மூளையில் ஆபரேஷன்:புராதன இந்தியர் சாதனை!!

Bhoja 32ft 7 tons

King Bhoja In Bhopal, Madhya Pradesh

Post No 1939; Date: 18  June 2015

Written  by London swaminathan

Uploaded from London at 8-57

 

தேரையர், ஜீவகன் ஆகிய இரண்டு பெரிய வைத்தியர்கள் செய்த சாதனைகளை நம்மில் பலரும் அறிவோம். தேரையர் என்பவர் தலையில் இருக்கும் தேரைகளையும் (தவளை அல்ல; ஒரு வகை நோய்) எடுப்பார் என்றும் ஒரு பாத்திரத்தில் மலஜல விமோசனம் செய்து அதில் ஒரு துளி எண்ணையை விட்டு நோய் கண்டுபிடிக்கும் புதிய வழிமுறைகளை தேரையர் கற்பித்தார் என்றும் நூல்கள் பகரும்.ஜீவகன் என்பான் மஹா பெரிய வைத்தியன் என்றும் அவனுடைய ஆபரேஷன் பீஸ் (கட்டணம்) மிக அதிகம் என்றும் புத்த மத பாலி மொழி நூல்கள் செப்பும்.

ஜீவகன் செய்த கண் ஆபரேஷன், பொற்கைப் பாண்டியனுக்கு செயற்கைக் கை பொருத்தும் ஆபரேஷன், கண்ணப்ப நாயனாரும், மஹா விஷ்ணுவும் சிவபெருமானுக்கு கண் கொடுத்து முதல் முதல் “ஆர்கன் டொனேஷனை”த் துவக்கி வைத்த பெருமை இவைகள் எல்லாம் தனித் தனி கட்டுரையில் முன்னே கூறினேன்.

இன்று சிந்து சமவெளியில் 4300 ஆண்டுகளுக்கு முன் நடத்திய ஆபரேஷன் (ஆறுவைச் சிகிச்சை) குறித்தும் போஜ மன்னனுக்கு நடந்த ஆபரேஷன் குறித்தும் பார்ப்போம்.

போஜன் என்ற பெயரில் வேத காலம் முதல் பல மன்னர்கள் இருந்தனர். வேத கால போஜன் பற்றி ஐதரேய பிராமணம் விளம்பும். காளிதாசன் கால போஜன் பற்றி சுபாஷித ரத்ன பாண்டாகாரம் செப்பும். நாம் காணப்போகும் போஜன் பற்றி போஜப் பிரபந்தம் என்னும் நூல் விதந்து ஓதும். இவன் 1000 ஆண்டுகளுக்கு பரமார வம்ச மன்னனாக மத்தியப் பிரதேச நகரமான தாரா நகரில் இருந்து ஆட்சி புரிந்தவன். இவனுக்கு தெரீயாத “சப்ஜெக்ட்” உலகில் எதுவுமே இல்லை. இவன் பெயரில் 84 “டெக்னிக்கல்” புத்தகங்கள் உள்ளன. இவனுடைய சம்ஸ்கிருத இலக்கணக் கல்வெட்டு மசூதிக்குள் கண்டு பிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பற்றி காஞ்சி மஹா ஸ்வாமிகள் 1932-ல் மைலாப்பூர் உபந்யாசத்தில் சொன்னதை முன்னரே கொடுத்துவிட்டேன்.

போஜ மன்னனுக்கு பெரிய தலை வலி. நிரந்தர தலை இடி. தாரா நகர வைத்தியர்கள் எவராலும் தீர்க்க முடியவில்லை. அப்பொழுது மன்னனின் இடைவிடாத் துயர் கேட்டு உஜ்ஜைனி நகரிலிருந்து இரண்டு பிராமண சர்ஜன்கள் (அறுவைச் சிகிச்சை நிபுணர்கள்) வந்து மன்னன் தலை இடியைப் போக்குவதாகக் கூறினர். ஆனால் கபாலத்தைத் திறந்து செய்யும் மேஜர் ஆபரேஷன் இது என்றும் எச்சரித்தனர்.

ஆபரேஷன் செய்கையில் நோயாளியை மயக்க நிலையில் வைக்க இப்போதெல்லாம் குளோரோபர்ம் என்னும் வாயுவைப் பயன்படுத்துகிறோம். சர்ஜன் அருகிலேயே அனஸ்தெடிஸ்ட் (மயக்க மருந்து வல்லுநர்) நின்று கொண்டு குளோரோபர்ம் லெவலை (அளவை) ஏற்றி இறக்கி ஆளின் மயக்கத்தை அதிகரிக்கவோ தெளிவிக்கவோ செய்வார்.

அந்தக்காலத்தில் மருதுவர்கள் சம்மோகினி (அதிக மயக்கம்) என்னும் மூலிகைச் சாற்றைக் கொடுத்து மயக்கி அறுவைச் சிகிச்சை செய்வர். இதே போல போஜ மஹாராஜாவுக்கும் நல்ல முறையில் அறுவைச் சிகிச்சை செய்தனர். மயக்கம் தெளிவிக்க சஞ்சிவினி என்னும் மூலிகையைப் பயன்படுத்தினர். சம்ஸ்கிருதத்திலுள்ள வால்மீகி ராமாயணத்தில் லெட்சுமணன் மீது இந்திரஜித் “பயலாஜிகல் வார்பேர்” (விஷவாயு பிரயோகித்து) செய்து மயக்கம் போட வைத்ததையும் உடனே அனுமன் சஞ்சீவினி மூலிகை எது என்று தெரியாமல் அது முளைத்த பாறையையே (மலை) தூக்கி வந்ததையும் நீங்கள் அறிவீர்கள். போஜ ராஜன் ஆபரேஷன் 100 சதவிகித வெற்றிபெற உதவிய சம்மோகினி, சஞ்சீவினி என்ன, எது என்பது இன்று நமக்குத் தெரியாது. இது அரிய வகை மூலிகை. இமய மலைப் பகுதியில் மட்டுமே கிடைத்ததால் அனுமன் அங்கே பறந்து சென்றான் என்பதும் நோக்கற்பாலது. யாராவது சில பகுத்தறிவுத் திராவிடங்கள் இது எல்லாம் கட்டுக்கதை என்று சொன்னால், இந்த விஞ்ஞான முறைக் கற்பனை உதிக்கக்கூட ஓரளவு நாகரீகம் தேவை என்பதை உணர்த்துங்கள். அப்போதும் விளங்கிக் கொள்ளாதவர்கள், “விளங்காதவர்களே”!!!

சர்ஜரி, ஆபரேஷன் என்பதேல்லாம் இந்துக்களுக்குப் புதிதல்ல. சுஸ்ருதர், சரகர் எழுதிய நூல்களில் எல்லாம் 400–க்கும் அதிகமான கருவிகளின் பெயர்கள் உள்ளன. என்றைக்கு பாரதீயன் சம்ஸ்கிருதத்தைப் புறகணித்தானோ அன்று முதல் நம்முடைய விஞ்ஞான சாஸ்திரங்கள் எல்லாம் அழிந்து போயின. இதற்கு 700 வருஷ முஸ்லீம், 300 வருஷ வெள்ளைக்காரன் ஆட்சியே காரணம்.

இங்கே நான் வாழும் லண்டனில், லண்டன் பல்கலைக் கழகத்திலும், பிரிட்டிஷ் லைப்ரரியிலும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும் பழம்பெரும் சம்ஸ்கிருத நூல்கள் தூசி படிந்து கிடக்கின்றன. நானும் அவ்வபோது போய் தூசி தட்டிவிட்டு அட்டையை மட்டும் புகைப் படம் எடுத்து வருகிறேன். பல்லாயிரக் காணக்கான நூல்கள் உள்ள சம்ஸ்கிருதம் அழியும் அன்று இந்தியா, இந்துமதம் எல்லாம் அழிந்து போகும். புத்தர் செய்த பெரிய தவறு சம்ஸ்கிருதத்தைப் புறக்கணித்ததே என்று விவேகாநந்தர் சொன்னதையும் இதனால், “தோன்றிய நாட்டி”லேயே புத்த மதம் அழிந்ததையும் நினைவுகூறுதல் பொருத்தம்.

skull brain sugery

The trepanated Harappan male skull H-796/B in the Palaeoanthropology Repository of Anthropological Survey of India, Kolkata in three views: a, the left lateral view showing the trepanated hole; b, the postero-lateral view showing the horizontal linear traumatic fracture on the occipital bone; c, an enlarged view of the trepanated site showing the rim of callous formed due to healing, and d, the trepanated Burzahom female skull showing signs of multiple trepanations. (Image Source: Current Science)

சிந்துவெளியில் மூளைச் சிகிச்சை

ஹரப்பா நகரத்தில் கிடைத்த மண்டை ஓடுகளில் சில கல்கத்தா நகர இந்திய தொல்பொருட்துறைத் துறையின் மானுடவியல் பிரிவில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு மண்டை ஓட்டில் (கபாலத்தில்) மூன்று மில்லிமீட்டர் அகலத்திற்கு ஒரு ஓட்டை இருக்கிறது. இதை ஆராய்ந்த திரு. சாங்க்யாயன் என்பார், அந்தக் காலத்தில் ஒரு குறிப்பிட்ட முறையில் இப்படி சர்ஜரி செய்வது வழக்கமாக இருந்தது என்றும் இதுவே பின்னர் ஆயுர்வேத புத்தகங்களில் காணப்படுகிறது என்றும் சொல்கிறார். மேலும் எலும்புகளை ஆராய்ந்தபோது அந்த சிந்து வெளி மனிதன் அதற்குப் பின்னரும் நீண்டகாலம் வாழ்ந்தது தெரிகிறது என்றும் சொல்கிறார். இந்தச் செய்தி 2013–ஆம் ஆண்டில் எல்லாப் பத்திரிக்கைகளிலும் பெரிதாக வந்திருந்தது. ஆக சிந்துவெளி நாகரீகத்தின் தொடர்ச்சியே இந்திய நாகரிகம் என்பதும், வெளிநாட்டிலிருந்து வந்தேறு குடியினர் எவரும் வந்து எதையும் செய்யவில்லை என்பதும் வெள்ளிடை மலையென விளங்குகிறது.

எனது முந்தைய ஆங்கிலக் கட்டுரைகள்:—

Jeevaka’s Eye Operation ( Posted on 25-2-2013)

How did a Pandya king get a golden hand? (Posted on Nov 18,2011)

ரோம், கிரீஸில் வாஸ்து கடவுள்

vestatemple_nero

ரோம் நகர வெஸ்டா (வாஸ்து) தேவதை கோவில் (நாணயத்தில்)

Research article by London swaminathan

Article No.1918; Dated 8 June 2015.

Uploaded at London time: காலை 6-09 மணி

வீட்டிலும், கோவில் போன்ற கட்டிடங்களிலும் வாஸ்து புருஷனைப் பூஜிப்பது, வாஸ்து அடிப்படையில் கட்டிடங்களை நிர்மாணிப்பது எல்லாம் ரிக் வேத காலத்திலேயே துவங்கிவிட்டது. அது மட்டுமல்ல அதே பெயரில், அதே நோக்கத்தில் இத்தாலிநாட்டின் தலைநகரான ரோமிலும், கிரேக்க நாட்டிலும் வழிபாடுகள் நடத்தப்பட் டூள்ளன. ஆயினும் அங்கே நிறைய புதிய கதைகளும் எட்டுக்கட்டப் பட்டுள்ளன. எப்படி நம் நாட்டில் ஒரே சிவ பெருமானும், ஒரே மஹாவிஷ்ணுவும் ஊருக்கு ஊருள்ள கோவில்களில் பல ஸ்தல புராணக் கதைகளுடன் விளங்குகின்றனரோ அதைப் போல ரோம், கிரிஸில் வேறுபாடுகள் உண்டு. ஏதோ ஒரு காலத்தில் அங்கு குடியேறிய இந்துக்கள், காலப் போக்கில் பாரதத்துடன் தொடர்பை இழந்தவுடன் அந்த ஊர்க் கடவுளுடன் இணைத்து புதிய கதைகளை உருவாக்கினர் என்று சொல்லலாம்.

ரோம் நகரில் வெஸ்டா என்ற பெயரிலும் கிரேக்க நாட்டில் ஹெஸ்தியா என்ற பெயரிலும் வீட்டிலுள்ள அக்னிமூலையில் இந்த தெய்வங்கள் வழிபட்டன. ஒவ்வொரு வீட்டிலும் குளிர்காலத்தில் சூடு ஏற்றுவதற்காக நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் அக்னி மூலை இருக்கும்.

vesta_coin4

முதலில் ரிக்வேதத்தில் உள்ள விஷயங்களைக் காண்போம். உலகின் மிகப் பழைய மத நூலான் ரிக்வேதம் குறைந்து 3700 ஆண்டுப் பழமையுடையது. இதில் வசிஷ்டர் கோத்ர ரிஷிகள் பாடிய பாடல்கள் ஏழாவது மண்டலத்தில் இருக்கின்றன. அதில் ஒரு பாடலில் (7-54-1) வாஸ்தோஸ்பதி வணங்கப்படுகிறார். வாஸ்தோஸ்பதி என்றால் வீட்டின் கடவுள் எனப்பொருள். மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் நன்மை செய்யவேண்டும்; கால்நடைகளும் குதிரைகளும் பெருகவேண்டும்;நோய்கள் அழிய வேண்டும்; பாதுகாப்பு கிடைக்கவேண்டும் என்று முனிவர்கள் வாஸ்துக் கடவுளை வேண்டுகின்றனர்.

இன்னொரு துதியில் சோமன், த்வஸ்டா ஆகியோராக வழிபடப்படுகிறார். இந்திரனுடன் ஒப்பிடப்படுகிறார்.

பத்தாவது மண்டலத்தில் வரும் ஒரு பாடலில் (10-61-7) அவர் சட்ட நியதிகளை பராமரிப்பவராகவும் கடவுளால் உருவாக்கப்பட்டவராகவும் சித்தரிக்கப்படுகிறார். பிற்காலத்தில் எழுதப்பட்ட கிருஹ்ய சூத்திரங்களில் கிரகப்பிரவேசத்தின் போது அவருக்கு படைப்புகள், காணிக்கைகள் செலுத்தவேண்டும் என்று உள்ளது. அவர் ருத்ரன் போல ஒரு துதியில் போற்றப்பாடாலும் இல்லுறை தெய்வம் அவரே என்று துதிபாடுகின்றனர்.

vesta 3

வெஸ்டா—ஹெஸ்தியா

ரோம் நகர தேவதையாக வெஸ்டா வழிபடப்படுகிறார். ஒவ்வொரு வீட்டிலும் அவர் நெருப்பு மூட்டப்படும் இடத்தில் அவள் உறைவாள். அவளுக்கு நாள் தோறும் படைப்புகள்/காணிக்கைகள் செலுத்த வேண்டும். ரோம் நகரில் ‘போரம்’ என்னும் இடத்தில் அவளுடைய பிரதான கோவில் உள்ளது. அங்கு மார்ச், ஜூன் மாதங்களில் வெஸ்டாலியா என்னும் விழா நடை பெறும். ரோம் நகரிலேயே சிறந்த பெண்கள் அந்தக் கோவிலுக்கு அர்ப்பணிக்கப்படுவர். அவர்கள் அங்கேயே வாழ்ந்து குறைந்தது 30 ஆண்டுகள் ப்ரம்மசாரிணியாக இருந்து விட்டு வெளியே வரலாம். இடையில் கற்புநிலை தவறினால் அவருக்கு கசையடி கொடுக்கப்படும் பின்னர் இந்தக் கசையடிக்குப் பதிலாக அவரைச் சுற்றி சுவர் எழுப்பும் விதிகள் வந்தன. எல்லா பணிகளுக்கும் அந்தக் கோவிலில் எரியும் நந்தாவிளக்கின் ஒளியிலிருந்து தீயை எடுத்துச் செல்ல வேண்டும். விழாக் காலங்களில் பெண்கள் வெறும் கால்களுடன் நடந்து வந்து ரொட்டிகள், அப்பங்களைச் சுட்டுப் படைக்கவேண்டும். வருடம் முழுதும் அங்கு தீ அணையாமல் பாதுகாக்கப்பட்டது. ரோம் நகரில் வெஸ்டாவின் தீ வட்டவடிவான குண்டத்தில் ஏற்றப்பட்டது.

இந்துமத வழக்கங்கள்

இப்பொழுது இவைகளை இந்து மதக் கடவுளருடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்:-

1.வாஸ்து என்பதே வெஸ்டா என்றும், கிரேக்க மொழியில் ஹெஸ்தியா என்றும் மருவியது

2.எல்லா இடங்களிலும் அக்னியாக, வீட்டுக்கு ஒளியூட்டும் கடவுளாக வழிபடப்பட்டது.

3.பிராமணர் வீடுகளில் தினமும் அக்னிஹோத்ரம், அவுபாசனம், சமிதாதானம் முதலிய ஹோமங்களைச் செய்வர். இதற்காக அணையாத தீ எப்பொழுதும் ஒரு சட்டியில் (உமி) வைக்கப்பட்டிருக்கும். பிறப்பு முதல் இறக்கும்போது தகனக் கிரியை வரை இதிலிருந்தே அக்னியை எடுப்பர்.

4.ஒவ்வொரு பிராமணர் வீட்டிலும் மூன்று வடிவங்களில் தட்சிணாக்கினீயம் (அரை வட்ட ஹோம குண்டம்), கார்கபத்யம் (வட்ட வடிவம்), ஆஹவனீயம் (சதுர வடிவ ஹோம் குண்டம்) ஹோம குண்டங்கள் இருந்தன. இதில் ரோம் நகரில் எப்பொழுதும் வட்டவடிவத்தில் இருக்கவேண்டும் என்று விதித்தனர்.

5.இந்துக்கள் ஆண் தெய்வமாக வஸ்தோஸ்பதியை வழிபட்டனர். ரோமானியர்கள் பெண் தெய்வமாக வழிபட்டனர். ஆனால் நாமும் கிருஹ லெட்சுமி என்றே சொல்லுவோம்

6.இந்துக்கள் கோவில்களில் நந்தாவிளக்கு என்று அனையாத தீபம் வைத்திருப்பர். அதே போல ரோமிலும் வெஸ்டா கோவிலில் தீயை அணையாமல் பாதுகாத்தனர்.இந்துப் பெண்கள் வெறும் கால்களுடன் கோவிலுக்குச் சென்று நைவேத்யம் செய்தது போல ரோமானியர்களும் செய்தனர்.

kalibanganfirealtars.

சிந்து சமவெளியில் யாக குண்டங்கள் (காளிபங்கன்)

  1. பால்டிக், ஸ்லாவ் இனமக்கள் வாழும் நாடுகளில் பெண்கள் திருமணமாகி மறுவீடு செல்லுகையில் அம்மா வீட்டிலுள்ள அக்னி மூலையிலிருந்து அக்னியை (விளக்கு) எடுத்துச் செல்லும் வழக்கம் உண்டு. பிராமணர் வீடுகளிலும் ஆண்கள் பரம்பரை பரம்பரையாக அணையாத தீ வைத்திருப்பர். அந்தக் காலத்தில் மூன்று வடிவங்களில் இருந்த ஹோம இடங்கள் இப்பொழுது ஒரு சட்டியில் எரியும் உமிக்கரியாகச் சுருங்கிவிட்டது. எனது நண்பர்கள் சிலர் இன்றும் இதே முறையில் அக்னிஹோத்ரம் செய்துவருகின்றனர்.
  2. இந்த மூன்று வடிவ யாக குண்டங்கள் சிந்து சமவெளி நாகரீக நகரான காளிபங்கனில் கண்டுபிடிக்கபட்டுள்ளன. இவைகளுக்கு சில அளவுகள், சட்டதிட்டங்கள் உண்டு. அந்தக் கணக்குகள் மிகவும் சிக்கலானவை. அவைகளை விளக்கும் சூல்வ சூத்திரங்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டன. அதிலிருந்துதான் ஜியோமிதி என்னும் கணித சாத்திரம் உலகிற்கு கிடைத்தது. இது எகிப்து நாட்டில் பிரமிடுகள் கட்டவும் உதவியது. இந்து மத எஞ்ஜினீயர்கள் அங்கு சென்றதால் பிரமிடு கட்டுவோருக்கும் நூல் பிடிப்போர் (சூல்வ சாத்திர நிபுணர்கள்) என்ற பெயர் ஏற்பட்டது. ‘பை’ முதலிய கணித எண்களை அறிந்தோரே வேத கால யாக குண்டங்களை அமைக்கமுடியும்.

9.வெஸ்டா கோவிலில் கன்னிப் பெண்கள் இருந்தது போல இந்துக் கோவில்களிலும் தேவதாசிகள் இருந்தனர்.

10.இந்தியாவில் எப்படி ஒவ்வொரு நகரத்துக்கும் ஒரு தேவதை உண்டோ அப்படியே ரோம் நகர தேவதையாக வெஸ்டா வணக்கப்பட்டாள்.

temple3

ஆதி காலத்தில் பிராமணர் வீடுகளில், இருந்த மூன்று வடிவ யாக குண்டங்கள்

நான்கு நூல்களில் கிடைத்த விஷயங்களைத் தொகுத்து நான் இவைகளை ஒப்பிட்டு ஆராய்ந்தேன். அதன் விளைவே இக்கட்டுரை.

சங்கத் தமிழ் இலக்கியங்களில் உள்ள வாஸ்து சாஸ்திர விஷயங்களைத் தனி கட்டுரையாகத் தருவேன்.

கணித மேதை, அழகி, உயிரிழந்த சோகக் கதை

HypatiaQuote

Compiled by London swaminathan

Article No.1916; Dated 7 June 2015.

Uploaded at London time: காலை 6-32

பழங்கால உலகில் இந்தியாவில் மட்டுமே பெண்கள் கல்வி கற்றனர். உயர் நிலையில் இருந்தனர்.சுமேரிய, எகிப்திய,கிரேக்க நாட்டு வரலாற்றைப் படித்த்வர்களுக்கு நன்கு தெரிந்த உண்மை இது. எதை எழுதினாலும் அதற்கு சான்று தருவது அறிவுடைமை; மேலும் அது நம் கடமை.

உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் இருபதுக்கும் மேலான பெண் கவிஞர்களின் பாடல்கள் உள. அதற்கு 1700 ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய சங்கத் தமிழ் இலக்கியத்தில் இருபதுக்கும் மேலான பெண் கவிஞர்கள் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கியம் தோன்றுவதற்கு முன்னர் பீஹாரிலுள்ள பாட்னா நகரில் (பாடலிபுத்ரம்) இருந்து அசோகனின் மகள் சங்க மித்திரை கப்பலில் இலங்கைக்குச் சென்று புத்தமதப் பிரசாரம் செய்தாள். அவள் ஒரு அறிவாளி. புத்த மதத்தில் மேலும் பல தலைவிகளும் இருந்தனர். இதற்கெல்லாம் மிக முன்னதாக, அதாவது கி.மு 850-ல், இற்றைக்கு 2850 ஆண்டுகளுக்கு முன், ஜனக மாமன்னன் கூட்டிய அகில இந்திய தத்துவ மஹாநாட்டில் பல மாநில த்தினர் கலந்து கொண்டனர். அந்த அறிஞர்களின் பெயர்ப் பட்டியல் பிருஹத் ஆரண்யக (பெருங் காட்டு) உபநிஷத்தில்  உள்ளது. அதில் கலந்துகொண்ட மகளிர் அணியில் கார்கி வாசக்னவி என்ற பேரறிவாளி, கூட்டத்தில் எழுந்து பேசினாள். அப்போதைய பேரறிஞர் யாக்ஞவல்கியர் மீது கேள்விக் கணைகளைத் தொடுத்தாள்.

ஆதிசங்கரருக்கும் மண்டன மிஸ்ரருக்கும் நடந்த வாதத்தில் மண்டன மிஸ்ரரின் மனைவி சரஸவாணிதான் ஜட்ஜ்/ நடுவர். அவ்வளவு பெரிய அறிவாளி அவள். ஆயினும் தன் கணவர் பங்கு பெறுவதால் அவள் ஒரு தந்திரம் செய்தாள். அவள் அறிவாளி மட்டும் அல்ல; ஒரு விஞ்ஞானி! ஒரு விஞ்ஞானி மட்டும் அல்ல; பெரிய சைகாலஜிஸ்ட் – அதாவது உளவியல் மாமேதை. அவளுக்குத் தெரியும் யார் உணர்ச்சி வசப்பட்டு வாதாடுகிறார்களோ அவர்கள் உடம்பில் சூடு ஏறும்; குறைகுடம் கூத்தாடும், ஆனால் நிறைகுடம் தழும்பாது என்று. ஆகையால் இருவர் கழுத்திலும் மலர் மாலையைப் போட்டுக் கொள்ளவைத்து, முதலில் யார் மாலை வாடுகிறதோ அவரே தோற்றவர் என்று அறிவித்துவிட்டாள். அவர் கணவரின் மாலை முதலில் வாடவே, அவரே தோற்றவர் என்று அறிவித்துவிட்டு, தன்னுடன் வாதத்துக்கு வரும்படி அழைத்து, பிரம்மச்சாரி சங்கரரிடம் ‘செக்ஸ்’ பற்றிய கேள்விகளைக்கேட்டு அவரைத் திணறடித்தாள். இறுதியில் அவளும் தோற்றுப்போனாள். அப்பேற்பட்ட மாமேதையான பெண்மணிகளை உடையது நம் நாடு.

மேலை உலகத்திலோ பெண்களை மட்டம் தட்டி வைத்திருந்தனர். ஷீபா மஹாராணி, கிளியோபாட்ரா ஆகியோர் பெயர்கள் அடிபட்டாலும் அவர்களின் ‘அழகே’ அதிகம் பாராட்டப்பட்டுள்ளது. அவர்களின் ‘அறிவு’க்குச் சான்று பகரும் கவிகள் ஏதுமில! நமக்கோ இலக்கியச் சான்றுகள் உள!!

அலெக்ஸாண்டர் படை எடுத்தபோது உலகில் பல நகரங்களை ஏற்படுத்தினார். அதில் ஒன்று எகிப்து நாட்டில் நைல் நதிக் கரையில் அமைந்த அலெக்ஸாண்டிரியா. அதில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பத்து லட்சம் மக்கள் வாழத் துவங்கினர். இந்திய அறிஞர்களும், வணிகர்களும் அங்கு வசித்த வரலாற்றுச் சான்றுகளும் உண்டு. அந்த நகரில் மியூசியம், பல்கலைக் கழகம் எல்லாம் ஒன்றாக இணைந்திருந்த இடத்தில் கிரேக்க அறிஞர் தேயன் (தேவன்) பாடம் சொல்லிக் கொடுத்தார். அவரது மகளின் பெயர் ஹைபேசியா. அவள் நன்கு படித்து கணித மேதை ஆனாள். அவள் பேரழகி. தன்னிடம் பாடம் கற்கும் மாணவர்கள் தன் அழகில் மயங்கி புத்தி பேதலித்து விடக்கூடாது என்று எண்ணி, திரைக்குப் பின்னால் நின்றுதான் பாடம் சொல்லிக் கொடுப்பாள். அவள் பிறந்தது கி.பி 350க்கும் 370 க்கும் இடையில் என்பது ஆராய்ச்சியாளரின் கணிப்பு.அப்போது ரோமானிய ஆட்சி எகிப்து வரை பரவி இருந்தது.

hypatia 2

ஹைபேசியா மற்றும் அவரது தந்தை ஆகியோர் கிறிஸ்தவ மதத்தை ஏற்கவில்லை. ஆகையால் கிறிஸ்தவ மதத்தினருக்கு அவளைப் பிடிக்கவில்லை. இந்து மத தத்துவத்துக்கு இணையான (மறுபிறப்பு) கொள்கைகளைப் பரப்பிய சாக்ரடீஸ்-பிளாட்டோ ஆகியோரின் கொள்கைகளை ஹைபேசியா குடும்பம் பின்பற்றியது.

இதற்கிடையில் அலெக்சாண்டிரியாவில் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டு யூதர்களூம் கிறிஸ்தவர்களும் வன்முறையில் இறங்கினர். இருதரப்பிலும் மதத்தலைவர்கள் படுகொலையுண்டனர்.

கான்ஸ்டாண்டி நோபிள் நகரிலிருந்து வந்த வெறிபிடித்த பாதிரியார் சிரில் என்பவருக்கும், ஹைபசியாவின் மாணவரும் ரோமானிய கவர்னருமான ஆரிஸ்டஸ் என்பவருக்கும் மோதல் அதிகரித்தது. கி.பி 415ல் பெரிய ரோமானிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஹைபேசியா, கணிதம் மற்றும் தத்துவ பாடத்தைப் போதித்ததோடு பலரை வாதுக்கு அழைத்து வெற்றியும் பெற்றுவந்தாள். இந்தியாவில் காசி மநகரத்தில் தெரு மூலைகளில் அறிஞர்கள் நின்று கொண்டு எல்லோரையும் வாதுக்கு அழைப்பர். பெரிய பட்டிமன்றங்கள் நடக்கும். இதுபோல ஹைபேசியாவும் செய்து வந்ததால் ரோமானிய எதிர்ப்புக் கிளர்ச்சி நடந்த அன்று அவருடைய வீட்டில் ஒரு கிறிஸ்தவ கும்பல் புகுந்து அவரை நிர்வாணமாக்கி தெருவில் இழுத்து வந்தனர். பின்னர் அவளை உயிருடன் எரித்துக் கொன்றனர். இதுபற்றி சாக்ரடீஸ் ஸ்காலஸ்டிகஸ் என்ற வரலாற்று அறிஞர் அந்தக் காலத்திலேயே எழுதி வைத்தது இப்பொழுது விக்கிபீடியா முதலிய கலைக்களஞ்சியங்களில் உள்ளது.

இந்தப் படுகொலைக்குப் பின்னர் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐரோப்பாவில் விஞ்ஞானம் என்பது இருளில் மூழ்கியது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலிலியோ, கோபர்நிகஸ் ஆகியோரையும் கொடுமைப் படுத்தினர். இதற்குப் பெரிய எதிர்ப்பு கிளம்பியவுடன் கி.பி.1500 வாக்கில் மறுமலர்ச்சி உதயமானது.

ஹைபேசியா பல நூல்களை எழுதினார். நீரை அளக்கும் பல கருவிகளைக் கண்டுபிடித்தார், ஆனால் ஒன்றுகூட இன்று மிஞ்சவில்லை. இதற்குக் காரணம், முஸ்லீம்கள் நாலந்தா பலகலைக்கழக நூல்நிலையத்தை எரித்து நம்முடைய நூல்களை எப்படி சாம்பலாக்கினரோ அப்படியே கி.பி 640ல் ஒரு அராபிய முஸ்லீம் கும்பல் அலெக்ஸாண்டிரியா நூலகத்தையும் எரித்துச் சாம்பலாக்கியது. இதன் விவரங்களும் கலைக் களஞ்சியங்களில் உள்ளது. பல்லாயிரக்கணக்கான சம்ஸ்கிருத நூல்களின் பெயர்களை மட்டுமே நாம் அறிவோம். அவை அனைத்தும் இன்றும் சாம்பல் ரூபத்தில் பீஹாரில் நாலந்தா பலகலைக் கழகத்தின் அடியில் உள்ளன. இதே கதை அலெக்ஸாண்டிரியாவிலும் நடந்தது.

நாம் இவர்களை மன்னித்துவிடலாம். ஆனால் வரலாறு இவர்களை மன்னிக்கவே மன்னிக்காது.

மின்னணுக் கருவிகள் கழிவுகளால் ஏற்படும் அபாயம்

world_environment_day_

Written by S NAGARAJAN

Article No.1911; Dated 5 June 2015.

Uploaded at London time: 6-06 am

சென்னை வானொலி நிலயம் A (அலைவரிசை 720 Hz))யில் 29-5-2015 அன்று காலை 6.55 மணிக்கு காலைமலர் நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

மின்னணுக் கருவிகள் கழிவுகளால் ஏற்படும் அபாயம்

SCRIPT BY : .நாகராஜன்

நாளுக்கு நாள் உலகெங்கும் மின்னணுக் கருவிகளின் பயன்பாடுகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கூடவே இந்தக் கருவிகளின் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாததால் ஏற்படும் அபாயமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

நம் நாட்டில் தகவல் தொழில்நுட்பத்தில் அதிக அளவு மின்னணுக் கருவிகளைப் பயன்படுத்தும் பங்களூரு நகரத்தில் மட்டும் 57000 டன் என்ற மாபெரும் அளவில் மின்னணுக் கழிவு 2014ஆம் ஆண்டில் ஏற்பட இருப்பதை முன்னமேயே நிபுணர்கள் சுட்டிக் காட்டி எச்சரித்தனர். ஆகவே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும் இவற்றை முறைப்படி அகற்றுதல் இன்றியமையாதது. ஏனெனில் இவற்றில் வெளிப்படும் நச்சுக்கள் சுற்றுப்புறச் சூழலை மாடுபடுத்துபவை. இவற்றை அகற்றுவோர் உரிய முறையில் தங்களையும் காத்துக் கொள்ளல் வேண்டும். ஆனால் முறைப்படி கழிவை அகற்றாமல் இருப்பின் இதை அகற்றுவோருக்கு பல்வேறு ஆரோக்கியக் கேடுகள் ஏற்படும்.

சான்பிரான்ஸிஸ்கோ, சியோல் போன்ற நகரங்களில் இவற்றை அகற்றுவதற்கான தனிச் சட்டங்கள் உள்ளன. மறு சுழற்சிக்கு உள்ளாகும் பொருள்களைத் திரும்பிப் பெறும் வசதிகளும் இந்தச் சட்டங்களில் உள்ளடங்கும். மின்னணுப் பொருள்களை உற்பத்தி செய்வோருக்கு அதன் மூலம் ஏற்படும் கழிவுகளை அகற்றுவதிலும் பெரும் பொறுப்பு உண்டு. E-waste disposal எனப்படும் மின்னணுப் பொருள் கழிவை நீக்குவதில் உரிய முறையில் செய்ய வழிகளை இவற்றை உற்பத்தி செய்வோர் அறிவுறுத்துவதோடு அவற்றைத் திரும்பப் பெற்றுத் தாமே அகற்றவும் முற்படுதல் இன்றியமையாதது.

பொருள்களின் பயன்பாடு முடிந்தவுடன் குப்பைக் கூளங்களுடன் இவற்றைச் சேர்த்துப் போட்டு விடக் கூடாது என்பதைப் பயனீட்டாளர்களும் உணர்தல் வேண்டும். கழிவுகளை அப்புறப்படுத்துவதை அதற்கான அங்கீகாரம் பெறப்பட்டவர்களே செய்தல் வேண்டும். கணினி உள்ளிட்ட சாதனங்களைப் பயன்படுத்துவோரும் மின்னணுக் கழிவை அதை அகற்றும் முறை தெரிந்தவர்களிடமே மட்டுமே தருதல் வேண்டும்.

இப்போதுள்ள கழிவே மலைக்க வைக்கும் அளவு ஒவ்வொரு நகரத்திலும் உள்ளது. இது 2020ஆம் ஆண்டில் 500 சதவிகிதம் அதிகரிக்கும் என்ற செய்தி திகைக்க வைக்கும் ஒன்று. ஆகவே கணினிகளும் இதர மின்னணுப் பொருள்களும் ஏராளமாகஉற்பத்தி செய்யப்பட்டு சந்தைகளில் விற்கப்படும் இந்த நாட்களில் அதன் கழிவுகளைப் பற்றிப் பொறுப்புடனும் அக்கறையுடனும் அனைவரும் சிந்தித்துச் செயல்படுதல் வேண்டும்.    மின்னணுக் கழிளவ உரிய முறையில் அகற்றுவோம். சுற்றுப்புறச் சூழலை மாசின்றிக் காப்போம்.

****************************

காலம் பற்றிய ஐந்து அற்புதக் கதைகள்!-1

க்ரிஷ்ன ஈட்டி

Written by London swaminathan

Research Article No.1875; Dated 19 May 2015.

Uploaded in London at காலை 8-45

Already posted in English

காலம் என்பதை இந்துக்கள் தெரிந்துகொண்ட அளவுக்கு, புரிந்துகொண்ட அளவுக்கு,வேறு எந்த கலாசாரமும், நாகரீகமும் அறியவில்லை. இந்துக்களுக்கு ‘காலச்சக்கரம்’ என்ற சொல் நன்கு தெரிந்த சொல். அதாவது காலம் என்பது சுழன்றுகொண்டே இருக்கும்—காலம் என்பது வட்டப் பாதையில் செல்லும் என்பது அவர்கள் கணிப்பு. நான்கு யுகங்கள் முடிந்தவுடன் மீண்டும் கிருத யுகம் துவங்கி நான்கு யுகங்கள் வரும்—இவ்வாறு பல கோடி ஆண்டுகள் ஆனபின்னர் ஒரு பிரம்மாவின் ஆயுள் முடியும் என்பதெல்லாம் இந்துக்களுக்கு அத்துபடியான விஷயம். இந்த மாதிரி பெரிய எண்கள், சுழற்சி முதலியவை வேறு எங்கும் காணப்படா.

மேற்கத்தியர் கணக்குப்படி காலம் என்பது சக்கரம் போல சுழலாது—அது நீண்ட ஆறு ஓடுவது போல ஒரே திசையில் முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கும் என்பர். அவர்கள் இப்பொழுது கருந்துளைகள் (Black holes) என்னும் விண்வெளி அதிசயம் பற்றி ஆராய, ஆராய புதுப்புது தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதன் முடிவில் இந்துக்கள் சொன்னதே சரி என்று உணர்வர்.

இந்துக்களின் கடவுளுக்குக் கூட காலத்தின் பெயர்கள் இடப்பட்டன. சிவனை ‘மஹா கால’ (Maha Kala) என்றும், ‘காலாக்னீ ருத்ராய’ (Kalagni Rudraya) என்றும் மந்திரங்கள் சொல்லுகின்றன. அதாவது மாபெரும் காலம், இறுதி நேரத்தில் எல்லோரையும் விழுங்குபவன், காலம் என்னும் தீயில் அனைத்தும் கருகி சாம்பல் ஆகும்—விபூதி ஆகி விடும் என்பதை இந்துக்கள் உணர்வர். அதே போல விஷ்ணுவையும் ‘பூத, பவ்ய, பவத் பிரபு’ (விஷ்ணு சஹஸ்ரநாமம்) என்று அழைப்பர். அதாவது அவனே “கடந்த, வரும், நிகழ் காலம்”. எல்லா கடவுளரையும் “குணத்ரயாதீத, காலத்ரயாதீத” என்றும் இந்துக்கள் போற்றுவர். அதாவது இறைவன் என்பவன் குணத்தையும் காலத்தையும் கடந்தவன். அவனை நமது காலம் கட்டுப்படுத்தாது. இதெல்லாம் மேல்நாட்டினருக்குப் புரியாத விஷயம்!

காலத்தின் தன்மையை விளக்க ஐந்து அருமையான கதைகள் உள. அவற்றை இரண்டு பகுதிகளில் தருவேன்.முதல் பகுதியில் மூன்று கதைகளைக் காண்போம்.

1.விஷ்ணு புராணக் கதை

விஷ்ணுவும் நாரதரும் ஒரு காட்டின் வழியே பயணம் செய்து கொண்டிருந்தனர். விஷ்ணுவுக்குத் திடீரென தாகம் எடுத்தது. தூரத்தில் ஒரு கிராமம் தெரிந்தது. அங்கே சென்று கொஞ்சம் தண்ணீர் வாங்கி வருமாறு நாரதரிடம் விஷ்ணு கேட்டுக் கொண்டார். உடனே நாரதர் அந்த கிராமத்துக்குச் சென்று ஒரு வீட்டின் கதவைத் தட்டினார். அழகிய பெண் கதவைத் திறந்தாள். கண்டதும் காதல் மலர்ந்தது. அது கல்யாணத்தில் போய் முடிந்தது. நாரதர் மிகவும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி குழந்தைகளையும் பெற்றெடுத்தார்.

ஒரு நாள் பெரிய வெள்ளம் வந்தது. அந்த கிராமமே வெளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. நாரதர் குடும்பமும் வெள்ளத்தில் சென்றது. நாரதர் செய்த புண்ணியம் அவர் காட்டில் போய் ஒதுங்கினார். எந்த இடத்தில் விஷ்ணுவிடம் விடை பெற்றாரோ அதே இடத்தில் கரை ஒதுங்கினார். விஷ்ணு, “என்ன நாரதரே! தண்ணீர் கிடைத்ததா?” என்று கேட்டார். நாரதருக்கு ஒரே வியப்பு. இது என்ன, நான் கல்யாணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி குழந்தைகளையும் பெற்று வயசும் ஆகிவிட்டதே, இவர் ஏதோ ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தண்ணீர் கொண்டுவரச் சொன்னது போலப் பேசுகிறாரே என்று எண்ணி விஷ்ணுவிடமே போய் விளக்கம் கேட்டார். அப்போது விஷ்ணு சொன்னார், நாரதரே உமது பூவுலக நேரம் வேறு, எமது தேவலோக நேரம் வேறு என்று.

இது போன்ற கதைகள் இந்து மதத்தில் ஏராளம் உண்டு. அர்ஜுனனை மாதலி என்பவன் இந்திர லோகத்துக்கு அழைத்துச் சென்று ஐந்து ஆண்டு விருந்தினராக வைத்திருந்த போது நடந்தவையும், ரேவதி நட்சத்திரக் கதையும் இது போன்றவையே. சம்பந்தரும் சுந்தரரும் காலப் பயணம் செய்து எப்போதோ இறந்த இருவரை உயிர்ப்பித்தனர் என்று முன்னரே ஒரு கட்டுரையில் விளக்கி இருக்கிறேன்.

இந்த அளவுக்கு வேறு கலாசாரங்களில் கதைகளும் இல்லை. கதைகள் இருந்தாலும் அதை விளக்க எந்த கொள்கைகளும் இல்லை.

அவர்களுக்கு சிறிய எண்கள் மட்டுமே தெரிந்திருந்தன. இதே காலத்தில் வேத மந்திரங்களோ பிரம்மாண்டமான எண்களைப் பயன்படுத்தின.

IMG_3526

கதை 2: இன்னும் ஒரு கதையைக் காண்போம்

லீலாசுகரின் “பால கோபால ஸ்துதி”யில் ஒரு நிகழ்ச்சி வருகிறது. கிருஷ்ணன் குழந்தையாக இருந்தகாலையில், யசோதா அவனைத் தொட்டிலில் போட்டு ஆட்டி தூங்கச் செய்கிறாள். அப்பொழுது தாலாட்டுப் பாட்டில் ராமாயணக் கதையைப் பாட்டாகப் பாடிக் கொண்டிருந்தார். மாரீசன், மாய மான் வேடத்தில் வந்து, அதை ராமன் துரத்திச் செல்லும் கட்டத்தை யசோதா பாடிக் கொண்டிருந்தாள். திடீரெனக் குழந்தைக்கு –அதாவது குழந்தைக் கிருஷ்ணனுக்கு — தூக்கிவாரிப் போட்டது. லட்சுமணா! என் வில் எங்கே? என்று கிருஷ்ணன் (குழந்தை) உரத்தகுரலில் கத்தினான். அதாவது பூர்வ ஜன்ம நினைப்பு வந்தது. இதில் அவர் காலத்தில் பின்னோக்கிப் பயணம் செய்தது தெரிகிறது.

கதை 3: இந்திரனும் எறும்பு வரிசையும்

பிரம்ம வைவர்த்த புராணத்தில் இந்திரனின் மமதை, அஹங்காரம் அடக்கப்பட்ட ஒரு கதை வருகிறது. இந்திரன் கம்பீரமாக அவனது சபையில் அமர்ந்திருந்த போது,  திடீரென எறும்புகள் ஒரு நீண்ட வரிசையில் சபைக்குள் நுழைந்தன. எல்லோரும் வியப்புடன் பார்க்கின்றனர். ஒருவர் மட்டும் குபீரெனச் சிரித்துவிட்டார். “ஐயா, இதில் சிரிக்க என்ன இருக்கிறது?” என்று இந்திரன் கேட்டார். “இந்த ஒவ்வொரு எறும்பும் முந்தைய ஜன்மத்தில் ஒரு இந்திரனாக இருந்தது” என்று அவர் பதில் சொன்னார். இதில் காலச் சுழற்சி என்னும் கருத்து இருக்கிறது.

ants

மேலும் இரண்டு சுவையான கதைகளை நாளை காண்போம்

ரிக் வேதத்தில் பூகம்பம்

f0c4a-earthquake

Compiled by London swaminathan

Article No.1870; Dated 17 May 2015.

Uploaded in London at 17-05

சங்கத் தமிழ் இலக்கியத்திலும் மணிமேகலையிலும் காணப்படும் “நிலம் பெயர்தல்” (பூகம்பம்) பற்றிய குறிப்புகளை முன்னர் ஒரு கட்டுரையில் கண்டோம். இது போல சம்ஸ்கிருத இலக்கியத்திலும் நிறைய பொதுவான குறிப்புகள் உள. சீதையை பூமாதேவி திரும்ப அழைத்தது ஒரு பூமி அதிர்ச்சியில் அவர் உயிரிழந்த சம்பவம் என்றும் ராவணன் கயிலை மலையை அசைத்தது மற்றொரு பூகம்பம் என்றும் ஒரு ஆய்வுக் கட்டுரையில் ( “Ravana trapped and Sita Devi died in Earth Quake” 22-1-2012) தந்தேன்.

ஆயினும் 1500 ஆண்டுகளுக்கு முன் வராஹமிகிரர் எழுதிய பிருஹத் சம்ஹிதாவில் 1.வால் நட்சத்திரம், 2.விண்கற்கள், 3.வானவில், 4.மூன்று சூரியன்கள் தோற்றம், 5.சந்திரக் கோட்டை, சூரியக் கோட்டை, 6.வானில் தோன்றும் வண்ண ஒளி ஆகிய ஒவ்வொன்று பற்றியும் தனித்தனி அத்தியாயங்கள் இருக்கின்றன. அவரோ இதை, “தான்” எழுதவில்லை என்றும், தனக்கு முன்னர் வாழ்ந்த இருபதுக்கும் மேலான அறிஞர் பெருமக்கள் செப்பியவற்றைத் தான் “சுருக்கி வரைவதாகவும்” பணிவுடன் எழுதியுள்ளார்.

உலகில் நாகரீக முன்னேற்றம் வாய்ந்த ஒரு நாட்டில்தான் இத்தகைய ஆய்வுகள் நடைபெற முடியும். பெர்Fயூம் செய்வது முதல் சோதிடம் வரை அவர் எழுதாத பொருளே இல்லை. அவருக்கு முன்னர் இப்படிப் பலரும் எழுதியது பாரதீய அறிவியல் பார்வையைப் பட்டெனக் காட்டும்.அவர் எழுதியது இன்று நூற்றுக்கு நூறு சரி என்று சொல்ல முடியாது. ஆயினும் அதிலுள்ள பல விஷயங்களை இன்றும் பயன்படுத்த முடியும். 25 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட வானவியல் நூல்கள் எல்லாம் இன்று லண்டனில் பழைய புத்தகக் கடைகளுக்குப் போய் விடுகின்றன. ஆயினும் வரலாற்று நோக்கில் பார்க்கையில் அவையும் தேவைப்படும். உலகில் வராஹமிகிரர் போல நூற்றுக் கணக்கான விஷயங்களை ஒரே நூலில் வேறு எவரும் தொகுத்திருப்பது அரிதிலும் அரிது!

50456-nepal-quake

ரிக்வேதத்தில் நில அதிர்வு

உலகில் முதல் முதல் பூகம்பம்/நில அதிர்ச்சி பற்றிய குறிப்பு ரிக்வேதத்தில் (2-12-2) காணப்படுகிறது. ஆதிகாலத்தில் மலைகளுக்கு இறக்கைகள் இருந்தன என்றும் அவை பறந்து வந்து தாக்கியதில் பல சேதங்கள் ஏற்பட்டதாகவும் புராணங்களிலும் , வால்மீகி ராமாயணத்திலும் (1-23-27), காளிதாசனின் குமார சம்பவத்திலும் (1-20) நேரடியாகவும் மறைமுகமாகவும் பல குறிப்புகள் வருகின்றன. இதற்கு எல்லாம் மூலக் கதை ரிக்வேதத்தில் இருக்கிறது.

“நடுங்கிக் கொண்டிருந்த பூமியை நிலைப் படுத்தியவன் அவன். கொந்தளித்த மலைகளை நிலைப் படுத்தினான்.

அந்தரத்தை அளந்து, ஆகாசத்தைத் தாங்கியவன் அவன், மனிதர்களே! அவன் தான் இந்திரன்” – ரிக் 2-12-2

என்று கிருத்சமடர் என்னும் புலவர் குடும்பத்தினர் பாடிய வேத கால துதிகள் சொல்லும்.

இந்தியாவில் வரலாற்றுச் சின்னங்கள் கிடைக்காமைக்கு வட இந்தியாவில் ஏற்பட்ட பூகம்பங்களும் ஒரு காரணமாகும். மாபெரும் நதிகளை திசைமாறிச் செல்ல வைத்து பல நகரங்களை அழித்துவிட்டது. மக்களை இடம் பெயரவைத்து நகரங்களைப் பாழடைய வைத்தது. குஜராத்திலும், நேபாளத்திலும், பீஹாரிலும் நடந்த பூகம்பங்கள் என்ன விளைவுகளை ஏற்படுத்தியன என்பதை நாமே நேரில் கண்டோம்.

நில அதிர்ச்சி ஏன் ஏற்படுகிறது?

பூமியின் மேல் ஓடு (கண்டங்கள்)  உட்கார்ந்து கொண்டிருக்கும் அடிப்பகுதிகள் (Tectonic Plates) நகருகையில், ஒன்றுடன் ஒன்று மோதுகையில் பூமி அதிர்ச்சி ஏற்படுகிறது. இமய மலை போன்றவை இப்படி மோதியபோது நீருக்கடியில் இருந்து எழுந்தன.

ஆனால் வராஹமிகிரர் கூறும் காரணங்கள் விநோதமானவை. இவை அவரால் “தொகுக்கப்பட்டவை”:

1.சிலர் கடலில் உள்ள ராட்சதப் பிராணிகள், நில அதிர்ச்சியை உண்டாக்குவதாகக் கருதுகின்றனர். கர்க போன்றோர், பூமியைத் தாங்கி நிற்கும் அஷ்ட திக்கஜங்கள் (எட்டு யானைகள்) பூ பாரத்தைச் சுமக்க முடியாமல் களைப்படையும் தருணத்தில் நில அதிர்வு ஏற்படும் என்பர்.

(இதில் கொஞ்சம் விஞ்ஞான உண்மை உண்டு. பெரிய நீர்த்தேக்கன்கள் கட்டுகையில் அந்தப் பகுதியில் முன்னெப்போதும் இல்லாத நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. மேலும் “எட்டு யானைகள்” என்பன உண்மையான யானைகள் அல்ல. எண் திசைகளையே குறிக்கும்; களைப்பு என்பதும் வேறு பல பொருளைத் தரும்)

2.வசிஷ்டர் போன்றோர் வான மண்டலத்தில் ஏற்படும் காற்று மோதல்கள், கீழே இறங்கும் போது இது ஏற்படுகிறது என்பர் (உண்மையில் பூகம்பம் ஏற்பட்ட பின்னர் புகை மண்டலம் எழும்பி வானின் வரை செல்லும்). விருத்த கர்க போன்றோர் கண்ணுக்குப் புலனாகாத சக்தியால் ஏற்படும் என்பர். (இது ஓரளவு உண்மை. எவ்வளவோ மிக நுண்ணிய கருவிகள் இருந்தும், இன்று வரை பூகம்பத்தை முன்னரே உணர்ந்து அறிவிக்க முடியவில்லை!)

3.பராசரர் போன்ற முனிவர்கள் கூறும் காரணம்: முன் காலத்தில் மலைகள் பறந்து வந்து பூமியில் மோதின. பூமா தேவி, படைப்புக் கடவுளான பிரம்மாவிடம் அழுதுகொண்டே முறையிட்டாள்: என்னை அசலம் (நிலை பெயராத) என்பர். ஆனால் நானோ பறந்து வரும் மலைகளால் தாக்கப்பட்டு நிலகுலைந்து நிற்கிறேன் என்று காண்ணீர் சிந்தவே, மலைகளின் சிறகுகளை வெட்ட இந்திரனுக்கு உத்தரவிட்டார் பிரம்மா. இந்திரனும் வஜ்ராயுதத்தால் அவற்றின் இறக்கைகளை வெட்டினான்.

4.கிரகணங்களாலும், ஒரு நாளின் சிறு பொழுதுகளுக்கு உரிய தெய்வங்களாலும் நில அதிர்வு ஏற்படுவதாகச் சிலர் கருதுவர்.

5.இதற்குப் பின் வராஹ மிகிரர் 27 நட்சத்திரங்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்து பூகம்பத்துகான சோதிட காரணங்களை விளக்குகிறார்.

6.எந்த நட்சத்திரத்தில் நில அதிர்வு ஏற்படுகிறதோ அந்த நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்ய வேணும் என்றும் விளக்குகிறார்.

மேற்கூறியவற்றில் விஞ்ஞான உண்மைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் “அடிக்கடி ஏற்படும் நில அதிர்வுகள்”  – என்ற சொற்றொடர்கள், அவர்கள் நீண்ட நெடுங்காலத்துக்குப் பூமியைக் கவனித்து வந்ததைக் காட்டுகிறது. இதுபற்றி அவர்கள் புத்தகம் புத்தகமாக எழுதியதும் அவர்களுடைய ஆர்வத்தைக் காட்டுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன் பூகம்பம் பற்றி வேறு எந்த நாகரீகத்திலும் இவ்வளவு விதமான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

வராஹமிகிரர் எழுதிய பல புத்தகங்களைப் புரிந்து கொள்ள நல்ல சம்ஸ்கிருத அறிவு வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், அரபு நாட்டிலிருந்து இதை ஆராய வந்த ஆல்பிருனிக்கு இருந்த மொழி அறிவும் ஆர்வமும் கூட நமக்கு இல்லாதது வெட்கப்பட வேண்டிய விஷயம். நானும் ஆங்கில மொழி பெயர்ப்பை அடிப்படையாக வைத்துத் தான் எழுதுகிறேன். அதில் பல வகையான விளக்கங்கள் இருப்பதையும் தான், ஒரு குறிப்பிட்ட கருத்தை ஏற்பதாகவும் மொழி பெயர்ப்பாளர்கள் எழுதுவர். அவர் எழுதிய கருத்தைத் தான் நாம் ஏற்க வேண்டும் என்பதில்லை. ஆனால் சம்ஸ்கிருத மொழி அறிவு இல்லாதவரை அவர்கள் சொல்லுவதே வேத வாக்கு!

(புதைக்கப்பட்ட ஒரு குழந்தையின் நெஞ்சில் ஒரு பானை ஓடு இருந்ததை அக்குழந்தையின் விளையாட்டுச் சாமான் என்று தொல்பொருட் துறை அறிஞர்கள் எழுதினர். ஆனால் ஈமச் சடங்குகளில் பயன்படுத்தும் “கபல” என்ற பானை ஓடு அது என்று வேதம் தெரிந்த அறிஞர்கள் சொன்னார்கள். இது போல “செவன் சிஸ்டர்ஸ்” என்பது ஒரு பறவை வகை என்பதை தவே என்னும் பறவை இயல் அறிஞர் கண்டு பிடித்தார். வேதத்தை மொழி பெயர்த்த வெள்ளைக் காரர்கள் இதை “ஏழு பெண்கள்” என்று மொழி பெயர்த்தனர். உள்ளூர் கலாசாரம் தெரியாமல் “ஆராய்ச்சி” செய்யும் அறிஞர்கள் இப்படித் தத்துப்பித்து என்று உளறுவார்கள். வள்ளுவன் சொன்னது போல ‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’!)

மூன்று சூரியன்கள் தோன்றிய அதிசயம்!!

Compiled by London swaminathan

Article No.1857; Dated 11 May 2015.

Uploaded in London at 9-35

சமீபத்தில் மங்கோலியாவில் மூன்று சூரியன்கள் தோன்றியது சென்னை முதல் லண்டன் வரை எல்லா பத்திரிக்கைகளிலும் ஜனவரி (2015) மாதத்தில் வந்தன. இது ஒரு அதிசய நிகழ்வே. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் காரைக்காலில் இப்படி மூன்று சூரியன்கள் தோன்றியது தினமணியில் செய்தியாக வந்தது. இதைவிட வியப்பான விஷயம் வராஹமிகிரர் என்பவர் சம்ஸ்கிருத கலைக் களஞ்சியமான பிருஹத் சம்ஹிதாவில் 1500 ஆண்டுகளுக்கு முன் இது பற்றி எழுதி வைத்ததாகும்!! அதற்கு முன் அரிஸ்டாடில் போன்ற கிரேக்க அறிஞர்கள் இது பற்றிப் பேசியிருந்தாலும் வராஹ மிகிரரே முதலில் இதைச் சொல்லி இருக்க வேண்டும். ஏனெனில் அவர், தனக்கு முந்திய 20-க்கும் மேலான அறிஞர்கள் பெயர்களைச் சொல்லி அவர்கள் சொன்ன விஷயங்களைச் “சுருக்கமாகச்” சொல்வதாக எழுதியுள்ளார்.

மூன்று சூரியன்கள் தோன்றுவது எப்படி என்பதைக் காண்பதற்கு முன்னால், இது பற்றி வராஹமிகிரர் சம்ஸிருதத்தில் எழுதியது என்ன என்பதைக் காண்போம்

பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 37 (ப்ரதி சூர்ய லக்ஷணம்)

1).போலி சூரியன்கள் தோன்றுவது நல்ல சகுனமே! அந்தந்த பருவத்துக்கு ஏற்ற வண்ணத்தில் தோன்றினால் நல்லது. மேலும் தூய வெண்மை அலது வைடூர்ய ரத்ன வர்ணத்தில் இருந்தால் நல்லது.

ப்ரதிசூர்யக: ப்ரசஸ்தோ திவசக்ருத்ருதுவர்ணசப்ரப: ஸ்நிக்த:

வைடூர்ய நிப: ஸ்வச்ச: சுக்லஸ்ச க்ஷேமசௌர்பிக்ஷ:

2).போலி சூரியன்கள் மஞ்சள் வர்ணத்தில் இருந்தால் வியாதிகள் மலியும்; சிவப்பு வர்ணத்தில் இருந்தால் ஆயுதப் போராட்டம் நிகழும். பல சூரியன்கள் வரிசையாகத் தோன்றுமானால் வியாதிகள், அரசர் படுகொலை, கொள்ளைக்காரர் தொல்லைகள் நிகழும்

பீதோ வ்யாதீம் ஜனயத்யசோகரூபஸ்ச சஸ்த்ரகோபாய

ப்ரதிசூர்யாணாம் மாலா தச்யுபயாதங்கன்ருப ஹந்த்ரீ

3).உண்மைச் சூரியனுக்கு வடக்கில் போலி சூரியன் தோன்றினால் மழையும் தெற்கில் இருந்தால் கடுங் காற்றும் தோன்றும். மேலே தோன்றினால் மன்னனுக்கு கேடு, கீழே தோன்றினால் மக்களுக்குக் கேடு. இரு பக்கங்களிலும் தோன்றினாலோ நீர் நிலைகளால் (ஆற்று வெள்ளம், கடல் சுனாமி அலை) கேடு வரும்.

திவஸக்ருத: ப்ரதிசூர்யோ ஜலக்ருதுதக்தக்ஷிணோ ஸ்திதோ அனிலக்ருத்

உபயஸ்த: சலிலபயம் ன்ருபமுபரி நிஹன்யத்யதோ ஜனஹா

இதற்கு மேல் அவர் காஸ்யபர், பராசரர் முதலியோர் இது பற்றி என்ன சொன்னார்கள் என்ற ஸ்லோகங்களையும் நமக்கு விட்டுச் சென்றுள்ளார்.

ஹிந்துக்கள் வான மண்டலத்தைக் கூர்ந்து கவனித்ததோடு நில்லாமல் அதை எழுதியும் வைத்தது அவர்களது விஞ்ஞான கண்ணோட்டத்துக்கு சான்றாகத் திகழ்கிறது.அவர் எழுதியது இன்றைய அறிவியல் அளவுக்கு இல்லாவிட்டாலும் அன்றே நாம் இதைக் கண்டு பிடித்து எழுதினோம் என்பது பெருமைக்குரியது. வானவியல் உண்மைகள் மாறிக்கொண்டே வருகின்றன. 25 ஆண்டுக்கு முந்தைய வானவியல் புத்தகங்கள் இங்கு லண்டனில் பழைய புத்தகக் கடைகளில்தான் பார்க்கலாம். 2000 ஆண்டுகளுக்கு முன் இந்துக்கள் இதை சம்ஸ்கிருதத்தில் எழுதியதற்கு அவர்களுக்கு ஒரு பெரிய கும்பிடு போட வேண்டும். மேலும் வராஹமிகிரர் பூகம்பம் பற்றியும் ஒரு தனி அத்தியாயம் எழுதுயுள்ளார். இவ்வாறு இன்றைய உலகை உலுக்கும் விஷயங்கள் பற்றி அன்றே தனித்தனி அத்தியாயங்கள் எழுதியது அதிசயமன்றோ!!! சம்ஸ்கிருதத்தைக் கற்றால் இது போன்ற பல்லாயிரக் கணக்கான உண்மைகளை உணரலாம்.

32496-sun-dogs02

மூன்று சூரியன்களுக்கு விஞ்ஞான விளக்கம்

இது மிக உயரத்தில் உள்ள மேகங்களில் இருக்கும் அறுகோண வடிவ பனிக்கட்டி ஸ்படிகங்களால் (ஹெக்சகனல் கிறிஸ்டல்ஸ்) தோன்றுகின்றன. பிரிஸம் எனப்படும் முக்கோண வடிவ கண்ணாடியின் வழியே ஒளி செல்லும் போது அது வானவில் நிறத்தில் ஏழாகப் பிரிகிறது. அது போலவே அறுகோண வடிவ ஸ்படிகம் வழியே செல்லுகையில் அது சரியாக 22 டிகிரி கோணதில் பிரிகிறது. இதை ஒலி விலகல் என்பர். இந்த அறுகோண ஐஸ் ஸ்படிகங்கள் மேகத்தில் பல இடங்களில் பரவலாகக் காணப்பட்டால் சூரியனைச் சுற்றி ஒரு வட்டம் தோன்றும். இதைத் தமிழில் சூரியனைச் சுற்றி கோட்டை கட்டி இருக்கிறது என்பர்.

இதற்கு மாறாக அந்த ஐஸ் ஸ்படிகங்கள் கீழே போய் செங்குத்துக் (வெர்டிகல்) கோடுகளாக நிற்குமானால், விலகும் ஒலியானது படுக்கை (ஹரிஸாண்டல்) வடிவத்தில் இருக்கும் அவை போலி சூரியன்களைத் தோற்றுவிக்கும்.

போலி சூரியன்கள் பல வண்ணங்களில் – ஆரஞ்சு, மஞ்சள், நீலம்—இருக்க முடியும். சூரியனுக்கு மிக அருகில் இருந்தால் சிவப்பாகவும், தள்ளிப் போக போக மஞ்சள், ஆரஞ்சு, நீலம் என்று மாறிக்கொண்டேயும் வரும்.

கிரேக்க அறிஞர் அரிஸ்டாடில் கி.மு.384, மீண்டும் கி.மு.322ல் தோன்றிய போலி சூரியன்களைக் குறித்துவைத்தார். அவருக்குபின் வந்தோர் இது பற்றி எழுதிவிட்டு இதனால் வரும் கேடுகள் என்ன என்ற நம்பிக்கைகளையும் எழுதினர்.

சம்ஸ்கிருத நூல்களில் மேலும் பல இடங்களிலும் போலி சூரியன்கள் பற்றிய குறிப்புகள் உள.

இந்துக்கள் கண்டுபிடித்ததை வெளிநாட்டினர் மீண்டும் “கண்டுபிடித்த” விநோதம்!!

Compiled by London swaminathan

Article No.1842 Date: 2 May 2015

Uploaded at London time: 13-52

உலகம் உருண்டையானது என்பதை யார் முதலில் சொன்னார்கள்?

சூரியனை பூமி சுற்றுகிறது என்பதை யார் முதலில் சொன்னார்கள்?

கிரஹணம் எப்படி ஏற்படுகிறது என்பதை யார் முதலில் சொன்னார்கள்?

சந்திரனின் மீது படும் சூரிய ஒளியே அதன் பிரகாசத்துக்கு காரணம் என்பதை யார் முதலில் சொன்னார்கள்?

 

—–இது போன்ற பல கேள்விகளுக்கு விடை வேண்டும் என்று என்சைக்ளோபீடியாவுக்குப் போனீர்களானால் உங்களுக்கு தவறான தகவலே கிடைக்கும். இவை அனைத்தும் ரிக் வேதத்திலும் அதர்வ வேதத்திலும் ஏற்கனவே உள்ளன. அதுவும் வெள்ளைக்காரர்கள், ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளில் மொழிபெயர்த்த பகுதிகளில் உள்ளன. இருந்தபோதிலும் இவைகளை இன்னும் கலைகளஞ்சியங்களில் ஏற்றவில்லை!!!!

அதுமட்டுமல்ல. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட சங்கத் தமிழ் பாடல்களிலும் கடல் சூழ் மண்டிலம் என்று நிறைய இடங்களில் வருகிறது. பூகோளம், ககோளம் என்ற சொற்கள் சம்ஸ்கிருதத்தில் வருகின்றன. கோளம் என்பதில் இருந்தே ‘குளோப்’ (பூமி உருண்டை) என்ற சொல் வந்தது.

வேத இலக்கியத்தில் வரும் 27 நட்சத்திர முறையை ஐரோப்பியர்கள் ரிக் வேத காலமான கி.மு 1700-ல் அறிந்திலர். ஆகவே நாம் யாரிடமும் வானவியலையோ சோதிட சாத்திரத்தையோ கடன் வாங்கவும் இல்லை. இந்துக்கள் வெளி நாட்டில் இருந்து வந்து இங்கு குடியேறவும் இல்லை.

ஜெர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும், சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரும் ரிக் வேதத்தில் உள்ள வான சாத்திரக் குறிப்புகளை தனித்தனியே ஆராய்ந்ததில் வேதத்தின் காலம் கி.மு.4500—க்கு முன் என்று கண்டறிந்தனர். இருவரும் ஒருவர் மற்றொருவரை அறியாமல் செய்த ஆராய்ச்சியில் கிடைத்த வியத்தகு முடிவு இது. இன்னும் கொஞ்சம் காலத்தில் மேலை உலகமும் இதை ஒப்புக் கொள்ளும்.

1.வானசாத்திரம் பற்றிய படிப்பை ரிக் வேத முனிவர்கள் நட்சத்திர வித்யை என்றும் வானசாத்திர வல்லுனர்களை ‘நட்சத்திர தர்ச’ அல்லது ‘கணக’ என்றும் அழைத்தனர். சங்கத் தமிழரும் ‘கணி’ என்றே அழைத்தனர்.

2.ரிக் வேதகால ரிஷிகள் பிருத்வி=பூமி, அந்தரிக்ஷம் (நடு), தியௌ (வானம்) என்று மூன்றாகப் பிரித்தனர் (1 -115-1, 2-40-4 etc).

3.பூமி வட்ட வடிவமானது என்றும் அது அந்தரத்தில் தொங்குகிறது என்றும் ரிஷிகள் கூறினர் ( RV 1-33-8; 4-55-3). சதபத பிராம்மணமும் பூமியை பரிமண்டலம் என்று கூறுகிறது. சங்கத் தமிழரும் மண்டிலம் என்றே கூறினர்.

4.பூமி சுற்றுகிறது என்றும் அது சூரியனால் நிகழ்கிறது என்றும் அவர்களுக்குத் தெரியும். பகல், இரவு, பருவ காலம் ஆகியனவும் சூரியனால் நிகழ்கிறது என்பதும் வேதங்களில் உள்ளது ( RV 6-58-1, 1-95-3).

5.நிலவு என்பது சூரியனின் ஒளியைப் பிரதிபலிக்கிறது என்பதையும் ரிஷிகள் கூறுகின்றனர் (9-71-9).

6.குதிரைக்கு 34 -விலாஎலும்புகள் (17+17) இருப்பதாக(RV 1-161-18) வேதம் கூறுவதும் வானசாத்திரக் குறிப்பு என்று சில வெளி நாட்டினர் எழுதியுள்ளனர். ஐரோப்பிய குதிரைகளுக்கு 36 விலா எலும்புகள் என்பதால் ரிக்வேத கால இந்துக்கள் இந்த நாட்டில் தோன்றிய குதிரைகள் பற்றியே பேசியதும் அவர்கள் இங்கே தோன்றியவர்க ளேயன்றி வெளி நாட்டில் இருந்து வந்தவர்கள் அல்ல என்பதும் தெளிவாகிறது. அண்மையில் நடந்த ஆய்வில் காண்டாமிருகம், குதிரைகள் இங்கு தோன்றியதற்கான பாஸில் அச்சுகளும் (படிம அச்சு) கிடைத்திருக்கின்றன.

7.ஒரு ஆண்டை 12 ராசிகளாக/ 12 மாதங்களாகப் பிரித்ததும் வேத கால விற்பன்னர்களே. சூரியனின் போக்கை அனுசரித்து தட்சிணாயனம், உத்தராயணம் என்றும் ஆண்டை இருகூறாகப் பிரித்தனர். ஆறு பருவங்களாகப் பிரித்தனர். தொல்காப்பியமும் ஆறு பருவப் பிரிவையே கூறுவதால்  இந்துக்கள் ஐரோப்பாவில் இருந்து குடியேறவில்லை என்பது தெளிவாகிறது. ஐரோப்பாவிலும் பிற நாகரீகங்களிலும் ஆறு பருவப் பிரிவுகள் கிடையாது.

8.நட்சத்திரங்களை 27 ஆகவும் அபிஜித் என்னும் நட்சத்திரம் துருவ நட்சத்திரமாக இருந்த காலத்தில் 28 ஆகவும் பிரித்திருந்தனர்.

9.ஆண்டுத் துவக்கத்தை மார்ச்/ஏப்ரலிலிலும், டிசம்பரிலும்/மார்கழி (மாசானாம் அஹம் மார்கசீர்ஷம்—பகவத் கீதை) இந்துக்களின் நூல்கள் கூறுவதால் அவர்கள் வெவ்வேறு நட்சத்திர நிலைகளை அறிந்ததும் அவ்வளவு பழைய காலத்தில் அவர்கள் வாழ்ந்ததும் தெரிகிறது வானாவதாரத்தில் ஓங்கி உலகளந்த உத்தமன் மூவடியால் உலகத்தை அளந்த குறிப்பும் வேதத்தில் உள்ளது இதுவும் வான சாத்திரக் குறிப்பு என்ற ஒரு விளக்கம் உளது.

10.ஒரு சில குறிப்புகளை மட்டும் வைத்து வேத கால நாகரீகத்தை மதிப்பிட முடியாது. அவர்கள் வான சாத்திரம் முதல் பிராணி இயல், மருத்துவம் வரை கூறும் எல்லா விஷயங்களையும் ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில் — அவர்கள் கூறும் பிரம்மாண்டமான எண்களைப் பார்க்கையில் — இன்று கம்ப்யூட்டர்களுக்கு எல்லாம் மூல காரணமாக இருக்கும் பூஜ்யம் முதலியவற்றைக் கண்டு பிடித்ததைப் பார்க்கையில் — எல்லோரும் இன்புற்றிருப்பதேயன்றி வேறொன்றும் அறியோம் என்ற கருத்ததைத் தொனிக்கும் ரிக்வேதத்தின் கடைசி துதியைப் பார்க்கையில் —- உலகிலேயே அதிக நாகரீகம் வாய்ந்தவர்கள் வேத கால இந்துக்களே என்று துணியலாம்.

11.சூரிய, சந்திர கிரகணங்கள் பற்றிய குறிப்புகள் ரிக் வேதத்திலும் அதர்வணத்திலும் உள. அது பூமி, நிலவின் நிழல்களால் ஏற்படுவதையும் கூறி இருக்கின்றனர்.

இது எனது ஆங்கிலக் கட்டுரையின் சுருக்கம். முழு விவரம் வேண்டுவோர், சில தினங்களுக்கு முன் வெளியான ஆங்கிலக் கட்டுரையைக் காணவும்.

தமிழன் கண்ட செயல்முறை அறிவியல்! தண்ணீர்! தண்ணீர்!!

Waterpurify

Written by London swaminathan

Research Article No. 1685; Dated– 2 March 2015.

தண்ணீர் என்பது ஒரு அரிய பொருள். அது கிடைத்துக் கொண்டே இருந்தால் அதன் அருமை பெருமை தெரியாது. காசைத் ‘தண்ணீர் போல செலவழிக்கிறான்’ என்று ஊதாரி மகனைத் திட்டுவர் பெரியோர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ‘பாலும் தேனும் தண்ணீர் போல ஓடும்’ என்பர் அரசியல் கட்சியினர். ஆனால் உண்மையில் தண்ணீர் கிடைக்காததால் எவ்வளவோ நாகரீகங்கள் தலை நகர்களையே கூட மாற்றி இருக்கின்றன!

ரிக்வேதம் முதல் திருவிளையாடல் புராணம் வரை வரும் வறட்சி பற்றிய குறிப்புளை எல்லாம் எழுதிப் பார்த்தால் நூற்றுக் கணக்கில் இருக்கும். இதனால்தான் தமிழில் “நீரையும் சீராடு” – என்று ஒரு பழமொழி யையும் சொல்லிவைத்தார்கள்.

“ஆற்றுப் பெருக்கற்று அடி சுடும் அந்நாளும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் வைகை” என்று எங்கள் மதுரையில் ஓடும் வைகை நதியின் சிறப்பைப் போற்றுவர். ஆனால் அப்படிக் கிடைக்கும் ஊற்று நீர், களிமண் பூமியாக இருந்தால் கலங்கிப் போய் இருக்கும். அப்படியே குடிக்க முடியாது. இதற்காக தமிழன் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே, — கலங்கிய நீரைத் தெளிவிப்பது எப்படி? என்று கண்டுபிடித்து வைத்தான். அது மட்டுமல்ல! கிணற்றுக்கடியில் இருக்கும் கலங்கல் நீரைக்க்கூட சுத்தப்படுத்தி வாளியில் ஏற்ற வழி கண்டுபிடித்தான்.

Strychnos_potatorum_5

நான் 1993 முதல் லண்டனில் இருந்து வெளியான “மேகம்” மாத இதழில் “தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்” என்று கட்டுரை எழுதி வந்தேன். அது 2009-ல் புத்தக வடிவில் வெளியானது (நாகப்பா பப்ளிகேஷன்ஸ், சென்னை). அதற்கு முன்பாகவே நிலாசாரல்.காம் அதை “ஈ புக்”—ஆக வெளியிட்டது. அதில் (பக்கம் 17), கலித்தொகையில் வரும் தண்ணீர் சுத்தப்படுத்தும் முறை பற்றிய குறிப்பை சுருக்கமாக எழுதி இருந்தேன். அதை சற்று விரிவாகக் காண்போம்.

கலித்தொகை என்பது சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் ஐந்து பகுதிகள் உண்டு. அதில் நல்லந்துவனார் பாடிய நெய்தல் கலி கடைசி பகுதியாக வருகிறது. அதில் வரும் ஒரு குறிப்பு:–

நல்கிய கேள்வன் இவன் – மன்ற, மெல்ல

மணியுள் பரந்த நீர்போலத் துணிவாம்

கலம் சிதை இல்லத்துக் காழ்கொண்டு தேற்றக்

கலங்கிய நீர்போலத் தெளிந்து, நலம் பெற்றாள்!

நல் எழில் மார்பனைச் சார்ந்து………..”

இதன் பொருள்: – மணியும் அதனுள் பரந்து விளங்கும் நீரும்போல, இவ்விருவரும் ஒருமித்த மனமுடையவர் என்று அனைவரும் துணிந்தனர்- திருமணமும் நடந்தது. அதன் பின்னர் அவளைக் கண்டவர் சொன்னார்கள்:

இல்லத்திலுள்ள நீர் கலங்கி இருந்தால், அது இருக்கும் பாத்திரத்துள் சிறிது தேற்றாவின் விதையைத் தேய்த்ததும், அந்நீர் தெளிந்து விடுவது போல, அந்த நல்ல அழகுடைய மார்பனைச் சேர்ந்ததும் இவளும் தெளிவுற்று நலம் பெற்றாளே!

water puried

தேற்றாங் கொட்டை என்பதைப் பொடி செய்து கலங்கிய நீரில் போட்டால் அது தெளிந்துவிடும் என்பது சங்க காலம் முதல் இன்றுவரை பின்பற்றப் படுகிறது. பாட்டிலில் தண்ணீர் விற்பனைக்கு வரும் காலத்துக்கு முன்னரே சுத்தமான நீரைப் பெற இதைப் பயன்படுத்தினர். (இதற்கு கதகப் பொடி என்ற பொடியை வடமொழி நூல்கள் குறிப்பிடும்)

ஆப்பிரிக்க நாடுகளில் முருங்கைக் காய்க்குள் இருக்கும் விதைகளைப் பயன்படுத்தி இதைச் செய்தனர்.

கதகப் பொடி வடமொழியில் உள்ள நியாயங்களில் ஒன்றாக வருவதும் அதை சத்திய சாய்பாபா உவமையாகப் பயன்படுத்துவதும் எஸ்.நாகராஜன் எழுதிய கட்டுரையில் இதே பிளாக் –கில் நேற்று வெளியாகியுள்ளது. (கட்டுரைத் தலைப்பு நீரில் அமிழ்ந்த சுரைக்காய், மார்ச் 1 வெளியீடு)

தமிழர்கள் அந்தக் காலம் முதல் இன்று வரை கோடைகாலத்தில் வீட்டின் ஒரு ஓரத்தில் மண்ணை நிரப்பி, அதன் மீது பானையை வைத்து, அந்த நீரில் வெட்டி வேர், விளாமிச்சை வேர் முதலியவற்றைப் போட்டு தண்ணீர் குடிப்பது நாம் அறிந்ததே. வெட்டி வேர் எஸ்ஸன்ஸ் என்பது இப்போதெலாம் மிகவும் அதிக விலைக்கு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது அவர்கள் இதை பெர்Fயூம் செய்யப் பயன்படுத்துகின்றனர்!

best water

பாதிரிப் பூவின் மகிமை

ஆனால் மற்றொரு தமிழ் இலக்கியப் பாடல் பாதிரிப் பூவின் மகிமையைப் பாடுகிறது

கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்

நல்லறிவு நாளும் தலைப்படுவர் – தொல் சிறப்பின்

ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு

தண்ணீர்க்குத் தான்பயந்தாங்கு – நாலடியார்

பொருள்:–பழமையான சிறப்பையும், ஒளி பொருந்திய நிறத்தையும் உடைய பாதிரிப்பூவைச் சேர்தலினால், புதுப் பானையானது தன்னிடமுள்ள தண்ணீர்க்குத் தன் மணத்தைக் கொடுத்தது போல, கல்லாதவர்களே ஆயினும் கற்றறிந்த அறிஞர்களுடன் சேர்ந்தால் அவர் சேர்க்கையால் நல்லறிவு நாளுக்கு நாள் பெருகும்

அருமையான உவமை. பானைத் தண்ணீருக்குப் பாதிரிப் பூ வாசனை தரும். கல்வி அறிவு மிக்கவர்கள், தன்னைச் சார்ந்தவர்களுக்கும் அறிவொளி பரப்புவர்.

வராஹமிகிரரும், பிருஹத் சம்ஹிதா நூலில் தண்ணீர் சுத்திகரிப்பு பற்றிப் பேசுகிறார். கடுக்காய், நெல்லிக்காய்,பத்ரமுஷ்டா புல் ஆகியவற்றை கிணற்று நீரில் போடும்படியும் அப்போது அது தெளிந்து விடும் என்றும் சொல்லுகிறார்

தமிழில் இதே கருத்தை வலியுறுத்தும் பழமொழிகளும் உண்டு. நூலோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் என்றும் வசனங்கள் உண்டு. ஆனால் நாம் இங்கு காண்பது பாதிரிப் பூவின் பயன்பாடுதான்.

Fragrant_root_vetti-ver

வெட்டி வேர், விளாமிச்சை வேர், பாதிரிப் பூ, தேற்றாவின் கொட்டை முதலியன பயன் தரும் தாவரங்கள். ஆப்பிரிக்கர் சொல்லுவது போல முருங்கை விதைகளப் பயன்படுத்தியும் நன்மை அடையலாம். இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளுக்கு கடவுள் கொடுத்த வரப் பிரசாதங்கள் இவை.

swami_48@yahoo.com