ஆல்
இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 9-3-2019 அன்று காலை சுற்றுப்புறச்
சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பட்ட உரை
மாசுபடுத்தப்பட்ட காற்றினால் ஏற்படும் அவலம்!
ச.நாகராஜன்
சுத்தமான காற்று ஆரோக்கிய வாழ்வைத் தரும் என்பதும் மாசு படுத்தப்பட்ட
காற்று ஆரோக்கிய சீர்கேட்டை உருவாக்கும் என்பதும் அறிவியல் போதிக்கும் உண்மைகள்.
சுத்தமற்று இருக்கும் காற்றை நாம் சுவாசிக்கும் போது மூளை தன்
இயல்பான செயல் திறனை இழக்கிறது; தொழிலாளர்கள்
உற்பத்தி செய்யும் செயல்திறனை இழக்கின்றனர்; மாணவர்களால் இயல்பாக படிக்க முடிவதில்லை
என்பன போன்றவற்றை ஏற்கனவே அறிவியல் ஆய்வுகள் தெளிவு படுத்தியுள்ளன.
இப்போது மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி
(Masschusetts Institute of Technology – MIT) தனது ஆய்வு ஒன்றின் மூலம் மாசு படுத்தப்பட்ட
காற்று மனிதனின் சந்தோஷத்தையும் குறைக்கிறது என்பதை அறிவித்துள்ளது.
இதை இந்த ஆய்வைச் செய்த
இணைப் பேராசிரியரான சிகி ஜெங் (Siqi
Zheng), “சுற்றுப்புறச் சூழல் மாசுபடுத்தப்பட்டு பெருமளவில் காற்று அசுத்தமடைந்த நாட்களில்
அதை சுவாசிக்கும் மக்கள் பெருமளவு எரிச்சலுடன் இருப்பதோடு அபாயகரமான முடிவுகளைப் பல்வேறு
விஷயங்களிலும் எடுக்கின்றனர்” என்று கூறுகிறார். பின்னால் தாங்கள் எடுத்த முடிவுகளுக்காக
அவர்கள் வருத்தமும் அடைகின்றனர்.
இந்த ஆய்வானது 144 சீன நகர்களில் எடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர்
இதில் பங்கு கொண்டனர்.
காற்றின் தரத்தை அளக்க உதவும் அளவீடுகளில் நுண்மத் துகள்கள்
அதிகமாக இருக்கும் நாட்களில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.
இதில் பங்கு கொண்டோர் சமூக ஊடகங்களின் மூலமாகத் தங்களின் கருத்துக்களைப்
பதிவு செய்தனர்.
இதில் பெறப்பட்ட ஏராளமான தரவு எனப்படும் Dataக்களின் மூலமாக காற்று
மாசுக்கும் மனிதனின் மகிழ்ச்சியற்ற மனநிலைக்கும் நேரடி தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
World Health Organization எனப்படும் உலக சுகாதார நிறுவனம் ஆறு மாசுகள் மனிதர்களின் ஆரோக்கியத்தைச்
சீர்கேடு அடையச் செய்வதாக இனம் காட்டியுள்ளது. நுண்மத் துகள்கள், தரை மட்ட ஓஜோன், கார்பன்
மானாக்ஸைடு, சல்பர் ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்சைடு, காரீயம்
(Particle
pollution, ground-level ozone, carbon monoxide, sulfur oxides, nitrogen oxides,
and lead) இவற்றினால் சுவாசக் கோளாறுகள்,
இதயக் கோளாறுகள், நரம்பு மண்டல சீர்கேடுகள், கண்களில் எரிச்சல், தோல் வியாதிகள் உள்ளிட்ட
பல வியாதிகளும் உருவாகின்றன. ஆஸ்த்மா, நுரையீரல்
கான்ஸர், அல்ஜெமிர் மற்றும் பார்கின்ஸன் வியாதி,
மனக் கோளாறுகள் உள்ளிட்ட அனைத்திற்கும் மாசுபடுத்தப்பட்ட காற்றே காரணம் என்பது
அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டு விட்டதால் நாம் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்
கொள்வது நமது இன்றியமையாத கடமையாக இன்று ஆகி விட்டது. இதை உணர்வோம்; உயர்வோம்!
உலகில் அண்டார்டிகாவின் மேற்குப் பகுதியில் உள்ள மிகப் பெரிய
பனிப்பாறையான த்வைட்ஸ் க்ளேசியர் (Thawaites Glacier)
விஞ்ஞானிகளால் கூர்ந்து கவனிக்கப்பட்டு வரும் பனிப்பாறையாகும்.
அதில் மிகப் பெரிய ஓட்டை ஒன்று விழுந்திருப்பதை அண்மையில் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
இந்த ஓட்டை சுமார் 14 சதுர மைல் பரப்பளவாக இருப்பதோடு ஆயிரம் அடி உயரத்தைக் கொண்டிருக்கிறது.
இதை நாஸா ஜெட் ப்ரொபல்ஷன் லேபரட்டரி தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அண்டார்டிகாவின் பெரும் பனிப்பாறை 1400 கோடி டன் ஐஸ்கட்டியை
உள்ளடக்கியது. ஆனால் கடந்த 3 வருடங்களில் இது உருக ஆரம்பித்து விட்டது.
இப்படி ஐஸ் உருகுவதால் கடல் நீரின் மட்டம் உயரும் அபாயம் ஏற்படும்.
கடல் நீரின் மட்டம் உயர்ந்து விட்டால் கடலோரப் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும்.
அத்தோடு மிகப் பெரிய எண்ணிக்கையில் மனிதர்கள் இடம் பெயர வேண்டும்
அல்லது அவர்கள் மடிவர்.
த்வைட்ஸ் க்ளேசியர் ஏற்கனவே உலகில் கடல் நீர் மட்டம் உயர்வதற்கு
சிறிதளவு காரணமாக இருந்தது.
அண்டார்டிகாவின் கிழக்குப் பகுதியில் உள்ள டாட்டன் க்ளேசியரும்
(Totten Glacier)
இப்போது உருகும் நிலைக்கு வந்து விட்டது.
இதனால் கடல் நீர் வெதுவெதுப்பான வெப்ப நீராக மாறுகிறது. மொத்தமாக
பூமி வெப்பமயமாதலே இதற்கான காரணம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதற்கான அடிப்படையான
காரணமாக எது இருக்கிறது என ஆராய்ந்து பார்ப்போமானால் மனிதன் உபயோகிக்கும் வாகனங்கள்
வெளிப்படுத்தும் புகை தான் என்பது தெளிவாகிறது.
ஆகவே இந்த அபாயத்தை முழுவதுமாக மனித குலம் உணர வேண்டும். வாகனப்
புகையைக் கட்டுப்படுத்த வேண்டும். அதற்காக விசேஷ வடிவமைப்புள்ள எஞ்ஜின்களைப் பயன்படுத்தும்
கார்களை மட்டுமே வாங்க வேண்டும். அத்துடன்
சோலார் எனப்படும் சூரிய சக்தியால் இயங்கும் வாகனங்களைப் பெருமளவில் பயன்படுத்த
முன்வர வேண்டும்.
அண்டார்டிகாவின் உருகும் பனிப்பாறைகள் நமக்குத் தரும் செய்தியை
நன்கு புரிந்து கொண்டோமானால் மனித குலம் வாழும்; தழைக்கும்!
அறிவியல் வளர வளர அதன் அடிப்படையில் ஒவ்வொன்றிற்குமான தர நிர்ணயமும்
துல்லியமாக நிர்ணயிக்கப்படுகிறது.
ஆக இந்த வகையில் அன்றாடம் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத நீரின்
தரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை ஒவ்வொருவரும் அறிவது அவசியம்.
சுத்தமற்ற நீரால் ஏராளமான வியாதிகள் பரவுகின்றன என்பதை அனைவரும்
அறிவோம். காலரா உள்ளிட்ட தொற்று வியாதிகளையும் இதர வியாதிகளையும் பரவாமல் செய்ய நீரின்
தன்மையை உயரிய அளவில் தரமுள்ளதாக மேம்படுத்துவது இன்றியமையாததாக அமைகிறது.
நீரை மூன்று விதமாகப் பிரிக்கலாம். க்ளாஸ் ஏ (Class A), க்ளாஸ் சி (Class C) க்ளாஸ் ஏயும் இல்லை, சியும்
இல்லை என்ற ரகம் (Neither in Class A nor Class C) ஆக இப்படி மூன்று விதமாக நீரின்
தரத்தை நிர்ணயிக்க முடிகிறது.
க்ளாஸ்
ஏ என்ற நீரில் ஒரு லிட்டர் நீரில் 6 மில்லி கிராமுக்கும் அதிகமாக ஆக்ஸிஜன் கரைந்திருப்பதைக் குறிக்கும்
(Dissolved
Oxygen more then 6 mg/l). தொற்றுநீக்கம் (Disinfection) செய்யப்பட்ட பின் இப்படிப்பட்ட நீர் பருகுவதற்கு
உகந்ததாக அமைகிறது.
அடுத்து
க்ளாஸ் சி என்பதில் நீரை முதலில் தொற்று நீக்கம் செய்து பின்னர் நன்னீராக்கும் முறை
(water treatment process) கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் ஒரு லிட்டர் நீரில் 4 மில்லி
கிராமுக்கும் அதிகமாக
ஆக்ஸிஜன் கரைந்திருப்பதைக்
குறிக்கும் (Dissolved
Oxygen more then 4 mg/l).
இந்த
இரண்டுமற்ற நிலையில் உள்ள நீரை மிகவும் உயரிய நிலை நன்னீராக்கும் வழி முறைப்படி நன்னீராக்கிய
பின்னரே பயன்படுத்தலாம்.
குளிக்கும்
நீருக்கும் கூட இப்படிப்பட்ட தர நிர்ணயம் இருப்பதால் உரிய முறையில் நீர் நன்னீராக்கப்பட்டிருக்கிறதா
என்பதை அறிந்து அதன் பின்னரே பயன்படுத்தல் வேண்டும்.
கழிவு
நீரை சுத்த நீருடன் சேர்க்காமல் இருக்கும் படி செய்வது கிராமப்புறங்களில் வாழும் ஒவ்வொரு வீட்டாரின் கடமையாகும்.
இன்றைய
நவநாகரீக வாழ்க்கை முறையில் பெரு நகரங்களில் கேன்களில் அடைக்கப்பட்டு வரும் நீர் சுகாதார
முறைப்படி நன்னீராக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொண்ட பின்னரே அவற்றைப் பயன்படுத்தல்
வேண்டும்.
சீரைத் தேடின் நீரைத் தேடு என்பது தமிழ்ப் பழமொழி. அந்த நீரும்
நன்னீராக இருப்பது அவசியம் என்பது இன்றைய காலத்தின் கட்டாயம்.
ஆல்
இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 5-3-2019 அன்று காலை சுற்றுப்புறச்
சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பட்ட உரை
சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டை அடைய
எளிய வழிகள்!
ச.நாகராஜன்
சுற்றுப்புறச் சூழல்
பற்றிய விழிப்புணர்வு நாளுக்கு நாள் பெரு நகரங்களில் அதிகரித்து வருவது உற்சாகமூட்டும்
ஒரு விஷயமாக அமைகிறது.
அவ்வப்பொழுது நடக்கும் விருந்துகளில் பங்கு கொள்வோர் தமக்கு
வேண்டிய ஸ்பூன் மற்றும் டம்ளர்களைத் தாங்களே கொண்டு வர ஆரம்பித்திருப்பது ஒரு நல்ல
அறிகுறியாகும்.
பேப்பரினால் ஆன கப்புகள், பிளாஸ்டிக் ஸ்பூன்கள், தட்டுகள் ஆகியவை
இதன் மூலம் அறவே தவிர்க்கப்படுகின்றன. இதனால் சுற்றுப்புறச் சூழலில் இதுவரை ஏற்பட்டு
வந்த மாசு குறைகிறது.தனி நபர்கள் நடத்தும் விருந்துகள், சமூக விருந்துகள், அரசு நடத்தும்
விருந்துகள் ஆகியவற்றில் இப்படி அவரவரே தங்களுக்குத் தேவையான தட்டு முதல் ஸ்பூன் வரை
கொண்டு வருவதைப் பார்க்கும் ஒவ்வொருவரும் இதைப் பின்பற்ற முன்வர வேண்டும்.
ஜீரோ வேஸ்ட் – அதாவது கழிவே இல்லை என்ற நிலையை உருவாக்க ஒவ்வொருவரும்
மனதளவில் தயாரானால் கழிவற்ற நகரை உருவாக்க முடியும்.
குறிப்பாக அதிக ஆபத்தை விளைவிக்கும் மின்னணுப் பொருள்கள் பற்றிய
கழிவை பெரு நகரங்களில் வாழ்வோர் நன்கு சிந்தித்துச் செயல்பட வேண்டும்.
பயனற்ற மொபைல் போனின் பாகங்கள், மின்னணுப் பொருள்களின் சிதைந்த
பகுதிகள், கம்ப்யூட்டரின் பகுதிகள் ஆகியவற்றை பொதுவான குப்பைத் தொட்டிகளில் போடாமல்
இதற்கென தனியாக ஒரு தொட்டியை அமைத்து அதில் போடுதல் இன்றியமையாதது. ஈ வேஸ்ட் எனப்படும்
மின்னணு கழிவுகளை அதற்கென உள்ள தொட்டிகளில் போடுவதால் 90 சதவிகிதம் அபாயம் தவிர்க்கப்படுவதை
பெரு நகரப் புள்ளி விவரங்கள் விளக்குகின்றன.
பெருநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்து வருவதால்
அங்கெல்லாம் இப்படிப்பட்ட கழிவுத் தொட்டிகள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டு வருவதோடு மேல்
மாடியில் சூரிய சக்தியை உபயோகப்படுத்த சோலார் பேனல்கள் அமைக்கப்படுகின்றன; இதுவும்
வரவேற்கத் தக்க ஒரு அம்சமே.
இந்தப் புதிய நடைமுறைகள் பரவலாக அனைவராலும் பின்பற்றப்பட்டால்
நகரத்தின் சுற்றுப்புறச் சூழல் பெரிய மேம்பாட்டை அடையும் என்பதில் ஐயமில்லை!
2010ஆம் ஆண்டு
வெளியான இன்செப்ஷன் (Inception ) என்ற ஹாலிவுட் திரைப்படம்
திருட்டில் நிபுணனான ஒரு திருடன் எப்படி அடுத்தவரின் ஆழ்மனதில் நுழைந்து பல தகவல்களைத்
திருடி பயன்படுத்திக் கொள்கிறான் என்பதைப் பற்றியது. பெரும் வெற்றியை அடைந்த இந்தப்
படம் பிபிசி ரேடியோவால் 2010ஆம் ஆண்டின் தலை சிறந்த படம் என்று வர்ணிக்கப்பட்டது.
273 விமரிசகர்கள் இதை 2010ஆம் ஆண்டின் ‘டாப் டென்’ படங்களுள் ஒன்று என்று விமரிசித்துத்
தேர்ந்தெடுத்தனர். லியனார்டோ டிகாப்ரியோ இதில் கதாநாயகனாக நடித்தார். இதில் வரும் கனவு
பற்றிய தகவல்கள் உலகில் அனைவர் மனதிலும் ஒரு ஆர்வத்தைத் தூண்டியது. குறிப்பாக ல்யூசிட் ட்ரீமிங்
பற்றி அறிய அனைவரும் ஆர்வம் கொண்டனர்.
ல்யூசிட் ட்ரீமிங் என்றால் தெளிவாக விழிப்பு நிலையில் இருந்து கொண்டே கனவு காணுதல் என்று பொருள். அதாவது கனவு காணும் போது அதில் நுழைந்து தாங்கள் கனவு தான் காண்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டே கனவு காண்பது தான் ல்யூசிட் ட்ரீமிங் – இதை விழிப்பு நிலைக் கனவு என சொல்லலாம்
உலகின்
தலை சிறந்த விஞ்ஞானிகள் ஐம்பது பேர் சமீபத்தில் 2019 ஜனவரி மாதத்தில் அமெரிக்காவில்
உள்ள மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் குழுமினர்.
இந்த
ஐம்பது விஞ்ஞானிகளும் கனவு பற்றிய ஆய்வாளர்கள்.
இரண்டு நாட்கள் நீடித்த ட்ரீம் எஞ்ஜினியரிங்
ஒர்க்ஷாப் ஒன்றை இவர்கள்அங்கு நடத்தினர். உலகின் முதலாவது கனவியல் பட்டறை இது தான்!
இவர்கள் நடத்திய இடம் எம் ஐ டியில் ஒன்றரை ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்டு தொடர்ந்து
சோதனைகள் நடைபெற்று வரும் இடமான ட்ரீம் லேப்-(Dream Lab)இல் தான்!
‘ல்யூசிட்
ட்ரீம் எனப்படும் தெளிவான விழிப்பு நிலைக் கனவு மிகவும் சக்தி வாய்ந்தது, ஒரு போதையைப்
போல உள்ளது அது’ என்று கூறும்
மாண்ட்ரீல் பல்கலைக் கழக சைக்கியாட்ரி துறை பேராசிரியர் டோர் நியல்ஸன் (Tore
Nielsen), “அதில்
நீங்கள் பறக்கலாம், பாடலாம்,ஏன் செக்ஸ் உறவே கொள்ளலாம்” என்கிறார்.
ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் ஸ்டான்போர்ட் விஞ்ஞானியான
ஸ்டீபன் லா பெர்ஜ் (Stephen LaBerge) ல்யூசிட் ட்ரீம்
என்று ஒன்று நிஜமாகவே இருக்கிறது என்பதை கண்களின் அசைவை வைத்து
அறிவியல் பூர்வமாக நிரூபித்தார்.
இப்போது விஞ்ஞானிகள் அனைவரும் ஒருமித்த கருத்தாக, “ உங்களால்
மட்டும் ல்யூசிட் ட்ரீம் செய்ய முடியுமெனில் நீங்கள் ஒரு தங்கச் சுரங்கத்தை
உங்களிடம் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்” என்கின்றனர்.
அமெரிக்கன்
அகாடமி ஆஃப் ஸ்லீப் மெடிசின் இந்த வகை விழிப்புநிலைக் கனவை அங்கீகரிக்கப்பட்ட ஒரு மருத்துவ
சிகிச்சையாகவே அறிவித்து விட்டது.
உலகில் ஒரு சதவிகிதம் பேர்களே இப்படிக் கனவு காணும் அதிர்ஷ்டசாலிகள் என்பதை விஞ்ஞானிகள் தெரிவிப்பதோடு பல்வேறு தியான முறைகளும் கூட இந்த அரிய நிலையை அடைய உதவுவதில்லை என்கின்றனர்!
“தூக்கம்
என்பதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் சுவையான பகுதி கனவு காணுதல்
தான்” என்கிறார் ட்ரீம்
லேபை நிறுவியவர்களுள் ஒருவரான ஆடம் ஹோரோவிட்ச் என்பவர்.
எல்லோரிடமும் ல்யூசிட் ட்ரீம் நிலையை உருவாக்க முடியுமா என்றால்
அதற்கான மாஜிக் மாத்திரை இன்னும் ரெடியாகவில்லை என்பது தான் விஞ்ஞானிகளின் பதில்!
2014ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த தூக்கம் பற்றிய ஆராய்ச்சி
நிபுணரான ஊர்சுலா வாஸ் மற்றும் ஆலன் ஹாப்ஸன் ஆகியோர் தூங்குவோரிடம் இந்த அரிய நிலையை
தாங்கள் வெற்றிகரமாக 77 சதவிகிதம் பேரிடம் கொண்டு வந்தோம் என்கின்றனர். இதை மண்டை ஓட்டின்
முன் பகுதியை இலேசான மின்சக்தியைச் செலுத்தித் தூண்டி விடுவதன் மூலம் அடைந்ததாகவும்
அவர்கள் குறிப்பிடுகின்றனர். மண்டை ஓடு கெட்டியாக இருக்கும் ஒன்று என்பதால் இந்த மின்சக்தி
மூளையைக் கூட அடைந்திருக்காது என்பது அவர்களது கருத்து.
இதைக் காசாக்க நினைத்த பலர் இண்டர்நெட்டில் தங்களிடம் இதற்கான
சாதனம் இருப்பதாகக் கூறி போலி சாதனங்களை இப்போது விற்றுக் கொண்டிருக்கின்றனர்.
இந்த ஆராய்ச்சி ஒர்க்ஷாப்பில் இப்படி செயற்கை முறையில் கனவுகளைத்
தூண்ட முடியாது என்பதை ஆய்வுகள் நிரூபிப்பதாக டோர் நியல்ஸன் கூறிய போது அனைவருக்கும்
சற்று ஏமாற்றம் ஏற்பட்டது; என்றாலும் அது உண்மை தான்!
இந்த இரு நாள் பட்டறையில் பங்கு கொண்டவர்களுள் ஒருவரான விஞ்ஞானி
கரென் கொன்கோலி என்பவர் யார் வேண்டுமானாலும் பயிற்சியின் மூலமாக இந்த ல்யூசிட் கனவு
நிலையை அடையலாம் என்கிறார்.
இதனால் ஏற்படும் பயன்கள் மகத்தானவை.
முதலாவதாக ஒரு கம்ப்யூட்டரில் கோடிக்கணக்கில் டாடா எனப்படும்
தரவுகள் இருந்தாலும் அதை அணுக ஒரு பாஸ்வோர்ட் தேவை . அதே போல ஆழ்மனதில் கோடிக்கணக்கான
விஷயங்களும் அபரிமித ஆற்றலும் உள்ளன. அதை அணுகும் பாஸ்வோர்டாக அமைகிறது இந்த ல்யூசிட்
ட்ரீம்!
இரண்டாவதாக விழிப்பு நிலை வாழ்க்கையில் ஏராளமான விஷயங்களைக்
குறித்து பயப்படுகிறோம். உதாரணமாக விமானத்தில் பறக்க பயம், கூட்டத்தில் பேசுவதற்கு
பயம், உயரமான கட்டிடத்தில் ஏற பயம் என்று பல பயங்கள். இந்த பயங்களை சுலபமாக அகற்ற முடியும்
விழிப்புநிலைக் கனவினால்!
மூன்றாவதாக பலருக்கும் அன்றாடம் கெட்ட கனவுகள் தோன்றுவது இயல்பு.
அவற்றைத் தடுக்க இந்த விழிப்புநிலைக் கனவு உதவும். மனச் சோர்வு, ஏமாற்றம் போன்றவற்றையும்
இது அகற்றும்.
நான்காவதாக பறப்பதிலிருந்து செக்ஸ் உறவு வரை மாயாஜால உலகில்
அனைத்தையும் நீங்கள் அனுபவிக்க இந்தக் கனவு நிலை உதவும்.
ஐந்தாவதாக கனவு நிலையில் ஒரு கட்டுப்பாட்டை உங்களால் கொண்டு
வர முடியும் போது நிஜ வாழ்க்கையிலும் அதே போல ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டு வர முடியும்;
வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.வெற்றியும் பெற முடியும்.
ஆறாவதாக உங்கள் பிரச்சினைகளுக்கு அபாரமான தீர்வுகளைக் காண முடியும்.
மேரி ஷெல்லி பிரபலமான நாவலான ஃப்ரான்கெஸ்டீனை தனது கனவில் கண்டு தான் எழுதினார். பிரபல
கோல்ஃப் விளையாட்டு வீரரான ஜாக் நிக்கலஸ் (Jack
Nicklaus) கனவில் தனது கோல்ஃப் விளையாட்டு சாதனத்தைத்
தவறாகப் பிடிப்பதைக் கண்டு உணர்ந்து நிஜ விளையாட்டில் சரியாக ஆட ஆரம்பித்தார்; பெரும்
வெற்றியைப் பெற்றார்.
இதே போல இப்படிக் கனவின் மூலம் ஏராளமான கண்டுபிடிப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆகவே ல்யூசிட் ட்ரீம் எனப்படும் விழிப்புநிலைக் கனவைக் காண பயிற்சி
செய்து வெற்றி பெற்றால் ஒரு தங்கச் சுரங்கத்தைப் பெறலாம்; அதனால் வெற்றியின் உச்சிக்கு
ஏறலாம்!
இந்த இரு நாள் கனவுப் பட்டறை உலக மக்களுக்குத் தரும் செய்தி இது தான்!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
நான்ஸி க்ரேஸ் ரோமன் (Nancy Grace Roman) என்னும் பெண்மணி தான் இன்று வானில் பறக்கும் ஹப்பிள் டெலஸ்கோப்
பறக்கக் காரணமானவர். ஆகவே அவரை ஹ்ப்பிள் டெலஸ்கோப்பின் தாய் என்று செல்லமாக அழைக்கின்றனர். சமீபத்தில் 2018, டிசம்பர் 26ஆம் தேதியன்று தனது
93ஆம் வயதில் அவர் மரணமடைந்தார். 1925இல் பிறந்த நான்ஸிக்கு வானியல் என்றால் உயிர்.
அந்தக் காலத்திலேயே மற்றவர்கள் லத்தீன் மொழியைப் படிக்கத் தேர்ந்தெடுத்த போது அவர்
கணிதத்தை விருப்பப் பாடமாகத் தெரிவு செய்தார். பள்ளி டீச்சர் உட்பட அனைவரும் சிரித்தனர்.
எந்தப் பெண்ணாவது கணிதத்தைப் படிக்க விரும்பலாமா? ஆனால் அதில் அவர் தேர்ந்தார்.
11ஆம் வயதிலேயே ஒரு
வானியல் க்ளப்பை ஆரம்பித்தார். நாஸா அவரது ஆர்வத்தை உணர்ந்து அவரைப் பணியில் அமர்த்தியது.
ராக்கெட், சாடலைட்டுகள் ஆகியவற்றை விண்ணில் பறக்க விட அவர் பெரிதும் காரணமாக அமைந்தார்.
கலிலியோ காலத்திலிருந்தே டெலஸ்கோப்புகள் பூமியில் அமைக்கப்பட்ட போதிலும் கூட விண்ணில்
தொலைதூரத்தில் உள்ளவை மிகவும் மங்கலாகவே தெரிந்தன. ஆகவே விண்ணில் ஒரு டெலஸ்கோப்பை அனுப்பி
அங்கே அதை நிறுவினால் என்ன என்று அவர் யோசித்தார்.
ஆனால் அதற்காக ஆகும் செலவோ மிகவும் அதிகம். அவர் பட்ஜெட் கமிட்டிக்கு
தனது எண்ணத்தை வலியுறுத்தும் வகையில் ஆதரவு தேடலானார். 1979இல் பணி ஓய்வு பெற்ற போதும்
கூட, உடனேயே ஆலோசகராக மீண்டும் நாஸாவிற்கு வந்த அவர், 1990ஆம் ஆண்டில் விண்ணில் ஹப்பிள்
டெலஸ்கோப்பை ஏவித் தன் கனவை நனவாக்கினார்.
உத்வேகம் ஊட்டும் பெண்மணியான நான்ஸி பெண் குழந்தைகளை அறிவியலில் தேர்ச்சி பெறத்
தொடர்ந்து ஊக்கி வந்தார்.
பிரபல விளையாட்டுப் பொம்மை நிறுவனமான லெகோ அவரது நினைவைப் போற்றும்
வகையில் நாஸா பெண்மணிகள் என்ற வரிசையில் அவரது உருவத்தை வெளியிட்டது – ஹப்பிள் டெலஸ்கோப்புடன்!
சரியான பெண்மணிக்கு சரியான நினைவுச் சின்னம், இல்லையா?!
ஆல்
இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 4-3-2019 அன்று காலை சுற்றுப்புறச்
சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பட்ட உரை
காற்றில் உள்ள துகள்மப் பொருள்களினால் ஏற்படும் அபாயங்கள்!
ச.நாகராஜன்
காற்றில் உள்ள பர்டிகுலேட் மேட்டர் (Particulate Matter) எனப்படும்
துகள்மப் பொருள்கள் மிக அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துபவை என்பதால் அதைப் பற்றிய விழிப்புணர்வு
ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது.
பி எம் 2.5 – PM 2.5 – என்பது துகள்மப் பொருள்கள் குறுக்களவில் 2.5 மைக்ரானுக்கும்
குறைவாக இருப்பதைக் குறிக்கும்.
இவை மிகவும் நுண்ணிய சிறிய பொருள்களாக இருப்பதால் வேகமாகவும்
எளிதாகவும் பரவும். அத்துடன் சுலபமாக மனிதர்களின் நுரையீரல்களைச் சென்றடையும். இவை
சுலபமாகக் கண்ணுக்குப் புலனாகாமல் இருப்பதால் இவற்றைத் தவிர்ப்பதும் சற்று கஷ்டமான
ஒன்றாக இருக்கிறது.
ஒவ்வொரு தேசமும் தனக்கென ஒரு ஏ க்யு ஐ AQI – எனப்படும் ஏர் க்வாலிடி
இண்டெக்ஸை – அதாவது காற்றின் தர அளவீட்டைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக அமெரிக்காவில்
காற்றின் தர அளவீடு ஒன்றிலிருந்து ஐநூறு வரை குறிக்கப்படுகிறது. ஒன்று முதல் ஐம்பது
வரை உள்ள அளவீடு நல்ல தரமான காற்றைக் குறிக்கும்.
இது போன்ற அளவீடுகள் ஒவ்வொரு நாட்டிலும் காற்றின் தரத்தை நிர்ணயிக்க
உதவுகிறது.
இருந்த போதும் சுலபமாக காற்றின் தரத்தை நிர்ணயிக்க பர்டிகுலேட்
எனப்படும் துகள்மப் பொருள்கள் அதிகம் உதவுகிறது.
கரியை எரியவிடுவதால் ஏற்படும் புகை, தூசி, பனி, இயற்கையாக ஏற்படும்
காட்டுத் தீ போன்றவற்றால் ஏற்படும் நுண்ணிய துகள்கள் காற்றில் கலப்பதால் காற்று அசுத்தமடைகிறது.
என்றாலும் கூட மனிதனால் ஏற்படும் காற்று அசுத்தமே பொதுவாக அதிகமாக
இருக்கிறது.
ஃபாஸில் ப்யூயல் எனப்படும் படிம எரி பொருள்கள் அளவிற்கு அதிகமாக
கார்பன் டை ஆக்ஸைடை வளி மண்டலத்தில் கலக்க வைக்கிறது. இவை அன்றாடம் ஆயிரக்கணக்கில் செல்லும் வாகனங்கள்
வெளிப்படுத்தும் புகையிலிருந்து வெளிப்படுகிறது.
ஆகவே ஒவ்வொருவரும் முடிந்த மட்டும் பெட்ரோல், டீஸல் போன்ற எரிபொருள்களைக்
கொண்டுள்ள வாகனப் பயன்பாட்டைக் குறைப்பதால் காற்று அசுத்தமடைவதைத் தடுக்க முடியும்.
காற்றின் தரத்தை உயர்த்த முடியும். நுண்ணிய துகள்மப் பொருள்களையும் தவிர்க்க முடியும்.
இதனால் தேசீய ஆரோக்கியம் பெரிதளவும் மேம்படும் என்பதில் ஐயமில்லை.
முனைந்து செயலாற்றினால் வெற்றியைப் பெற முடியும்!
சமீபத்தில்
சிகாகோ பல்கலைக் கழகத்தில் எனர்ஜி பாலிஸி இன்ஸ்டிடியூட்டில் (Energy Policy
Institute) மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று சுத்தமற்ற காற்றைச் சுவாசிப்பதால்
ஒரு மனிதன் தனது ஆயுளில் பத்து ஆண்டுகளை இழக்கிறான் என்பதைத் தெரிவிக்கிறது.
சுற்றுப்புறச் சூழல் மாசினால் ஏற்படும் இந்த அபாயம் சீனா மற்றும்
இந்தியா போன்ற அதிக ஜனத்தொகை உள்ள நாடுகளில் அதிகமாக இருக்கிறது.
இந்தக் காற்று மாசுபாட்டினால் உலகில் ஏற்படும் ஆயுள் இழப்பில்
73 விழுக்காடு சீனாவிலும் இந்தியாவிலும் ஏற்படுவதாக சிகாகோ அறிக்கை தெரிவிக்கிறது.
உலகில் உள்ள அனைத்து நிபுணர்களும் புகைபிடிப்பதனால் ஏற்படும் தீங்கை விட சுற்றுப்புறச் சூழல் மாசானது இன்னும் பெரிய ஆட்கொல்லி
என ஏகமனதாகக் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சூழலில் ஏற்படும் மாசானது ஒரு சிறிய மணல் துகளை விட இன்னும்
சிறியதாக இருப்பதால் இயற்கையாக உடலில் உள்ள தற்காப்பு அமைப்பையும் தாண்டி நுரையீரலுக்குள்
நுழைவதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. நுரையீரலிலிருந்து சிறு துகள்கள் இரத்த ஓட்டத்தில்
கலப்பது எளிதாகிறது.
இதன் விளைவாக நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதிகள், கான்ஸர், மாரடைப்பு,
ஸ்ட்ரோக் ஆகியவை ஏற்பட்டு அல்லலுக்கு ஆளாக நேரிடுகிறது.
இத்துடன் மட்டுமன்றி மூளைச் செயல்பாட்டுத் திறனும் குறைவதாக
இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
தேவையற்ற குப்பைகளை சாலையின் நடுவில் போட்டு எரிப்பதை ஆங்காங்கே
கண்கூடாகப் பார்க்கிறோம். மனதை வேதனைப்படுத்தும் ஒரு செயல் இது. இதனால் வளிமண்டலம்
அசுத்தமாகி காற்றும் அசுத்தமாகி ஏராளமானோரின் நுரையீரல்களைப் பாதிக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள்
உணர வேண்டும்.
இங்கிலாந்தின் மன்னரான முதலாம் எட்வர்ட் தனது ராஜ்யத்தில் பொது
இடங்களில் கரியை எரியவிடுவோருக்கு மரணதண்டனை விதிக்கப்படும் என அறிவித்தார். சுற்றுப்புறச்
சூழலை மாசுபடுத்துவோருக்கு சமீப காலத்தில் கடுமையான தண்டனையை அறிவித்த முதல் அரசர்
இவர் தான்! அரசு இயற்றும் தண்டனைகளைச் சுயக்கட்டுப்பாட்டின் மூலமாகத் தவிர்ப்போம்.
சுத்தமான காற்றைச்
சுவாசிப்போம்; அதற்காக காற்றைச் சுத்தமாக வைத்துக் கொள்ள அனைத்து வழிமுறைகளையும் கையாளுவோம்.
தனிமனிதனின் ஒழுக்கமே நாட்டின் ஒழுக்கமாக மிளிரும்.
ஆகவே சுற்றுப்புறச் சூழலை தனி நபர் என்றை முறையில் காப்போம்;
நாட்டையும் உலகத்தையும் காப்போம்!
ஆல்
இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 2-3-2019 அன்று காலை சுற்றுப்புறச்
சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பட்ட உரை
உடல் நலத்தைப் பாதிக்க வைக்கும் பிளாஸ்டிக் பொருள்கள்!
ச.நாகராஜன்
பிளாஸ்டிக் பொருள்கள் அபாயம் என்பதை உணர்ந்தால் மட்டும் போதாது.
அது ஏன் அபாயம் என்பதையும் நன்கு புரிந்து கொண்டோமானால் அதைத் தவிர்ப்பது சுலபமாகி
விடும்.
பிளாஸ்டிக்கில் உள்ள இரசாயனப் பொருள்கள் மனித உடலில் உள்ள தைராய்ட்
ஹார்மோன்களைப் பாதிக்கின்றன; இது வயதானவர்களையும் சரி, குழந்தைகளையும் சரி பாதிக்கவே
செய்கிறது.
பிளாஸ்டிக்கில் உள்ள நச்சுப் பொருளானது தைராய்டை அடைப்பதால்
தைராய்டின் சமச்சீர்த்தன்மை பாதிப்புக்குள்ளாகிறது. அத்தோடு எஸ்ட்ரோஜென், டெஸ்டோஸ்டெரோன் ஆகியவையும் பாதிப்புக்குள்ளாகின்றன.
ஆகவே அதிக பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவோரின் உடலில் அதிக பாதிப்பு
ஏற்படுகிறது. இயற்கையாக ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டிய இரத்தத்தில் நச்சுப்
பொருள்களான பி.பி.ஏ மற்றும் தாலேட் (BPA, & Phthalates) ஆகியவை சேர்கின்றன.
மைக்ரோவேவ் சாதனங்களில் பிளாஸ்டிக் பொருள்களை வைக்கலாம் என்பது
பொதுவாகக் கூறப்படுகிறது. அவை பத்திரமானவை என்றும் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில்
பார்க்கப்போனால் எந்த பிளாஸ்டிக் பொருளும் பாதுகாப்பு இல்லாதது; பத்திரமாகப் பயன்படுத்துக்
கூடியது அல்ல. இதை நன்கு புரிந்து கொள்ளல் இன்றைய வாழ்க்கை முறையில் அவசியம்.
இதை ஆய்வுகள் உறுதிப் படுத்துகின்றன.
கர்ப்பிணிப்
பெண்கள் பிளாஸ்டிக் பொருள்களில் பாக் செய்யப்பட்ட ப்ரெட், வறுத்த கொரிக்கும் பண்டங்கள்,
பிளாஸ்டிக் பாட்டில்களில் வைக்கப்படும் நீர், ஜுஸ், ஆகியவற்றைச் சாப்பிடுகின்றனர்.
அத்துடன் மட்டுமல்லாது இளம் குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் பாட்டில்களில் திரவ உணவைத் தருகின்றனர்.
பாட்டில்கள்
சுத்தம் செய்யப்படுகின்றன என்று சொல்லப்பட்ட போதிலும் கூட, வெந்நீரால் அந்த பிளாஸ்டிக்
பாட்டில்கள் ஒவ்வொரு முறை சுத்தம் செய்யப்படும் போதும் பிளாஸ்டிக் பொருள்கள் சூட்டினால்
இளகி குழந்தைக்குத் தரப்படும் உணவுடன் சேர்கின்றன.
ஆகவே
இதைக் கருத்தில் கொண்டு பிளாஸ்டிக்கை கர்ப்பிணிகள் தவிர்ப்பதோடு தங்களுக்குப் பிறக்கும்
இளம் குழந்தைகளுக்கும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தலைத் தவிர்த்தல்
வேண்டும். இதற்குப் பதிலாக ஸ்டீல் அல்லது கிளாஸ் டம்ளர்களைப் பயன்படுத்தினால் மூன்றே
நாட்களில் மிகப் பெரும் மாறுதலைக் காணலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆகவே
பிளாஸ்டிக்கைத் தவிர்ப்போம்; உடல் நலம் காப்போம்; சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்துவோம்!
ஆல்
இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 1-3-2019 அன்று காலை சுற்றுப்புறச்
சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பட்ட உரை
நாம் அறிந்தோ அறியாமலோ விரும்பியோ விரும்பாமலோ நமது அன்றாட வாழ்க்கையில்
பிளாஸ்டிக் புகுந்து விட்டது.
அன்றாடம் அலுவலகத்திற்கு மதிய உணவைக் கொண்டு செல்வதற்கான பாக்ஸ்,
நாம் பருகும் நீரை வைத்திருக்கும் பாட்டில், அன்றாட தானியம் மற்றும் இதர பொருள்களை
பாக்கிங் செய்ய உபயோகப்படுத்தப்படும் பைகள், பழங்கள், பூ மற்றும் பிஸ்கட் ஆகியவற்றை
வைக்கப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஷீட்டுகள் என இப்படி பட்டியலிட்டால் பிளாஸ்டிக்
எப்படி நமது வாழ்க்கையில் ஊடுருவி இருக்கிறது என்பது புரியும்.
இந்த பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதில் மதம், நாடு, இனம், பால்,
அந்தஸ்து, வயது என்ற பேதமே இல்லை. எங்கும் பிளாஸ்டிக். எதிலும் பிளாஸ்டிக். ஆனால் இதனால்
நமது உடல்நிலை பாதிக்கப்படுகிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஆம், நமது உடல்நலம்
இந்த பிளாஸ்டிக்கால் பாதிக்கப்படுகிறது என்பதை ஆய்வாளர்கள் உறுதிப் படுத்தியுள்ளனர்.
டாக்டர் சௌம்யா பிரசாத் (Dr Soumya Prasad) என்னும்
Ecologist – சுற்றுப்புறச் சூழல் வல்லுநர் நமது உடலில் 3 விழுக்காடு பிளாஸ்டிக் இப்போதே
கலந்து விட்டது என்று கூறுகிறார்.
எல்லா பிளாஸ்டிக் பொருள்களும் பிபிஏ- BPA, தாலேட் –
Phthalates போன்ற நச்சுப்பொருள்கள் அடங்கிய அடிடிவ்ஸ் (Additives) எனப்படும் கூட்டுப்பொருள்களைக்
கொண்டுள்ளன. இந்தக் கூட்டுப்பொருள்கள் பல்வேறு வண்ணங்களுக்காகவும், மிருதுத் தன்மை
மற்றும் வலு அடையவும், transparency எனப்படும் ஒளிபுகும் தன்மைக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.
மிகவும் பளிச்சென்ற வண்ணத்துடன் ஒரு பிளாஸ்டிக் பாட்டில் இருக்கிறது
என்றால் அதில் அதிக நச்சுடைய கூட்டுப்பொருள் கலக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.
அது மட்டுமல்ல, பிஸ்கட், ஜூஸ், பருகும் நீர் ஆகியவை சிறிய அளவில் சிறிய பாக்கிங் வடிவத்தில்
வருகிறது எனில் அதில் அதிக நச்சுத்தன்மை அடங்கி இருக்கிறது என்று பொருள். தாலேட் என்னும்
இரசாயனப் பொருள் உடலில் டெஸ்டோஸ்டெரோன் அளவைக்(testosterone levels) குறைக்கும்; இதன் விளவாக
விந்து எண்ணிக்கையும் (sperm count) குறையும்.
ஆகவே
பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்ப்போம். கடைகளுக்குச் செல்லும் போது பேப்பரினால் ஆன அல்லது துணிகளினால் ஆன நமது பைகளைக்
கூடவே கொண்டு செல்வோம்.
உடல் நலம் காப்போம்; அத்துடன் சுற்றுப்புறச் சூழலையும் காப்போமாக!