரிசனம் நான்கு பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

சபரிமலை: சபரிமலையில் பக்தர்களின் வரிசையை தடுத்து நடிகர் திலீப்புக்கு முன் வரிசையில் தரிசன வசதி ஏற்படுத்திக் கொடுத்தது தொடர்பாக தேவசம் போர்டு அதிகாரிகள் 2 பேர் உட்பட 4 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.கடந்த 5ம் தேதி சபரிமலை தரிசனத்திற்கு வந்த நடிகர் திலீப், அவருடன் வந்தவர்கள் இரவு ஹரிவராசனம் பாடும் போதும் அதிகாலை நிர்மால்ய தரிசனத்தின் போதும் முன் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். இந்த நேரத்தில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

xxxxx

மதமாற்றம் செய்ய கிராமம் கிராமமாக படையெடுக்கும் கிறிஸ்தவ மிஷனரிகள் – இந்து முன்னணி குற்றச்சாட்டு!

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கிறிஸ்தவ மிஷனரிகள் மதமாற்றம் செய்ய கிராமம் கிராமமாக படையெடுத்துள்ளதாகஇந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு மிஷனரிகளின் மதமாற்ற வேலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் முடுக்கிவிடபட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் சார்லஸ் நகரை சேர்ந்த ஒரு பாதிரியார், ஆரியூர் கிராமத்தில், கிறிஸ்துமஸ் விழா என்ற பெயரில் மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும், அதை தட்டிகேட்ட இளைஞர்களை ஆதரவாளர்களை வைத்து பாதிரியார் தாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே பல மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டுள்ள கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை தமிழகத்திலும் இயற்ற வேண்டும் என்றும், புதுக்கோட்டை சம்பவத்தில் பொய் வழக்கு போட்டு கைது செய்யபட்ட இளைஞரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனவும் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

XXXXXX

அமெரிக்க அரசாங்கத்தின் உச்ச பொறுப்புகளில் இந்துக்கள் நியமனம்

அமெரிக்காவின் அதிபரான டொனால்ட் ட்ரம்பின் வெள்ளை மாளிகை தேர்வுகளில் இந்திய வம்சாவளியினர் இடம் பெற்றுள்ளனர்.

வரும் ஜனவரி 20ம் தேதி, அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கிறார். அதன் பிறகு அவர் அதிகாரப்பூர்வமாக அதிபருக்கான அதிகாரங்களைப் பெற முடியும். அதற்கு முன்னதாக, வெள்ளை மாளிகையின் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட சுமார் 4000 அரசு நியமனங்களை செய்து வருகிறார்.

வெள்ளை மாளிகை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில், இந்திய வம்சாவளியினரை மிக முக்கிய பொறுப்புக்களில் ட்ரம்ப் நியமித்திருக்கிறார்.

அமெரிக்க நீதித்துறையின் உயர் பதவிகளில் ஒன்றாக விளங்கும் சிவில் உரிமைகளுக்கான துணை தலைமை வழக்கறிஞர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹர்மீத் தில்லான்என்ற பெண்ணை நியமனம் செய்வதாக டிரம்ப் அறிவித்துள்ளார்; ஹர்மீத் சீக்கிய மத சமூகத்தின் மரியாதைக்குரிய உறுப்பினர்.தற்போது 54 வயதாகும் ஹர்மீத் தில்லான், இந்தியாவின் சண்டிகர் நகரில் பிறந்தவராவார். சிறுவயதிலேயே அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்,

அரசாங்கத்தின் திறன் சார்ந்த துறை (Department of Government Efficiency – DOGE) என்ற புதிய துறையை உருவாக்கியுள்ள அதிபர் ட்ரம்ப், அதன் தலைமை பதவியில் எலான் மஸ்க் உடன் விவேக் ராமசாமியையும் நியமித்துள்ளார்.

அமெரிக்காவில் பிறந்த விவேக் ராமசாமியின் பெற்றோர் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வடக்கஞ்சேரியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

வடக்கஞ்சேரியில் பிறந்து வளர்ந்த ராமசாமிக்கும் பொள்ளாச்சியில் பிறந்த விவேக்கின் தாயார் கீதாவுக்கும் பழனியில்தான் திருமணம் நடந்திருக்கிறது. தாய் மொழி தமிழ் என்பதால், இன்றும் விவேக் ராமசாமி தமிழில் நன்றாக பேசுவார்

கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியில் பயின்றாலும் தான் ஒரு இந்து என்பதில் பெருமை கொள்வதாக விவேக் ராமசாமி, வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

அடுத்ததாக, தேசிய புலனாய்வு இயக்குநராக முன்னாள் ஜனநாயகக் கட்சியின் துளசி கபார்டை அதிபர் ட்ரம்ப் நியமனம் செய்திருக்கிறார். இதன் மூலம், துளசி கப்பார்ட், அமெரிக்க உளவு அமைப்புகளில் தலைவராகவும், அமெரிக்க அதிபரின் உளவுத்துறை ஆலோசகராகவும் செயல்படும் முதல் இந்து பெண்மணி ஆவார்.

இந்தியாவுடன் நேரடித் தொடர்புகள் இல்லை என்றாலும், துளசி கபார்ட்டின் தாயார், இந்து மதத்துக்கு மாறியவர் . ரோமன் கத்தோலிக்கரான துளசி கபார்ட் டின் தந்தை மைக் கபார்ட் மற்றும் தாயார் கரோல் கபார்ட் தங்கள் குழந்தைகளை இந்து மத நம்பிக்கைகளுடன் வளர்த்தனர், மேலும் தங்களின் ஐந்து குழந்தைகளுக்கும் இந்துமத பெயர்களையே வைத்தனர். தனது குழந்தைகளுக்கு இந்து பெயர்களையே துளசி கபார்ட் வைத்திருக்கிறார்.

அமெரிக்க சமோவான் வம்சாவளியைச் சேர்ந்த துளசி கபார்ட் எப்போதும் தன்னை ஒரு இந்து என்று அடையாளப்படுத்திக் கொள்வதிலேயே பெருமை படுகிறார். ஸ்ரீமத் பகவத் கீதையின் மீது கை வைத்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் .

2015ம் ஆண்டு பாரம்பரிய வேத முறைப்படி, திரைப்பட தயாரிப்பாளர் ஆபிரகாம் வில்லியம்ஸை துளசி கபார்ட் திருமணம் செய்து கொண்டார்.

இந்த வரிசையில், காஷ் படேலை எஃப்பிஐ-யின் இயக்குநராக்கி இருக்கிறார் அதிபர் ட்ரம்ப்.

ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த, குஜராத்தைப் பூர்வீகமாக கொண்ட பெற்றோருக்கு பிறந்தவர்தான் காஷ் படேல். நியூயார்க்கில் சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக தன் வாழ்க்கையை தொடங்கி, நீதித்துறையில் பயங்கரவாத எதிர்ப்பு வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார்.

இந்தியாவில் ராம ஜென்ம பூமியான அயோத்தியில் ராமர் கோயிலை மீட்டெடுப்பதற்கு ஆதரவாக குரல் கொடுத்த காஷ் படேல், ஸ்ரீ இராமரின் வரலாறு மற்றும் ஸ்ரீ இராம ஜென்ம பூமியின் வரலாற்று முக்கியத்துவத்தை புறக்கணித்த மேற்கத்திய ஊடகங்களை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்தியாவின் கொல்கத்தாவில் பிறந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் ஜெய் பட்டாச்சார்யாவை அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனங்களின் இயக்குநராக அதிபர் ட்ரம்ப் நியமனம் செய்துள்ளார்.

இதற்கெல்லாம் மேலாக, இந்திய வம்சாவளி இந்துவான உஷா வான்ஸின் கணவர் ஜே.டி.வான்ஸ் அமெரிக்காவின் துணை அதிபராகி இருக்கிறார். இதன்மூலம், அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாகும் முதல் இந்தியர் என்ற பெருமையை உஷா வான்ஸ் பெற்றிருக்கிறார்.

XXXXXXX

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .

அடுத்த ஒளிபரப்பு

டிசம்பர்  22 –ஆம் தேதி லண்டன் நேரம் ஒருமணிக்கும் இந்திய நேரம் மாலை ஆறரை மணிக்கும்  நடைபெறும். வணக்கம். 

—-subham—-

Tags- ஞானமயம் , உலக இந்து செய்தி மடல் 15-12-2024