
Post No. 15,274
Date uploaded in London – 15 December 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து, வைஷ்ணவி ஆனந்த் வாசித்து வழங்கும் செய்தி மடல்.

அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் மாதம் 14- ம் தேதி , 2025-ம் ஆண்டு.
***
முதலில் திருப்பரங்குன்றம் செய்திகள்
திருப்பரங்குன்றம் தீப வழக்கு: விசாரணையை வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்த, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 15ம் தேதிக்கு ( திங்கட்கிழமை) ஐகோர்ட் மதுரைக்கிளையில் இரு நீதிபதிகள் அமர்வு ஒத்திவைத்தது.
‘திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடங்களை தவிர, தீபத்துாணிலும் டிச., 3ல் கார்த்திகை தீபத்தை சுப்பிரமணியசுவாமி கோவில் நிர்வாகம் ஏற்ற வேண்டும். இந்த ஆண்டு முதல் தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்வது போலீசாரின் கடமை’ என ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை நிறைவேற்றாததால், ‘கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், கோவில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என, ராம ரவிக்குமார் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்துாணில் தீபம் ஏற்றவில்லை. பிற மனுதாரர்கள் உட்பட, 10 பேரை மனுதாரர் அழைத்துச் செல்லலாம். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை அனுப்ப உயர்நீதிமன்ற சி.ஐ.எஸ்.எப்., கமாண்டன்டிற்கு உத்தரவிடுகிறேன்’ என்றார்.



நீதிபதி சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து, ஐகோர்ட் மதுரைக்கிளையில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ராமன், வாதங்களை முன் வைத்தார்.
, ”இது ஒன்றும் பொது நல வழக்கு அல்ல. இந்த வழக்கு, அந்த இடத்தில் தீபத்துாண் இருந்ததா என்ற அடிப்படை கேள்வியை எழுப்புகிறது. முதலில் அந்த இடத்தில் தீபத்துாண் இருந்ததா என்பதையும், இரண்டாவதாக, அதில் தீபம் ஏற்றும் சம்பிரதாய நடைமுறையின் அவசியம் குறித்தும் மனுதாரர் உறுதிப்படுத்த வேண்டும்,” என்றார்.
கோயில் தரப்பு வக்கீல்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல, அது கிரைனைட் தூண்.
நீதிபதிகள்: மலை உச்சியில் இருப்பது கிரைனைட் தூண் என்பதை யார் உறுதி செய்தது ?
கோயில் தரப்பு வக்கீல்: பல புகைப்படம் பார்த்து பேசுகிறேன். அரசு அதிகாரிகள் அதை சர்வே கல் என்கின்றனர்
நீதிபதிகள் : இது சர்வே கல்லா ? தீபத்தூணா ? விளக்குத்தூணா? என்பதை வல்லுநர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் அதை கூற முடியாது எனத் தெரிவித்தனர். மேலும் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணையை வரும் 15ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
***
திருப்பரங்குன்றம் பிரச்னைக்காக தேசிய அளவில் போராட்டம்

திருப்பரங்குன்றம் பிரச்னைக்காக தேசிய அளவில் போராட்டம் நடத்துவது குறித்து, தமிழக ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளுடன் அதன் தேசியத் தலைவர் மோகன் பாகவத் ஆலோசனை நடத்தி உள்ளார்.
கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக்கோரி, தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சி எம்.பி.,க்கள், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ‘நோட்டீஸ்’ கொடுத்துள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்த அதன் தலைவர் மோகன் பாகவத்திடம், இந்த பிரச்னை குறித்து ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் விரிவாக எடுத்துக் கூறியுள்ளனர். அப்போது, தேசிய அளவில் போராட்டம் நடத்துவது குறித்து அவர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
பின்னர், திருச்சி கூட்டத்தில் பேசிய அவர், “திருப்பரங்குன்றம் பிரச்னையில், ஹிந்து அமைப்புகள் ஆர்.எஸ்.எஸ்., உதவியை நாடினால் பரிசீலிப்போம்,” என்றார்.
****

பாஜக எம்.பி அனுராக் சிங் தாக்கூர் குற்றச்சாட்டு!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதாகப் பாரதீய ஜனதாக் கட்சி எம்.பி அனுராக் சிங் தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விவாதத்தின் போது பேசிய பாஜக எம்பி அனுராக் சிங் தாக்கூர் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
அதேபோல் மாநில அரசு சனாதன தர்மத்திற்கு எதிராக இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.இதற்குத் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தமிழக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
***
தீபத்தூணில் தீபம் ஏற்ற கோரி திருப்பரங்குன்றம் மற்றும் ஹார்விப்பட்டி பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முன்பு பெண்கள் தீபம் ஏற்றினர்.
திருப்பரங்குன்றம் பகுதியில் மக்கள் உண்ணாவிரதமம் துவக்கியுள்ளனர்
****
திருப்பதியில் பட்டு சால்வை வழங்கியதில் மோசடி: பக்தர்கள் அதிர்ச்சி
திருப்பதியில் பட்டு சால்வை எனக்கூறி பாலியஸ்டர் துணியை வழங்கி மோசடி செய்தது பக்தர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 2014 முதல் 2025ம் ஆண்டு வரை, திருப்பதி கோவிலில் முக்கிய நபர்களுக்கு பட்டு சால்வை எனக்கூறி பாலியஸ்டர் துணி வழங்கப்பட்டு மோசடி செய்யப்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இப்போது இரண்டாவது மோசடி அம்பலமாகியுள்ளது
திருப்பதி தேவஸ்தானம் தலைவர் பிஆர் நாயுடு, பட்டு சால்வைகள் குறித்து சந்தேகம் தெரிவித்ததைத் தொடர்ந்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கோவிலின் ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரணையை துவக்கினர். அதில், முக்கியஸ்தர்களுக்கு வழங்கப்பட்ட சால்வைகள், உண்மையில் 100 சதவீதம் பாலியஸ்டர் துணியால் செய்யப்பட்டவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பட்டு சால்வை எனக் கூறி வழங்கப்பட்ட துணி ஆய்வகங்களில் அனுப்பி ஆய்வு செய்யப்பட்டது. அதில், அவை பாலியஸ்டர் துணி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக பிஆர் நாயுடு கூறியதாவது:
350 ரூபாய் மதிப்பிலான சால்வையை 1,300 ரூபாய் எனக்கூறி பணம் பெற்றுள்ளனர். இந்த வகையில் 50 கோடி ரூபாய் அளவுக்கு கடந்த 2015 – 2025 ம் ஆண்டு வரை மோசடி நடந்துள்ளது.
****
புத்தகக் கண்காட்சியில் இந்து விரோத துண்டுப் பிரசுரம்
பல்லடம் புத்தகக் கண்காட்சியில், ஹிந்து மதம் மீது அவதுாறு பரப்பும் வகையில் நோட்டீஸ் வினியோகித்த ‘திராவிடர் தளம்’ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹிந்து அமைப்புகள் கோரியு ள்ளன.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உள்ள மணிவேல் மஹாலில், கடந்த 5ம் தேதி துவங்கி புத்தகக் கண்காட்சி நடந்தது . இமைகள் ரோட்டரி சங்கம், பல்லடம் நகராட்சி, தமிழ்ச்சங்கம் உள்ளிட்டவை சார்பில் நடத்தப்படும். புத்தகக் கண்காட்சியில், ‘கருஞ்சட்டை பதிப்பகத்தினர் அரங்கு அமைத்திருந்தனர்.
இந்த அரங்கில், ஒருவர். ‘திராவிடர் தளம்’ என்ற பெயரில்,
பக்தியுள்ள மாணவர்களுக்கு சில கேள்விகள் என்ற நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது. இதில், ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்தி கருத்துகள் இடம் பெற்றிருந்தன,
தகவல் அறிந்த பல்வேறு ஹிந்து அமைப்புகள், புத்தகக் கண்காட்சியை முற்றுகையிட்டனர். பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், ஹிந்து அமைப்பினரிடம் புகார் மனு பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
மக்களிடம் புத்தக வாசிப்பு பழக்கத்தை கொண்டு வர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தான், பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் புத்தகக் கண்காட்சியை நடத்துகின்றன. ஆனால் திராவிடர் தளம் போன்ற அமைப்புகள், கண்காட்சிக்குள் எப்படியோ புகுந்து, மத நம்பிக்கை கொண்டவர்களின் மனதை புண்படுத்தும் விதமான செயலில் ஈடுபடுகின்றன.
ஹிந்து முன்னணி மாநில பொது செயலாளர் கிஷோர் குமார் கூறியதாவது:
புத்தக கண்காட்சி என்பது அறிவை வளர்க்கும் விதமாக நடக்க வேண்டும். அதற்குப் பதிலாக கலகத்தை விளைவிக்கும் வகையில் இது போன்ற செயல்கள் நடக்கிறது. இது கடும் கண்டனத்துக்குரியது. கடந்தாண்டு திருப்பூரில் நடந்த புத்தக கண்காட்சியிலும் இதுபோல் நடந்த நாத்திக பிரசாரம் காரணமாக பெரும் பிரச்னை ஏற்பட்டது. அடுத்த மாதம் நடக்கவுள்ள புத்தக கண்காட்சியில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாத வகையில் உரிய கண்காணிப்பும் அறிவுறுத்தலும் வழங்க வேண்டும் என்று கிஷோர் குமார் கூறினார்.
***
கோவில் நிலம் விற்பனை குத்தகைக்கு புதிய விதிகள்
சென்னை: கோவில் நிலங்கள் விற்பனை, பரிமாற்றம், குத்தகை அல்லது அடமானம் ஆகியவற்றுக்கான புதிய விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில், திருப்போரூர் கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், ஒரு தனியார் கல்லுாரி செயல்பட்டு வருகிறது.
இந்த நிலத்தை மீட்க, ஹிந்து சமய அறநிலையத் துறை முயற்சித்தபோது, அந்த கல்லுாரி நிர்வாகம் மாற்று நிலத்தை கொடுக்க முன்வந்தது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோவில் நிலங்களை பரிமாற்றம் செய்வதற்கான விதிமுறைகள் குறித்து, கேள்வி எழுப்பியது.
இதன் அடிப்படையில், தமிழக அரசு கோவில் நிலங்கள் விற்பனை, பரிமாற்றம், குத்தகை, அடமானம் ஆகியவற்றுக்கான விதிகளை வகுத்து வெளியிட்டுள்ளது.
இம்மாதம் 1ம் தேதி முதல் இந்த விதிகள் அமலுக்கு வந்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.
***
பாகிஸ்தானில் மீண்டும் சம்ஸ்க்ருதம் !

இந்தியா இரண்டு நாடுகளாகப்பிரிந்து 78 ஆண்டு ஆன பின்னர் முதல் தடவையாக பாகிஸ்தானில் மீண்டும் சம்ஸ்க்ருத கல்வி துவக்கப்பட்டுள்ளது
லாகூர் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம், மகாபாரதம் குறித்த படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன்
லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்தில் வரலாற்று நடவடிக்கையாக ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது மகாபாரதம் மற்றும் பகவத் கீதையின் பகுதிகள் உட்பட சமஸ்கிருத வசனங்கள் உருது மொழியில் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாபாரத தொலைக்காட்சி தொடரின் பாடலின் முதல் வரியான ”ஹை கதா சங்க்ரம் கி” என்பது மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகள் உலகின் நன்மைக்காகவும், தர்மம் மற்றும் அதர்மத்தின் நித்திய போராட்டத்தையும் குறிப்பதாகும்.
பாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு மூன்று மாதப் பயிற்சி பட்டறைக்கு மாணவர்கள் மற்றும் அறிஞர்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து இப்போது ஒரு முறையான பல்கலைக்கழக பாடமாக பரிணாமம் எடுத்துள்ளது. 2027 ஆம் ஆண்டுக்குள் இதை ஒரு முழு ஆண்டு பாடமாக மாற்ற திட்டமிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ஊடகம் ஒன்றில் பேசிய ஃபார்மன் கிறிஸ்தவக் கல்லூரியின் ஆசிரியர் ஷாஹித் ரஷீத், “தெற்காசியப் பிராந்தியத்தின் தத்துவம், இலக்கியம் மற்றும் ஆன்மீக மரபுகளை வடிவமைத்த ஒரு மொழியைப் பற்றிய தீவிர ஆய்வை மீட்டெடுப்பதற்கான முயற்சியின் சிறிய படியாக இந்த விஷயம் பார்க்கப்பட்டாலும், இதை முக்கியமான ஒன்றாக கருதுகிறோம். சமஸ்கிருத மொழியை நாம் ஏன் கற்றுக்கொள்ளக்கூடாது?, அது இந்தப் பகுதி முழுவதையும் இணைக்கும் ஒரு மொழியாக உள்ளது. சிந்து சமவெளி காலத்தில் இங்கு நிறைய சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது. நாம் அதை ஏற்க வேண்டும். அந்த மொழி எந்த ஒரு மதத்துடனும் பிணைக்கப்படவில்லை. எனவே அது நமக்கும் சொந்தமானது” என குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் சமஸ்கிருதம் மாணவர்களுக்கு அச்சுறுத்தும் வகையில் இருந்தாலும் இப்போது அவர்கள் அதற்கு அடிமையாகி விட்டனர். சிலருக்கு சமஸ்கிருதம் வேறு, இந்தி வேறு என்பது தெரியாது. மாணவர்கள் அதன் தர்க்கரீதியான அமைப்பைப் புரிந்துகொண்டபோது, அவர்கள் மொழியை ரசிக்கத் தொடங்கினர் எனவும் அந்த பேராசியர் கூறியுள்ளார்.
இதனிடையே சமஸ்கிருத ஆவணங்கள் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், அது பல தசாப்தங்களாக கல்வியாளர்களால் தொடப்படாமல் இருந்ததாகவும் கூறினார்
இப்போது உள்ளூர் அறிஞர்களுக்கு சமஸ்கிருதத்தில் பயிற்சி அளிக்க பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இன்னும் 10-15 ஆண்டுகளில், பாகிஸ்தானில் இருந்து கீதை மற்றும் மகாபாரத அறிஞர்கள் வெளிவருவதை நாம் காணலாம்.
****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்; லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த் வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு டிசம்பர் 21 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் 12 மணிக்கும், இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் . வணக்கம்.
—SUBHAM—-
Tags- Gnanamayam, Broadcast, News, 14 12 2025, Vaishnavi







