சாது மிரண்டால் காடு கொள்ளாது! சீனக் கதை!! (Post No. 2405)

chin1

Compiled by London swaminathan

Date: 19 December 2015

 

Post No. 2405

 

Time uploaded in London: காலை 10-40

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

தமிழில் ஒரு பழமொழி உண்டு. சாதுக்கள் கோபிக்கமாட்டர்கள். ஆனால் அவர்களுக்குக் கோபம் வந்தாலோ அரசாட்சியே கவிழ்ந்துபோகும்.

வித்யாரண்யர் அருளால், விஜயநகரப் பேரரசு தோன்றி தென்னாட்டில் முஸ்லீம் ஆட்சிக்கு சாவு மணி அடித்தது. மகாராஷ்டிரத்தில் சமர்த்த ராமதாஸ் அருளால் வீர சிவாஜி உருவாகி மொகலாய சாம்ரஜ்யத்துக்கு சாவு மணி அடித்தார். இதற்கு முன் சாணக்கியனின் கோபம் நந்த வம்சத்தை வேரறுத்து மௌரியப்பேரசை நிறுவியது.

 

பழங்காலத்தில் அகஸ்தியரைப் பகைத்த நகுஷன் அழிந்தான்; வேனன், சுமுகன் முதலிய கொடுங்கோல் மன்னர்கள் அழிந்து போனதை மனு நீதி சாத்திரம் பட்டியல் போட்டுத் தரும். வள்ளுவனும் தன் குறளில் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதைப் “பெரியாரைப் பிழையாமை” அதிகாரத்தில் கூறுகிறார்:

 

குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியோடு

நின்றன்னார் மாய்வர் நிலத்து (898)

 

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுறிந்து

வேந்தனும் வேந்து கெடும் (899)

பொருள்: குணத்தினால் உயர்ந்த பெரியோர்கள், ஒருவனை அழிக்க நினைத்தால், அவன் குலமே அழிந்து போகும்.

உயர்ந்த கொள்கையுடைய சான்றோர் வெகுண்டெழுந்தால், நாடாளும் அரசன் முறிந்து வீழ்வான்.

 

இதை விளக்கும் ஒரு சம்பவம் சீனாவில் நடந்தது:-

சின் வம்ச முதல் அரசன் (கி.மு.221-206), சீனாவின் ஒரு பெரிய நிலப்பரப்பை ஆண்டுவந்தான். அருகாமையிலிருந்த ஒரு சின்ன நாட்டின் பகுதியைத் தனக்குத் தரவேண்டுமென்று மிரட்டினான். அதை ஏற்க மறுத்த அந்த சிறிய நாட்டின் அரசன் ஒரு தூதரை சமாதானம் பேச அனுப்பினான். அந்தக் காலத்தில் தூது போவோர் பெரிய அறிஞர்களாக இருப்பர். இந்தியாவில் பிராமணர்கள் தூதர்களாகப் பணியாற்றியதை சங்க இலக்கியமும், தொல்காப்பியமும் கூறும்.

 

சீனாவில் சின் வம்ச அரசன், சின்ன நாட்டின் தூதரைப் பார்த்துச் சொன்னான்:

china-chin-large

“ஓய் அறிஞரே! ஒரு மன்னனுக்குக் கோபம் வந்தால் என்ன நடக்கும் என்பது உமக்குத் தெரியுமா?

அறிஞர்: மன்னவா, எனக்குத் தெரியாது.

மன்னன்: ஒரு மன்னனுக்குக் கோபம் வந்துவிட்டால் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு லட்சக் கணக்கான சடலங்கள்தான் இருக்கும்.

 

அறிஞர்: ஒரு அறிஞருக்குக் கோபம் வந்தால் என்ன நடக்கும் என்பது தெரியுமா?

மன்னர்: ஹூம்! தொப்பியையும், காலணிகளையும் கழற்றி எறிவார். மண்டையை நிலத்தில் மோதி உடைத்துக் கொள்வார். இது என்ன தெரியாதா?

அறிஞர்: ஓ, அது முட்டாள்கள் செய்யும் வேலை.

 

இப்படிச் சொல்லிவிட்டு அந்த அறிஞர் அந்த மன்னனுக்கு முன்னோர் காலத்தில் நடந்த மூன்று சம்பவங்களை அருமையான கவிதை நடையில் பொழிந்து தள்ளினார். கொடுங்கோல் மன்னர்களை அந்த அறிஞர்கள் தீர்த்துக் கட்டியது பற்றிய கவிதைகள் அவை.

மன்னவா! அந்த மூன்று பேர் பட்டியலில் இன்று என் பெயரும் சேரப்போகிறது. இதோ உமக்கும் எனக்கும் உள்ள ஐந்து அடி இடைவெளியில் இரண்டே சடலங்கள்தான் இன்று இருக்கும். இதோ பார்! என்று சொல்லியவாறே அறிஞர் தன் வாளை உருவினார்.

 

மன்னன் நடுநடுங்கிப் போனார்.

 

மன்னர்: அறிஞரே நிறுத்துங்கள்;அவசரம் வேண்டாம். தயவுசெய்து அமருங்கள். இப்பொழுது எனக்கு விளங்கிவிட்டது. மிகப்பெரிய சாம்ராஜ்யங்களான ஹான், வெய் போன்றவை அழிந்த போதிலும் உமது நாட்டைப் போன்ற சிறிய நாடுகள் உயிர்பிழைத்தது எப்படி என்பது விளங்கிவிட்டது. உங்களைப் போன்ற அறிஞர்கள் இருப்பதால்தான் நுமது நாடு இன்னும் வாழ்கிறது”.

 

மன்னனை அடக்கிய அறிஞனின் கதை இது!

–சுபம்–

லேடி இல்லாதவன் பேடி!! நாடகத்தில் ஒரு நகைச் சுவைக் காட்சி!!! (Post No. 2399)

IMG_2814

Compiled by London swaminathan

Date: 17 December 2015

 

Post No. 2399

 

Time uploaded in London :– 8-20 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

பழைய கால நகைச் சுவை நூலான  பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை.

 

 

நூல் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை

 

 

நூறு ஆண்டு பழமையான ‘ஜோக்’குகள்

garland making

விகடன்:மை டியர் சூத்ரதாரர்! தாசிகளால் சுகமில்லை என்ற தங்கள் கருத்தை நான் ஏற்கமுடியாது. ஏனெனில் உலகத்தில் தாய்மானவர், தந்தையுமானவர், தம்பியுமானவர் முதலிய மகான்களெல்லாம், தெரியாமல், அறியாமல், வெறும் பாடல்களை எழுதி நம்மை ஏமாற்றியிருகிறார்கள் என்பது என் சித்தாந்தம். உண்மையில் எட்டாத கொம்பிலுள்ள தேனுக்குக் கொட்டாவி விடுவதுபோல அவர்களுக்குக் கிடைக்காத தோஷம் அப்படி பாடியிருப்பதாகத் தெரிகிறது. ஒருவருக்கு ஆயிரம் தாரமிருப்பினும் ஒரு தாசிக்கு நிகராகார்கள். இதற்காகவே முன்னோர்கள், “லேடியில்லாதவன் பேடி” என்றும், “கிளிபோற் பெண்சாதி யிருந்தாலும் குரங்குபோலொரு கூத்தியாள் வேண்டும்” என்றுங் கூறியிருக்கிறார்கள். தவிரவும்,

 

 

 

நான் என் வாலிபத்தில், “மனோ உல்லாச, மரகத விசுவாச, பிரகாச, அதிநேச, கோலாகல, குஞ்சித ரஞ்சித பாலாமிர்த, நீலாமரகத பூஷணி!” என்ற தாசியை வைத்திருந்தேன்.ஒரு போலீஸ் உத்தியோகஸ்தருக்கு அவள்மீது திருஷ்டி ஏற்பட்டது.மெள்ள மெள்ள வருத்துப் போக்காயிருந்தார் அதனால் எங்களிருவருக்கும் லடாய் உண்டாயிற்று. இப்படியிருக்க ஓர் நாள் போலீஸ்லயன் வழியே போய்க்கொண்டிருந்த நான் கீழே விழுந்துகிடந்த ஒரு பொன்னாபரணத்தை எடுத்துப் பார்த்துக்கொண்டிருக்க, என் பின்னாலென்னை யறியாமல்  ஒளிந்து வந்த போலீஸ் ஜெவான் திருட்டுச் சொத்தை வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டி க் கன்னத்தில் தவடை சுத்திசெய்து ஸ்டேஷனுக்கு இட்டுப் போய் என் விரோதியான போலீஸ் ஜவானிடம் நிறுத்தினான்.  அவன் என்னயேறவிறங்கப் பார்த்து, பின்பு, ‘பூஜை இன்னும் நடக்கட்டும்’ என்றான்.

 

 

வண்ணான் கூட அப்படி வெளுக்கமாட்டான். தகுந்தபடி எனக்குச் சாத்துபடி செய்தான். இது சங்கதி என் தாயார் கேள்விப்பட்டு ஸ்டேஷனுக்கு ஓடிவந்து மாரடித்துக்கொண்டாள். என் மனைவி ஓர் மூலையிலிருந்து “காள் காள்” என்று சத்தம் போட்டுக்கொண்டி ருந்தாள். என் தகப்பனோ நாலுகை போட்ட பாரிஸ்டரைத் தருவித்துப் போடுகிறேன், என்ன கேள்விமுறையில்லையா என்று தடபுடல் பண்ணினார்.

 

IMG_3318

இங்கனமிது நிற்க இச்செய்தியறிந்த  என்

 

 

மனோன்மணி

மல்லிகையரும்பு

மதுரைக்கரும்பு

கற்பகத்தரு

களங்கமில்லாத கிளி

கோதிலாவொளி

அன்பின் குன்று

இன்பக்கடலாகிய என்னருமை வைப்பாட்டி! கேள்விப்பட்டு ஓடிவந்து போலீஸ் ஜவானை கண்வலையில் மாட்டி மயக்கம்பூட்டி என்னை விட்டு விடும்படி ஜாடை காட்டினாள்.

 

ஆகா இதல்லவோ ஆச்சரியம்! உடனே விடுதலையாகி வந்து விட்டேன்

 

தாயாரழுது பயனென்ன? மனைவியழுது மலையாய்க் குவித்தென்ன? தகப்பன் பாரிஸ்டரைக் கொண்டு வருகிறேனென்றதினாலானதென்ன? ஆகையால் தாசிகளால் சுகமில்லை  என்று தாம் சொல்வது ஒப்போதப்போ? தாங்களே அறிய வேண்டியது

 

சூத்ரதாரர்:- மித்ரா! உன் அனுபவம் விசித்திரமாகத்தானிருக்கிறது. இன்னும் மற்றுமுள்ள கதைகளைக் கூறுவாயாக.

 

விகடன்: – இதோ கூறுகின்றேன்.

To be continued…………………………………………………………….

சர்க்கஸுக்குப் போன பரமஹம்ஸர்!

GandonFrance1239CircusSeurat11869YT1588A

Compiled by S NAGARAJAN

Post No.2210

Date: 3rd   October 2015

Time uploaded in London: 8-27 am

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

.நாகராஜன்

 

 

மஹேந்திரநாத் குப்தா

இன்று உலகமெல்லாம் போற்றும் ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் உபதேச மொழிகளை நமக்குக் கிடைக்கச் செய்தவர் ஒரு அருமையான பரமஹம்ஸ பக்தர். எம் (M) என்று குறிப்பிடப்படும் அவரது பெயர் மஹேந்திரநாத் குப்தா. (தோற்றம் 14-7-1854 மறைவு 4-6-1932)

இடைவிடாது குருதேவரைப் பற்றிய சிந்தனையில் இறுதி மூச்சு வரை மூழ்கி இருந்தவர் அவர். அவரது அற்புதமான கதாம்ருதம் உண்மையிலேயே பாற்கடலில் இருக்கும் அமிர்தத்திற்கு நிகர் தான்!

ஸ்வாமி விவேகானந்தர் ஒரு முறை அவரிடம் அவரது கதாம்ருதம் பற்றி இப்படிக் குறிப்பிட்டார்:-“ நீங்கள் பரமஹம்ஸரை சரியான இடத்தில் தான் பிடித்திருக்கிறீர்கள். உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது! இந்தச் செயல் ஒரிஜினலாக அமைந்துள்ளது. இந்தப் பணி உங்களுக்காகவே ரிஸர்வ் செய்யப்பட்டுள்ளது.”(You have hit Ramakrishna to the right point.. It is indeed wonderful.. The move is quite original. It has been reserved for you, this great work!”)

சின்னச் சின்ன சம்பவங்கள்! அதில் கேட்கப்படும் சிறு சிறு வார்த்தைகள். ஆனால் அவை உணர்த்துபவையோ பெரும் இறை அனுபவத்தை!

SlaniaSweden1656Womanonhorse101087Facit1469

சர்க்கஸ் பார்க்கப் போனார் பரமஹம்ஸர்

ஒரு முறை கல்கத்தாவிற்கு ஒரு சர்க்கஸ் கம்பெனி வந்திருந்தது. பரமஹம்ஸர் அந்த சர்க்கஸைப் பார்க்கச் சென்றார். கூடவே ‘எம்’ உள்ளிட்ட அனைவரும் சென்றனர். எட்டணா டிக்கட்! காலமோ குளிர் காலம். காலரியில் உட்கார்ந்த பரமஹம்ஸர், ‘ஆஹா! இங்கிருந்து பார்க்க எவ்வளவு பிரமாதமாக இருக்கிறது!’ என்று ஆச்சரியப்பட்டுச் சொன்னார்.

அவரால் சந்தோஷத்தை எப்பொழுதுமே மறைக்க முடியாது. அவர் ஒரு முழுமையான குழந்தை!

ரிங்கில் ஒரு குதிரை மிக மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. ஒரு ஆங்கிலேயப் பெண்மணி அவ்வப்பொழுது ரிங்கிற்குள் நுழைந்து ஓடி வரும் குதிரையின் மீது அது ஒரு கணம் ஒரு காலில் நிற்கும் போது மின்னல் போலத் தாவி ஏறுவாள். இதையெல்லாம் பார்த்தார் பரமஹம்ஸர்.

சர்க்கஸ் முடிந்து வெளியே வந்து வண்டியில் ஏறும் போது, “பாரேன்! அந்தக் குதிரையின் மீது ஏறுவதற்கும் அதில் அமர்வதற்கும் அவள் எவ்வளவு பெரிய பயிற்சியைச் செய்திருக்க வேண்டும்! இதே போலத் தான் இந்த உலகமும் சுழல்கிறது. எவர் ஒருவர் சவாரி செய்வதில் நிபுணராக இருக்கிறாரோ அவரால் தான் நன்கு சவாரி செய்ய முடியும். இல்லையேல் கீழே விழ வேண்டியது தான். அதுவே முடிவாகி விடும். இந்த உலகம் அப்படிப்பட்ட பயங்கரமான ஒன்று!

சிறிய சர்க்கஸ் நிகழ்ச்சியை வைத்து உலகைப் பற்றிய மாபெரும் உண்மையைச் சொன்னார் பரமஹம்ஸர்.

பக்தர்களுக்கு அபயமளித்துப் பயிற்சி தந்தவர்

தனது பக்தர்களை உலக வாழ்க்கை நடத்துவதில் நிபுணத்வம் அடையப் பயிற்சியும் பல இரகசியங்களையும் கற்றுக் கொடுத்தார்.

அவர்களுக்கு சங்கடங்கள் நேரும் போது அவர் அவர்களைக் காப்பாற்றினார். கெடுதி பயக்கும் விஷயங்களைப் பற்றித் தொடர்ந்து எச்சரித்து வந்தார்.

ஸ்வாமி விவேகானந்தரை உலகப் போக்கிலிருந்து எதிர் நீச்சல் போட வைத்து பிரம்மாண்டமான செயலுக்குத் தகுதி ஆக்கினார்.

பரமஹம்ஸர் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அவை அனைத்தையும் துல்லியமாக – சர்க்கஸ் பார்க்கப் போய் அங்கு சொன்னது உட்பட அனைத்தையும் – அறிய வழி வகை செய்தவர் ‘எம்.’

அவரது புகழ்பெற்ற டயரிக் குறிப்பு ஒரு தங்கச் சுரங்கமாக இன்றளவும் திகழ்கிறது; நாளைக்கும் திகழும்!

அதிலிருந்து படிப்பினைகள் பலவற்றைக் கற்றால் நமது உலக சவாரியும் நிபுணத்வத்துடன் சரியானபடி நடக்கும். அஞ்சாமல் செல்லலாம்!

************

பாரதி நினைவுகள்: மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்! -2

bharathi_ninaivukal_copy

Article No. 2095

Written by ச. நாகராஜன்
Date : 24 August  2015
Time uploaded in London :– 10-10

ச.நாகராஜன்

  1. பாரதி நினைவுகள்

பாரதி பற்றிய இந்த நூலை எழுதியவர் யதுகிரி அம்மாள். இதன் முதற் பதிப்பு 1954 செப்டம்பர் மாதம் அமுத நிலையம் பிரைவேட் லிமிடட்-ஆல் வெளியிடப்பட்டது. நூலின் அன்றைய விலை 30 காசுகள் மட்டுமே! 87 பக்கங்கள் அடங்கிய இந்த நூலை “பாரதியின் தோழராக விளங்கிய என் பிதா ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீநிவாஸாச்சாரியாரின் திருவடித் தாமரைகளில் இச் சிறு நூலை அன்புக் காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன்” என்று சமர்ப்பணம் செய்துள்ளார் யதுகிரி அம்மாள்.

அறிமுகம் என்ற உரையில் ரா.அ.பத்மநாபன் கூறுவது:-

“வாசகர்கள் முன் உள்ள இந்த “பாரதி நினைவுகள்” நூலை எழுதிய ஶ்ரீமதி யதுகிரி அம்மாள் மண்டயம் ஶ்ரீ ஶ்ரீநிவாஸாச்சாரியாரின் மூத்த புதல்வி. புதுவையில் பாரதியார் இருந்த சமயம் சிறுமியாக இருந்தவர். பாரதியாருடன் பல்லாண்டுகள் நெருங்கிப் பழகி, அவரது அன்புக்குப் பாத்திரமாகும் பேறு பெற்றிருந்தவர். தமது சிறு வயதில் பாரதியாரைத் தாம் அறிந்த வகையில் கவிஞரை நமக்கு விவரிக்கிறார் ஶ்ரீமதி யதுகிரி அம்மாள்”         (ரா.அ.பத்மநாபன், சென்னை, 3—9-54இல் எழுதியது)

“பாரதியாரைப் பற்றி எனக்குத் தெரிந்ததைப் பிறரும் அறியச் செய்யலாம் என்று ஏதோ எழுத முன் வந்தேன். இக்குறிப்புகள் 1938-39-ல் எழுதப்பட்டவை. இன்ரு அச்சேறுகின்றன” என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார் யதுகிரி (28-7-1954இல் எழுதப்பட்டது முன்னுரை)

நூலில் 26 அத்தியாயங்கள் உள்ளன.

பாரதி நினைவுகள் - யதுகிரி

உலையில் போடுவதற்காக வைத்திருந்த அரிசியில் கால் பங்கு கூட இல்லை என்று செல்லம்மா தவிக்கையில், பாரதியார், “வா, செல்லம்மா, இந்தக் குருவிகளைப் பார்! எவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றன” என்று கூறி அரிசியைக் குருவிகளுக்குப் போட்ட சம்பவம் விட்டு விடுதலையாகி என்ற அத்தியாயத்தில் விவரமாகத் தரப்பட்டுள்ளது.

பாம்பாட்டி பாடிய பாட்டில் ஒரு பாடலை எழுதித் தருவதாக பாரதியார் யதுகிரியிடம் கூறி விட்டு மறுநாள் “பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்” பாடலை எழுதிக் கொண்டு வந்து பாடிக் காட்டிய சம்பவம் பாரத தேசமென்று பெயர் சொல்லுவார் என்ற அத்தியாயத்தில் தரப்பட்டுள்ளது.

போட்டிக்கு எழுதப்பட்ட செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற பாடல் எழுந்த வரலாற்றையும் அதை வ.வெ.ஸு. ஐயர் வெகுவாகப் பாராட்டியதையும் செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற அத்தியாயம் சுவையாக விவரிக்கிறது.

காணி நிலம் வேண்டும் என்ற பாடல் எப்படி எழுந்தது? ஜப்பானில் புதிய சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதன் படி அந்த ராஜ்யத்தை ஒரே சமனாகப் பிரித்து எல்லா ஜப்பானியருக்கும் ஆளுக்கு இவ்வளவு என்று பிரித்துக் கொடுத்து விடுவது, இனி பிச்சைக்காரர்களும், சோம்பேறிகளும் தங்கள் தேசத்தில் இருக்கக் கூடாது என்று செய்தார்கள். இதைப் பார்த்த புதுவை சுதேசியார் நம் நாட்டில் ஒரு குடும்பம் பிழைக்க எவ்வளவு நிலம் வேண்டும் என்று ஆராய்ந்தனர்.

அதற்கு விடையே காணி நிலம் வேண்டும் என்ற பாரதியாரின் பாட்டு,

ஏராளமான சம்பவங்கள். உள்ளத்தைத் தொடுபவை சில. உருக்குபவை சில. உணர்ச்சி ஊட்டுபவை பல.

பாரதி ஆர்வலர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம் இது.

****